இறுகப் பற்றி இளைப்பாற்றும் இசைஞானி

கோ.ரகுபதி

மேல்நிலைப் பள்ளியின் இறுதிக்காலம் அல்லது இளங்கலையின் முதலாமாண்டு தொடக்கம் பயின்றுகொண்டிருந்தபோது (1993) என்று நினைக்கிறேன், தமிழ்த் தினசரியின் வார இணைப்பொன்றில், “சிம்பொனி இசைத்த முதல் இந்தியர் இளையராஜா” என எழுதி, “அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதை இச்சமூகம் பெரிதாகக் கொண்டாடவில்லை” என்றும் குற்றம் சுமத்தியது. அக்குற்றச்சாட்டை மறுக்க இயலாதுதான். ஆனால், அச்செய்தியை அந்த இதழ் ஒரு மூலையில் சிறிய கட்டத்தில் பதிவு செய்தது! எக்குற்றத்தை இச்சமூகத்தின் மீது அந்த இதழ் சுமத்தியதோ, அது அவ்விதழுக்கும் பொருந்தும். ஏனென்றால், சிம்பொனி இசைத்த முதல் இந்தியரான இசைஞானியைக் குறித்து விரிவான செய்தி வெளியிடவில்லை என என் கிராமத்து நண்பர்களிடம் எடுத்துக் கூறினேன். திரைப்படத் துறையினர் தும்முவதைக் கூட பேசுபொருளாக்கும் ஊடகங்கள், இளையராஜா ஒரு பெரும் சாதனை நிகழ்த்தியதைக் கொண்டாடாததற்கும், விவாதப் பொருளாக மாற்றாததற்கும் அப்பட்டமான ஜாதிய உளவியலைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க இயலும்? இருப்பினும், ஒரு மூலையில் வெளியிடப்பட்ட செய்திதான் எனக்கு முதன்முறையாகச் சிம்பொனி இசையை அறிமுகம் செய்தது. அதற்காகவாது அப்பத்திரிகைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இசையின் மீதும் இளையராஜாவின் மீதும் எனக்கு இருந்த ஈர்ப்பினால்தான் அந்தச் செய்தியை வாசித்தேன்.

இசை ஆர்வம் என்னிடம் பள்ளி நாட்களிலேயே இருந்தது என்பது வியப்புக்குரிய செய்தி அல்ல. நான் அதில் தனித்துவமான நபரும் அல்லன். ஏனென்றால், எங்கள் கிராமத்தின் இளவட்டங்கள் இசையோடுதான் இயங்கினோம். இசையிடமிருந்து எங்களையோ எங்களிடமிருந்து இசையையோ பிரிக்க இயலாத நிலைக்கு நாங்கள் இசையோடு பின்னிப் பிணைந்திருந்தோம். அதே சமயம் இசை என்பது எங்களுக்குத் தொழிலும் அல்ல. இசைக் கலையை நாங்கள் நுகரவில்லை! கலையோடு கலந்திருந்தோம். நாங்கள் கலையாக இருந்தோம். எங்கள் வாழ்க்கையே கலையாக இருந்தது. நாங்கள் பாடினோம்; ஆடினோம். மண் பானை, பிளாஸ்டிக் குடம் எனத் தட்டுமுட்டுப் பொருட்களிலும், அவ்வளவு ஏன், வெறுந் தரையிலும்கூட இசைத்தோம். இசைக் கருவிகளையும் நாங்கள்தான் செய்தோம். எங்கள் கிராமத்தில் மாதத்தில் ஓரிருமுறை இறைச்சிக்காக மாடு அறுத்தனர். செத்த மாடு உண்ணும் பழக்கம் எங்களிடம் இல்லை. அதற்கான சமூகச் சூழலும் தேவையும் இல்லை. மாடு அறுக்கும் நாள் எங்களுக்குத் திருவிழாதான். மாட்டை விலை கொடுத்து வாங்குவர். கூனிப் பாட்டிதான் மாடு அறுப்பாள். இதற்கு வசதியாகத் தன் சேலையைச் தார்ப் பாய்ச்சிக் கட்டுவாள். கிழவர்கள் சிலர் அவளுக்கு ஒத்தாசையாக மாட்டைப் பிடித்துக்கொள்வர். சந்தனமாரி அத்தையின் கணவரான மாசன தாத்தாவும் மாடறுப்பதில் கூனிப் பாட்டிக்குத் துணை நின்றார். ஒரு பெண் மாடறுத்தது ஏன்? இது ஆய்வுக்குரியது. மாட்டில் இருக்கும் ஊத்தாம்பட்டி என அழைக்கப்படும் ஒரு வகையான குடலைக் குழந்தைகளிடம் கூனிப் பாட்டி கொடுத்தாள். ஒரு மாட்டில் ஒரேயொரு ஊத்தாம்பட்டிதான் இருக்கும். உடைந்த மண் பானைக் கழுத்தின் மேல் பகுதியில் ஊத்தாம்பட்டியை இழுத்துக் கட்டி அதன் மீது தேங்காய் எண்ணெய்யைத் தடவி கூரை மீது காய வைப்போம். ஓர் ஊத்தாம்பட்டியில் ஒரேயொரு கருவிதான் செய்ய முடியும். இது ஒருபுறம் திறந்த நிலையிலும், மற்றொருபுறம் இழுத்துக் கட்டப்பட்ட தோலும் இருக்கும். இதில் அடித்து ஒலியின் அதிர்வைச் சோதனை செய்வோம். முதலில் தொப்பு… தொப்பு… எனச் சத்தம் கேட்கும். வெயிலில் முறுக்கு ஏறிய பின் டன்… டன்… எனச் சத்தம் எழும். டன்… டன்… டன்ட னக்க… டன்… டன்… டன்ட னக்க… டன்டனக்க… டன்டனக்க… டன்… டன்… டன்… டன்டனக்க… டன்டனக்க… என எங்களுக்குத் தெரிந்த வகையில் ஈக்குச்சிகளால் இசைத்தோம். கூனிப் பாட்டி அவ்வப்போது கொடுத்த ஊத்தாம்பட்டியில் நாங்கள் தயாரித்த இசைக் கருவிகள் ஒன்றுக்கு மேற்பட்டவை எங்களிடம் இருந்தன. சனி ஞாயிறுகளிலும், விடுமுறை நாட்களிலும் இந்த இசைக் கருவிகளை இசைப்போம். ஆவாரம் பூக்களைத் தொடுத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து சாமி ஆடினோம். சுடலை மாடனுக்கும் சப்பானி மாடனுக்கும் இசைப்போம். இரண்டு சாமிகளுக்கும் வெவ்வேறு இசை. உக்கிரமான இசையில் ஆவேசமாகச் சாமியாடினோம். இவையெல்லாம் எங்களின் குழந்தைப் பருவத்தில், குறிப்பாகச் சுமார் 10 வயதில் நிகழ்ந்தது. எங்களுக்கு இந்த இசையின் மீது ஏன் ஆர்வம் வந்தது? இசைக் கருவியை உருவாக்கும் அறிவும், இசைக்கும் அறிவும் எவ்வாறு எங்களுக்கு வந்தது? உண்மையாக் கூறினால், இதை எங்களுக்கு எவரும் கற்றுக்கொடுத்ததும் இல்லை. அதற்கென ஆசானும் எங்கள் ஊரில் இல்லை. தொழில் முறையில் இசைக்கும் குழுவும் இல்லை. பறை அடித்ததால் பறையரானர் என்ற கூற்றுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவியலாது. ஏனென்றால், பறை என்ற இசைக் கருவி எங்கள் ஊரில் இல்லை. நாங்கள் அதைப் பார்த்ததும் இல்லை. முதுகலை படித்தபோதுதான் திருநெல்வேலியில் தலித் கலை விழாவில் சக்தி கலைக் குழு மேடை அதிர… அதிர… இசைத்தபோது என் நாடி நரம்பும் முறுக்கேற பறையை முதன்முதலில் வியந்து பார்த்தேன். எங்கள் பகுதியில் கொட்டுக்காரப் பறையர் என்ற பிரிவினர் உண்டு. மேளம், மோளம் என்பதைத்தான் நாங்கள் கொட்டு என்று கூறுவோம். சுண்ணாம்பு உற்பத்தியையும், அதற்கான கற்களைத் தோண்டி எடுப்பதையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த நாங்கள், சில நேரம் விவசாய வேலைகளையும் செய்தோம். அவ்வாறு இருக்கிறபோது எங்களுக்கு இசைக்கும் பண்பாடு எப்படி வந்தது? எங்களின் இந்த இசை அறிவு மரபு எதனுடைய எச்சம்?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாட்சி, பிடாநேரி கிராமம், டிகேசி நகர் என்ற எங்கள் கிராமத்தில் இரண்டு அகலமான தெருக்களில் சில பத்து வீடுகளே இருந்த என்னுடைய குழந்தைப் பருவத்தில், என் தந்தை கோ.பெ.கோயில்பிள்ளை வாயாலேயே மேளம் இசைத்தும் தொடைகளில் தட்டியும் பாடியது என் நினைவில் இன்றும் இருக்கிறது. பொதுவுடைமை இயக்கத்தில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்ட என் தந்தை 1950களில் அரசியல் பிரச்சாரத்திற்காகக் கொட்டடித்துச் சென்றதாகச் சிலர் கூறினர். அவருக்குள் அரசியல் விழிப்புணர்வும் கலையுணர்ச்சியும் மிகுந்திருந்தது. அவர் 1970களில் அரசின் உரிய உரிமம் பெற்று வானொலி வைத்திருந்தார். உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பித்தார். அப்போது எங்கள் கிராமத்தில் மின்சாரம் இல்லை. பேட்டரியில் அது இயங்கியது. என் குழந்தைப் பருவத்தில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் என் வீட்டில் பாட்டுச் சத்தம் கேட்டது. என் அப்பா ஒரு புதிய பெரிய வானொலிப் பெட்டியைத் திருநெல்வேலியிலிருந்து வாங்கிவந்து வீட்டில் ஒலிக்கச் செய்தார். இதனால் உறங்கிக்கொண்டிருந்த நான் விழித்தேன். வார விடுமுறை நாட்கள், கோடைகாலம், இரவு நேரம் என ஓய்வாக இருக்கிற நேரங்களில் இசையும் பாட்டுமாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த என் போன்ற குழந்தைகளுக்கு அப்பா வாங்கிய ரேடியோ பெட்டி கொடுத்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

மாலை நேரங்களில் வீட்டில் விளக்கேற்றியதும் படிப்பது வழக்கம். அன்றாடம் இரவு ஏழு அல்லது எட்டு மணி என நினைக்கிறேன், மூன்று பாடல்கள் ஒலிபரப்பப்படும். அந்த நேரத்தில் மட்டும் அப்பா, அம்மாவின் உரிய அனுமதியுடன் மூன்று பாடல்களைக் கேட்பது வழக்கமானது. இந்நிலையில் எங்கள் கிராமத்துக்கெனப் பொது வானொலிப் பெட்டியும், பெரிய ஒலிப்பெருக்கியும் வழங்கப்பட்டன. எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த சங்கக் கட்டடத்தில் அவை பொருத்தப்பட்டன. செய்திகளையும், பாடல்களையும், கதைகளையும் எங்கள் ஊருக்கே அது ஒலிபரப்பியது. ‘ரோசாப்பூ ரவிக்கைகாரி’ படத்திலுள்ள ‘வெத்தல வெத்தல…’ பாடலை என் குழந்தைப் பருவத்தில் கேட்டது இன்றும் நினைவில் இருக்கிறது. அப்பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா எனக் கூறினர். இப்பாடல்தான் என் வாழ்வில் முதன்முறையாக நான் கேட்டு ரசித்த இளையராஜா பாட்டு. இந்த ரேடியோக்கள் எனக்கு இளையராஜாவை அறிமுகம் செய்தன. ஏற்கெனவே இசையுடன் கலந்திருந்த நாங்கள் இளையராஜாவின் இசையுடன் எளிதாக இணக்கமானோம். அவர் பாட்டிசைத்த இசையில் எங்கள் வாழ்க்கை இரத்தமும் சதையுமாக நிறைந்திருந்தது. அத்தை, மாமன் மகன்களை மச்சான், மாப்பிள்ளை, மயினி, கொழுந்தியா என அழைப்பது எங்கள் மொழிப் பண்பாடு. எம்மா / ஏலே / எக்கா / எண்ணா / தம்பி என அழைத்து, உங்க மச்சான / மயினிய / கொழுந்தியாள பாத்தியா? எனக் கேட்பது எங்களின் உச்சரிப்பு. இளையராஜாவின் ‘மச்சானைப் பாத்தீங்களா…’ பாடலைக் கேட்டபோது எங்களைப் பாடுவதாகவே இருந்தது. நாங்கள் எப்படி இளையராஜாவைக் கொண்டாடாமல் இருக்க இயலும்! இறுதியில் எங்கள் இசைக்கு ஓர் உருவம் கிடைத்தது; இசைத்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஓர் ஆசானும் கிடைத்தார். அது இளையராஜாவாக இருந்தார். நாங்கள் அவரைப் போல் இசைக்க முற்பட்டோம். பிறக்கும் குழந்தைகளுக்கு இளையராஜா என்ற பெயர் சூட்டுவதும் தோன்றியது.

பூப்பெய்தல், திருமணம் போன்ற இன்ப நிகழ்வுகளுக்கு முந்தைய நாள் ஸ்பீக்கர் செட் கட்டப்படும். அருகமை நகரத்திலிருந்து வரவழைக்கப்படும் ஸ்பீக்கர் செட்டுக்காக மணிக் கணக்கில் காத்திருந்தோம். அதைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி வெளிப்படும். அதைக் கொண்டு வரும் நபருடன் கூடவே இருந்தோம். இரவு நேரங்களில் மைக்கில் சினிமா பாட்டுப் புத்தகங்களைப் பார்த்துப் பாடல்களைப் பாடினோம். சிலர் தட்டுமுட்டுப் பொருட்களில் இசைத்தனர். இந்தப் பாட்டுப் புத்தகங்களை வாங்கிச் சேகரித்தோம். ஏராளமான சினிமா பாடல் புத்தகங்கள் இருந்தன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற காலத்தில் ரேடியோவுடன் புதிதாக டேப் ரிக்கார்ட் வந்தது. அரும்பு மீசையும் துளிர்த்தது. சைட் அடிப்பதும் காதல் உணர்ச்சியும் மேலெழுந்தன. இளமைக்கு இளையராஜாவின் இசைதான் தீனி போட்டது. பதினோறாம் வகுப்பு படித்தபோது திருமறையூர் எனும் கிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் பத்து நாட்கள் முகாமில் பங்கேற்றேன். இளையராஜாவை ரசிக்கும் ஐக்கோர்ட்டும் முகாமில் இருந்தான். முகாமுக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கரில் இளையராஜாவின் பாடல்களை ஒலிக்கச் செய்து ரசித்தோம். இக்காலங்களில் கேஸட்டுகளில் பதிந்து பாடல்களைக் கேட்கும் வழக்கம் தோன்றியது. ரிக்கார்டிங் கடைகளுக்குச் சென்று இளையராஜாவின் காதல் பாடல்களைப் பதிந்தோம். ரஜினிகாந்த், கமலஹாசன், ராமராஜன், கார்த்திக் எனச் சில நடிகர்களின் திரைப்படங்களில் இளையராஜா இசையமைத்த காதல் பாடல்கள் எப்போதும் ஒலிக்கத் தொடங்கின. பாடலின் மென்மையை ரசிக்க, ஸ்பீக்கர்களை மண்பானையில் பொருத்தினோம். அப்போது ‘தளபதி’ வெளியாயிருந்தது. பெண்களும், ஆண்களும் என இளவட்டங்கள் ‘ராக்கமா கையைத் தட்டு…’ பாடலைக் கொண்டாடினோம்.

சரக்கு வாகன ஓட்டுநர்களாகப் பணியாற்றிய என் உடன்பிறந்த அண்ணன் பசுபதியும், என் தாய் மாமன் மகன் சந்தனப்பிச்சையும் டெல்லியிலிருந்து நவீன கேஸட் பிளேயர் வாங்கிவந்தனர். இசை ரசனை அடுத்த நிலைக்குச் சென்றது. அப்போது எங்கள் ஊரில் ‘சத்தியஜோதி ரஜினி ரசிகர் மன்றம்’ தொடங்கப்பட்டது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடித்த நான் ரசிகர் மன்றத்தின் பொருளாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இந்நிலையில் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பிலும் சேர்ந்தேன். என் சித்தி மகனும் அத்தை மகளும் காதலித்துத் திருமணம் செய்ததை அவர்களுடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்திருமணத்தை எங்கள் ரசிகர் மன்றம் ஆதரித்தது. வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்தினோம். இளையராஜா இசைத்த ‘நூறு வருஷம்…’ பாடலை ஒலிக்கச் செய்து ஆடித் தீர்த்தோம். எங்கள் உடலுழைப்பில் ஈட்டிய பணத்தை மன்றத்துக்குச் செலவு செய்தோம்.

ரஜினி ரசிகர் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பில் இருந்தவரும், நாசரேத்தில் சலூன் கடை நடத்துகிறவருமான கென்னடி அண்ணன் கடைக்குத் தினசரி செல்வது வழக்கம். அவரிடம்தான் சிகை அலங்காரம் செய்துகொள்வேன். அவருடைய சலூனில் அமர்ந்து டீ குடிப்பதும், பத்திரிகை படிப்பதும், சிகரெட் புகைப்பதும் அன்றாட வழக்கங்களாக இருந்தன. எப்போதும் அவருடைய சலூனில் ரஜினிகாந்த் படங்களிலுள்ள இளையராஜாவின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. இசையை ஜிலுஜிலுன்னு கேட்பதற்காக விலையுயர்ந்த ஸ்பீக்கர் வாங்குவதற்குத் திருநெல்வேலிக்கு என்னை அழைத்துச் சென்றார். இதுபோல் கல்லூரி படித்த மூன்று ஆண்டுகளும் உடைகளைத் தைத்துத் தரும் நியூமேன் தையல் கடைக்கும் அன்றாடம் செல்வது வழக்கம். அங்குதான் நான் உடைகளைத் தைக்கக் கொடுத்தேன். கடை உரிமையாளரும் சிறந்த தையல் கலைஞருமான டேவிட்டுக்குப் பாடல்கள் கேட்பதில் ஆர்வம் மிகுதி. எப்போதும் இளையராஜாவின் காதல் பாடல்கள் ஒலிக்கச் செய்து, அது குறித்தும் பேசினோம். சிலையலங்கார, உடை பண்பாடும், இளையராஜாவின் இசையும் மாற்றுச் சமூகங்களைச் சேர்ந்த கென்னடி அண்ணனையும் டேவிட்டையும் எனக்கு நெருங்கிய நண்பர்களாக்கியது. என் கிராமத்துக்கு அருகிலுள்ள எழுவரைமுக்கி கிராமத்தைச் சேர்ந்த என் உறவினரான வில்சன் அப்போது அயல்நாட்டிலிருந்து ஊருக்குத் திரும்பினார். இவருடைய தம்பி சுந்தரும் நானும் பள்ளிக்கால நண்பர்கள். இவன் வெளிநாட்டுக் கேஸட்டைக் கொடுத்தான். அதிலுள்ள பாடல்களைக் கேட்டுவிட்டுத் திரும்பத் தருகிறேன் எனக் கூறி அந்தக் கேஸட்டை வாங்கினேன். ஆனால், அதைக் கொடுக்க வெகு காலமெடுத்தேன். அவனுடைய ஊரைச் சேர்ந்த அந்தோணி என் வகுப்பில் படித்தாள். அவளிடம் அந்தக் கேஸட்டை வாங்கி வரும்படிக் கூறினான். அவள் என்னிடம் கேட்டாள். நான் கொடுக்கவில்லை. காரணம் வேறோன்றுமில்லை, அதில் ‘தாலாட்டும் பூங்காற்று…’ உட்பட முழுக்க முழுக்க இளையராஜாவின் பாடல்கள் பதியப்பட்டிருந்தன. அவை தேன் சொட்டும் ரசனை கொண்டவை. அப்பாடல்களில் என்னைத் தொலைத்தேன். அப்புறம் எப்படி அதைத் திருப்பிக் கொடுக்க மனம் வரும்?

கல்லூரி வகுப்பறை மர மேசையில் தாளமிடுவதும் பாட்டுப் பாடுவதும் வழக்கமான ஒன்று. புதிய மாணவர்களை வரவேற்றல், பிரிவு உபச்சாரம் கொடுத்தல், கல்லூரி ஆண்டுவிழா, நாட்டு நலப்பணித் திட்ட விழா எனச் சகல விழாக்களிலும் இளைராஜாவின் பாடல்களைப் பாடினோம். முதலாமாண்டு மாணவர்களை வரவேற்றபோது இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த நான் ‘உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்…’ பாடலைப் பாடினேன். முதலாமாண்டு மாணவி ஜெரால்டு என்னிடம் கேட்டாள்: “யாரை நினைத்துப் பாடினீங்க?” சிறு புன்னகையுடன் கடந்து சென்றேன். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் வெளியான பாடல்கள் உச்சத்தில் இருந்தன. ‘சாமிகிட்ட சொல்லி வச்சு…’ பாடலை எண்ணற்ற முறை கேட்டிருக்கிறேன். இப்போதும் என் ரசனைக்குரிய பாடல்களில் அதுவும் ஒன்று. பேருந்தில் பயணிப்பது என்றால் தனியார் பேருந்துகளில் பயணிப்போம். ஏனென்றால், அதில்தான் பாடல்கள் ஒலிபரப்புவர். பொதுவாக இளையராஜாவின் பாடல்கள்தான் இருக்கும். இளங்கலையில் பகுத்தறிவு, முதுகலையில் பொதுவுடைமைத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டாலும் இளையராஜாவின் இசைமீதான காதல் குறைவில்லை. உண்மையைக் கூறினால் அது அதிகரித்தது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது நானும், அப்போது தொடர்பியல் துறையில் முதுகலை பயின்ற அருணும் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச் சாலையில் அவ்வப்போது அமர்ந்து இளையராஜவின் பாடல்களைப் பற்றிப் பேசுவோம். அவன் நன்றாகப் பாடுவான். ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி…’ பாடலைப் பேசியதும் அவன் உருகியேவிட்டான். அப்போது இளையராஜாவையும் அவருடைய இசையையும் வியந்து உரையாடினோம். இக்காலத்தில் நான் கட்டுரைகள் எழுதும் நிலைக்கு நகர்ந்தேன்.

நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து எப்போதும் பாடல்கள் கேட்பது வழக்கம். பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்கள்தான் ஒலிக்கும். பாடல்களைக் கணினியில் கேட்கத் தொடங்கினேன். எழுதுகிற, படிக்கிற என சகல நேரங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன. நான் எழுதுகிற, படிக்கிற ஒவ்வொரு வார்த்தைகளுக்குப் பின்னும் இளையராஜாவின் இசை ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. இதை எழுதும் இந்த நேரம் ‘ஏகாந்த வேளை பாடல்…’ ஒலிக்கிறது. இன்பமும் துன்பமும் ஏற்றமும் இறக்கமுமாக இருக்கும் என் வாழ்வில் எப்போதும் இளையராஜாவின் இசை இருக்கிறது. நினைவு தெரிந்த பருவத்திலிருந்து இளையராஜாவின் இசையில் பயணிக்கிறேன். உடுப்புப் பண்பாடு குறித்த ஆராய்ச்சிக்காக ‘ரோசாப்பு ரவிக்கைகாரி’ திரைப்படத்தைக் கணினியில் பார்த்தபோது ‘வெத்தல வெத்தல…’ பாடலைக் கேட்டதும் உடனடியாகக் குழந்தைப் பருவத்தில் இப்பாடலைக் கேட்டது நினைவுக்கு வந்தது.

கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட நிலை இப்போது ஓரளவுக்கு மாறிவிட்டது. கேரளாவில் வாகமன் செல்வதற்காகக் கோட்டயம் பேருந்து நிலையத்தில் ஒருநாள் நள்ளிரவில் காத்திருந்தபோது மலையாளிகள் இருவர் சிகரெட் புகைத்துக்கொண்டு இளையராஜாவின் பாடலை ரசித்துப் பாடி, அவரைப் புகழ்ந்தும் உருகியும் பேசியதைக் கண்டு வியந்து நின்றேன். இச்சமூகம் இளையராஜாவைக் கொண்டாடுகிறது. சிம்பொனியை இசைத்த இளையராஜாவைத் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகின்றனர். இந்த மகிழ்ச்சியை என் ஊராரிடம் பகிர்ந்துகொள்ளும் நிலையில் நான் இல்லை. ஏனென்றால், நான் சென்னையில் குடியிருக்கிறேன். எப்போதாவது எங்கள் ஊருக்குச் செல்வேன். கூனிப் பாட்டியும் இறந்துவிட்டாள். மாசான தாத்தாவும் இல்லை. மாடு அறுப்பதும் ஒழிந்துவிட்டது. ஊத்தாம்பட்டி இல்லை; இசைக் கருவியும் இல்லை.

இசையோடு கலந்திருந்த சமூகம் அதிலிருந்து பிரிந்துவிட்டது. குழந்தைப் பருவம் முதல் அவ்வப்போது இசைத்த என் கைகள் இறுதியாக 2006ஆம் ஆண்டுவாக்கில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கோக் எதிர்ப்பு தெருப் பிரச்சாரத்தில் கொட்டு அடித்தன. அதற்குப் பின்னர் இசைக்கவில்லை. இசைச் சமூகம் அலைபேசியில் இசையைக் கேட்கிறது. இசையை நுகரும் நிலைக்கு நகர்ந்துவிட்டது; நானும் அவ்வாறே. என் வாழ்வில் குழந்தைப் பருவம் முதல் இன்றுவரை என் இயக்கம் இளையராஜாவின் இசையுடன் பிணைந்துள்ளது. இளையராஜா இல்லாதிருந்தால் என்னவாக இருந்திருப்பேன்? இறக்கும் தருவாயில் இருக்கும் கோழிக் குஞ்சை பித்தளைக் கும்பாவுக்குள் வைத்து கும்பாவில் மெல்ல இசைத்தாள் என் அம்மா சந்தனமாரி. கும்பாவை எடுத்ததும் கோழிக்குஞ்சு பறந்து சென்றதை என் குழந்தைப் பருவத்தில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. இளையராஜா என் வாழ்வின் இரையாகவும் இறையாகவும் இருக்கிறார்; இறுகப்பற்றி இளைப்பாற்றுகிறார். என் அம்மாவைப் போல் உயிர்ப்பிக்கிறார். இவ்வளவும் இருக்கும் இசைஞானிக்கு இறுமாப்பும் இருக்கட்டுமே! அதில் எனக்கும்கூட கொஞ்சம் கர்வம்தான்!

l [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger