வேலியைத் தாண்டுவதைப்போல்
குதிரையைத் தாண்டிய
ஓநாயைக் கண்டு
மிரண்டுபோன படைத்தலைவன் சொன்னான்:
“இந்தக் கிராமம்
வெல்வதற்குச் சவாலானதாக இருக்கும்,
மரங்கள் கூட
போருக்குத் தயாராக நிற்கின்றன காண்,
இவர்கள்
ஓநாய்களைப் போல்
வேட்டை நாய்களைப்
பழக்கி வைத்திருக்கிறார்கள்,
மண்ணில் புதைந்திருக்கும் கற்கள்
குளம்படிகளை உடைத்துவிடும்
கூர்மையோடு இருப்பதைக் காண்,
குதிரைகளைச் சாணம் போட வைக்கும்
மூர்க்கத்தனமான எருமைகள்
இவ்வூரில் நிறைந்திருக்கலாம்,
துப்பாக்கி ரவைகள்
அதிகம் விரயமாகக் கூடும்,
மரங்களையும் பாறைகளையும்
புதர்களையும் புற்களையும் கூட
சுட வேண்டியிருக்கும்,
இந்தக் காட்டில்
எல்லாமே சண்டையிடும் போலிருக்கிறது,
கவனமாக நெருங்குங்கள்”
m
குதிரைகள் மூச்சு விடும் சத்தம் கேட்கிறது,
கால்களைப் பின்னுக்கு வைக்கும் அவற்றை
விலாவில் உதைத்து வதைக்கிறார்கள்,
நமது வேட்டை நாய்கள்
அச்சத்தை விதைத்துவிட்டன,
எல்லையில் நிற்கும் மரங்களின் வேர்கள்
என் பாதங்களை முட்டுகின்றன,
நம் நிலப்பரப்பின் வெப்பம்
பருவ காலத்தால் நேர்ந்ததில்லை,
முன்னோர்களின் எலும்புகள்
ஒன்றுதிரள்வதால் நேர்கிறது,
பூமிக்கு உள்ளேயிருக்கும்
நீரோட்டமும் வேரோட்டமும்
புதைந்த உடம்புகளின்
வேறு வடிவங்கள்,
இக்காட்டிலிருக்கும் ஒவ்வொரு மரத்திலும்
அவர்கள் மறைந்து நிற்கிறார்கள்,
“நம் முதுகுகளில் அவமானம் ஏறிவிடாமல்
தடுக்கக் கூடிய அவர்களை
வணங்குவோம்.
எருமையின் கொம்புகளுக்கிடையே
எதிரிகளின்
தூரத்தை உற்றறியுங்கள்,
அவர்களின் நிழல்கள்
எல்லையைத் தாண்டுகிறதா?
உங்கள் வாட்களிலும் ஈட்டிகளிலும் உறைந்துள்ள குருதிக் கறைகளைப்
புதிய குருதியால் கழுவிக்கொள்ள
தயாராக இருங்கள்”
மறவோன் உசுப்பினான்.
அதிர அதிர அடித்து முழங்க வாய்ப்பின்றி
அமைதியாகக் காத்திருக்கும் பறைகளை
அவனுடைய
உக்கிரமான சொற்கள் உரசின.
m
தொலைநோக்கியின் கண்கள்
நூறு எருமைகளைப் பார்த்தன;
கொம்புகளுக்குப் பின்னே
திமில்கள் குலுங்குவதைக் கண்டன
உறங்கிக்கொண்டிருந்த பாறைகள்
எழுந்துகொண்டனவோ!
நள்ளிரவில் காடு புகும்
வெள்ளப் பெருக்குபோல்
எருமைகளின் கூட்டம் தெரிந்தது;
மறக்களமாகப் போகும் காட்டை உற்றறிந்த சிப்பாய் கூறினான்:
“நாம்
விலங்குகள் கூடவா
சண்டையிடப் போகிறோம்!
எருமைகளோடு மோதவா
இத்தனை குதிரைகளில் வந்தோம்?
துப்பாக்கி ரவைகள்
விலங்குகளுக்காகச் செலவானால்
அது வேட்டையாக அல்லவா பொருள்படும்,
போரென்று ஆகாதே!”
தொலைநோக்கியைக் கைமாற்றிய தலைவன் அதிர்ந்தான்.
வேர்களை அறுத்துக்கொண்டு
புதர்கள் ஓடி வருவதைப்போல்
எருமைகள் ஓடி வந்தன;
குழம்பினான்,
கண்களைச் சுருக்கினான்,
கழுத்து நரம்புகள் புடைக்க
மீண்டும் நோக்கினான்,
எருமைகள் கூட்டம்
நூறு பனை தூரத்தில்
நெருங்கிக்கொண்டிருந்தது.
கொம்புகளை மட்டுமே
காட்சிக்குள் கொண்டுவந்து பார்த்தவன்
ஒருகணம் சிலிர்த்துப் போனான்,
எண்ணெய் பூசி நீவியதைப்போல்
நெகுநெகுவென்று மின்னிய
கூர்மையான, கனத்த கொம்புகள்
அவனை மிரள வைத்தன;
எருமைகளை நோக்கி
துப்பாக்கியை உயர்த்தலாமா என்பதில் அவனுக்குக்
கேள்வி எழுந்தது;
போரினை வேட்டையாக மாற்றுவது
இழிவாக எஞ்சுமே என்ன செய்ய?
யோசித்தான்.
குதிரைகளின் காலடிகளில்
துள்ளுகின்ற குறுங்கற்களைக் கண்டு
ஏதோ முடிவெடுத்தவனாய்த்
தலையைச் சிலுப்பினான்,
அவனுடைய குரல்
அவனறியாத வண்ணம் உத்தரவிட்டது;
“சுடுங்கள்.”
m
Illustration by Gareth Lucas
குட்டியைச் சுமக்கும் குரங்கினைப்போல்
எருமைகள் ஒவ்வொன்றும் தோன்றின;
முன் கழுத்தில் கைகளையும்
தொடையிடுக்கில் கால்களையும்
கோத்துக்கொண்ட மறவர்களைத்
தூக்கிக்கொண்டு முன்னேறின;
ஒரு நதி தூரத்தில்
நூறு குதிரைகள்;
குதிரைகளின் மலம்
தரையில் விழும் சத்தம்
கரியனுக்குக் கேட்கிறது;
துப்பாக்கிகள் உயர்த்தப்படுவதற்குள்
முட்டித் தூக்க வேண்டும்;
எருமைகளின் விசை கூடிற்று;
ஒன்று
இரண்டு
மூன்று
நொடிகளை எண்ணினான் கரியன்;
தோள்பட்டையில் அழுந்தும்
துப்பாக்கிகளுக்கும்
அந்த எண்கள் சொல்லப்பட்டன;
ஆனால்,
ரவைகள் பறப்பதற்கு முன்பு
குதிரைகள் தெறித்தன;
எருமைகளின் வலிமையான தலைகள்
குதிரைகளின் நெஞ்சுக்கூட்டை உடைத்தன;
சிதறிய படை எழுவதற்குள்
கரியனின் கூட்டம் வளைத்தது;
கரியனின் ஈட்டி
குருதியில் சிவந்தது;
அறுபதாவது ஈரக்குலைக்குக்
குறி வைக்கும்போது
அவன் நெஞ்செலும்பில் நுழைந்தது
முதல் ரவை;
மூளைக்கு வலி ஓடியபோதும்
வாளெடுத்துப் பாய்ச்சினான்;
m
எதிரிகள் மிச்சமிருந்தனர்
இனத்திலும் மிச்சமிருந்தனர்
கரியனின் பார்வை சுற்றிச் சுழன்றது.
மூளை கூர்மையடைந்தது;
உடம்பு தரை தொடும் முன்னம்
மீதமிருக்கும் தலைகளை
உருட்டியாக வேண்டும்
எதிரிகளின் குதிரைகள் மட்டுமே
இங்கிருந்து மீள வேண்டும்
மனக்குரல் முடிவெடுத்தது;
வயிற்றிலும் தொடையிலும்
தோளிலும் முதுகிலும்
கழுத்திலும் நெற்றியிலும் என
ரவைகள் துளைத்த உடம்பு
தரையில் விழுந்தபோது
செருக்களத்திலிருந்து
மீண்டு போகும் குதிரைகளை
வெறித்திருந்தன கரியனின் கண்கள்.
அவனது
மார்பைத் தொட்டு அழுதது
இனக்குழு,
முதுகைத் தடவி அழுதது
நிலம் நிலம் நிலம்.
(தொடரும்…)