ஒன்று
பிறகு என்னுள்ளிருந்த ஆதிமனிதன் கூச்சலிட்டான்:
என் நெஞ்சின் மீதொரு கல்லை நடுவேன்
அதில் செதுக்குவேன்
என் துயரத்தின் படிமங்களை
என் வேதனையின் பாடல்களை
அவை
என் காயங்களுக்குச் சாட்சியமாக நின்று
நாளைய சூரியனை வரவேற்கும்.
ததாகதா
நான் உன்னிடம் வந்திருக்கிறேன்
என் துயரங்கள் என் எலும்புகளில் புதையுண்டு கிடக்கின்றன.
உன் பிரகாசத்தின் ஆரத்தில்
என் இருட்டைக் கொண்டுவருகிறேன்
உன் கைக்குள்ளேயே என்னை வைத்திரு
இருளைவிட்டுத் தூரமாக
அங்கே வெளியே,
என் சுயத்தைத் தொலைத்து
அவர்களின் திருவிழாக்களில்
உழைத்து, களைத்து,
கிழிந்து, நைந்து தொங்குகிறேன்.
ததாகதா
கேள்விகள் கேட்காதே,
கேள்விகள் எனக்கு அந்நியமாய் இருக்கின்றன
நானே என்னை அறியேன்
அங்கே வெளியே,
இருளும் அடர்ந்த மௌனமும் மட்டுமே இருக்கின்றன
ஆகவே,
ரத்தமும் சதையுமான அந்தப் படத்திலிருந்து இறங்கி,
என்னில் குடியேறு
பொங்கிப் பிரவகிக்கும் என்னில்,
கூடுவிட்டுக் கூடு பாய்ந்து குடியேறு.
இரண்டு
பிறகு என்னுளிருந்த ஆதிமனிதன்
கசப்போடு கதறி அழுதான்
தனது சொந்தக் கப்பலின்
கந்தலான பாய்மரங்களை அவன்
ததாகதாவின் கண்களால் பார்த்தான்
பிறகு
அவனுக்குள் புயல் அதிகரித்தது
கடலில் இருந்து,
குருதியின் சிகரங்கள் உயர்ந்து நின்றன
ததாகதா
என்னைக் கரையில்லாமல் விட்டுவிடாதே
என்னைக் கரையில் விட்டுவிடாதே
இந்தக் கடல் எனக்குப் பிரியமானது
ஒவ்வோர் அலையிலும் கலந்திருக்கிறது
என் உயிர்நாடி.
ததாகதா
படங்களில் காண்பது போல்
நீ யோகநிலைகளில் இருப்பது
எனக்கு ஒருபோதும் பிடிப்பதில்லை
உன் பெயராலும் பண்டிகைகளின் பெயராலும்
சிலைகளை உருவாக்கிய
உருவ வழிபாட்டாளர்களைத்
தயைகூர்ந்து மன்னித்துவிடு
ஆனால் ததாகதா
பூக்களையும் பிரார்த்தனைகளையும் நான்
யார் முன்தான் வைக்க முடியும்.