பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஏற்பட்ட மாபெரும் பஞ்சங்கள் தமிழகத்தை உலுக்கிப்போட்டன. பசி, பட்டினி, நோய்த் தொற்றினால் சாகிற சூழலில் பிழைப்பிற்காக உயிர் வாழ்தலின் பொருட்டு மலேசியா, பர்மா, இலங்கை என்று புலம்பெயர்ந்து சென்றனர் மக்கள். அவ்வாறு சென்றவர்கள் பெரும்பாலும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அடித்தளச் சாதி மக்களே. காலனி ஆட்சியாளர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாகவே அழைத்துச் செல்லப்பட்டு இலங்கை மலையகத் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாகச் சேர்க்கப்பட்டனர். கடல் கடந்து இலங்கையை அடைந்தவர்களில் காலரா போன்ற தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுப் பாதியிலே குற்றுயிரும் கொலையுருமாகக் கைவிடப்பட்டு நாய்களுக்கும் கழுகுகளுக்கும் இரையாய்ப் போனவர்கள் பலர். இவற்றைக் கடந்து அடர்ந்த காட்டில் மிருகங்களும் பூச்சிகளும் அட்டைகளும் கடிக்கப்பட்டும் தொடர்ந்து மழையினால் அதிகமாக ஏற்பட்ட மண் சரிவுகளினால் மண்ணில் புதையுண்டு போனவர்களும் உண்டு. இவர்களில் எஞ்சி இருந்தவர்கள் ஐந்து தலைமுறைக்கும் மேலாக இலங்கையில் மலையகத் தோட்ட தொழிலாளர்களாகத் தோட்டங்களிலேயே வாழ்ந்து இலங்கைக்கு வளமூட்டிவருகின்றனர்.
மலையகத்தில் தமிழர்கள்
இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள மலையகப் பகுதியில் மலையாளிகள், தெலுங்கர்கள், தமிழர்கள் உள்ளிட்ட பலரும் இருந்தாலும் தமிழர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மலையகத் தமிழர்களைச் தோட்டக்காட்டான், இந்தியத் தமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள், கள்ளத் தோணி என்றும் பாகுபடுத்திப் பார்க்கும் வழக்கம் இருந்தது. தமிழ் பேசினாலும் அங்குள்ள பெரும்பான்மையான சிங்களவர்களும் இலங்கைத் தமிழர்களும் மலையக மக்கள் மேல் பெரிய அக்கறையற்று இருந்தனர். எனவே, மலையகப் பகுதியில் காலனியக் காலத்திலும் சரி விடுதலை அடைந்த பின்னரும் சரி அரசினுடைய உதவிகளோ, நலத் திட்டங்களோ இப்பகுதிக்கு வரவே இல்லை. மலையகப் பகுதியில் நல்ல சாலைகளில்லை. பள்ளி, கல்லூரி வசதிகளில்லை. இதனால் நோய்த் தொற்றிலிருந்து காத்துக்கொள்வதற்கான மருத்துவ வசதிகளோ இல்லாமல் துயருற்றனர். மேலும், இம்மக்கள் குடியிருப்பதற்கு ‘லயங்கள்’ எனப்படும் வீடுகள் கட்டப்பட்டன. இத்தகைய வீடுகள் எட்டடிக் காம்பராக்கள் ஆறு அல்லது பத்துப் பன்னிரண்டு என்று இருபதுவரை ஒரே கூரைக்கடியில் வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும். ஒரு குடும்பத்திற்கு ஒரு காம்பிரா (அறை) என்ற வீதத்திலேயே தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. சுகாதாரம் பற்றியே கவலைப்படாத இந்த எட்டடிக் காம்பிராக்களைக் கொண்ட லயங்களிலேயே இத்தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாகப் படுத்தெழும்பியது. ஆனால், அதே நேரம் தோட்டத்துரைமார்களுக்குக் கட்டப்பட்ட பங்களாக்கள், உத்தியோகஸ்தர்களுக்காகக் கட்டப்பட்ட சின்ன பங்களாக்கள் போன்றவை பொருளியியல் சார்நிலைகள் பற்றிய அவதானிப்புகளுடனேயே கட்டப்பட்டன. அவை மழைக்காலங்களில் ஏற்படும் மண் சரிவுகளில் லயங்கள் மூடப்பட்டு இந்த ஏழைமக்கள் குடும்பம் குடும்பமாக மண்ணுக்குள் புதையுண்டு மாண்ட கதைகள் ஏராளம். பெரிய, சிறிய பங்களாக்கள் மண் சரிவில் புதையுண்டதில்லை.
இந்த லயங்கள் கூரைகளாலும் தகரங்களாலும் இருந்தன. இத்தகைய பின்தங்கிய மலையகப் பகுதிகளில் இருந்து ஒரு படைப்பாளி உருவாவது என்பது சாதாரணமல்ல. ஏனென்றால் 1906க்குப் பின்பு தான் மலையகப் பகுதியில் ஓர் ஆசிரியர் பள்ளி திறக்கப்பட்டது. கிருஸ்தவ மிசனரிகளாலும் சைவ வெள்ளாளர்களாலும் இலங்கையில் ஏற்பட்டிருந்த கல்வி வளர்ச்சியை மலையகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியவரும். இத்தகைய பின்தங்கிய பகுதியிலிருந்து ஒரு படைப்பாளி உருவாவது என்பதும் இலங்கை அளவில் பேசப்படக்கூடிய படைப்பாளியாக திகழ்வது என்பதும் உலகமுழுவதும் உள்ள தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்படுவது என்பதும் எளிமையானதல்ல. இலங்கையில் உள்ள இனப் பிரச்சினை, சாதியப் பிரச்சனை இவை எல்லாம் தாண்டி நின்றவர்தான் தெளிவத்தை ஜோசப். அத்தகைய பெரும் படைப்பாளி 21 அக்டோபர் 2022 அன்று, 88ஆவது அகவையில், தனது இயக்கத்தை நிறுத்திக்கொண்டார்.
தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப் 1934ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் நாள் பதுளை மாவட்ட ஊவாகட்டவளையில் பிறந்தார். இவர் பெற்றோர் சந்தனசாமி – பரிபூரணம். கல்வியை ஊவாக்கட்ட வளையில் தனது தந்தையிடமும் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் Little flower high Schoolஇல் மூன்று ஆண்டுகளும், பின்னர் பதுளையில் St.Bede’s College கல்வி பயின்றார். தெளிவத்தையில் உள்ள தோட்டப் பாடசாலையில் ஆசிரியராக 1956 முதல் 1964 வரை பணியாற்றினார். 1960களில் மலையகப் பகுதியில் ஓர் ஆவேசப் பரம்பரை ஒன்று உருவானது. இவர்களுடைய படைப்புகள் சமூகப் பிரக்ஞையும் ஆவேசமும் கோபமும் கொண்டு தம் மக்களைப் பற்றி எழுதலாயினர். அவ்வாறு எழுத வந்தவர்களுள் தெளிவத்தை ஜோசப் முதன்மையானவர் ஆவர். சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு என்று பல்துறைகளில் தீவிரமாகச் செயல்பட்டுப் பல காத்திரமான படைப்புகளை வெளியிட்டார். மலையகமண்ணையும் மக்களையும் அதிகமாக நேசித்ததால் தன்னுடைய பெயரோடு மலையகத்தில் உள்ள தெளிவத்தை என்னும் தோட்டத்தின் பெயரைத் தனது பெயரின் முன்னுட்டாகச் சேர்த்து தெளிவத்தை ஜோசப் ஆனார். தெளிவத்தை இலக்கியம், படைப்பு, ஆய்வு என்பதோடு தன்னை நிறுத்திக்கொள்ளாமல் வானொலி, தொலைக்காட்சிகளில் உரைகளும் நாடகங்களும் எழுதி வெளியிட்டார். இதன் நீட்சியாக 1995ஆம் ஆண்டு சிறிமா பண்டாரநாயகா சினிமாத் துறை மீதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்திய காலத்தில் ‘புதிய காற்று’ என்ற திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளார். அடிப்படையில் தெளிவத்தை கணக்கியல் அறிஞர். இவர் இதுவரை ‘காலங்கள் சாவதில்லை’, ‘காதலினால் அல்ல’, ‘நாங்கள் பாவிகளாய் இருக்கிறோம்’, ‘குடை நிழல்’ (தமிழக பதிப்பு – எழுத்து) ஆகிய நாவல்களையும் ‘பாலாயி’, ‘ஞாயிறு வந்தது’, ‘மனம் வெளுக்க’ போன்ற குறுநாவல்களும் எழுதியுள்ளார். ‘நாமிருக்கும் நாடே’, ‘மீன்கள்’ (தமிழக பதிப்பு – நற்றிணை) சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்; முழு சிறுகதை தொகுப்பு வெளிவர உள்ளது. ஆய்வு நூல்களாக, ‘மலையகச் சிறுகதை வரலாறு’ கட்டுரைத் தொடரினைத் தினகரன் வார இதழில் வெளியாகி பின்பு நூலாக வெளிவந்தது. ‘இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியல் வரலாறு’ என்ற ஆய்வு நூலினையும் வெளியிட்டுள்ளார். துறைவி பதிப்பக வெளியீடாக மலையக எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து ‘மலையகச் சிறுகதைகள்’ (35 கதைகள்), ‘உழைக்கப் பிறந்தவர்கள்’ (55 கதைகள்) என்று வெளியிட்டுள்ளார். இது தவிர்த்து மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் உருவாவதற்கு அடிப்படையாய் இருந்ததோடு அதில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். மேலும், மலையகக் கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருடைய ‘நாமிருக்கும் நாடே’ சிறுகதைத் தொகுப்பிற்காக இலங்கையின் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு சுபமங்களா மாத இதழும் தேசியக் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய இலக்கியப் போட்டியில் இவரது ’குடை நிலை’ என்ற நாவல் பரிசினைப் பெற்றது. இது தவிர கலாபூஷணம் விருது, இலக்கியச் செம்மல் விருது, தேசிய இன ஒற்றுமைக்கான சாகித்திய கௌரவ விருது, எழுத்து வேந்தன் விருது, 2013ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது, தமிழியர் வித்தகர் என்ற பட்டமும் ஏராளமான பாராட்டுகளும் பெற்றுள்ளார். இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் எழுதியும் செயல்பட்டும் வந்திருந்தாலும் இவரது தனித்துவமான பங்களிப்பு என்பது சிறுகதையிலேயே குறிப்பிட்டுச் சொல்லத் தக்கதாக அமைந்திருந்தது.
மலையகத்தில் பல தோட்டங்களில் கணக்காளராகப் பணியாற்றியுள்ளார். தவிர ஆசிரியராகப் பணியாற்றிய இக்காலகட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும் வஞ்சித்தல்களையும் தமது படைப்புகளில் வெளிப்படையாகவும் சமூகப் பிரக்ஞையோடும் கதை மாந்தர்களை உருவாக்கிக் கேள்விகள் எழுப்பும் கதைகளை எழுதினார். இதனால் பல்வேறு மிரட்டலுக்கு ஆளானார். இவருடைய உறவினர்களும் உடன் பிறந்தவர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கத் தமது குடியிருப்பு மற்றும் பணியினைக் கொழும்பிற்கு மாற்றிக்கொண்டார். கொழும்புவில் உள்ள ஸ்டார் டெபி சாக்லேட் நிறுவனத்தில் கணக்கராகவும் பணியாற்றியுள்ளார்.
யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் தோட்டத்துப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்குறேன் பேர்வழின்னு அக்குழந்தைகளைப் படுத்திய பாடுகளைத் தன்னுடைய ‘சோதனை’ சிறுகதையில் கடுமையாக விமர்சித்துள்ளார். இது யாழ்ப்பாணத்து முற்போக்குவாதிகளின் தன்மை அறிந்துகொள்ளும் வாய்ப்பைத் தந்தது. அதிலும் குறிப்பாக மார்க்சியத் தமிழ் அறிஞர் கைலாசபதியின் மற்றொரு முகம் வெளிப்பட்டது. தேர்ந்த திறனாய்வாளர் என்ற கைலாசபதி யாழ்ப்பாணத்தவரின் குறைகளைச் சொல்லாமல் தெளிவத்தையைக் குறை சொல்லவும் முற்பட்டார். அதிலும் “யாழ்ப்பாணத்து வாத்தி தெளிவத்தைக்கு வில்லன்” என்று சொல்லும் அளவிற்குச் சென்றார். தெளிவத்தையின் ’காலங்கள் சாவதில்லை’ என்ற நாவலில் தொழிலாளர் சங்கத்தின் செயல்பாடுகளும் அரசியலும் விரிவாகப் பேசவில்லை என்று கூறி அது ‘பிற்போக்கு நாவல்’ என்று முற்போக்காளர்களால் விமர்சிக்கப்பட்டது. இதை தெளிவத்தை நேர்மையாக எதிர்கொண்டார். இதன் காரணத்தைத் தெளிவத்தையே தனது நேர்காணலில் பின்வருமாறு சொல்கிறார்: தான் இவ்வாறு விமர்சிக்கப்படுவதற்கு அந்த முற்போக்கு என்று சொல்லுகிற அணியில் சேராமையே காரணம் என்று குறிப்பிடுகிறார். குறிப்பாக, முற்போக்கு இலக்கிய அணி அந்த அணியில் இல்லாதவர்கள் எவரும் இலக்கியவாதிகள் இல்லை. முற்போக்கு அணியின் முக்கியத்துவர்களுடன் ஓடித் திரியாத எவரும் அவர்கள் கூறுவதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டிராத எவரும் எழுத்தாளர்கள் இல்லை. அவர்களை வளரவிடக் கூடாது என்பது மட்டுமல்லாமல் எழுத்துலகில் இருந்தே விலக்கி வைத்துவிடும் ஒரு எதேச்சதிகாரம் அவர்களிடம் இருந்தது. நமது அரசியலைப் போலத்தான். ஆட்சியாளர்களின் அணியில் இருப்பவர்கள் கூறும் அபத்தங்கள் கூட தேசாபிமான வசனங்கள். மற்றவர்கள் கூறுவதெல்லாம் தேசத் துரோகக் கருத்துகள். அரசு என்ற சிம்மாசனம் கொடுக்கிற அதிகாரச் செயல்பாடுகள் இவை. இதே அதிகாரச் செயலைத்தான் முற்போக்கு அணியினர் இலக்கியத்தில் செய்துகாட்டிக்கொண்டிருந்தனர் அந்த அறுபதுகளில் என்பதோடு இணைத்துப் புரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு தன்னுடைய படைப்பு சார்ந்தும் மலையக மக்களின் அரசியல் சார்ந்தும் எவ்வித சமரசமுமின்றி நேர்மையாகச் செயல்பட்ட படைப்பாளி தெளிவந்தை ஜோசப். மேலும், முற்போக்காளர்களின் அங்கீகாரத்திற்காகவும் பாராட்டுதலுக்காகவும் தன்னையும் தனது படைப்புகளையும் சமரசம் செய்துகொள்ளாமல் நேர்மையோடு ஆதிக்கத்தை எதிர்த்துப் படைப்பு ரீதியாக, ஆய்வு ரீதியாகச் சமர் செய்தவர்.