நான் எப்போது கண் விழித்தாலும், கதவு மெதுவாகச் சாத்தப்படும் ஓசை கேட்கும். ஒரு பேய் தம்பதியினர், கைகோத்தபடி, அமைதியாக வீடு முழுவதும் ஒவ்வோர் அறையாகச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் ஏதோவொன்றைத் தீவிரமாகத் தேடுவது போலத் தெரிந்தது. இழுப்பறைகளைத் திறந்து, எதையோ எடுத்துப் பார்த்து ‘இங்கே இருக்கிறதா’ என்பதை உறுதி செய்துகொள்ள முனைந்தது அந்தப் பேய் ஜோடி.
“நாம் அதை இங்கேதான் விட்டுச் சென்றோம்” என்று அந்தப் பெண் மென்மையாகக் கூறினாள்.
“ஆமாம், இங்கேயும்கூடத்தான்” என்று அந்த ஆண் சேர்த்துக்கொண்டான்.
“அது மாடியில் இருக்கலாம்” என்று அவள் கிசுகிசுத்தாள்.
“தோட்டத்திலும் இருக்கக்கூடும்” என்று அவன் பதிலளித்தான்.
“ஷ்ஷ் அமைதி. இல்லையென்றால், நாம் உறங்கும் மனிதர்களை எழுப்பிவிடக்கூடும்.” என்று அவர்கள் ஒருசேரக் கூறினார்கள்.
ஆனால், என்னை எழுப்பியது அந்தப் பேய்கள் அல்ல. நிச்சயமாக அல்ல. ஒருவேளை நான் வாசித்துக்கொண்டிருக்கும்போது, “ஆ! அந்தப் பேய்கள் எதையோ தேடுகின்றன… அவை ஒரு திரையை விலக்குகின்றன” என்று நினைத்துக்கொண்டு மேலும் ஓரிரு பக்கங்கள் வாசிப்பைத் தொடரலாம். பிறகு சில கணங்கள் கழித்து, “அவர்கள் தேடியதைக் கண்டுபிடித்துவிட்டார்கள் போல” என்று நினைத்து, என் வாசிப்பை நிறுத்தி, புத்தகத்தில் பென்சிலால் குறித்தும் கூட வைக்கலாம். இறுதியில், சலிப்புத் தட்ட படிப்பதை நிறுத்திவிட்டுச் சுற்றிப் பார்த்தேன்; வீடு மொத்தமும் காலியாகவும், கதவுகள் திறந்தும் கிடந்தன. காட்டுப் புறாக்கள் குதூகலத்துடன் எழுப்பும் ஓசையும், தொலைவில் உள்ள பண்ணையில் கதிரடிக்கும் இயந்திரம் ஒன்றின் ரீங்காரமிடும் சத்தமும் மட்டுமே கேட்டது. “நான் எதற்காக இங்கு வந்தேன்? நான் எதைக் கண்டுபிடிக்க முயன்றேன்?” என்று என்னையே கேட்டுக்கொண்டு, வெறும் கையுடன் நின்றுகொண்டிருந்தேன். “ஒருவேளை அது மாடியில் இருக்குமோ?” என்று நான் நினைத்து மேலே சென்று பார்க்கும்போது, பரணில் சில ஆப்பிள்கள் மட்டுமே வைக்கப்பட்டிருந்தன. நான் மீண்டும் கீழே இறங்கி வருகையில் தோட்டம் முன்பு போலவே அமைதியாக இருந்தது. அங்கே, நான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகம் மட்டும் நழுவி புல்லில் விழுந்திருந்தது.
ஆனால், அந்தப் பேய்கள் தாங்கள் தேடியதை வரவேற்பறையில் கண்டுபிடித்துவிட்டன. உண்மையில் அவர்களை யாராலும் பார்க்க முடியாது என்பது வேறு விஷயம். ஜன்னல் கண்ணாடிகள் ஆப்பிள்களையும், ரோஜாக்களையும் பிரதிபலித்தன. வெளியே இருந்த இலைகளின் பச்சை நிறம் கண்ணாடியில் தெரிந்தன. அந்தப் பேய்கள் வரவேற்பறை வழியாகச் சென்றால், ஒரு ஆப்பிள் அதன் மஞ்சள் நிறப் பக்கத்தைக் காட்டத் திரும்புவதை மட்டுமே நம்மால் கவனிக்க முடியும். ஆனால், அவர்கள் கடந்து சென்ற உடனே கதவு திறக்கப்பட்டால் தரை, சுவர்கள், ஏன் கூரையிலிருந்து தொங்குவது வரை விசித்திரமான ஒன்று அந்த இடத்தை நிரப்பும். ஆனால், அது என்ன? அவற்றைப் பற்றிக்கொள்ளக் கைகளை நீட்டினேன். ஆனால், என் கைகள் வெறுமையாகவே இருந்தன. பாடும் பறவை ஒன்றின் நிழல் கம்பளத்தைக் கடந்து சென்றது; ஆழ்ந்த மௌனத்தின் ஆழமான கிணறுகளிலிருந்து ஒரு காட்டுப் புறா தனது மெல்லிய கூவலை வெளிக்கொணர்ந்தது. பிறகு, “பத்திரம், பத்திரம், பத்திரம்” என்று வீட்டின் நாடித்துடிப்பு மென்மையாக ஒலித்தது. “புதையல் புதைக்கப்பட்டிருக்கிறது… இந்த அறையில்…” என்று அந்தக் குரல் கூறியது. ஆனால், அது சட்டென்று நின்றுவிட்டது. ‘ஓ… அதுதான் அந்தப் புதைக்கப்பட்டிருந்த புதையலா?’ என்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கணம் கழித்து, அறையில் இருந்த ஒளி மங்கியது. நான் தேடும் பொருள் ஒருவேளை தோட்டத்தில் இருக்குமோ என்று வெளியே பார்த்தேன். ஆனால், சூரிய ஒளி இலைகளிலும் கிளைகளிலும் சிக்கிக்கொண்டது; மரங்கள் அந்தச் சூரிய ஒளியை நிழல்களாக மாற்றிவிட்டன. நான் தேடும் விஷயம் மிகவும் மென்மையானது, விலைமதிப்பற்றது. அது தன்னைத்தானே மேற்பரப்புக்கு அடியில் ஆழமாகவும் நிதானமாகவும் மறைத்துக்கொண்டது. நான் தேடும் அந்த ஒளி, அது இன்னும் பிரகாசிக்கிறது. ஆனால், எப்போதும் கைக்கு எட்டாத தூரத்தில் என்னால் அதை ஒரு கண்ணாடி வழியாக மட்டுமே பார்க்க முடிகிறது. அந்தக் கண்ணாடிதான் மரணம். மரணம் எங்களைப் பிரித்தது. அது நூற்றாண்டுகளுக்கு முன்பே அந்தப் பெண்ணை முதலில் எடுத்துக்கொண்டது. அவளுடைய மரணத்திற்குப் பிறகு, வீடு கைவிடப்பட்டது, ஜன்னல்கள் அடைக்கப்பட்டன, எல்லா அறைகளும் இருளில் மூழ்கின. அந்த ஆண் அவளைப் பிரிந்து, உலகம் முழுவதும் அலைந்து பூமியின் தெற்கு அரைக்கோளத்திற்கே சென்றுவிட்டான். அங்கே தெற்கு வானில் நட்சத்திரங்கள் மாறுவதைக் கண்டான். இறுதியில் திரும்பி வந்து, தெற்கு இங்கிலாந்தின் மலைக்குன்றுகளுக்கு அடியில் மறைந்திருந்த வீட்டைக் கண்டுபிடித்தான். மீண்டும் ஒருமுறை, அந்த வீடு மகிழ்ச்சியுடன் கிசுகிசுத்தது: “பத்திரம், பத்திரம், பத்திரம். இந்தப் புதையல் மீண்டும் உனக்கே சொந்தம்.”
மரங்கள் நிறைந்த பாதையில் காற்று பலமாக ஊளையிடுகிறது. மரங்கள் அப்படியும் இப்படியுமாகக் குனிந்து வளைகின்றன. மழையில் நிலவொளிக் கற்றைகள் கட்டுப்பாடில்லாமல் தெறித்துச் சிதறுகின்றன. ஆனால் உள்ளே, விளக்கின் ஒளி ஜன்னல் வழியாக அமைதியாகப் பிரகாசிக்கிறது. மெழுகுவர்த்தி அசைவில்லாமல், சீராக ஒளிர்கிறது. அந்தப் பேய் தம்பதியினர் ஜன்னல்களைத் திறந்து, அமைதியாக வீடு முழுவதும் அலைந்து, உறங்கிக்கொண்டிருக்கும் எங்களை எழுப்பிவிடாமல் இருக்க மென்மையாகக் கிசுகிசுத்தபடியே, மகிழ்ச்சியைத் தேடுகிறார்கள். தங்கள் கடந்த காலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்கிறார்கள்.
“நாம் இங்கேதான் உறங்குவோம்” என்கிறாள் அவள்.
“எண்ணிக்கையில்லாத முத்தங்களைப் பகிர்ந்துகொண்டோம்” என்று அவன் சேர்த்துக்கொள்கிறான்.
“காலையில் ஒன்றாக எழுவோம்…”
“மரங்களின் கிளைகளுக்கு இடையில் ஊடுருவி வரும் நிலவொளியைப் பார்த்தோம்…”
“நாம் மாடியில் இருந்தோம்…”
“தோட்டத்திலும் இருந்தோம்…”
“கோடைக்காலம் வந்தபோது இங்கிருந்தோம்…”
“பனி நிறைந்த குளிர்காலங்களிலும் இங்கிருந்தோம்…”
தொலைதூரத்தில் கதவுகள் மூடும் ஓசை, இதயத் துடிப்பைப் போல மென்மையாகக் கேட்கிறது.
அந்தப் பேய் தம்பதியினர் அருகில் வந்து வாசற்படியில் நிற்கிறார்கள். காற்று அமைதியாகிறது, கண்ணாடி ஜன்னலில் மழைநீர் வெண்ணிறத்தில் வழிகிறது. எங்களால் அவர்களைப் பார்க்கவோ, எங்கள் அருகில் அவர்களின் காலடி ஓசையைக் கேட்கவோ முடியவில்லை; கண்ணுக்குத் தெரியும் வகையில் மேலங்கி அணிந்த எந்தப் பெண் பேயும் அங்கே இல்லை. உறங்குபவர்களை எழுப்பிவிடாமல் இருக்கக் கைகள் விளக்கின் ஒளியை மறைத்தபடி மூச்சுக்காற்றின் ஓசையில் ஆண் பேய் கூறுகிறது, “பார், அவர்கள் உறங்குகிறார்கள். மேலும், அவர்களின் புன்னகையில் இன்னும் காதல் இருக்கிறது.” அந்தத் தம்பதியினர், தங்கள் ஒளிரும் விளக்கைப் பிடித்தபடி, குனிந்து நீண்ட நேரம், மௌனமாக, ஆழமாக எங்களைப் பார்க்கின்றனர். நெடுநேரம் தயங்கி நிற்கின்றனர். வெளியே, காற்று பலமாக வீசுகிறது. உள்ளே, விளக்கின் சுடர் லேசாகச் சாய்கிறது. கட்டுக்கடங்காத நிலவொளிக் கற்றைகள் தரையையும் சுவரையும் கடந்து, குனிந்து பார்த்துக்கொண்டிருக்கும் பேய்த் தம்பதிகளின் முகங்களில் — உறங்குபவர்களை ஆராய்ந்து அவர்களிடம் மறைந்திருக்கும் மகிழ்ச்சியைத் தேடி ஆழ்ந்து சிந்திக்கும் அந்த முகங்கள் — அந்த வெளிச்சம் பட்டு, சாயமேற்றுகின்றன.
“பத்திரம், பத்திரம், பத்திரம்” என்று வீட்டின் இதயம் பெருமையுடன் துடிக்கிறது. அந்த ஆண் பேய் பெருமூச்சுவிட்டு, “எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன…” என்கிறது. “இருந்தாலும், நீ என்னை மீண்டும் கண்டுபிடித்துவிட்டாய்” என்றவள், மென்மையாக நினைவுகூர்கிறாள், “இங்கேதான் நாம் உறங்குவோம்… தோட்டத்தில் படிப்போம்… சிரிப்போம்… பரணில் ஆப்பிள்களை உருட்டி விளையாடுவோம். இங்கேதான் நாம் நமது புதையலை விட்டுச் சென்றோம்.” எங்கள் அருகில் அவர்கள் குனியும்போது, அவர்களின் மென்மையான ஒளி என் கண்களைத் திறக்கிறது. அந்த வீடு இப்போது சத்தமாகத் துடிக்கிறது: “பத்திரம்! பத்திரம்! பத்திரம்!” நான் விழித்தெழுந்து கதறுகிறேன், “ஓ… இதுதான் உங்கள் மறைக்கப்பட்ட புதையலா? உங்கள் காதலின் பிரகாசம்!”