வாரியணைத்து நிலம் பரப்பும்
இறகொடிந்து விழும் தசைஇருள்
இதழ் விரிய கூம்பி நிற்கும் சுளை.
தணியாத் தாகம் பாவி நிற்கும் கடல்.
விறகொன்று தகித்த அடுப்பு பற்றி எரியும்.
ஜூவாலை கூட்டுமொளி பகலெல்லாம் இரவாகி
இரவெல்லாம் சூன்யம் விரியும் நோய்.
தாகம் தாகமெனக்
கொள்ளியில் விழுந்து சிதறும் வெண்மேகம்.
தொடை வழியே சிதறும் மழை
என் வேள்வித் தணிய மேனிகாயும்.
பாலையில் சருகுகள் தோறும்
பச்சையம் நீங்கி நிலம் விழும் இருள்.
அகவையற்ற தரிசனம்.
யோகமெனும் மாயை பூசிய திலகம்.
பூதமற்ற நிசி.
கால்களை மடக்கியபடி
அருகமர்ந்து தலைகோதும் கருணை
எல்லாம் நானெனும் வாஞ்சையற்ற சொல்.
மழைமேகம் உடைந்து
நிலம் விழும் ராத்திரியில்
அழுகை வரும் நாளின் கனவு.