இசைஞானியின் ‘ரௌத்திரம்’

விக்னேஷ் நடராஜன்

“ஞானி”

ம் சமூகம், இங்குப் பலரை பற்பல காரணங்களுக்காக ‘ஞானி’ என்று அடையாளப்படுத்தியுள்ளது. பெரும்பாலும் நாம் திரைப்பட அல்லது பொழுதுபோக்கு கலைஞர்களை ‘ஞானி’ என்று கூறுவதில்லை. ஞானம் என்பது ‘அறிவு’ என்ற பொருள் கொண்டிருந்தாலும், நாம் அதனை அறிவியல், தத்துவம், ஆன்மீகம், சித்தாந்தம் என்ற அடிப்படையில் அணுகியே பழக்கப்பட்டுவிட்டோம். அவ்வாறான சூழலில் இசை என்றவோர் அடிப்படைக் கலாச்சாரக் கூறு, வெறும் கலை / பொழுதுபோக்கு என்றான நிலையில் அதனுள் குவிந்துகிடக்கும் கணிதத்தையும் அறிவியலையும் நாம் உற்றுநோக்காமல் கடந்துவிட்டோம். இசையை இயற்பியல் பார்வையில் அணுகினால், ஒவ்வோர் இசைக்கருவிக்கும் ஒரு Resonance (அதிர்வு) உண்டு, அதிர்வென்று ஒன்று இருந்தால் ‘அதிர்வெண்’ (Frequency) என்பது நிதர்சனம். கணிதத்தின் வாயிலாக இசையை நோக்கினால், தாளம், நடை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி ஒவ்வோர் அதிர்வெண்ணையும் வகைப்படுத்தி ‘Notes’ என்று மேற்கத்திய இசையிலும், ‘ஸ்வரம்’ என்று கர்நாடக இசையிலும், மேலும் பற்பல பெயர்களில் பற்பல இசைக் கலாச்சாரங்களிலும் சொல்வதுண்டு. சில இசைக் கலாச்சாரங்கள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து பரிணமித்து இன்று பெரும் இசை இலக்கணங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவ்வாறான இசையைக் கற்கும், கற்பிக்கும் மக்கள் பெரும்பாலும் அந்த இலக்கணத்திற்குள்ளேயே சிக்கிக்கொள்வர். அவர்களுள் சிலர் இரண்டிற்கும் மேற்பட்ட இலக்கணங்களைக் கலந்தோ, இலக்கணத்தை உடைத்தோ இசையில் புதுமை செய்ய முயல்வர். இவர்களை நாம் ‘இசை மேதைகள்’ எனலாம். ஆனால், முன்பு நான் கூறியதுபோல இந்த இலக்கணங்களை அதற்கு வெளியே இருந்து பார்ப்பவர்கள் மட்டுமே அதன் அடிப்படை சாராம்சத்தையே உணர முடியும். உதாரணத்திற்கு, இசையை வெறும் Notes என்று பாராமல் அதன் அதிர்வுகளை மனதார உணர்ந்து அமைக்கப்படும் இசை, இவ்விலக்கணங்கள் எதுவும் அறியாத பாமர மக்களை இயல்பாகவே சென்றடையும். இவ்வாறு இசையின் ஒவ்வோர் அணுவையும் இயல்பாகவே உணர்ந்து இசையமைப்பவர்களை இசை‘ஞானிகள்’ என்றுதானே அழைக்க வேண்டும்! ஆச்சரியம் என்னவென்றால் இவ்வுலகில் அவ்வாறான இசைஞானிகள் இல்லை, இசை‘ஞானி’ ஒருவர் மட்டுமே.

சிம்ப்ஃபனிக்குச் செல்லும் வழி

மேற்கத்திய இசை இலக்கணங்களின் முன்னோடியாகத் திகழும் ‘Western Classical Music’இன் உட்சபட்ச அங்கீகாரமாக விளங்குவதுதான் சிம்ப்ஃபனி (Symphony) இசை அரங்கேற்றம். இசைஞானி இளையராஜாவுக்கு இந்த சிம்ப்ஃபனி இசை மீதான மோகம் 1970களிலிருந்தே இருந்தது. திரு.தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை பயின்ற இளையராஜாவுக்கு, லண்டனின் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டார் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது தொட்டே இந்த ஆர்வம் தொற்றிக்கொண்டது. ஆனால், அன்றைய காலகட்டத்தில் சிம்ப்ஃபனி இசையை அரங்கேற்ற பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. முதலாவதாக, தான் யாரென்று இந்திய இசை மேதைகளுக்குக் காண்பிக்க வேண்டும். பின்னர் சிம்ப்ஃபனி இசை வடிவத்தை நம் மக்களுக்குப் பழக்கப்படுத்தி அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அதன் பின்னர், ‘மற்றும் ஒரு சிம்ப்ஃபனி’ என்று இருந்துவிடாமல் தரமானதாக, மேற்கத்திய இசை ஜாம்பவான்களை வாய்பிளக்கச் செய்யும் வண்ணம் அரங்கேற்றம் இருக்க வேண்டும். இதற்கு அளவுகடந்த பயிற்சியும், பொறுமையும் வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எடுத்தயெடுப்பில் மேற்கத்திய இசை என்று இறங்காமல், நாட்டுப்புற இசையால் தமிழக மக்களின் நாடித்துடிப்பில் இடம்பிடித்தார். அவரது கிராமியப் பாடல்கள் சற்று தலைத்தூக்க, தனக்குத் தெரிந்த கர்நாடக இசையில் மேற்கத்திய இசையைக் கலக்கவே தமிழக திரையிசை புதிய பரிமாணம் பெற்றது. பின்னர் கர்நாடக இசையில் உட்சபட்ச அங்கீகாரம் பெற, அத்தனை வேலைப்பளுவுக்கு இடையிலும், சிரத்தையோடு திரு.பாலமுரளிகிருஷ்ணாவிடம் கர்நாடக இசையைப் பயின்றார். பயின்றதோடு இல்லாமல், தானே ஓர் அங்கீகாரமாக விளங்க ‘பஞ்சமுகி’ என்ற புதிய ராகம் ஒன்றைப் படைத்தார். கர்நாடக இசை உலகமே மிரண்டுபோனது. தனது பாடல்கள் மூலம் ஒரே சமயத்தில் பாமர மக்களின் மனதுகளில் இடம்பிடிக்கவும், மற்றொருபுறம் கர்நாடக இசைப் பிரியர்களை ‘இது என்ன ராகம்? என்ன தாளம்?’ என்று வியக்கவைக்கவும் செய்தார். அவ்வப்போது இடைச்செருகல்களாக சிம்ப்ஃபனி இசையையும் தனது பாடல்களில் கலக்கத் தொடங்கினார். இதன்மூலம் மேற்கத்திய இசைக் கலைஞர்களையும் பிரியர்களையும் கவரத் தொடங்கினார். இவ்வாறாக நமக்கே தெரியாமல் பல திரையிசைப் பாடல்கள் வழியாக நம்முள் சிம்ப்ஃபனி இசையைப் புகட்டினார். நாமும் சிம்ப்ஃபனி என்றே தெரியாமல் அவற்றை ரசித்துக் கொண்டாடினோம்.

திரையிசையில் பல சிம்ப்ஃபனி முத்துக்கள்

மேற்கத்திய இசையை இசைஞானி தொடர்ந்து கற்றுக்கொண்டும், ஆராய்ச்சி செய்துகொண்டும், சிம்ப்ஃபனி வடிவத்தை நமக்கு மெல்லக் கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருந்தார். சில இசை அறிஞர்கள், இளையராஜாவை ‘திரையிசைக்கும் அப்பாற்பட்டவர்’ என்று புகழாரம் சூட்டுவர். அது ஒருவகையில் உண்மைதான் என்றாலும், ‘தமிழ்த் திரையிசை இல்லாவிட்டால் அவரால் இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்க முடியுமா?’ என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. மேற்கத்திய இசையிலும், கர்நாடக இசையிலும், நாட்டுப்புற இசையிலும் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்ய தமிழ்த் திரையுலகம் அவருக்கு  ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுத்தது என்று ஆணித்தனமாகக் கூறலாம். திரையுலகத்திற்கு வெளியே இருந்தால் அவரும் ஏதோ ஓர் இலக்கணத்திற்குள் சுற்றிக்கொண்டிருப்பார். குறிப்பாக, அவர் அந்த இலக்கணத்தில் எவ்வளவு உயரம் தொட்டிருந்தாலும் இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்திருக்குமா என்றால், நிச்சயமாக இருக்காது. தமிழ்த் திரையுலகம் அவரைப் போற்றிக்கொண்டாடியதும், அவரது ஆராய்ச்சிகளை ஆரத்தழுவி அரவணைத்ததுமே அவருக்கு நிகழ்ந்த ஆச்சரியம். அதுமட்டுமல்லாமல், ஆண்டிற்குக் குறைந்தது 30 முதல் 50 திரைப்படங்கள் கொடுத்து தமிழ்த் திரையுலகமே அவரை மெருகேற்றியுள்ளது. எனவே, அவரை எப்போதும் இசையமைத்துக்கொண்டே வைத்திருந்த பெருமை தமிழ்த் திரையுலகத்தையும், தென்னிந்திய ரசிகர்களையுமே சேரும். இனி இப்படி ஒரு வாய்ப்பு எந்த இசைக் கலைஞனுக்கும் கிடைக்கப்போவதில்லை. ஆண்டிற்கு 4 அல்லது 5 திரைப்படம், அதிலும் 2 பாடல்கள் என்ற நிலையில் உள்ளனர் இன்றைய இசையமைப்பாளர்கள். அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் இசைஞானி அளவிற்கு அதை ஒருவராலும் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி. சரி, அவர் எப்படித் தமிழ்த் திரையிசையைக் கொண்டு சிம்ப்ஃபனி பழகி, நம்மையும் அதற்குப் பழக்கினார் என்று பார்ப்போம்.

1822ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் ஷூபர்ட் என்ற ஆஸ்திரிய இசைக்கலைஞனின் இரண்டு நடைகளை மட்டுமே கொண்டு முற்றுப்பெறாத ஒரு சிம்ப்ஃபனியை முடித்துவைத்தார் இசைஞானி. ஆம், ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் ‘இதயம் போகுதே…’ என்ற பாடல்தான் அது. சிம்ப்ஃபனி என்று தெரியாமல் நம்மில் பலர் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். சிம்ப்ஃபனி இசையில் Concerto என்றவோர் இலக்கணம் உள்ளது. ‘ராஜபார்வை’ திரைப்படத்தில் ஒரு முழுநீள வயலின் கான்சர்ட்டோவை அற்புதமாக நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படத்தில் ‘ஆனந்த ராகம்…’ பாடல் சிம்ப்ஃபனி இசைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அந்தப் பாடலில் வரும் முன்னிசை (prelude) தொடங்கி தனது சிம்ப்ஃபனி திறனை அள்ளித்தெளித்திருப்பார். அதேபோல ‘கோழி கூவுது’ திரைப்படத்தில் ‘ஏதோ மோகம்…’ பாடல், நாட்டுப்புற பாடலைப் போலத் தோன்றினாலும் அதன் இடையிசையிலும் (interlude) தனது சிம்ப்ஃபனி கைவண்ணத்தைக் காண்பித்திருப்பார் இசைஞானி. இவை புதிய அனுபவத்தைக் கொடுத்தன என்று மட்டுமே நம்மால் கூறமுடியும், அதன் பெயர் ‘சிம்ப்ஃபனி’ என்று நாம் அன்று அறிந்திருக்கவில்லை, அவரும் கூறிக்கொண்டதில்லை. இதைவிட ஓர் ஆச்சரியத்தை அலட்டிக்கொள்ளாமல் நிகழ்த்தினார் இசைஞானி – கர்நாடக இசையில் சிம்ப்ஃபனி. ஆம், ‘சிந்து பைரவி’ திரைப்படம் நமக்குத் தெரிந்து கர்நாடக இசையில் அவர் தொட்ட உச்சம். ஆனால், ‘பூ மாலை வாங்கி வந்தான்…’ பாடலில், இரண்டரை நிமிடங்கள் கழித்து மெதுவாக ஒரு சிம்ப்ஃபனி இடைச்செருகலைச் செய்திருப்பார். ‘கிளிப்பேச்சு கேட்கவா’ படத்தில் ‘அன்பே வா அருகிலே…’ பாடல், சாதாரண மெலடி போலத் தோன்றினாலும், அதன் இடையிசையும் பின்னூட்டு இசையும் அற்புதமான சிம்ப்ஃபனி. ‘நிழல்கள்’ திரைப்படத்தில் ‘பூங்கதவே தாழ்திறவாய்…’ பாடல் – என்ன சொல்வது! ‘கர்நாடக சிம்ப்ஃபனி’ என்று ஒரு புதிய பெயரைத்தான் இதற்குச் சூட்ட வேண்டும். பின்னர் தமிழ்த் திரையிசை சிம்ப்ஃபனியில் அடுத்த கட்டத்தை அடைந்தார் இசைஞானி. மேற்கத்திய இசையைக் கர்நாடக இசையுடன் சிம்ப்ஃபனி வடிவில் இணைத்து, How to Name It?, Nothing but Wind என்று இரு இசைத் தொகுப்புகளை 1980களின் இறுதியில் வெளியிட்டார். ‘அவதாரம்‘ திரைப்படத்தில் ‘தென்றல் வந்து தீண்டும்போது…’ பாடலிலும் அவர் சிம்ப்ஃபனியில் உச்சம் தொட்டிருப்பார். அதோடு நிறுத்தாமல் ‘ஓ ப்ரியா ப்ரியா…’, ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி…’ என்று சிம்ப்ஃபனியில் பல மாற்றங்கள் செய்து தன்னைத் தானே மெருகேற்றிக்கொண்டிருந்தார். ‘ராஜா கையவெச்சா, அது ராங்கா போனதில்ல…’ என்ற வரிகளுக்கேற்ப ஆராய்ச்சி செய்து அரங்கேற்றிய அனைத்து சிம்ப்ஃபனி பாடல்களும் வெற்றி. சிம்ப்ஃபனி இசையை அரங்கேற்றம் செய்யத் தான் தயார் என்று அவரே உணர்ந்த ஆண்டு 1993. 2025க்கு மேல் சிம்ப்ஃபனி இசையை எத்தனை இந்தியர்கள் வேண்டுமானாலும் அரங்கேற்றம் செய்யக்கூடும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பண்ணைபுரத்தில் பிறந்த ஓர் இசைக்கலைஞன் தனது சிம்ப்ஃபனி இசையை அரங்கேற்ற இவ்வளவு தூரம் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது!

 

வேகம் போகும் மேஜிக் ஜர்னி

‘Fantasy’ என்ற தலைப்பில் சிம்ப்ஃபனி இசை ஒன்றை 1993ஆம் ஆண்டு வடிவமைத்து இலண்டனில் அரங்கேற்றம் செய்தார் இசைஞானி. ஆனால், சில காரணங்களால் அது வெளிவரவில்லை. ஒருபுறம் மேற்கத்திய இசை விமர்சகர்கள் சிலர் அதனை சிம்ப்ஃபனியாக அங்கீகரிக்கவில்லை என்றும், மற்றொருபுறம் இந்த சிம்ப்ஃபனிக்கு முதலீடு செய்து தயாரித்த நிறுவனத்திற்கும் இசைஞானிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் சிம்ப்ஃபனி வெளிவரவில்லை என்றும் பேச்சு அடிபட்டது. இதுகுறித்து இளையராஜாவிடமே நேரடியாகக் கேட்க இன்றுவரை யாருக்கும் தைரியமோ மனமோ வரவில்லை. 1990களின் இடையில் அவரது திரையிசை வரலாற்றில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. ‘ஞானி’ அல்லவா, துவண்டுவிடாமல் தனது பாணியில் தரமான இசையைக் காலத்திற்கேற்ப தொடர்ந்து வழங்கிவந்தார். ஆனால், சிம்ப்ஃபனி மீதான அவரது ஆர்வம் சற்றும் குறையவில்லை. 2005ஆம் ஆண்டு திருவாசகத்தை சிம்ப்ஃபனி இசையில் தொகுத்து வழங்கி, மீண்டும் தன்னை சிம்ப்ஃபனி அரங்கேற்றத்திற்குத் தயார் செய்யத் தொடங்கினார். கிடைக்கும் திரையிசை வாய்ப்புகளில் எல்லாம் தனது சிம்ப்ஃபனி இசைத்திறனை மெருகேற்றிக்கொண்டே இருந்தார். ஒரு கலைஞனின் கனவு தனக்கான அங்கீகாரம் கிடைக்கும்வரை ஓயவே ஓயாது என்பதற்கான சான்று இது. சமூக வலைதளங்கள் மெல்ல வளர, அவரது உழைப்பை மக்கள் சிலாகித்து எழுதத் தொடங்கினர். உள்ளூர் – மேற்கத்திய இசை விமர்சகர்கள் அவரது படைப்புகளை அலசி ஆராய்ந்து எழுதவே, படுஉற்சாகமாக சிம்ப்ஃபனி வேலையைத் தொடங்கினார். ‘மெர்க்குரி’ என்ற சரியான தயாரிப்பாளருடனும், ‘ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா’ என்ற இசைக்குழுவுடனும் கைகோத்தார். ‘சிம்ப்ஃபனி எண் 1: வாலியன்ட்’ இனிதே உருவாகத் தொடங்கியது.

சிம்ப்ஃபனி எண் 1: ரெளத்திரம்

‘சிம்ப்ஃபனி’ என்பதைச் சற்று விலாவாரியாகப் பார்ப்போம். அதன் முதல் விதி – மின்சக்தியைச் சாராத இசைக்கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதாவது, இயற்கையான முறையில் தோன்றும் இசை. அதிலும் மேற்கத்திய இசை மேதைகள் வகுத்துவைத்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்தக் கருவிகளை Strings, Woodwinds, Brass, Percussion என்று நான்கு குழுக்களாக வகைப்படுத்தியுள்ளனர். Strings என்பது நரம்புக்கருவிகள். இதில் வயலின், வியோலா, செல்லோ, டபுள் பேஸ் என்ற நான்கு கருவிகள் அடங்கும். Woodwinds என்பது மரத்தினால் ஆன வாய்க்கருவிகள். இதில் புல்லாங்குழல், கிளாரினெட், ஓபேஸ், பாஸூன்ஸ் ஆகியவை அடங்கும். Brass என்பது உலோகங்களால் ஆன வாய்க்கருவிகள். இதில் ட்ரம்பெட், ஹார்ன், ட்ரொம்பொன்ஸ், டியூபா ஆகிய கருவிகள் அடங்கும். கடைசியாக Percussions எனப்படும் தோல்கருவிகள். இவற்றில் டிம்பானி, ஸ்னேர் ட்ரம், சிம்பெல்ஸ், சைலஃபோன் ஆகியவை அடக்கம். மேற்கூறிய கருவிகளில் எது எவ்வளவு கணக்கில் வேண்டும் என்பதெல்லாம் அரங்கத்தில் எந்தக் கருவி எவ்வளவு சத்தத்தில் ஒலிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இசையமைப்பாளர் தேர்வுசெய்வார். பின்னர் மேடையில் எந்த வகைக்கருவிகள் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு சிம்ப்ஃபனிக்கும் ஓர் அடிப்படை உணர்ச்சியோ, தலைப்போ நிச்சயம் வேண்டும். கர்நாடக இசை இலக்கணத்தில் ஒரு கீர்த்தனையில் பல்லவி, அனுபல்லவி, சரணம் 1, இடையிசை, சரணம் 2 என்பது போன்ற ஒரு வடிவம் இருக்கும். 80, 90களில் வெளிவந்த பாடல்கள் இந்த வடிவத்தையே கொண்டிருக்கும். அதே போல சிம்ப்ஃபனி இசையில் தேக்கென்று ஒரு வடிவம் உள்ளது. அதனை ‘நடை’ (movements) என்பர். பொதுவாக ஒரு முழுநீள சிம்ப்ஃபனியில் நான்கு நடைகள் இருக்கும். முதல் நடையை ‘fast’ என்றும், இரண்டாம் நடையை ‘slow’ என்றும் கூறுவார். மூன்றாம் நடையை ‘dance’ என்றும், கடைசி நடையை ‘finale’ என்றும் அழைப்பர். இதில் ஒவ்வொரு நடைக்கும் ஒவ்வோர் இலக்கணம் உள்ளது. முதல் நடை என்பது அந்த சிம்ப்ஃபனியின் நாடியாக அமைய வேண்டும், அதுவே அந்த சிம்ப்ஃபனியின் அடிப்படை உணர்ச்சி. பொதுவாக இது ‘சொனாட்டா’ என்ற இலக்கணத்தைத் தழுவியே இருக்கும். இரண்டாம் நடை என்பது நாடக (dramatic) வடிவில் இருக்கும். இது அந்த சிம்ப்ஃபனியின் சாராம்சத்தை நோக்கியதாக இருக்கும். உதாரணத்திற்கு, சிம்ப்ஃபனியின் உணர்ச்சி சோகமாக இருந்தால் முதல் நடையிலேயே ரசிகர்களை அந்தச் சோகத்தை உணரச் செய்ய வேண்டும். இரண்டாம் நடையில் ரசிகர்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று ஒரு சொட்டு கண்ணீராவது சிந்த வைக்க வேண்டும். மூன்றாவது நடை ஆடலுக்கானது. இசை சற்று துள்ளலாகவோ வேகமாகவோ இருக்கும். இந்த நடை சிம்ப்ஃபனியில் கட்டாயம் வேண்டுமென்ற அவசியம் இல்லை. பலரும் மூன்றுநடை சிம்ப்ஃபனியாக அரங்கேற்றம் செய்வர். நான்காவதாக Finale – அதாவது முடிவு. இந்த இசை முதல் நடையைத் தழுவியே இருக்கும். ஆனால், சற்றே அதிர்வுடனும், பல கோவைகளாகவும் வலுவாகவும் அமைக்கப்படும். இவ்வாறாகத் தனது சிம்ப்ஃபனிக்கு இசைஞானி எடுத்துக்கொண்ட தலைப்பு Valiant – ரெளத்திரம் என்று பொருள். அவர் கடந்து வந்த பாதைக்கும், அவர் உழைப்பிற்கும், அவர் மனதிற்கும் ஏற்ற தலைப்பு. இந்தத் தலைப்பில் மேற்கூறிய நான்கு நடைகளையும் கொண்டு ஒரு முழுநீள சிம்ப்ஃபனியை அவர் படைத்துள்ளார். இந்த அரங்கேற்றத்தில் ஒரு சேர 80 இசைக்கருவிகள் இசைக்கப்படும். இதுவரை இசைஞானியின் பாடல்கள் நம் மனதை என்ன செய்ததோ அதை இந்த சிம்ப்ஃபனியும் செய்யும் என்பதில் ஐயமில்லை. இசைஞானியே சொன்னதுபோல நம்மைப் போன்ற மக்களுக்கு சிம்ப்ஃபனி இசை ஓர் அனுபவம். திரைப்படங்களுக்கு இசையமைக்கும்போது கதைக்களம், பாடகர்கள், பாடலாசிரியர், இயக்குநர், கதாநாயகன், தயாரிப்பாளர் என்று பலரின் பங்களிப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால், சிம்ப்ஃபனி என்பது இசையமைப்பாளர் மட்டுமே நிகழ்த்தும் அதிசயம். இசைஞானி எழுதிக்கொடுக்கும் நோட்ஸ் யார் தலையீடோ ஆதிக்கமோ இல்லாமல் இசைக் கலைஞர்களால் எழுதியது எழுதியபடி வாசிக்கப்படும். மேற்கத்திய இசையைக் கரைத்துக் குடித்தவர்களாலேயே ஒரு முழுநீள சிம்ப்ஃபனி இசையை அரங்கேற்ற முடியும். அவ்வாறாக, ஆஸ்திரியா ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் இசைஞானியின் சிம்ப்ஃபனி இசை நாம் கேட்பதற்காக நல்ல முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா மூலம் கடந்த மார்ச் 8ஆம் தேதி இசைஞானி தனது சிம்ப்ஃபனி இசையை இலண்டனில் அரங்கேற்றம் செய்தார். மேலும், இந்தியா உட்பட 13 நாடுகளில் அரங்கேற்றம் செய்யவுள்ளார். இந்நேரத்தில் நாம் செய்ய வேண்டியது, இந்த சிம்ப்ஃபனி அரங்கேற்றத்தைச் சாதாரண படைப்பாகக் கடந்துவிடாமல், அந்த மனிதனின் 50 ஆண்டு கனவை மதித்து நேரில் சென்று அந்த இசைக் கோவையை அனுபவிப்பதே. இசைஞானி இத்தோடு நிறுத்தப்போவதில்லை, அவரே சொன்னதுபோல் ‘இது தொடக்கம்தான்’. 82 வயதில் இத்தனை இன்னல்களைக் கடந்து இவ்வளவு தெளிவாக இந்த மனிதன் செய்யும் அரங்கேற்றம், சாதனைக்கும் மேல். நாளை ஓர் இசைக்கலைஞன் சிம்ப்ஃபனி இசையை அரங்கேற்றினால், அது இவர் போட்டுத்தந்த பாதை.

 

பயணங்கள் முடிவதில்லை

இந்திய இசை உலகில் ‘நோட்ஸ்’ (மேற்கத்திய இசையின் எழுத்து வடிவம்) எழுதி இசையமைக்கும் கலைஞர்களுக்கெல்லாம் தந்தை நம் இசைஞானி. முன்பே கூறியதுபோல, இசையின் அதிர்வையும் தாளநடையையும் கச்சிதமாக உணர்ந்து இசையை எழுதும் திறன் அவருக்கு இயல்பிலேயே உண்டு. தனது 50 வருட இசைப் பயணத்தில் எந்தவோர் இசை உருவாக்கத்திற்கும் அவர் மண்டையைப் பிழிந்து யோசித்ததில்லை என்று சிங்கப்பூர் கச்சேரி ஒன்றில் அவரே குறிப்பிட்டார். காரணம், அவருக்கு இசை என்பது சுவாசிப்பது போல இயல்பான இயற்கையான விஷயம். மேற்கத்திய இசையில் ஒரு வாக்கியம் உண்டு – ‘When you read it, you must hear it. When you hear it, you must write it.’ அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு நம் இசைஞானி மட்டுமே. அதாவது, 20க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளைக் கொண்ட ஒரு முழு ஆர்கெஸ்ட்ரேஷனின் எழுத்து வடிவ தாள்களைப் பார்த்தால், அவரது மனதிற்குள் அந்த இசை ஒலிக்கும். அதேபோலதான் இசையை அமைக்கும்போது எந்த ஒரு கருவியையும் தொடாமலே அவரால் அதன் சத்தத்தை உணர்ந்து ஒரு சராசரி மனிதன் கடிதம் எழுதுவதைப் போல் இசையை எழுத முடியும். இத்திறனால் மட்டுமே அவரால் 49 வருடங்களில் 1,593 திரைப்படங்களுக்கு இசையமைக்க முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு ஞானி வெறும் 34 நாட்களில் 80 வாத்தியங்கள் கொண்ட சிம்ப்ஃபனி இசையை எழுதுவதில் என்ன ஆச்சரியம்? இந்த நொடிக்காக இத்தனை வருடங்கள் தன் இசைத்திறனுக்கு அவரே தீனிபோட்டுக்கொண்டு வந்திருக்கிறார். இதுபோன்ற ஞானியை நாடு, மொழி, மதம், இனம், சித்தாந்தம் என்று ஒற்றைக் கூட்டிற்குள் அடைக்க முடியாது. அவரும் அதனை விரும்பியதில்லை.

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger