புதிய தலைமுறை கறுப்பினக் கவிதைகள்

தமிழில்: ஷஹிதா

வேறொரு உலகில் – ரசாக் மாலிக்

காலாதீதமான புத்திரசோகத்தைக் கடக்க வேண்டி அல்லாத
தொழுகைப் பாய்களெனச் சுருட்டப்பட்ட
என் குழந்தைகளின் உடல்கள்
ஒன்றன்பின் ஒன்றாக வீடு திரும்புவதை
எதிர்கொள்ள வேண்டி அல்லாத

சொந்த நிலத்தில் அந்நியர்களெனப் புகலிடம் தேடும் கதைகளை
இரவுகளில் பிள்ளைகளுக்குச் சொல்லத் தேவையற்ற
ஓர் அப்பாவாக வாழ விரும்புகிறேன்.

குண்டுகள் துண்டாடிய சுவர்களற்ற வெளிகளில்
என் பிள்ளைகள் பாய் விரித்து விளையாட வேண்டும்.

அவர்கள் வளர்ந்து தாய் நிலத்தின் பெயரைக்
கடவுளின் பெயரென ஓதுவதை
புதர்களுக்குள் மறைந்திருக்கும் விலங்குகளென வேட்டையாடப்படாது
கும்பல்களால் கொல்லப்படாது
தெருக்களில் துள்ளியாடுவதைக் காண விரும்புகிறேன்.

வேறொரு உலகில்,

என் பிள்ளைகள் வயல்களில் திரிந்து வெட்டுக்கிளிகளைப் பழக்குவதை,
கூடத்தில் பொம்மைகளோடு விளையாடுவதை
காற்றின் திசையில் கமழும் மலர்களின் மணத்தை சுவாசிப்பதை
பறவைகள் இறகுகளால் விண்ணளப்பதைப்
பார்க்க விரும்புகிறேன்.

Illustration : TITUS KAPHAR

இதோ அவ்வளவேதான்… – அலெக்சிஸ் தெயி

நீ நீங்கும் இரவில் வானில் சிதறும் நட்சத்திரங்கள்
மூடப்படாத புண்களென எரிகின்றன.
உள்ளார்ந்த போர்களால் தழும்பேறிய அக்கேசியா
அதன் இலைகளை இன்னமும் தக்கவைத்திருக்கிறது.

என்னுடைய துயரத்தில் நான் தீயுறைந்திருப்பதில்லை.
முன்னர் நிகழ்ந்தவை
கையளிக்கப்பட்டவை –
எனக்குத் தெரிந்ததெல்லாம் இவைதான்.

என் உணர்வுகள் உணரப்பட வேண்டும்
என்பதையே உணர்கிறேன்.
புதியதாய் எதுவும் சொல்லவில்லை.
என்னுடைய கவலை எப்போதும் போல இதுவே
இந்தத் தேநீர் அருந்த முடியாதபடிக்குக் குளிர்ந்துவிட்டதா?

m

ரசாக் மாலிக்

நைஜீரியாவைச் சேர்ந்த கவிஞர். Michigan Quarterly Review, Poet Lore, Jalada உள்ளிட்ட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியிருக்கின்றன. புஷ்கார்ட் (Pushcart Prize) விருதுக்காக இருமுறை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.

அலெக்சிஸ் தெயி

கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர், பெண்ணியவாதி. Short Story Day Africa பதிப்பகத்தின் ‘Water’ தொகுப்பில் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது. This is Africa, Writivism, African Feminist Forum போன்ற பல்வேறு நிகழ்வுகளில் உரையாற்றியிருக்கிறார். ‘Shortcut’ என்ற குழந்தைகள் புத்தகத்தின் இணை எழுத்தாளர்.

நன்றி: lithub.com

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger