ஒரு ஊர்ல அமலான்னு ஒருத்தி இருந்தா, அழகின்னா அழகி, அப்படியொரு அழகி. நெசமான பொம்பள இல்லன்னு ஒருத்தராலயும் சொல்லிற முடியாது…
என்று தொடங்கும் இதே கதையை அமலா பலமுறை கேட்டிருக்கிறாள். ஆனால், ஒரு சிறிய மாற்றத்தோடு, இப்போது அவளிருக்கும் நிலையில் அவள் எப்போதும் இருந்ததில்லை. அந்தக் கதையில் பெயர்கள் வேறு வேறாக இருக்கும். எல்லாவற்றையும் விட முக்கியமாக இப்போது அவள் இறந்துவிட்டாள். அங்கே கறுப்புச் சட்டையும் வெள்ளை பாண்ட்டும் அணிந்த ஒரு பெண் அவளது சாவுக்குக் கூடியிருக்கும் சிறிய கூட்டத்தின் நடுவில் நின்றபடி கதை சொல்லிக் கொண்டிருப்பதைத்தான் ராணியின் வெள்ளை சுமோவின் முன்னிருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள். இப்போது அமலாவுக்குத் தோன்றும் எண்ணற்ற கேள்விகளுக்கு, ஓட்டுநர் இருக்கையில் இருக்கும் ராணிக்கு மட்டுமே பதில் தெரிந்திருக்கக்கூடும். ஆனால், அவர் மெல்ல சிரித்து, ஒவ்வொரு கேள்விக்கும், கொஞ்ச நேரம் ஜாலியா வேடிக்கை பாரு, அப்புறம் போய்ச் சாப்டுட்டுப் பொறுமையா பேசலாம் என்றே சொல்கிறார். விடியப் போகிறது. ஏற்கெனவே எரிச்சலில் கூடியிருப்பவர்கள் கதை சொல்பவளைச் சட்டென என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். காரின் பின்னே நோக்கும் கண்ணாடியில் லேசாக முகத்தைப் பார்த்துக்கொள்கிறாள் அமலா. சாவதற்கு முன் எப்போதாவது தான் அழகியென்று நம்பியிருக்கிறோமா என்று யோசித்திருக்கிறாள். நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள், எதையும் அவள் முழுமனதாக நம்பினாளா என்று இப்போது நினைவுகூர முடியவில்லை. ஒரே ஒருமுறை ஃப்ரீடா சொன்னபோது கிட்டத்தட்ட நம்பி விட்டிருந்தாள்! ஆனால், இப்போது முழுமையாக நம்பமுடிகிறது. “நான் செத்துப் போய்ட்டேனா” என்று ராணியிடம் மறுபடியும் கேட்கிறாள். அதே பதில். இம்முறை அமலாவும் சிரித்துக் கொள்கிறாள். கதை சொல்லத் தொடங்கிய பெண்ணிடம் அமலாவின் அப்பாவும் சித்தப்பாவும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சுமோ மெல்ல பின்வாங்கி, ஊரைவிட்டு வெளியேறி நெடுஞ்சாலையொன்றில் பயணிக்கத் தொடங்குகிறது. அமலா தான் இறந்திருக்க வாய்ப்பிருக்கக் கூடிய தருணங்களை எண்ணிப் பார்க்கிறாள். ஆனால், அவை ஒவ்வொன்றுக்கும் அப்புறமாக நடந்தவையெனச் சில ஞாபகங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. குறைந்தபட்ச முடிவாகக் கூட இல்லையென்றால் அப்புறம் என்ன பெரிய சாவு! அவற்றில் எது உண்மை, எது கனவு, எது வெறும் புனைவென எப்படிப் பிரித்துப் பார்ப்பது? ஆனால், வேறு வழியில்லை, செய்தித்தாள்களையோ தொலைக்காட்சிகளையோ பார்த்து உண்மையைத் தெரிந்துகொள்ள முடியாது. அவளுக்கென அவர்கள் வகுத்து வைத்திருக்கும் மொழியில் இன்னொருமுறை விழுந்து செத்தாலும் தான் எப்படிச் செத்தோம் என்ற உண்மையை அவளால் தெரிந்துகொள்ளமுடியாது. செத்தபின்ன கூட அவசரமா என்று ராணி கேட்டதை நினைத்துக்கொண்டு தன் நினைவுகளை அசைபோடத் தொடங்கினாள். ஒருமுறை, அவள் அடையாறு பாலத்தில் அமர்ந்திருக்கிறாள். கீழே சாக்கடையாக நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இல்லை, அவ்வளவு சாக்கடையாக இல்லை. பக்கத்தில்தான் பணக்காரர்கள் போட் விடும் இடம். எனவே அச்சிறு தூரம் மட்டும் ஆறாக உருவாக்கப் பட்டிருந்தது. ஆனால், இது ஒருமுறை நடந்ததா பலமுறையா என்று அவளால் சொல்ல முடியவில்லை. பலமுறைதான், அதில் எத்தனை முறை அவள் குதித்துவிட எண்ணியிருந்தாள், குதித்துவிடத் தயாராகயிருந்தாள். ஒருமுறை அந்த போலீஸ்காரன் சற்றுத் தூரத்திலிருந்து கெட்ட வார்த்தை சொல்லிக் கீழிறங்கச் சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது அவள் குதித்துவிட்டாள்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then