சென்னை எக்மோர் ஸ்டேசனிலிருந்து புறப்படத் தயாராகயிருந்த வைகை எக்ஸ்பிரஸில் தன்னோட இருக்கையைத் தேடிப் போய்க்கொண்டிருந்தபோது திடீரென்று யாரோ தன்னை இடித்துவிட்டுப் போனதை உணர்ந்த இளமதி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். நாற்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆள் பின்னாடி திரும்பிப் பார்த்துக்கொண்டே வேகமா நகர்ந்துபோனதைக் கவனிச்ச இளமதி ஓடிப்போயி பின்னாடியிருந்து அவனோட சட்டைய இழுத்துப் புடுச்சு “ஏன்டா பொறுக்கி நாயே… இதுவே வேலையா அலைவீங்களாடா” என்று கையில் வைத்திருந்த தண்ணி பாட்டிலால ஓங்கித் தலையில அடிச்சா. அதற்கவன் “தெரியாம இடிச்சுட்டேன்”னு எதுவும் நடக்காததைப் போலச் சொன்னான்.
அதற்கு இளமதி “தெரிஞ்சு இடிக்கிறதுக்கும் வேணுன்னு இடிக்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாதா எனக்கு. தெரியாம இடிச்சிருந்தா ஒடனே சாரி கேட்டிருப்ப. வேணுன்னே இடிச்சதுனாலதான் நா சட்டையக் கோத்துப் புடுச்சப்பக் கூட திருட்டு முழி முழிச்சுக்கிட்டு நிக்கிற. இதுவே பொழப்பா திரியுற ஒன்னய மாரி ஆளயெல்லாம் சும்மா விடக்கூடாது…” என்று அவனிடம் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தபோது எதிர் சீட்டில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண் முகத்தைச் சுளித்துக்கொண்டு இளமதி போட்டிருந்த ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட்டை மேலும் கீழுமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
சுற்றி இருந்தவர்களெல்லாம் அவனை ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு வயதானவர் மட்டும் “விடுமா… அவன்தான் தெரியாம இடிச்சுட்டேன்னு சொல்றானுல்ல” என்று சொல்ல, மற்றவர்கள் இளமதியை ஒரு சண்டைக்காரி போல பார்த்தார்கள்.
ரயில் புறப்பட ஆரம்பித்ததும் அவன், “விடுமா நான் எறங்கணும்” என்று சொல்லி இளமதியின் கையை உதறிவிட்டு இறங்கிச் சென்றுவிட்டான். தான் நின்ற இடத்திலிருந்து இரண்டு கம்பார்ட்மெண்ட் தள்ளியிருந்த அவளுடைய சீட்டில் வந்து டென்சனோடு உட்கார்ந்தாள் இளமதி. அது ஜன்னலோர சீட்டாக இருந்ததால் அவளுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக இருந்தது. உடன் பயணித்தவர்கள் அவளைப் பார்த்த பார்வை அவளுக்கு எரிச்சலூட்டியது. யாரிடமும் பேச விரும்பாமல் காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனாலும் அவள் இயல்பான மனநிலைக்கு வரவில்லை.
அந்த டென்சனான மனநிலை மாறுவதற்கு இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக்கொண்டே சென்றாள். மற்ற நேரங்களைப் போல இதைச் சாதாரணமாகக் கடந்து வர முடியவில்லை. அவள் மனதுக்குள் ஏதேதோ தோன்றியது.
அவள் ஆர்.சி.பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது தினமும் மாதா சிலைக்கு முன்பாக அழுதபடி பிரேயர் பண்ண காட்சியெல்லாம் நினைவில் வந்துபோனது.
அவளுக்குப் புடிச்ச பாட்ட மாத்தி மாத்திக் கேட்டுக்கிட்டே போய்க்கிட்டிருக்கும்போது அம்மாக்கிட்ட இருந்து போன் வந்தது. “அம்மா, நான் செங்கல்பட்டு தாண்டி வந்துட்டிருக்கேம்மா” என்றாள். அதற்கு அவள் அம்மா, “ஏண்டி டிரெயின் ஏறிட்டா போன் பண்ண மாட்டியா”னு திட்டிக்கொண்டிருக்கும்போது அம்மாவிடமிருந்து போனை வாங்கி சித்தி பேசினாள், “இளா நீ மட்டும் வறியா… இல்ல ஒன் பிரண்டுகளும் கூட வருதுகளா” என்று கேட்டாள். இளமதி “அவளுக வாரேன்னுதான் சொன்னாளுக. நான்தான் வேணான்னு சொல்லிட்டேன்” என்றாள்.
“ஒங்க அம்மாதான் சொல்லுச்சு. ஏண்டி அவளுகள கூட்டியார வேண்டியதான” என்று சித்தி கேட்க, “நீ என்ன கிறுக்கா. அம்மாதான் லூசுனா நீ அதுக்கு மேல இருப்ப போல, இத்தன வருசம் கழிச்சு நமக்குச் சாதகமா தீர்ப்பு வாங்கி திருவிழா நடக்குது. அவிங்களுக்குச் சும்மாவே நம்மள கண்டா வயிறு எரியும். இப்ப அம்புட்டுமுள்ள எரியும். நானே திருவிழா எப்புடி நடக்கப் போகுதோன்னு டென்சன்ல வந்துட்டிருக்கேன். இதுல அவளுகள வேற கூட்டிக்கிட்டு வரச் சொல்றியாக்கும், பேசாம போவியா. சரி அத விடு. மனுச மக்க அம்புட்டு பேரும் வந்துட்டாயிங்களா” என்று இளமதி கேட்க, “எல்லாரும் வந்துட்டாயிங்க. நீ மட்டுந்தே பாக்கி. சீக்கிரம் வந்து சேரு” என்று அம்மாவிடம் போனைக் கொடுத்துவிட்டு சித்தி சென்றுவிட்டாள். “சரிடி போன வெக்கிறேன். பாத்துப் பத்திரமா வா” என்று சொல்லி அம்மா போனை வைத்துவிட்டாள். இளமதி மீண்டும் பாட்டைக் கேட்டபடி பயணத்தைத் தொடர்கிறாள்.
கோயில் திருவிழாவுக்காக அவள் தன் சொந்த ஊருக்குச் சென்றுகொண்டிருக்கிறாள். இளமதியின் அப்பா மதுரையில் பொதுப்பணித் துறையில் கிளர்க்காகப் பணியாற்றிவந்தார். இளமதியின் வீட்டில் அம்மா, அப்பா, அக்கா சத்தியவாணியுடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர். அவள் அக்காவின் கல்லூரிப் படிப்பிற்காக எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊரிலிருந்து சென்னையில் குடியேறினார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அவள் அப்பா டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்னைக்கே வந்துட்டார். இளமதி தற்போது சென்னையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி.
கோயில் திருவிழாவுக்காக இளமதியின் வீட்டார் அனைவரும் நான்கு நாட்களுக்கு முன்பே ஊருக்குச் சென்றுவிட்டனர், சித்தி வீட்டில் தங்கியிருக்கிறார்கள். இளமதி செமினார் முடித்துவிட்டுச் செல்கிறாள்.
ஊருக்குச் செல்வது இளமதிக்குப் பிடிக்கவில்லையென்றாலும் சொந்தப் பந்தங்களைப் பார்ப்பதற்காகவும் தனக்குப் பிடித்த கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளவும் செல்கிறாள். இளமதியின் முன்னோர்கள் கட்டி வழிபட்டுவந்த வயல் காத்த அம்மன் கோயில், சக்தி வாய்ந்தது என்று சொல்லி பின்னாளில் ஊர்ப் பொதுக் கோயிலானது.
ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் மூன்று நாட்கள் கோயில் திருவிழா நடைபெறும். தீபாவளி, பொங்கலைவிட இந்தக் கோயில் திருவிழாதான் இளமதிக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எல்லா உறவினர்களும் வீட்டிற்கு வருவார்கள்.
தெருவெல்லாம் சுத்தம்செய்து மாவிலை, வேப்பிலை தோரணங்கள், சீரியல் செட் அலங்காரங்கள் என ஊரே விழாக்கோலமாக இருக்கும். இராட்டிணம், தள்ளுவண்டியில் வளையல் பாசி கடைகள், அஜித், விஜய் நற்பணி மன்றங்களின் சார்பாகப் பெரியப் பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருக்கும். திருவிழாவுக்கு ஏழு நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டடிவிடுவார்கள். காப்புக் கட்டிய பின் முளைப்பாரி விதை கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு அவரவர் வீட்டில் தொட்டியில் வளர்க்க ஆரம்பிப்பார்கள். யாருடைய முளைப்பாரி நன்றாக வளர்ந்திருக்கிறது என்று இளவட்ட பெண்களிடையே போட்டி இருக்கும்.
முதல் நாள் மதியம் கத்த ஆரம்பிக்கும் ரேடியோ செட் தொடர்ந்து நான்கு நாட்களுக்குக் கத்திக்கொண்டே இருக்கும். அதில் முருகன் மைக் செட்தான் ஊரிலேயே ஃபேமஸ். இளமதிக்கு இந்தத் திருவிழாவில் அதிகம் பிடித்ததே இளையராஜா பாடல்கள்தான். அதுவே திருவிழாவை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
இளமதி அப்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். ஞாயித்துக்கெழம பங்குனி திருவிழா நடத்துறது பத்திப் பேச ஊர்க் கூட்டத்துக்குப் போகணுமுன்னு அப்பா அம்மாக்கிட்ட சொல்லிட்டிருந்தாரு. அக்கா சத்தியவாணி “யப்பா இந்த வருசமாச்சும் நம்ம தெரு ஆளுகளும் முளைப்பாரி போடுறதுக்குப் பேசிட்டு வாங்கப்பா. நாமளுந்தான வரி குடுக்குறோம். இல்லைன்னா எங்காளுக வரி குடுக்க மாட்டோமுன்னு சொல்லுங்க. அப்பதான் அவிங்களுக்குப் பயம் வரும்”ன்னு சொன்னாள்.
“நம்ம தாத்தன் பாட்டன் கட்டுன கோயில ஊர் பொதுமக்கள் எல்லாம் கும்புட்டுட்டுப் போறாங்கன்னு பெருந்தன்மையா விட்டதுக்கு இன்னைக்கு நம்மளயே போட்டுப் பாக்கிறாயிங்க”ன்னு அப்பா பதில் சொன்னாரு.
உடனே அம்மா, “முட்டாத்தனமா பொழப்பு பொழச்சுட்டு இப்ப வந்து குத்துதே கொடையுதேனா என்னா பண்றது” என்று சொன்னாள். “கேனத்தனமா பேசிட்டுத் திரியாத” என்று அப்பா திட்ட, பதிலுக்கு அம்மா “ஆமா… பதினஞ்சு வருசமா மொளப்பாரி எடுக்கவிடாம தடுக்குறாயிங்க. அவிங்கள ஒன்னும் பண்ண முடியில. நான்தே தொக்கா போயிட்டேன்” என்று சண்டைப் போட்டிருக்கும்போதே பெரியப்பா வீரய்யன் “என்ன கந்தப்பா ஞாயித்துக்கெழம கூட்டமுன்னு சொன்னாயிங்க, தகவலு வந்துச்சா”னு சொல்லிட்டே வீட்டுக்குள்ள வந்தாரு.
“அட ஆமாண்ணே… இவளுகயெல்லாம் மொளப்பாரி போடுறதுக்காக ஊரு கூட்டத்துல பேசுங்கன்னு சண்டக்கட்டிட்டு நிக்கிறாளுக. ஊருக்குள்ள சண்ட சச்சரவு வேணாமுன்னுதான் நாமளும் பொறுத்துப் பொறுத்துப் போறோனு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்குறாளுக.”
“அவுங்க சொல்றதும் சரிதானப்பா. எடத்தக் குடுத்தா மடத்தப் புடுச்சுக்கவாயிங்கன்ற கதையா கொஞ்சங்கொஞ்சமா நம்மளுக்கும் நம்ம கோயிலுக்கும் சம்பந்தமில்லனு ஆயிப்போயிருமில்லப்பா” என்று பெரியப்பா சொன்னார்.
“என்னன்ணே நீங்களும் புரியாம பேசிட்டிருக்கீங்க. பெரியாளு இருந்தவரைக்கும் அவிங்க குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தாயிங்க. அந்தாளும் அப்பிடி இப்பிடி இருந்தாலும் நம்மாளுக கொஞ்சம் கவுருமெண்டு வேலைகள்ல இருக்குறதுனாலயும் அவருக்குப் பழைய கதை தெரிஞ்துனாலயும் அவிங்க இனத்தாளுங்கள கொஞ்சம் அடக்கி வச்சிருந்தாரு. அந்தாளு செத்ததுக்கு அப்பறம் கட்சியில இருக்கறவன், ரியல் எஸ்டேட் பண்றவன், தொழிலதிபருன்னு தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாட்டம் ஆளுக்காளு நாட்டாமத்தனம் பண்ணிட்டு இருக்காயிங்க.”
“படிக்காத முட்டாப் பயலுகளுக்கு நம்ம பயலுக அம்பேத்கர் பயிலகம் வச்சுக் கவர்மெண்டு வேலைக்குப் படிச்சுக்கிட்டிருக்கறதே பிடிக்கல. எதையாவது வம்பிழுத்து நம்ம பயலுக மேல கேசு வரவச்சு வேலைக்குப் போகவிடாம தடுக்கணுமுன்னு கங்கணங் கட்டிட்டுத் திரியுறானுக. இதுல இது ஒரு பிரச்சினையா.”
“இப்ப மொளப்பாரி போடலன்னு எந்த சாமி அழுதுச்சு. போன வருசம் பாத்தல்ல… சேகர் மகன் வினோத் எஸ்.ஐ. எக்சாமுக்குப் படிச்சிக்கிட்டிருந்தான். அவன வம்பிழுத்து இப்ப கோர்ட்டு கேசுன்னு அலஞ்சிக்கிட்டு இருக்கறதுதான் மிச்சம்” என்று அப்பா சொன்னார்.
அதற்கு வீரய்யன் பெரியப்பா “பிரச்சினை வராத அளவுக்குப் பேசிப் பாப்போம்பா. நம்ம தலைக்கட்டு நெறையல அதுக்காச்சும் கட்டுப்பட்டுதான ஆகணும்” என்று சொன்னார்.
அதற்கு, “ஊருக்குள்ள இருக்குற எல்லாத் தெரு ஆளுகளெல்லாம் பெரச்சினைனு வறப்ப ஒன்னு சேந்துக்குவாயிங்க. நம்ம பயலுக கவர்மெண்டு வேலைக்குப் படிக்கிறது அவிங்க கண்ண உறுத்துது, நான் சொல்றது சொல்லிட்டேன். மொத நம்ம பயலுகளெல்லாம் படிச்சு ஒரு நெலமைக்கு வரட்டும், அப்பறமா மத்தத பாத்துக்கலாம்” என்றார் அப்பா.
“சரிப்பா, ஒரு முயற்சிதானஞ் பேசிப் பாப்போம். பிரச்சின வந்துருமுன்னு எத்தன நாளுதான் பொறுத்துப் போறது, வந்தா பாத்துக்குவோம்”ன்னு பெரியப்பா சொல்லிட்டுப் போனாரு. அப்பாவுக்கு இதுல உடன்பாடு இல்லைன்னாலும் “சரி பாக்கலாம்” என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்.
ஞாயித்துக்கெழம சாயங்காலம் ஊர் கூட்டத்துக்குப் போயிட்டு வந்தவுங்கக்கிட்ட நிறைமதியும் அவளோட அத்தை மகள் நந்தினியும் என்னாச்சுன்னு ஆர்வமா கேட்டாங்க.
பெரியப்பா வீரய்யன் “மொதல்ல சலம்பல குடுத்தாயிங்க. அப்பறமா எல்லாரும் பேசி ஒருவழியா மொளப்பாரி போட ஒத்துக்கிட்டாயிங்க, ஆனா ஒரு கண்டிசன். மொளப்பாரி கும்மி நம்ம தெருவுலேயே நாம அடிச்சுக்கணுமாம், மொளப்பாரி ஊர்வலம் நம்ம தெருவுக்குள்ள வராதாம். ஊர்வலம் மேட்டுத் தெருவுல இருந்து வெளிய வரப்ப நம்ம தெரு முக்குல நின்னு அவிங்களோட சேந்துக்கணுமுன்னு கண்டிசென் போட்டிருக்காயிங்க” என்று சொன்னார்.
“ஆமா, அவிங்க நம்ம தெருவுக்குள்ள வரலன்னா நமக்கென்ன மொதலுக்கு மோசம் போயிருமாக்கும்? போயிட்டுப் போறாயிங்க. நம்ம மொளப்பாரி போடலாமுல்ல அது போதும்” என்று இளமதியின் அத்தை வனிதா சொன்னாள்.
இளமதி, சத்தியவாணி, நந்தினி, புனிதா என இளவயது பிள்ளைகளுக்கெல்லாம் சந்தோசம் தாங்க முடியல. இளமதியோட அத்தை மகன் செந்தில், பெரியப்பா மகள் புனிதாவோடு அவர்களுடைய நண்பர்களும் சேர்ந்துதான் அம்பேத்கர் பயிலகம் நடத்திட்டு வராங்க.
குரூப் 1 ஆபீசராகணுமுங்குற வெறியில ராத்தரி பகலா படிக்கிறாங்க. ஏற்கெனவே கவர்மெண்டு வேலையில இருக்குற சொந்தக்காரங்கக்கிட்ட புத்தகங்களையும் மத்த உதவிகளையும் வாங்கிக்கிட்டு வேறெந்த வேலைக்கும் போகாம வெறியோட படிச்சுட்டிருக்காங்க.
அம்பேத்கர் பயிலகத்தில் இருந்து ஒவ்வொரு தடவையும் ஒருத்தருக்குக் கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்கறதுக்குப் பணம் கட்டுவாங்க. அவுங்க அங்க குடுக்குற பாடக்குறிப்புகள், கேள்வித்தாள்கள மத்தவங்கக்கிட்ட பகிர்ந்துக்குவாங்க.
இளமதியின் அப்பா கந்தப்பன்தான் இவுங்களுக்கு நிறைய உதவிகள் செய்யுறாரு. சத்தியவாணியையும் இளமதியையும் நல்லா படிக்க வச்சுப் பெரிய அதிகாரிகளா ஆக்கணுமுங்கறது அவரோட கனவு. அதுபோல புனிதாவோட திறமையப் புரிஞ்சுக்கிட்டு இந்த மாவட்டத்துக்கே தலைமை அதிகாரியா வரணுமுன்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. வெறிகொண்டு படிக்கிறதுல புனிதாதான் மத்த எல்லோருக்கும் முன்னுதாரணம். அப்படி அம்பேத்கர் பயிலகத்துல வெறிகொண்டு படிச்ச செல்வம் வி.ஏ.ஓ.வாக வேலைக்குச் சேர்ந்துட்டான்.
புனிதா குரூப் 2 பரிட்சையில பாஸாகியும் வேலைக்குப் போகல. எப்புடியாது குரூப் 1 பரிட்சையில பாஸ் பண்ணியே ஆகணுமுன்னு வைராக்கியத்தோட படிச்சுட்டிருக்கிறா. அதனால புனிதாவுக்கு இந்தத் திருவிழாவில் முளைப்பாரி போட்டு அதுல நேரத்தைச் செலவழிக்க விருப்பமில்ல. ஆனால், சத்தியவாணிக்கும் நந்தினிக்கும் சொல்ல முடியாத அளவுக்குச் சந்தோசம். ரெண்டு பேரும் போட்டிப் போட்டுக்கிட்டு முளைப்பாரியை வளக்குறாங்க.
Illustration by Alessandro Cripsta
வேலாயி அப்பத்தாதான் முளைப்பாரிக்குக் கும்மிப் பாட்டுப் பாடுவாங்க. கும்மியடிக்கும்போது மொளப்பாரி போடணுமுன்னு வரிஞ்சுக் கட்டிட்டுத் திரிஞ்சவளுக வாயத் தொறந்து பாடுனா வாயில இருந்து முத்து உதுந்து போயிருமான்னு திட்டிக்கிட்டே பாடுவாங்க.
“ஏன்டி நந்தினி… ஒன் மாமனுக்குச் சீக்கிரம் வேல கெடச்சு இந்த வருசமே கலியாணம் ஆயிரணுமுன்னு நல்லா மனசுல வேண்டிக்கிட்டுக் கும்மியடிடி”னு சந்திரமதி அத்தை சொல்ல, “மொளப்பாரி மொது மொதுன்னு வளந்திருக்கிறத பாத்தா மூனு மாசத்துலயே கலியாணம் ஆயிரும் போலயே” என்று முத்து அக்காவும், “ஏய்ஞ் அவ திங்கிற தீனியெல்லாம் மொளப்பாரிக்கும் போட்டு வளத்துருக்கா போல” என்று நன்றாக வளர்ந்திருந்த நந்தினியோட மொளப்பாரியப் பத்தி கும்மியடிக்கக் கூடியிருந்தவங்க கேலி பேசிட்டிருந்தாங்க.
நந்தினிக்கும் இளமதியின் பெரியம்மா மகன் ரமேஷுக்கும் திருமணம் பேசி முடித்துவிட்டார்கள். ரமேஷ் வனத்துறை அலுவலர் வேலைக்காகத் தேர்ச்சி பெற்றுச் சான்றிதழ் சரிபார்ப்புக்காகக் காத்துக்கொண்டிருப்பதால் வேலை கிடைத்தவுடன் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறாள்.
திருவிழா காப்பு கட்டி ஒருவாரம் எப்படிப் போனதுன்னே தெரியல. வியாழக்கிழமை மாலை இளமதி பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டுத் திரும்பி வரும்போது பாட்டுச் சத்தம் காதைப் பொளந்துட்டிருந்துச்சு.
வெள்ளிக்கிழமை மதியம் அந்தந்தத் தெருவுக்கு ஒதுக்கப்பட்ட எடத்துல அவுங்கவுங்க பொங்க வைக்கணுமுன்னு அறிவிப்புல சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இளமதியோட மேக்குத் தெருல இருந்து அஞ்சாறு குடும்பம் மட்டுந்தான் பொங்கல் வச்சாங்க.
சாயங்காலம் ஆறு மணிக்கு மொளப்பாரி ஊர்வலம் ஆரம்பிக்கப் போகுதுன்னும், மொதல்ல வடக்குத் தெருவுல இருந்து ஆரம்பிச்சு ஒவ்வொரு தெருவுக்குள்ளயும் ஊர்வலம் வரும்போது அந்தந்தத் தெருவுக்காரங்க அங்கனக்குள்ளேயே சேந்துக்கலாமுன்னும் அறிவிப்புல சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆறரை மணியாகும்போது ‘இன்னும் சிறிது நேரத்தில் மொளப்பாரி ஊர்வலம் ஆரம்பிக்கப் போகிறது’ன்னு மைக்ல சொன்னாங்க. கிட்டத்தட்ட ஏழரை மணி இருக்கும்போது வானவேடிக்கைகளோட மொளப்பாரி ஊர்வலம் தொடங்குச்சு.
மேக்குத் தெருவுல இருந்து சத்தியவாணி, நந்தினி, மேகலாவோட சேத்துப் பதினாலு பேர் மொளப்பாரிய எடுத்துக்கிட்டு ஊர்வலத்துல கலந்துக்கிறதுக்காக மேட்டுத் தெரு முக்குல காத்துக்கிட்டிருந்தாங்க. எல்லோரும் செட்டா தாவணிப் பாவாடை எடுத்திருந்தாங்க. இளமதியும் மொத தடவ தாவணிப் பாவாடை போட்டுக்கிட்டு நந்தினியோட நின்னுக்கிட்டு இருந்தா. இளமதி நந்தினியோடயும், அவ ஃபிரண்டு ஜோதி சத்தியவாணியோடயும் தொணைக்குப் போறதுக்காகக் காத்துக்கிட்டு இருந்தாங்க.
மொளப்பாரிக்கு முன்னாடி அடிச்சுட்டு வர பறைச் சத்தத்தையும் வெடிச் சத்தத்தையும் வச்சு எந்தத் தெருவுக்கு ஊர்வலம் வந்திருக்குனு தெரிஞ்சுக்கிட்டு, இவுங்க ரெடியாயிட்டு இருந்தாங்க. ரசிகர் மன்றத்த சேர்ந்த இளவட்ட பயலுக ரெண்டு பக்கமும் லைட்டு வெளிச்சங்கள எடுத்துக்கிட்டு ஊர்வலத்துக்குப் பாதுகாப்பா போயிக்கிட்டிருந்தாங்க. மேக்குத் தெரு பசங்க அவிங்க பொண்ணுகளோட போறதுக்காகக் காத்துக்கிட்டிருந்தாங்க.
ஒருவழியா ஒன்பது மணி வாக்குல மொளப்பாரி ஊர்வலத்தோட மேக்குத் தெரு மொளப்பாரியும் கலந்து போக ஆரம்பிச்சுச்சு. இளமதி நந்தினிக்குப் பக்கத்துலயே நடந்து போய்க்கிட்டிருந்தா. ரமேஷ், செந்தில், முத்து, சிவா, கண்ணன், விக்னேஷ் எல்லாரும் கூட போய்க்கிட்டிருந்தாங்க அவுங்களோட ஃபிரண்ட்ஸ் லாரன்ஸ், விஸ்வா, ரஹ்மத்தும் ஊர்வலத்தோட போயிட்டிருந்தாங்க.
மேக்குத் தெருக்காரங்களில நந்தினியும் இளமதியுந்தான் முன்னாடிப் போய்க்கிட்டிருந்தாங்க. திடீருன்னு கொஞ்சங்கூட எதிர்பாக்காத நேரத்துல கும்பலா வந்தவுங்கள்ல ரெண்டு பேரு இளமதிய இடிச்சுத் தள்ளிட்டு ஒருத்தன் நந்தினியோட தாவணியப் புடிச்சு இழுத்தான். இன்னொருத்தன் நந்தினியோட ரெண்டு மார்புலயும் கைய வைச்சு அழுத்தி, ‘மொளப்பாரி’ன்னு ஏதோ சொல்லிக்கிட்டே பின்னாடித் தள்ளிவிட்டுச் செருப்புக் காலால ஓங்கி மார்புலயே மிதிச்சான். பறைச் சத்தத்துலயும் பாட்டுச் சத்தத்திலயும் இளமதிக்கு ஒன்னுமே கேக்கல.
தாவணி கிழிந்த நிலையில மொளப்பாரிய விட்டுட்டு ரெண்டு கையையும் மார்புல வச்சு மூடிக்கிட்டு நிலைகுலைஞ்சு அலறிப் போயி கீழ விழுந்தா நந்தினி. என்ன நடக்குதுன்னே அவளால புரிஞ்சுக்க முடியல. இளமதிக்கு என்ன செய்றதுன்னே தெரியல.
கூட இருந்த எல்லாப் புள்ளைகளும் பதற்றத்துல மொளப்பாரியப் போட்டுட்டு அழுதுகிட்டே ஓட ஆரம்பிச்சாங்க. பெரியவங்க நந்தினிய கைத்தாங்கலாப் புடிச்சுட்டு, பெரியப்பா வீரய்யனோட மேல் துண்ட எடுத்து ஒடம்ப மூடி கூட்டிட்டுப் போனாங்க.
இளமதியையும் மத்த வயசு புள்ளைகளையும் மேக்குத் தெரு பெரியவங்க பாதுகாப்பா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. ஒரு ஆம்பள பயலுகளும் இவுங்க கூட வரலன்னு எல்லோரும் திட்டிட்டே போனாங்க.
கொஞ்ச நேரத்துல கோயில்ல பாட்டெல்லாம் நிறுத்திட்டாங்க. இளமதியோட தெருவுல இருக்கிற பொம்பளைங்க யாரும் வீட்டவிட்டு வெளியில வர வேணாமுன்னு பெரியப்பா, அப்பா, மாமா எல்லோரும் சொல்லிட்டாங்க.
ஊர்வலத்துல இவுங்களோட வந்த ஆம்பள பயலுக ஒருத்தனும் ஊருக்குள்ள இல்ல. அவிங்களுக்கு என்னாச்சோனு எல்லோரும் பதறிக்கிட்டு இருந்தாங்க. நந்தினி கூனிக் குறுகிப் போயி அழுதுட்டு உக்காந்திருந்தத பாத்த அவளோட அம்மா தலையில அடிச்சிக்கிட்டு அழுதுகிட்டிருந்தா.
இளமதியும் நந்தினி பக்கத்துல உக்காந்து அழுதுகிட்டிருந்தா. நடந்தத நேரில பாத்தது இளமதி மட்டுந்தான். அவளுக்கு அந்தச் சம்பவம் ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.
கொஞ்ச நேரத்துல போலீஸ் வேன் தெரு முக்குல வந்து நின்னுச்சு. மேக்குத் தெருல இருக்கிற எல்லா வீட்டுக்குள்ளயும் போயி வயசு வித்தியாசம் பாக்காம திருவிழாவுக்கு வந்திருந்த சொந்தக்காரங்களையும் சேத்து எல்லா ஆம்பளைங்களையும், படிக்கிற பசங்கள கூட தரதரன்னு அடிச்சுக்கிட்டே இழுத்துட்டுப் போயி வேன்ல ஏத்துனாங்க.
இளமதியோட அப்பாவும் புனிதாவோட அப்பாவும் “சார் நாங்க என்ன தப்பு பண்ணுனோம். பிரச்சினை பண்ணுனவுங்கள விட்டுட்டு எங்கள வந்து ஏன் அரெஸ்ட் பண்றீங்க. நாங்களும் கவர்மெண்டு சர்வண்டுதான். மரியாதையா நடத்துங்க” என்று சொன்னதுக்கு “கவர்மெண்டு சர்வண்டுனா நீ பெரிய கலெக்டரா? புடுங்கிகளா, வண்டில ஏறுங்கடா. மயிரானுங்களுக்கு மரியாதை குடுக்கணுமா”ன்னு சொல்லிச் சட்டைக் காலரப் பிடிச்சு இழுத்துட்டுப் போனாங்க.
தன் அப்பாவ மிகப் பெரிய ஆளுமையா, மரியாதைக்கு உரியவரா நெனச்சுக்கிட்டிருக்கிறப்போ போலீஸ்காரங்க அவர நடத்துன விதம் இளமதிக்குப் புடிக்கவே இல்ல. வேலாயி அப்பத்தா, வனிதா அப்பறம் மத்தவங்கக்கிட்ட பெரியப்பா வீரய்யன் “ஏதோ பெரிய பிரச்சினை நடந்துருக்கு, என்னானு ஒன்னும் வௌங்கல. நம்ம பயலுகளயும் ஒருத்தனயும் காணல. பாத்துச் சூதானமா இருங்க, கதவத் தொறக்காதீங்க”னு சொல்லிட்டு, புனிதாவ கூப்பிட்டு “டவுன்ல இருக்கிற வக்கீலு வின்செண்டுக்குப் போன போட்டு என்ன ஏதுன்னு விசாரிக்கச் சொல்லு. நம்மாளுகள புடுச்சு ஆக வேண்டிய காரியத்தப் பாக்கச் சொல்லு”னு சொல்லிட்டிருக்கும்போதே ஒரு போலீஸ் வந்து “யோவ் எம்புட்டு நேரமுய்யா சட்டய மாத்திக்கிருப்ப. பெரிய இவனா நீ” என்று வீரய்யன் பெரியப்பாவ பின்னங்கழுத்துல கையை வச்சு இழுத்துட்டுப் போனாங்க.
மேக்குத் தெருல இருக்குற பொம்பளைங்க வீட்டப் பூட்டிட்டு நந்தினி வீட்டுல கொஞ்ச பேரும், புனிதா வீட்டுல கொஞ்ச பேரும் இருந்தாங்க. வேலாயி அப்பத்தா நந்தினி வீட்டுல இருந்தாங்க. இளமதியோட அம்மா, சித்தி மத்தவங்களாம் புனிதா வீட்டுல இருந்தாங்க.
வேலாயி அப்பத்தா இளமதியோட அம்மாக்கிட்ட “கதவப் பூட்டிக்கிட்டுக் கோளாறா இருங்கடி. கொளவிக் கல்லு, ஒலக்கயெல்லாம் ரெடியா எடுத்து வச்சுக்கங்க. கரண்ட நிறுத்திப் புடுவாயிங்க. அதுனால மெழுகுதிரி, டார்ச் லைட், தீப்பெட்டியெல்லாம் வச்சுக்கோங்க. கூடவே மொளகாப்பொடியும் பக்கத்துல வச்சுக்கங்க”னு சொன்னதுக்கு “சரி யத்த, நீங்களும் சூதானமா இருங்க”ன்னு சொல்லிட்டுப் போனாங்க. நைட்டெல்லாம் சின்னப் பிள்ளைக மொதக்கொண்டு ஒருத்தரும் தூங்கல. இளமதியோட சித்தியும் மூனு மாச கைக்கொழந்தையோட முழிச்சுக்கிட்டு இருந்தாங்க.
புனிதா வக்கீலுக்குப் போன் போட்டு நடந்த விசயத்தச் சொல்லி போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டுப் போன எல்லோரையும் கூட்டிட்டு வரதுக்குப் பேசிட்டிருந்தா. மதுரையில தாசில்தார் லெவல்ல பெரிய பெரிய ஆபீசர் கொஞ்ச பேரு சொந்தக்காரங்களா இருக்கிறதுனால அவுங்கக்கிட்ட பேசிப் பாக்கச் சொன்னா.
இன்னொரு வீட்டுல நந்தினியோ அழுதுகிட்டே இருந்தா. மத்தவங்க எல்லோரும் இனி என்ன நடக்கப் போகுதோனு ஆளுக்காளு ஒவ்வொன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க.
“நம்ம பயலுக வேற ஒருத்தனயும் காணோம். அப்பவே கந்தப்பன் மாமா சொன்னாங்க, நம்ம பயலுக படிக்கிறது அவிங்க கண்ண உறுத்துது. எதுடா சாக்குனு காத்துக்கிருக்காயிங்க, இதெல்லாம் தேவையானு. நம்மதான் கேக்கல”னு வாணி சொன்னா.
“ரமேஷுக்குக் கவருமெண்டு வேலை கெடச்சிருமுன்னு நெனச்சுக்கிட்டு இருந்தோமேஞ் இனி அவென் எப்புடி வேலைக்குப் போவான். என் பிள்ளையோட வாழ்க்கையே நாசமா போச்சே”ன்னு பெரியம்மா அழ ஆரம்பிச்சுட்டாங்க.
“அய்யோ பாவி பரப்பா, அவிங்க கையில கட்ட மொளைக்கஞ் என் மக எப்புடிக் கூனி குறுகிப் போயி உக்காந்திருக்கா. அத கண்ணார பாத்த என் மருமவெ மனசு என்னா பாடுபட்டிருக்கும்”ன்னு வனிதா அத்த புலம்பினாங்க.
“நம்ம மொளப்பாரி ஊர்வலம் போறதுனால அவிங்களுக்கு என்ன பிரச்சினை? அதுக்கு ஏன் இப்புடியெல்லாம் செய்றாயிங்க”னு ஜோதி கேட்டதுக்கு, சின்னம்மா பாட்டி “எங்களுக்குச் சமமா மொளப்பாரியாடி போடுறீங்கனு மொலைய புடிச்சுக் கசக்கியிருக்காயிங்க. இன்னைக்கு நேத்து இல்லஞ் நம்ம படிக்கிறது, வேலைக்குப் போறது, நல்ல நெலமைக்கு வரது அவிங்களுக்குப் பொச்சு எரியும். பொறுக்க முடியாம, அவிங்க நம்மளவிட மேலனு மானங்கெட்ட வெட்டி வீராப்ப நம்ம வீட்டுப் பொம்பளைங்க மொலையிலயும் சாமானுலயுந்தா காட்டுவாயிங்க.
ஒரு பத்துப் பன்னெண்டு வருசத்துக்கு முன்னாடி நம்ம தெருவுக்குச் சொந்தமான கெணத்துத் தண்ணி கடுத்துப் போச்சுன்னு ஊர் பொதுவுல இருக்குற குடிதண்ணி கொழாயில தண்ணி புடிக்க விடணுமுன்னு இதே மாரி பஞ்சாயத்தெல்லாம் பண்ணி, அங்குட்டு இங்குட்டு மனு குடுத்து, அதிகாரிக கையில காலுல விழுந்து ஒருவழியா சரின்னுட்டாயிங்க. ரெண்டு கொடம் தண்ணி பிடிக்க அவளுக மாட்டுக்கு மசுருக்கெல்லாம் புடிச்சு முடிச்சு விடுற வரைக்கும் நம்ம சனமெல்லாம் கெடயா கெடந்து கடைசில புடிச்சுட்டு வரணும்.
இப்பிடித்தான் ஒருநாளு நம்ம பாக்கியம் மக செல்வராணி அவ அப்பன் சட்டய போட்டுக்கிட்டுத் தலையில ஒரு கொடம் இடுப்புல ஒரு கொடம் வச்சுக்கிட்டு நடந்து வந்துக்கிருந்தா. அப்ப மூக்கன் மகன் கழுவெங்கிறவன் ‘எங்க தெருவுல வந்து தண்ணி புடிச்சுட்டுப் போற அளவுக்குத் துணிச்சலாடி’ன்னு அவ ரெண்டு மொலையையும் புடிச்சுத் தள்ளிட்டான். எடுப்பா இருக்குற அவ மொலை மேல அந்தப் போக்கத்த பயலுக்குக் கண்ணு. கைய வச்சுப் பாப்போம், நம்மள எவன் என்னா செய்ய முடியமுன்னு அத சாதிப் பெரச்சினையா மாத்திட்டான்.
அவளும் இப்பிடித்தான் கொள்ள நாளு கண்ண கசக்கிட்டு மூலையில மொடங்கிக் கெடந்தா, வர மாப்பிளையெல்லாம் தட்டிப் போயிட்டே இருந்துச்சு. அப்பறம் பாக்கியத்தோட மதினி, கமுதிக்கு அங்குட்டு ஒரு ஊருலருந்து மாப்பிள பாத்துக் கட்டிக் குடுத்தா”னு முன்னாடி நடந்த கதயெல்லாம் சொன்னாங்க.
“நம்ம புள்ளைங்க நெஞ்சு எடுப்பா இருந்தா கைய வைப்பானா? அவ ஆத்தா பொண்டாட்டிக மேல கைய வச்சா சும்மா இருப்பாங்களா? போலீஸ் ஸ்டேசனுக்குப் போறதுதான் போறாயிங்க, நெஞ்சுல கை வச்சவன் கைய வெட்டிட்டுப் போனா கூட மனசு ஆறிப்போயிறும். அப்பவே அந்தக் கழுவங் கைய வெட்டிருந்தா இத்தன வருசம் கழிச்சும் அதையே செய்வாங்களா”னு பெரியம்மா சொன்னாங்க.
அதுக்கு வேலாயி அப்பத்தா, “கைய வெட்டுறதுக்கு வெளியில இருந்து பட பட்டாளத்த எறக்கனுமாக்கும். சீமக் கருவேலய வெட்டுற மாரி வெட்டிச் சாயிக்க எம்புட்டு நேரமுடி ஆயிரும். நானும் சின்னம்மாவும் களை வெட்டிட்டு இருந்தப்போ ஒருத்தன் வம்பிழுத்தான். அவன் கொட்ட பிதுங்குற அளவுக்கு மிதிமிதினு மிதிச்சோம். அந்தக் காலம் மாரி இல்ல. இப்ப இவிங்க எல்லாம் நம்மள பாத்துப் பயப்புடுற அளவுக்கு நாம வளரணும். எதோ இப்பத்தான் நம்ம புள்ளைகயெல்லாம் படிச்சு அது அதுக நல்ல நல்ல வேலைக்குப் போக ஆரம்பிச்சுருக்காங்க. அந்த ஆத்தா வயல் காத்த தாயிதான் நம்ம எல்லாத்தயும் காப்பாத்தணும்”ன்னு சொன்னாங்க. இப்புடி நைட் முழுக்க யாருமே தூங்காம ஆதங்கத்துல பேசிட்டிருந்தாங்க.
இளமதிக்கு அவ பெரியம்மா நம்ம புள்ளைங்க நெஞ்சு எடுப்பா இருந்தா கைய வைப்பானானு சொன்ன வார்த்தையும் நந்தினிக்கு நடந்ததும் மனசு ஏதோ மாதிரி இருந்துச்சு.
ஊருக்குள்ள இருந்து வந்து பெரிசா பிரச்சினை பண்ணிருவாங்கன்னு பயந்துக்கிட்டே இருந்தாங்க. ஆனா அதுமாரி எதுவும் நடக்கல. காலையில ஊருக்குள்ள யாரு நடமாட்டமும் இல்ல. அங்கங்க போலீஸ்காரங்க துப்பாக்கியோட நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஊரடங்கு உத்தரவுப் போட்ருக்கறதா சொன்னாங்க. போலீஸ் ஸ்டேசனுக்குப் போனவங்களப் பத்தி எந்தத் தகவலுமில்ல.
‘மொளப்பாரி ஊர்வலத்துல நந்தினிய கீழ தள்ளிவிட்டு நெஞ்சுல மிதிச்ச பாலுவோட காலயும் தாவணிய பிடிச்சு இழுத்த கணேசனோட கையையும் நம்ம பயலுக அடிச்சு ஒடச்சிருக்காங்க. பெரிய சண்டையே நடந்துருக்குது. அதுல நம்ம பயலுகளும் அவிங்க ஃபிரண்ட்ஸும் துண்டுல சல்லிக் கல்லக் கட்டிச் சண்டைக்கு வந்த எல்லோரோட மூஞ்சி மொகரைய பேத்துருக்காங்க. பதிலுக்கு அவிங்களும் நம்ம பயலுகள கட்டையால அடிச்சிருக்காங்க. அதுல கணேசன் சாகப் பொழைக்கக் கெடக்குறானாம். அதுனால செந்தில் மேலயும் ரமேஷ் மேலயும் கொலை முயற்சி வழக்கு போட்டுருக்காங்களாம். கலவரம் வராம தடுக்குறதுக்கு ரெண்டு தெருவுல இருந்தும் ஆம்பளைங்கள கைது பண்ணி உள்ள வச்சிருக்காங்களாம்’ என வக்கீல் மணி மூலமாக புனிதாவுக்கு எல்லாத் தகவலும் தெரியவந்தது. “ரேசன் கார்டு லிஸ்ட்ட வச்சு நம்ம தெருல இருக்கிற எல்லா ஆம்பளைங்க பேருலயும் கேஸ் போட்டிருக்காங்களாம். அதுல பள்ளிக்கூடத்துக்குப் போற பயலக பேரும் இருக்காம். படிக்கிற பயலுக மேலதான் ஸ்ட்ராங்கான கேஸு போட்டிருக்காங்களாம்” என்று புனிதா சொன்னதைக் கேட்டு ரமேஷின் அம்மா திரும்பவும் “அய்யோ ராத்திரி பகலா கண்ணு முழிச்சு, சாப்புடாம கொள்ளாம படிச்சானே. அவன் மேல கேசு வந்துருச்சே, என் மகன் இனி எப்புடி கவர்மெண்டு வேலைக்குப் போக முடியும்”ன்னு அழுது புலம்புனாங்க.
“அழுகாதீங்க பெரியம்மா. நம்ம பயலுக மேல போட்ட கேச வாபஸ் வாங்க வைக்கிறதுக்கு எல்லா வகையிலயும் முயற்சி செஞ்சுட்டிருக்கோம். நம்ம வக்கீலு வெளியில இருக்கற மத்தவங்கக்கிட்டயும் உதவி கேட்டுருக்காரு. எதுக்கும் ஒத்து வரலன்னா அந்தத் தரப்புல உள்ள எல்லாப் பெரிய மனுசங்க மேலயும் கவுண்டர் கேசு போட்டு ஆக வேண்டியத பாத்துக்கலாமுன்னு சொல்லியிருக்காங்க. ரமேஷ் அண்ணன் கண்டிப்பா வேலைக்குப் போகும். கவலைப்படாதீங்க”ன்னு புனிதா ஆறுதல் சொன்னாள்.
தன் நெஞ்சு மேல கை வச்சதுனாலதான் திருவிழா நின்னு போச்சுனு ஊரு முழுக்க வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டிருக்குறது நந்தினிக்கு இன்னும் அதிகமான மன உளைச்சலக் குடுத்துச்சு. பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு போலீஸ் ஸ்டேசன்ல இருந்து எல்லாரையும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. செந்திலையும் ரமேஷையும் மட்டும் ரிமாண்ட் பண்ணிட்டாங்க. ரமேஷ் எந்த வம்பு தும்புக்கும் போகாதவன். அப்பிடிப்பட்டவன் இன்னிக்கு ஸ்டேசன்ல இருக்குறதுக்கு தான்தான் காரணமுன்னு நெனச்சு நந்தினி குமுறிக் குமுறி அழுதுகிட்டிருந்தா. யாராலயும் அவள சமாதானப்படுத்த முடியல.
இளமதியோட அப்பா “நம்ம எப்பிடியாவது ரெண்டு பேரையும் வெளியில கொண்டு வந்துரலாம். எத பத்தியும் யோசிக்காம தூங்கு”ன்னு ஆறுதல் சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டாரு. சத்தியவாணி நந்தினிகிட்ட “நீ இப்ப எதுக்குத் தேவையில்லாம அழுதுட்டிருக்க. சாணியத் தொடச்சுப் போடுற மாதிரி தொடச்சுப் போட்டுப் போவியாஞ் அத விட்டுட்டு அழுதுட்டு இருக்க. மரியாதையா படுத்துத் தூங்கு”னு சொல்லிட்டு அவ அப்பா கூடவே போயிட்டா. இளமதி நந்தினியோடயே இருந்தா. நந்தினி தூங்காம அழுதுட்டே இருந்தா. ரொம்ப லேட்டானதுனால இளமதி கண்ணசந்து தூங்கிட்டா.
திடீர்னு அத்தை வனிதாவோட அலறல் சத்தங் கேட்டு கண்ணு முழிச்சு பாத்த இளமதி, தலைக்கு மேல ஃபேன்ல நந்தினி தொங்கிட்டு இருந்ததப் பாத்து அவளுக்குத் தலையே சுத்திருச்சு. ஊரே அழுதுட்டு இருந்துச்சு. செந்திலும் ரமேஷும் வந்துட்டாங்க. ரமேஷால அழுகையை அடக்க முடியல. அவன் அழுகுறத பாத்துச் சொந்தக்காரங்களாம் கதறிக் கதறி அழுகுறாங்க. இளமதியால அந்த அதிர்ச்சிய தாங்க முடியல. யாருகிட்டயும் பேசல, அழுக வரல, எதோ மாதிரி இருந்தா. கொஞ்ச நாள் வரைக்கும் இளமதி அப்படியே இருந்தா. ரமேஷ் கூட இயல்பு நிலைக்கு வந்தாச்சு. ஆனால், இளமதிக்கு அது பெரிய பாதிப்ப ஏற்படுத்தியிருச்சு.
பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் யார்கிட்டயும் இளமதி சரியாப் பேசுறது இல்ல, சரியாச் சாப்புடுறது இல்ல. அவளோட ஒடம்ப குறிச்சு அவளுக்கு ஒரு பயம் வந்திருச்சு. தினமும் காலையில ஸ்கூல்ல இருக்குற மேரி மாதா முன்னாடிப் போய் நின்னு, “மேரி மாதா எனக்கு நெஞ்சு பெரிசா வளரவே கூடாது. நந்தினியக்காவுக்கு நடந்த மாதிரி எனக்கு நடக்கக் கூடாது”ன்னு அழுதழுது பிரேயர் பண்ணுவா. எதாவது சாப்பிட்டா மார்பு பெரிசா வளந்திருமோன்ற பயத்துல சாப்பிடவே மாட்டா. அவளோட அக்கா சத்தியவாணியும், சித்தி செல்வியும்தான் கொஞ்சம் கொஞ்சமா அந்த மனநிலையில இருந்து இளமதிய மாத்திக் கொண்டுவந்தாங்க. அப்பறமா குடும்பத்தோட சென்னைக்குப் போயிட்டாங்க. சென்னையில அவ படிச்ச படிப்பு, வாழ்ந்துகிட்டிருக்கிற சூழல் எல்லாம் ஆளை முழுசா மாத்தியிருச்சு.
ஊருலயும் சூழ்நிலை முழுசா மாறிப் போச்சு. புனிதா டெபுடி கலெக்டராயிட்டா, அம்பேத்கர் பயிலகத்துல படிச்சவங்க மாவட்டத் துணைக் கல்வி அலுவலர், நில அளவை அதிகாரின்னு பல்வேறு அரசுப் பணிகளில், பொறுப்புகளில் இருக்குறாங்க. மூனு பேரு எஸ்.ஐ. ஆயிட்டாங்க. தீபா ஐ.பி.எஸ். டிரெயினிங்குல இருக்குறா. அதுனால இந்தத் திருவிழா கூடுதல் பாதுகாப்போடும், தனி மரியாதையோடும் நல்ல முறையில நடக்குங்குற நம்பிக்கையில போனா இளமதி.
மதுரையில் இறங்கியவுடன் சித்தப்பா காரில் வந்து அழைத்துச் சென்றார். அம்பேத்கர் பயிலகத்திற்காக வாங்கி வந்திருந்த சில முக்கியமான புத்தகங்களை மாமா மகள் விபாசனாவிடம் கொடுத்துவிட்டு நந்தினியின் நினைவில் மூழ்கியிருந்த இளமதியைத் திருவிழாவில் ஒலித்த பறையிசை மீட்டெடுத்தது.