புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள முத்துக்காடு ஊராட்சியைச் சேர்ந்த வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்களின் 32 வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் முத்தரையர் சமூகத்தினர் 150, அகமுடையார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இறுதியில், வேங்கைவயல் தலித் குடியிருப்பில் அடுத்தடுத்து 5 தலித் குழந்தைகள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்பிற்குள்ளான நிலையில் டிசம்பர் 21 அன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 23ஆம் தேதி, ஒரு குழந்தையின் தாயாருக்கும் காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனை சென்றுள்ளார். அதன் பிறகே மருத்துவர்கள் ’’குடிக்கின்ற தண்ணீரில்தான் ஏதேனும் பிரச்சினை இருக்கும் பாருங்கள்” என்று கூறியுள்ளனர்.
இதனால், டிசம்பர் 26 அன்று காலை தலித் இளைஞர்கள் சுதர்சன், முரளிராஜா, முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்தனர். அப்போது தண்ணீரில் மலம் திட்டுத்திட்டாக மிதந்ததைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி, அதனைத் தங்கள் செல்பேசியின் மூலம் புகைப்படம் எடுத்து கிராம நண்பர்களுக்குள் வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளனர். இதனையடுத்து அத்தகவல் பரவலாக வெளியாகியுள்ளது.
மறுநாள் காலை 11 மணியவளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் இருவரும் வேங்கைவயல் கிராமத்திற்குச் சென்றுள்ளனர்.
குடிநீரில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வினை விசாரித்துவிட்டு, வேறு ஏதேனும் தீண்டாமைப் பிரச்சனைகள் உள்ளதா எனக் கேட்டுள்ளனர். கோயிலில் வழிபாடு செய்ய முடியவில்லை, டீக்கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளது என மக்கள் கூறியதும் கோயிலுக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு இழிவாகப் பேசிய பெண் சாமியாடி மீதும், இரட்டை டம்ளர் வைத்திருந்த டீக்கடைக்காரர் மீதும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்திற்கும் கனகராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் வெள்ளனூர் காவல் நிலையத்தில் தனித் தனியாக மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளன. கோயில் நுழைவு மற்றும் இரட்டை டம்ளர் சம்பவ வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
குடிநீரில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் அரசுக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவிக்கத் தொடங்கினர். ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. இதன்பிறகு தலித் குடியிருப்பில் புதியதாக 23 குடிநீர்க் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, திருச்சி சரக டி.ஐ.ஜி தலைமையில் 11பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. புதுக்கோட்டை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணன் பொறுப்பில், 2 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 4 காவல் ஆய்வாளர்கள், 4 காவல் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் வெள்ளனூர் காவல் நிலையத்தில் முகாமிட்டு விசாரணையைத் தொடங்கினர்.
அந்தக் குழு உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்காமல், பாதிக்கப்பட்ட இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தி மிரட்டியுள்ளது. விசாரணைக்கு எனக் காலை 10 மணியளவில் காவல் நிலையம் அழைத்து வந்து, இரவு சுமார் 9 மணிக்கு மேல்தான் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதிலும், பிரபாகரன் என்ற இளைஞரை அடித்துத் துன்புறுத்தி, அச்சுறுத்தியுள்ளனர். “நான்தான் தண்ணித் தொட்டியில் மலம் கலந்தேன் என ஒத்துக்க, உனக்கு ரூ.2 இலட்சம் பணமும், கான்கிரீட் மாடி வீடும் கட்டித் தருகிறோம்” எனவும் கூறியுள்ளனர்.
உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்குப் பதிலாக தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரித்து, வழக்கினை முடிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழு முயற்சிகள் மேற்கொள்வது குறித்துச் சமூக வலைதளம், ஊடகங்களில் செய்திகள் வெளியாகத் தொடங்கின.
இதனையடுத்து அவசரமாகத் தமிழக அரசு இவ்வழக்கினை சிபிசிஐடி புலன் விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.
சம்பவமும் பின்னணியும்
அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள முத்துக்காடு ஊராட்சியில்தான் வேங்கைவயல் உள்ளது. தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர் பத்மாவின் கணவரும், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவருமான முத்தையா (அதிமுக) தேர்தல் முன்னிட்டுத் தலித் மக்கள் மீது வெறுப்புடனே இருந்துள்ளார்.
மேலும் இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது ஒன்றியக் கவுன்சிலராகவும் உள்ள ரேவதி என்பவரின் கணவர் சிதம்பரம் (அதிமுக) தலித் மக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதன் காரணமாக முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த முத்தையா, அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த சிதம்பரம் மீது கோபம் கொண்டிருந்துள்ளார்.
கடந்த 02 அக்டோபர் 2022 அன்று நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குடிநீர், சுடுகாட்டுக்குப் பாதை போன்ற வசதிகளைச் செய்துகொடுக்குமாறு தலித் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது முத்தையா, ‘’நீங்கள் யாரும் எனக்கு ஓட்டுப்போடவில்லை, உங்களுக்கு எதுக்கு நாங்கள் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர் சண்முகம் என்பவரை, முத்தையா வேலையிலிருந்து நிறுத்திவிட்டு, வேறு ஒருவரை வேலைக்கு வைத்துள்ளார். இதுவும் உள்ளுக்குள் பெரும் முரண்பாடுகளை உருவாக்கியுள்ளது.
வழக்கு : வெள்ளனூர் காவல் நிலையம்
குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாகக் குற்றஎண் 239/2022 பிரிவுகள் 277, 328 இ.த.ச மற்றும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவுகள் 3(1)(b), 3(1)(x), 3(2)(va) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்ச் சமூகத்தின் அவமானச் சின்னமான வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியை இடிக்க உத்தரவிட்டு, புதிய குடிநீர்த் தொட்டி அமைத்துவரும் தமிழக அரசின் முயற்சியினைப் பாராட்டுகின்றோம்.
பரிந்துரைகள்
குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
கழிவுப் பொருட்களைக் கொட்டுவது தொடர்பான பிரிவு ஏற்கெனவே வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், உண்ணத்தகாதப் பொருளைக் குடிக்குமாறோ உண்ணுமாறோ தலித் மக்களை வற்புறுத்தியது, நிர்பந்தித்தது தொடர்பான பிரிவு 3(1)(a); பொதுச் சொத்து, வளங்களைப் பயன்படுத்தத் தடை செய்தல் தொடர்பான பிரிவு 3(1)(za)(A) ஆகிய பிரிவுகள் கூடுதலாக இணைக்கப்பட வேண்டும்.
வேங்கைவயலில் பாதிக்கப்பட்ட அனைத்துத் தலித் குடும்பங்களுக்கும் தலித் மக்கள் மேம்பாட்டிற்கான சிறப்பு உட்கூறு திட்டத்திலிருந்து தலா 5,00,000 நிவாரணம், குடியிருப்பு, நிலம் மற்றும் வாழ்வாதாரங்கள் வழங்கிட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலவும் சாதிய வன்கொடுமை, தீண்டாமைப் பாகுபாடுகள் தொடர்பாகவும், வேங்கைவயல் வன்கொடுமை குறித்தும் தனித் தனியாகவும் மாவட்ட விழிக் கண் குழுவின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கெனத் தனியாக, முதல்வர் தலைமையிலான மாநில விழிக் கண்காணிப்புக் குழுவின் சிறப்புக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.
கோயிலுக்குள் சென்றதால் இழிவு செய்யப்பட்டது மற்றும் இரட்டை டம்ளர் முறை ஆகிய இரண்டு வழக்கிலும் கைது செய்யப்பட்டவர்கள், பிணை கேட்கும்போது, அரசு வழக்கறிஞர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். எனவே, இவரின் பணியினை மாவட்ட / மாநில விழிக்கண் குழு ஆய்வு செய்து, இவரை அரசு வழக்கறிஞர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்.
தலித் மக்களுக்கு எதிராக நடந்துகொள்வது, டேங்க் ஆபரேட்டரைப் பணியிலிருந்து நீக்கியது, மனைவி பெயரில் தானே ஊராட்சித் தலைவராகச் செயல்படுவது ஆகியவை தொடர்பான புகார்கள் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு முத்தையா ஆளாகியுள்ளார். மேலும், சிதம்பரத்திற்குக் கிராம மக்களிடம் இருந்த ஆதரவும் அவரது எளிமையும் முத்தையாவிற்குப் பெரும் சவாலான ஒன்றாக இருந்துள்ளது.
அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அலுவல் ரீதியாவும் ஏற்பட்டுள்ள இதுபோன்ற நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக, குடிநீரில் மலத்தைக் கலந்த பிரச்சினைக்குக் காரணமானவர்களாக தலித்துகள் அல்லது சிதம்பரம் தரப்பினர் அல்லது நீக்கப்பட்ட டேங்க் ஆபரேட்டர் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டுவது என்பதுதான் முத்தையாவின் திட்டமாக இருந்துள்ளது எனப் பலரும் இப்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். எனவே, முத்தையா தரப்பினரைப் போலீஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இந்நிலையில், முத்தையா மற்றும் அவரது ஆதரவாளர்களைச் சந்தேகத்தின் பேரில் எவ்வித விசாரணைக்கும் அணுகாத போலீஸாரின், தலித் மக்களையே குற்றவாளிகளாகக் காட்ட முயற்சிக்கும் சாதி ஆதிக்க, அதிகார மனோபாவம் மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.
இவ்வாறு தங்கள் கடமையைப் புறக்கணித்து, தலித்துகள் மீது பொய்யான குற்றங்களைச் சுமத்த முயன்ற காவல் அதிகாரிகள், குறிப்பாகத் தனிப்படை போலீஸார் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 4-இன் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வெள்ளனூர் போலீஸார், தனிப்படை போலீஸார் போன்றோரால் குற்றவாளிகள் அடையாளம் காணப்படாத நிலையில், தலித் மக்களை இவ்வழக்கில் குற்றவாளிகளாக்கப் போலீஸார் முயற்சித்தித்தது போன்றவை காரணமாக இவ்வழக்குத் தற்போது சி.பி.சி.ஐ.டி புலன்விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி புலன்விசாரணைக்காக உத்தரவிடப்பட்ட பல்வேறு வழக்குகள் நாட்டில், ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள நிலையாலும் போலீஸாரின் தலித்துகளுக்கு எதிரான மனநிலையாலும் இவ்வழக்கு விசாரணை எந்த அளவிற்கு வெளிப்படையாகவும், நேர்மையாகவும், விரைவாகவும் நடைபெறும் என்பது சந்தேகமே. எனவே, பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் அன்றாட மேற்பார்வை / தலைமை மற்றும் தலித் கண்ணோட்டத்துடன் கூடிய சட்ட விவரமறிந்த சமூகச் செயல்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 15 (கி), பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்கான உரிமை தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்குத் தொடர்பான விசாரணைக்கு வரும் தலித் மக்களுடன் இப்பிரிவின்படி அவருக்கு உதவியாக / ஆதரவாக வழக்கறிஞரோ அல்லது சமூகச் செயல்பாட்டாளரோ உடனிருப்பதை அனுமதிக்க வேண்டும்.
இந்திய ஒன்றியத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களில் தமிழகம் முதலிடத்தில் இருந்தாலும், தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பது; மலக்குழி மரணங்கள்; தலித் / பழங்குடியினருக்கான சிறப்பு நிதியினை அவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்புவது; தலித் / பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்படுவது; உயர்கல்விக்கான வெளிநாட்டு நிதியுதவி தலித் மாணவர்களுக்கு வழங்கப்படாதது; தாட்கோ போன்ற நிதியுதவி திட்டத்தின் உதவி பெறமுடியாமல் அலைக்கழிக்கப்படுவது போன்ற தலித் / பழங்குடியினருக்கு எதிரான செயல்பாடுகளிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது கவலைக்குரிய ஒன்றாகும்.
ஒரு சிறிய கிராமத்தில் சுமார் நூற்றுக்கணக்கானோர் உள்ள இடத்தில் நிகழ்ந்த வன்கொடுமைக் குற்றத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது, தமிழக அரசின் இயலாமையா அல்லது யாரையேனும் காப்பாற்றும் முயற்சியா எனும் சந்தேகம் எழுவதைத் தவிர்த்திட அரசு உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்திட வேண்டும்.
இப்படிக்கு,
அ.உதயா,
நீலம் பண்பாட்டு மையம்,
சென்னை.