இந்திய அரசியல் வரலாற்றைச் சமூக வலைத்தளக் காலத்திற்கு முன் பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு மிக முக்கியப் பங்கு வகுத்துவருகிறது சமூக வலைத்தளம். அவற்றில் சில சாதகங்கள் உண்டென்றாலும் முழுமையான மாற்றத்திற்கு எந்த வகையிலுமே வித்திடவில்லை. நம் சமகால அரசியல் பிரச்சனைகளையே அதற்கோர் உதாரணமாகக் கொள்ளலாம். கடந்த பத்தாண்டுகால சமூக வலைத்தள எழுச்சிக்குப் பிறகு தினசரிச் செய்திகளின் அடிப்படையில் விவாதம் உருவாவது அதிகரித்து இருக்கிறது. அரசியல் தலைவர்களின் அறிக்கைகள், பேட்டிகள், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள், வெளிப்படும் உடல்மொழி யாவும் அந்த நொடியே சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. அவற்றில் சர்ச்சைக்குள்ளாகும் பகுதி அடுத்த சில மணி நேரச் சமூக வலைத்தள விவாதத்தை முடிவு செய்கிறது. இம்மாதிரியான சமூக வலைத்தளச் சர்ச்சைகளிலிருந்து ஓர் அரசியல் தலைவர் தப்ப வேண்டுமானால் அவருக்கு எதிரான விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு அவர் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை, Political Correctness என்று சொல்லப்படுகிற அரசியல் சரித்தன்மையோடு இயங்குவதே போதுமானதாக இருக்கிறது.
இந்த நெருக்கடியை மட்டும்தான் சமூகவலைத் தளங்கள் கொடுத்திருக்கின்றன. சமூக வலைத்தளத்திற்கு முந்திய எழுபதாண்டு கால தமிழக அரசியல் வரலாற்றிலும் இத்தகைய சர்ச்சைக் கருத்துகள், விமர்சனங்கள் அரசியல் தலைவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றன. சமூகநீதி மற்றும் சமத்துவத்தை வலியுறுத்தியவர்களிடமிருந்தே சாதியம் வெளிப்பட்டிருக்கிறது; பாலினச் சமத்துவத்தைக் கேள்விக்குட்படுத்தும் சொற்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. அவை சுட்டிக்காட்டப்படும்போது அத்தகைய தலைவர்களின் உழைப்புக்கும் சமூகப் பங்களிப்புக்கும் முன்னே அவற்றை ஊதிப்பெருக்கத் தேவையில்லை என்பதே சம்பந்தப்பட்டவர்களின் வாதமாக இருக்கிறது. இத்தகைய சறுக்கல்களுக்காக ஒரு தலைவரை நாம் அரசியல் மற்றும் சமூக விலக்கம் செய்துவிடப்போவதில்லை. ஆனால், அவை என்ன மனநிலையில் இருந்து வெளிப்படுகிறது என்பதைச் சுயபரிசோதனை செய்துகொண்டால் மட்டுமே ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும்.
சாதிய, வர்க்க, ஆண் மையச் சமூக அமைப்பில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய செல்வாக்கையும் அந்தஸ்த்தையும் துடைத்தெறியாமல் பேசப்படும் சமூகநீதி முழுமையடையாது. நாம் மாற்றத்தை விரும்புவோராக இருந்தால் அதற்கெதிராக வரும் விமர்சன உரையாடல்களுக்குச் செவிமடுக்க வேண்டும். மாறாகச் சர்ச்சைகளிலிருந்து தப்பித்துக்கொள்வது மட்டுமே போதுமானதாக இருந்தால் அரசியல் சரித்தன்மையோடு பாவனையாய் இயங்கலாம். ஆனால், இந்தச் சமூக வலைத்தள யுகத்திலும் இவை இரண்டுமே சாத்தியமற்று நிற்கின்றன என்பதைத்தான் சமகால அரசியல் உதாரணங்கள் வெளிப்படுத்துகின்றன.
டாம்பீகமாகக் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி, கோரிக்கை மனு கொடுக்க வந்த பழங்குடிச் சமூகப் பிரதிநிதியை நிற்க வைத்துக் கேள்வி கேட்ட சாத்தூர் ராமச்சந்திரன், பட்டியலினப் பெண்ணை மேடையில் நிற்க வைத்துச் சாதி வகுப்பைக் கேட்டதோடு கோயில் இருக்கும் தெருக்களில் பட்டியலினத்தவர்கள் நடந்து செல்கிறார்கள் என்றால் அது பெரியார் போட்ட பிச்சை என்று சொன்ன அமைச்சர் பொன்முடி, பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை மேயரை ஒருமையில் அதட்டிய அமைச்சர் நேரு என நீள்பவை அனைத்துமே சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டவை. அவை சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் அமைச்சர்கள் தகுந்த வருத்தத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.
சமூக வலைத்தள எதிர்ப்பினால் ஒருவர் மனம் திருந்த முடியாது. குறைந்தபட்சம் அது மீண்டும் நிகழாமல் தவிர்க்கவே முடியும். அந்த அரசியல் சரித்தன்மைக்காகக் கூட அவர்களால் அத்தகைய பண்புகளைப் பின்பற்ற முடியவில்லையெனில் அதுதான் அவர்களது யதார்த்தம். அதுவே சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெளிப்படுகிறது. இந்தப் போதாமைகளைச் சுட்டிக்காட்டுபவர்களை எதிர்த் திசையில் நிறுத்தாமல் சமத்துவம் குறித்த பார்வையில் இருக்கும் குறைபாடுகளை உணரவேண்டும். சமத்துவச் சமூகம் என்பது நெடும் பயணம், அதில் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் ஓர் அணுவாய் நாமும் பங்காற்றியிருக்கிறோம் என்பதனால் நாம் பேசும் அனைத்தும் சரியாகிவிடாது. பொது வாழ்க்கையில் இயங்குவோர் சமகாலத்தில் நடக்கும் மாற்று உரையாடல்களைக் கவனிப்பவராகவும் அதை ஆய்வுக்குட்படுத்துபவராகவும் இருத்தல் அவசியம். சாதி – பாலின உரையாடல்களில் பதினைந்து வருடத்திற்கு முன் நாம் பயன்படுத்திய சொற்கள் இன்று வழக்கொழிந்து போனதோடு, அடிப்படையில் அவை தவறு என்பதும் நிறுவப்பட்டிருக்கிறது. அத்தகைய வேகத்தில் மாற்று உரையாடல்கள் வேகமாகத் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றன. மாற்றுக் கருத்துகளுக்குச் செவி கொடுப்பது முதல் நிலை. அதிலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு தன்னைத் தகவமைப்பது இரண்டாம் நிலை, அதுவாகவே மாறுவது மூன்றாம் நிலை. சமத்துவச் சமூகம் நோக்கிய பெரும் பயணத்தில் இம்மூன்றும்தாம் மாற்றத்தை நோக்கியதாக இருக்க முடியும். இதற்குட்படாத வாதம், பிரதிவாதம் அனைத்திலும் தன் அறிவு மேன்மையைக்கொண்டு வாதத்தில் வெற்றிபெற முனையும் இரைச்சலே எஞ்சும்.
அமைச்சர்களின் இந்த ஆண்டைத்தனமான போக்கினை, அமைச்சர்களின் பேச்சு வெட்டி ஒட்டப்படுகிறது என்று தமிழக முதல்வர் தன் அறிக்கை ஒன்றில் மறைமுகமாக ஆதரித்தும் மற்றொரு அறிக்கையில் மென் அறிவுரையையும் வழங்குகிறார். பொதுவெளி விமர்சனங்களிலிருந்து அமைச்சர்களையும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டுமானால் இத்தகைய அறிக்கைகள் உதவும், கழகமும் ஆட்சியும் உண்மையிலயே மாற்றத்தை விரும்புமேயானால் இத்தகைய விமர்சனங்களுக்கு மதிப்பளித்துச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவர்கள் புரிந்த தவறின் தீவிரத்தை உணர்த்த வேண்டும். மீண்டும் அது தொடரும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தன்னெழுச்சியான கருத்துகளுக்குக் கணிசமான கவனம் உருவாகியிருந்தாலும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தயங்காமல் இவற்றைக் கண்டித்து அவை மேலும் நிகழாதபடி பார்த்துக்கொள்வதில் உருவாக்கப்படும் அழுத்தம் அரசியல் ஜனநாயகத்தில் முக்கியமானது. கூட்டணி ‘தர்மம்’ கூட்டணி ‘தம்ம’மானால் ஜனநாயகம் அங்கு இயல்பாகவே இருக்கும், உரையாடும் மாண்பை வளர்த்தெடுக்கவும் அதுவே வழி.