மத்திய தரைக்கடலின் ஆழத்தின் அமைதியை எப்படியாவது காஸாவின் கரையில் சேர்த்துவிட வேண்டும் என்ற அக்கறையில் அதன் அலைகள் ஓயாது முயற்சித்துக்கொண்டிருந்தன. அலைகள் எழுப்பும் ஈரக் காற்று, தனக்கு அருகே அமைந்திருக்கும் முகாமின் கூடாரங்களில் உள்ள மனிதர்கள் மீது பதியப்பட்டிருக்கும் கண்ணீரையும் ரத்தத்தையும் துடைக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. வெடிகுண்டுகளில் இடிபடாத வீடுகளில், மழலைகளின் புன்னகைகளில், இளையோரின் விளையாட்டுகளில், முதியவர்களின் ஓய்வுகளில், இளைஞர் குழுக்களின் மகிழ்வில், இணையர்களின் காமத்தின் இளைப்பாறுதல்களின் இடையில் ஊடாடிய கடற்காற்று இப்போது கூடாரத்தில் காய்ந்து போயிருக்கும் மனிதர்களுக்கு இடையே தொலைந்தவற்றைத் தேடிக்கொண்டிருக்கிறது.
மழையும் குளிரும் வெப்பமும் வெடி குண்டுகளும் எளிதில் தாக்கக் கூடிய நூற்றுக்கணக்கான சிறிய கூடாரங்களைக் கொண்ட அந்த முகாம், முனகல்கள் கூட பேரிரைச்சலாக ஒலிக்கக் கூடிய அளவிற்கு நெருக்கம் மிகுந்தவையாக இருந்தது. வெடிகுண்டுகளைப் பற்றிய வதந்திகள் பரவும்போது, பறவைகளின் சிறகுகள் படபடத்துக் கூடடைவதைப் போல முகாம் மனிதர்கள் சலசலத்துச் சிறிய கூடாரங்களில் புதைந்து போவார்கள். அவர்களின் கண்கள் கூடார வாசல்கள் வழியே வானத்தைப் பயத்தோடு உற்று நோக்கிக்கொண்டிருக்கும், அவர்களின் உடல்கள் நடுங்கிக் கொண்டிருக்கும். ஆயுதங்கள் பறக்காத வானத்தில் சூரிய ஒளியில் வெண்மேகக் கூட்டங்கள் சிறுது நேரம் அமைதியாய் நகர்வதுதான் அவர்கள் வெளியே வருவதற்கான சைகை ஆகும்.
அச்சமற்ற நேரங்களில் கடந்தகாலத்தைப் பற்றிய நினைவுகளை அசைபோடுவதுதான் வயது முதிர்ந்த பாத்திமாவின் பொழுதுபோக்கு. இடது காலை இழந்த அவளின் கணவர் அஹ்மத், மகன் ராஷித் ஆகியோரை வெடிகுண்டின் வெப்பம் முழுதாக விழுங்கிச் சில மாதங்களே ஆகின்றன. இப்போதைக்கு அவளின் இளம் வயது மருமகள் சல்மா, இரண்டு வயது பேரன் யாசின் ஆகியோர்தான் இவளுடைய வாழ்வின் வேர்கள். முகாமின் சிறிய கூடார வாழ்வில் தந்தையைப் பற்றிய நினைவுகள் வராதவாறு தன் மகனைப் பார்த்துக்கொண்டாள் சல்மா. கணவனின் நினைவிலிருந்து சல்மா வெளிவர வேண்டும் என்று பாத்திமா நினைத்தாலும், அவளுக்கான தாயாக இவள் நடந்துகொண்டாலும் கவலையேறிய சல்மாவின் கண்களை மாற்றுவதற்கு பாத்திமாவிற்குக் கடினமாக இருந்தது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then