அ
அணுக்களின் இசைதான் உடல் என்கிறார்கள்
உன் மார்பில் என் மார்பை வைத்து
நானதை உற்றுக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்.
பிரபஞ்சம் முழுதாய் மலர்ந்து முடித்ததும்
அதைப் பறித்து உன் கருப்பாதையில் சாத்திவிட்டுக்
காலக் கணிதத்தின் முடிவை
என் கிற்றார் தந்திகளால் அறிவிப்பேன்.
ஆ
கிற்றாரின் நரம்புகள் ஆறு பெரும்பொழுதுகள்
உன் நடுவிரல் நீள்நகம்
திணைகளின் அத்தனை முன்றிலிலும்
காதலின் நீளிசை.
விரல் விலகாது அப்படியே மீட்டிக்கொண்டிரு,
இந்தக் கனவின் வரப்பிலேயே சென்று
என் செல்லப் பரத்தையளின் சந்துக்குள்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவோர் யாமத்தில்
நான் தொலைத்த
என் பல்சரைச் சத்தமில்லாமல் மீட்டு வந்துவிடுகிறேன்.
இ
என் கிற்றார் உன் மோனத்தின் ஆழம் அறியும்
என் பல்சருக்கு உன் ரகசியப் பாதைகள் தெரியும்
நம் எலும்புகள் உரசி
நீ பற்றவைத்துவிட்டுப்போன கோடையை
கிற்றாரின் நிழலில்தான் ஊர்ந்து கடந்தேன்.
என் பைத்தியம் நாற்பதைத் தாண்டிவிடாமல்
ஓட்டிக்கொண்டுவந்து சேர்த்துவிட்டது பல்சரும்.
புதிய மூக்குக் கண்ணாடி
காதலைத் துலக்கமாகக் காட்டுகிறது.
இனி எந்தக் குழப்பமும் இல்லை,
அது முனகுவது கேட்கிறது
காமம்தான் தன் தாயென.
நான் கிற்றாரை ஓட்டியபடி பல்சரை இசைத்துக்கொண்டே
உன் குடியிருப்புக்குள் வளைகிறேன்.
ஈ
நானொரு புலனாய்வுப் பத்திரிகையின் பிழைபொறுக்கி
குற்றமொரு நாய்போல சதா எனைப் பின்தொடர்கிறது.
இயல்பிலேயே என் மொழிக்குப் புலால் வாடை
இதில், ரத்தக்கட்டிகளால் செய்யப்பட்ட தட்டச்சுப் பொத்தான்களில்
8 மணி சொற்செம்மையாக்கப் பணி.
விரல்களுக்குத் துன்பம் நேர்கையில்
அன்பே…
நீ என் மாலைநேரக் கிற்றார் மலர்ச்சி.
என் வீட்டுக்கும்
மெரினாவுக்கும்
சந்திரபாபு கல்லறைக்குமிடையே மிதக்கும்
கறுப்பு சிவப்பு பல்சர்.
உ
கிற்றாரின் முதல் தந்தி கொண்டு
என் குரல்வளையைக்
கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்குகிறாய்.
காக்கவோ என் தெய்வம் விரைந்து வரப்போவதில்லை
அதற்கு பல்சர் ஓட்டவும் தெரியாது.
வலி அல்லது இசை
மூளைக்குள் ஏதோவொன்று முற்றி ஓயும்வரை
வியர்வை கமழும் மிருதுவான உன் பூப்போட்ட பாவாடையை
வாய் நிறையக் கவ்விக்கொள்ளக்
கொடேன்.
ஊ
பரணில் கிடந்த பழைய வானொலியைத்
துடைத்து மடியில் வைத்துக்கொண்டு
அலைவரிசை முள்ளால் தேடுகிறேன் உன்னை.
இரைச்சல் – அமைதி – இரைச்சல் – அமைதி
கணத்தில் எங்கோவோர் கதவு திறந்துகொள்ள,
இறங்கி வருகிறது பாடல்.
யாரோ ஒருவரின் குரல்
யாரோ ஒருவரின் வரிகள் – ஆனாலன்பே
அதில் அதிரும் துக்கம் உன்னுடையது
கண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் கிற்றார் என்னுடையது.
எ
ரத்தத்தில் காதல் மிகுந்து இறந்தவனின்
பாடம் செய்யப்பட்ட உடல்போலிருக்கிறது
உன் கையில் என் கிற்றார்.
இறந்த உடலை உயிர்ப்பிப்பது போல
கிற்றாரை இசைக்க வேண்டும்
அல்லது
கிற்றாரை இசைப்பதுபோல ஓர் இறந்த உடலை
உயிர்ப்பிக்க வேண்டும் நீ.
ஏ
குற்றவுணர்வின் கரங்களில் சிக்கிக்கொண்ட கிற்றாருக்கு
உறக்கமே இல்லை.
மேலும்,
விழிப்புற்றுப் பதறி எழும்போது,
வாரி அணைத்துக்கொள்ள
யாரும் இல்லாத இரவை நம்பி
நான் எப்படி உறங்குவேன்?