அவனால் நம்ப முடியவில்லை, கொஞ்சமும் எதிர்பாராத அந்தச் சந்திப்பை. அந்தக் காலை நேரப் பயணம் அவ்வளவு இன்ப அதிர்ச்சியாகத் தொடங்குமென்று கற்பனை கூட செய்து பார்த்திருக்கவில்லை. அவள் முகத்தைப் பார்த்ததும் பேசுவதற்குச் சொற்களற்றுப் போனவனாய் நின்றான். மனதுக்குப் பிடித்தமானவர்களைச் சந்திக்கும்போதே திக்குமுக்காடிப் போகும்போது, ஒருகாலத்தில் அவன் மனம் முழுவதும் வியாபித்திருந்தவளைக் கண்டதும் இருப்புக் கொள்ளவில்லை அவனுக்கு. அதுவும், அவர்கள் பிரிந்த இந்தப் பதின்மூன்று ஆண்டுகளில் ஒரு தொடர்பும் இல்லாமல் நிகழ்ந்த தற்செயலான சந்திப்பாயிற்றே.
பிரிவால் புதையுண்ட உயிருக்கு நிகரானவளை, இரயிலொன்று சுமந்து கொண்டுவந்திருந்தது சகப் பயணியாய்.
முதலில், அவனை அவள்தான் பார்த்தாள். அவன்தானா என்று ஒருமுறைக்கு மூன்று முறை உறுதிபடுத்திக்கொண்டாள். மீண்டும் இந்தப் பக்கம் வரட்டும் கேட்டுவிடலாமென்று தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றுகொண்டாள். கைக்குட்டையால் முகத்தைத் துடைத்தபடி எதிரே வந்தவனைத் தயக்கத்துடன் வழிமறித்தாள். அவளைக் கவனிக்காமல் கடந்து சென்றுகொண்டே அடுத்த நொடியே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அவனது உணர்வுகள் அவளை அடையாளம் காட்டியிருக்க வேண்டும்.
“நீங்க” என்று அவள் கேட்டு முடிப்பதற்குள் “ஏய் தமிழ்!” என்று தன்னையும் அறியாமல் ஆர்வ மிகுதியால் சத்தமாகச் சொல்லி விட்டான். ஆனாலும், சுதாரித்துக்கொண்ட அவனது வாய், அடி மனதிலிருந்து பொங்கியெழும் அடுத்தடுத்த வார்த்தைகளை வடிகட்டியது. சில நொடி அப்படியே நின்று அவளது முகத்தை மட்டும் வெறித்துப் பார்த்தான். அதுவரை, ஏன்தான் பெங்களூர் போகிறோமோ என்று, வேண்டா வெறுப்பாகத் தன்னைத்தானே நொந்துகொண்டிருந்தவன், பெங்களூருவுக்கும் அந்த லால்பாக் இரயிலுக்கும் ஆயிரம் நன்றிகள் சொன்னான். மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் விரைந்துபோய்க்கொண்டிருந்த இரயிலைவிட வேகமாகத் துடித்தது அவனது இதயம். நினைவால் உறைந்து போயிருந்தான். மீண்டும் வார்த்தையால் உலுக்கினாள், “டேய் எரும” என்று.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then