இந்தியச் சமூகத்தில் பல்வேறு குரல்களும் அடையாளங்களும் நிலவும் நிலையில், அவை சார்ந்து பல்வேறு அமைப்புகள் உருவாவது இயல்பு. அவற்றோடு நாம் உடன்படலாம் அல்லது முரண்படலாம். ஆனால், தடை செய்யவோ மறுக்கவோ முடியாது. அவை சுதந்திரமாக இயங்குவதற்கு வழிவிடுவதே ஜனநாயகம்.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் பல்வேறு கட்சிகள் உருவாகியிருக்கின்றன. இனியும் உருவாகலாம். அக்கட்சிகளின் சமூகத் தேவையையும், தொடர்ச்சியான செயற்பாடுகளையும் பொறுத்து அவை காலத்தால் நிலைத்து நிற்கும் அல்லது கரைந்து போகும். அக்கட்சிகள் மீது பல்வேறு தரப்பிலிருந்து, பல்வேறு கோணங்களிலிருந்து விமர்சனங்கள் எழலாம். அவற்றுள் ஒடுக்கப்பட்டோர் நோக்கில் அமையும் விமர்சனங்கள் முக்கியமானவையாக அமைய வேண்டும். அத்தகைய சமூக நியாயமும் வரலாற்றுத் தேவையும் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் அச்சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கும் இருக்கிறது. அத்தகைய விமர்சனம் தலித்துகளின் வரலாற்றுத் தேவைகளை மிகச் சரியான விதத்தில் கைக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்குப் பயன்பட வேண்டும்.
அவ்வாறில்லாதபோது தலித்துகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிர்பந்தத்தைப் பிற / புதிய கட்சிகளுக்கு உருவாக்குவதாக அவ்விமர்சனங்கள் அமைய வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் கட்சிகள் அதிகாரத்திற்கு வராமல் போயிருக்கலாம். ஆனால், அவர் காந்தி மீதும், காங்கிரஸ் மீதும் முன்வைத்த விமர்சனங்கள், அழுத்த சக்தியாக மாறி தலித் சார்ந்த பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டதை வரலாற்றில் கண்டிருக்கிறோம்.
தலித்துகளுக்கான நெடிய அரசியல் மரபு இருப்பதைப் போல, அவர்களுக்கென ஆழமான விமர்சன மரபும் இருந்திருக்கிறது – தலித் முன்னோடிகளால் உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது. அதை இன்றைய தேவையோடு உள்ளடக்கி வளர்த்தெடுக்க வேண்டியது தலித்துகளின் கடமை.
நிலவும் சாதிய அரசியல் சூழலில் தலித்துகள் மீதான வஞ்சனைகள் தொடர்கின்றன. இந்நிலையில் புதிய குரல்களும் அமைப்புகளும் எழுவதை வரவேற்பதே சரியானது. அதிகாரம் மறுக்கப்பட்டோர் அத்தகைய அமைப்புகளை உற்று நோக்குவது தவிர்க்க இயலாதது. நிறைய கட்சிகள் உருவாகி அரசியல் ஸ்திரமற்ற சூழல் நிலவுவது ஒரு வகையில் தலித் அரசியல் நலனுக்கு உகந்ததே.
அதேவேளையில் அக்கட்சிகள் மீது ஒடுக்கப்பட்டோர் நோக்கிலிருந்து விமர்சனத்தை முன்வைத்து விவாதத்திற்குட்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. அவை அதிகார வேட்கை கொண்ட மைய நீரோட்ட கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகள் போலில்லாமல் அழுத்தமான விமர்சனங்களாக அமைய வேண்டும். சம்பந்தப்பட்ட கட்சிகள் அவற்றுக்குப் பதிலளிக்க வேண்டிய நிர்பந்தங்கள் எழ வேண்டும். அந்த அளவிற்கு அவ்விமர்சனங்கள் உடனடி லாப நோக்கு அல்லாது விரிந்த அரசியல் பார்வை கொண்டதாக இருக்க வேண்டும். இப்போக்கு ஒடுக்கப்பட்டோர் நலனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகச் சூழலைப் பண்படுத்தவும் பயன்படும்.
அண்மையில் திரைக்கலைஞர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார். முன்னணி நடிகராக இருக்கும் தனக்கு, ரசிகர்கள் தொண்டர்களாக மாறுவர் என்று கருதி கட்சியைத் தொடங்கியிருக்கிறார். பொதுவாக ஆண்ட / ஆளும் கட்சிகள் மீதிருக்கும் வெகுமக்களின் கசப்பு தனக்குப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பும் அவருக்கு இருக்கிறது. அவரின் ரசிகர்களில் பெரும்பாலானோர் அடித்தட்டு மக்கள் என்ற முறையில் இளம் தலைமுறை தலித்துகள் அவரை நோக்கித் திரும்பக் கூடும் என்று கருதப்படுகிறது. அவர்களைத் தடுக்க முடியாது. அதிகாரம் மறுக்கப்பட்டவர்கள் புதிய கட்சிகளை நோக்கிப் போகவே செய்வார்கள். அதனை நாம் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் அவர்கள் ஏன் போகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
கவனிக்கப்படாத மக்கள் குழுவினர் மீதும் அவர் கவனம் செலுத்துகிறார் என்பதும், தமிழ்நாட்டு வெகுஜன கட்சிகளின் மரபுகளை உள்ளடக்கி பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்கிற முழக்கத்தை முன்வைக்கிறார் என்பதும் அவரை முற்றிலும் எதிர்மறையிலிருந்து விடுவிக்கிறது. ஒரு வெகுஜன கட்சியின் எல்லை என்ற முறையில் இவற்றை வரவேற்க வேண்டிய வேளையில், அதே வெகுஜன கட்சிக்கான பலவீனங்களைக் கொண்டிருப்பதையும் விமர்சிக்க வேண்டியுள்ளது.
பெரும்பான்மை சாதிகளைத் திருப்திபடுத்தும் அரசியலையே இவரும் மேற்கொள்வார் என்பதைக் கட்சி மாநாட்டில் அவர் ஏற்படுத்தியிருந்த விளம்பரங்களே காட்டியிருந்தன. எல்லா சாதிகளையும் திருப்திபடுத்தும் வேகத்தில் பாபாசாகேப் அம்பேத்கரை ஒரு சாதிக்கான தலைவராகச் சுருக்கியுள்ளனர். அதனால்தான் அம்பேத்கரின் பங்களிப்புகளுக்கு இணை சொல்ல முடியாத சாதிய உருக்களில் ஒருவராக அம்மாநாட்டில் அவர் ஆக்கப்பட்டிருந்தார்.விஜய்யை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்கொள்ள முற்பட்ட யாரும் இதைச் சுட்டி விமர்சிப்பதில்லை. ஏனெனில், அம்பேத்கர் விசயத்தில் எல்லாக் கட்சிகளும் அதைத்தான் செய்கின்றன. மேலும், விஜயின் கொள்கைகள், திட்டங்கள் சார்ந்து ஒடுக்கப்பட்டோர் நோக்கிலிருந்து விமர்சனங்கள் எழுந்திருக்க வேண்டும். அவ்வாறும் நடக்கவில்லை.
விஜய் கட்சி மீது சராசரியான விமர்சனங்களே எழுப்பப்பட்டன. இங்கு விஜய் மட்டும் பலவீனமானவராக இருக்கவில்லை, அவரை எதிர்கொள்வதற்கான காத்திரமான வாதங்கள் இல்லாமலிருப்பது அதனைக் காட்டிலும் பலவீனமானது. தலித் கட்சிகள் ஆளும்கட்சி நிலைமைக்குத் தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். விஜய் போன்றோர் மீது எழுப்பப்படும் விமர்சனங்கள் அதற்குப் பயன்பட வேண்டும்.
பல்வேறு துறைகளில் நாகரிகம் மேலோங்கியிருப்பதாகக் கருதப்படும் தமிழ்நாட்டில், ஆரோக்கியமான அரசியல் மொழியும் நேர்மையான அரசியல் எதிர்கொள்ளலும் நடப்பதில்லை. விஜய் பயன்படுத்திய சொற்கள் மீது ஆராய்ச்சிகள் ஏவப்பட்டன. அதே கேள்விகளை இப்போதிருக்கும் கட்சிகள் மீதும் எழுப்ப முடியும் என்பதே உண்மை.
தமிழ்நாட்டு சமூகச் சூழலில் முன்னெப்போதும் இல்லாத அளவு சாதிய இறுக்கமும், தலித்துகளின் அன்றாட உரிமைகளுக்காகப் போராடும் நிலையும் கூடிக்கொண்டே போகின்றன. இந்தத் தலையங்கத்தைத் தீட்டிக்கொண்டிருக்கும் இதேவேளையில் சுடுகாட்டுப் பாதைக்காகத் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் தலித்துகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நவீன மாற்றங்கள் உட்புகாத கிராமங்களில் மட்டுமே இருந்த ஆணவக்கொலை, நகரம் வரை நீண்டிருக்கிறது. தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராகவும், சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்த அரசியல் ஆளுமை தலைநகரத்திலேயே மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். வேங்கைவயலில் மலம் கலந்து இரண்டாண்டுகள் நிறைவடையப் போகிறது, அதுகுறித்து எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் இருக்கிறது அரசு. இப்படி தலித்துகளின் அரசியல் சார்ந்தும் நலன் சார்ந்தும் பேசுவதற்கு ஏராளமானவை இருந்தும் இதில் எதையுமே விஜய் தமது உரையில் குறிப்பிடவில்லை. தலித் அரசியலின் விமர்சனங்கள் நியாயமாக இதை மையப்படுத்தித்தான் இருந்திருக்க வேண்டும்.
நிலவும் அரசியல் தேவைக்கேற்ப எழுப்பப்படுவதை விடவும் நீண்ட கால நோக்கில் விமர்சனங்கள் செய்யப்பட வேண்டும். அவை விஜய்க்கு மட்டுமல்லாது, யாவருக்குமானவையாக மாற வேண்டும். இச்சூழல் மீதான தலித்துகளின் அரசியல் விமர்சன மரபாக எப்போதும் அவை நிலைத்திருக்க வேண்டும்.