புத்தகத் திருடன்
என்னிடமிருந்து எடுத்துச் சென்ற புத்தகம்
அவன் தனியறையில் மினுங்கிக்கொண்டிருக்கலாம்
அல்லது தன்னை ஸ்பரிசிக்கப் போகும்
நிர்வாண விரல்களுக்கு ஏங்கிக்கொண்டிருக்கலாம்
அல்லது புதிய இடத்தில் எதையும் விளங்கிக்கொள்ள இயலாமல் மருண்டிருக்கலாம்
அல்லது அஞரைச் சூடிக்கொண்டு தனிமைப்பட்டிருக்கலாம்.
மேலும் அது நான் வாசிக்காத புத்தகம்.
என் ஆற்றாமை ஏழுலகங்களுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தது.
இப்படித்தான் நான் இலக்கியத் திருடனானேன்.
புகைப்படம்: நவீன்ராஜ் கௌதமன்
நானில்லை என்னும் நான்
இருளிலும் புகையிலும்
என் ஆன்மா
எதைத் தேடிக்கொண்டிருக்கிறது?
தொலைந்து போனது நானல்லவெனினும்
தொலையப் போவதும் நானல்லவாயினும்,
கடந்த காலத்திலிருந்து துரத்தி வரும்
அந்த ஊழில்
தீர்மானமாக என் பெயர் இல்லை எனினும்
அங்கே சுழன்றாடுவது நானில்லை என்னும் நான்தான்.