விவசாய உற்பத்தியை அடித்தளமாகக் கொண்ட மன்னராட்சிக் காலத்தில் மலைக் காடுகளின் வளங்கள் அரசியல் பொருளாதார முக்கியத்துவத்தைப் பெறாததால் விலங்குகளில் ஒரு விலங்காகத் தொல்குடிகள் காடுகளில் தங்குதடையின்றிச் சுதந்திரமாக உலாவினர். காடுபடு பொருட்களைச் சேகரித்தும், வேட்டையாடி உணவு சேகரித்தும், எளிய உற்பத்தியைச் செய்தும் ஒரு சமூகமாகப் பரிணமித்தனர். ஏற்றத்தாழ்வற்று, ஜாதி பேதமற்று, பாலினப் பேதமற்று சமத்துவமாக இயற்கையோடு இயைந்து எளிமையாக வாழ்ந்தனர். காடுகளில் வாழ்ந்தாலும் தொல்குடிகளுக்கும் சமவெளியிலிருந்த மன்னர்களுக்கும் இணக்கம் இருந்தது. மன்னராட்சிகளின் பொருளாதாரம் காடுகளைச் சாராத நிலைதான் இவ்விணக்கத்துக்கு முக்கியக் காரணம். இதற்கு நேர்மாறாக, நவீன அரசியல் பொருளாதார வளர்ச்சியானது காட்டு வளங்களைச் சார்ந்து இருப்பதால் காடுகளைப் பயன்படுத்தும் கட்டாயம் முதலாளித்துவத்துக்கு ஏற்பட்டது. நவீன முதலாளித்துவ வளர்ச்சியின் தொடக்கக் காலங்களில் தேயிலை, காப்பித் தோட்டங்கள் உருவாக்கவும், இரயில்வே தண்டவாளம் அமைக்கத் தேவையான மரக்கட்டைகளுக்காகவும், பங்களாக்களின் மேற்கூரை, கதவு, ஜன்னல்களுக்காகவும், போக்குவரத்துக்காகவும், இன்னபிற ‘வளர்ச்சி’களுக்காகவும் பிரிட்டிஷ் – இந்திய ஏகாதிபத்தியம் காடுகளைக் கட்டுப்பாடற்று அழித்தது. இதனால் தொல்குடிகள் மட்டுமன்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டனர். இதை அக்காலத்திலேயே பிரிட்டிஷ் இனவரைவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். “சிறந்த வில் வீரர்களாகவும் விளங்கும் நாயாடிகள் மான், பன்றி, முயல் முதலியவற்றை வேட்டையாடித் தின்னும் பழக்கம் உடையவர்கள். இந்த விலங்குகள் தற்போது கிடைப்பதில்லை. காடுகள் பாதுகாக்கப்பட்டவை என அரசு அறிவித்துவிட்டதும், தனிப்பட்டவர்களுடைய காட்டில் உள்ள மரங்கள் விறகுக்கும், வீடு கட்டுவதற்கும், இருப்புப் பாதைக்கும் என வெட்டப்பட்டுவிட்டதால் அக்காடுகள் அழிந்துவிட்டதே தற்போது விலங்குகள் இல்லாது போனதற்கான காரணமாகும்” எனத் தர்ட்ஸன் 1909இலேயே கூறியது கவனத்திற்குரியது. பிரிட்டிஷ் – இந்திய ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி அரசியலால் தொல்குடிகள் பாதிக்கப்பட்டபோதிலும் அவர்களுக்கு மாற்று வேலைகளும் வழங்கப்பட்டன. காடுகளையும் விலங்குகளின் நடமாட்டங்களையும் இன்னபிறவற்றையும் தொல்குடிகள் மட்டுமே நன்கறிந்திருந்ததால், முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்காக பிரிட்டிஷ் – இந்திய ஏகாதிபத்திய வனத்துறைப் பணிகளில் கூலிகளாக்கப்பட்டனர். அதாவது, முதலாளித்துவமானது காட்டுவாழ் சுதந்திரான தொல்குடிகளைக் கூலிகளாக உருமாற்றியது. இதுதான் வரலாற்றில் முதன்முறையாகத் தொல்குடிகள் காடுகளின் உரிமைகளை இழக்கத் தொடங்கிய முதற் புள்ளி.
சுதந்திர இந்திய அரசியல் சாசனமும், பின்னர் இயற்றப்பட்டச் சட்டங்களும் காடுகளில் தொல்குடிகளுக்கான உரிமைகள் சிலவற்றை வரையறுத்தன. ஆயிரமாயிரம் ஏக்கர் காட்டில் விலங்குகளைப் போலவும் பறவைகளைப் போலவும், அங்குமிங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த தொல்குடிகளுக்கு ஒருசில ஏக்கர் நிலம் கொடுக்கப்படுகிறது. இதனால், தொல்குடிகளின் அலைகுடி நிலையானது ‘நிலைகுடி’யாக மாறியது. சுதந்திர இந்தியாவிலும், சமகால உலகமயமாக்கல் அரசியலிலும் நீர், மண் உட்பட கனிம வளங்கள் பெரும் பொருளாதார மதிப்பைப் பெற்றிருப்பதால் காடுகளை அழிப்பது தொடர்கிறது. உள்நாட்டு, பன்னாட்டு முதலாளித்துவ அரசியல் இதை ‘வளர்ச்சி’ எனக் கூறினாலும் அப்போக்கின் பாதகங்கள் பலமாக இருக்கின்றன. இதைத் தடுக்க ‘நிலையான வளர்ச்சி (Sustainable Development)’ முன்வைக்கப்படுகிறது. இருப்பினும், இது காடு அழிப்பின் பாதகமான விளைவுகளை ஒப்புக்கொண்டதற்குச் சாட்சி. உள்நாட்டு, பன்னாட்டு முதலாளித்துவ அரசியல் பொருளாதார வளர்ச்சியால் காட்டுக்கும் தொல்குடிக்கும் இரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்திருந்த உறவு அறுந்துகொண்டிருக்கிறது; அவர்கள் காடுகளின் தொங்குசதையாக உருமாறுகின்றனர். செழுமையான காடுகளில் வசிக்கிற புலி, கரடி, யானை என விலங்குகளும் தொல்குடிகளும் வாழ்வாதாரத்தை இழப்பதற்குக் காரணம், தர்ட்ஸன் கூறியது கூடுதலாகச் சிக்கலாகிக் கொண்டிருப்பதாலாகும். இது தொல்குடிகளுக்கும் அவர்களின் உரிமைகளைப் பறிப்போருக்கும் இடையே முரண்பாடு முளைக்க வித்திடுகிறது. சமவெளிகளில் வசிப்போரும் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளாலும் வறுமையில் உழல்வதாலும் இவற்றைத் தீர்க்கக் கிளர்ந்தெழுந்த கம்யூனிஸ்ட்டுகள் புரட்சியை நிகழ்த்த காடுகளுக்குள் செல்கின்றனர். இவர்களும் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளாகிய தொல்குடிகளும் இணைவது இயல்பாகிவிட்டது. இப்பின்னணியைத் ‘தண்டகாரண்யம்’ தெளிவாகக் காட்சிப்படுத்தியுள்ளது.
‘நக்ஸல்பாரி’ குழுவிடமிருந்து நாட்டைக் காப்பாற்றும் படைப்பிரிவுக்கான பயிற்சியில் இருக்கும் இளைஞனின் காதல் நினைவுகளிலிருந்து ‘தண்டகாரண்யம்’ தொடங்குகிறது. இதற்குப் பதிலாக, மலைகளின் அடர்காடு, அருவி, ஆறு, நீர்த் தேக்கம், பூக்கள், வண்டு, தேன், மான், புலி என இயற்கையுடன் இயற்கையாய்ப் பிணைந்திருக்கும் தொல்குடிகளின் வாழ்வியல் கொண்டாட்டங்களிலிருந்து தொடங்கியிருக்கலாம். அவர்களிடம் கள்ளங்கபடமற்ற எளிய வாழ்வியல் கேலியும் கிண்டலும், காதலுமாய்த் ததும்பி வழியும். கதாநாயகி, நாயகன்களுக்கு இடையேயான காதலைக் காட்சிப்படுத்திய அளவுக்கு அம்மக்கள் கூட்டாக நிகழ்த்தும் கேலி கிண்டலுக்குத் தண்டகாரண்யம் கூடுதலான முக்கியத்துவம் தரவில்லை. படைப்பிரிவுப் பயிற்சிக்கும், மொழிப் பகைக்குமான காட்சிகளைக் குறைத்துவிட்டு, தொல்குடிகளின் வாழ்வியலைக் கூடுதலாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். இவை சமவெளி வாழ் நிலைகுடிகளுக்கு வாழ்க்கையின் உண்மையான பொருளைத் தெரிவித்திருக்கும். மலைகளுக்கு இன்பச் சுற்றுலா செல்லும் அவர்களுக்கு, அங்கேயே நிலையாக வாழ்கிற தொல்குடிகளின் இயல்பான வாழ்க்கையின் உன்னதங்களைக் கூறியிருக்கும். ஒருசில கதாபாத்திரங்களுக்குத் தொழில்முறைக் கலைஞர்களையும் தொல்குடிகளின் வாழ்வியலுக்கான பாத்திரங்களில் சில தொல்குடி மக்களையும் நடிக்கச் செய்திருக்கலாம். ‘நடிக்கச் செய்தல்’ என்ற நிலையைக் கடந்து அன்றாடம் நிகழ்பவற்றை அவ்வாறே காட்சிப்படுத்தும் நிலைக்கு நகர வேண்டும். பா.இரஞ்சித்தின் ‘அட்டகத்தி’யில் இம்முயற்சி இருக்கிறது. இந்நிலைக்கு மாரிசெல்வராஜ் நகர்ந்திருக்கிறார். ஒடுக்குமுறைகளைப் புனைவுகளாலும் புராணங்களாலும் நியாயப்படுத்துகிற கலையின் அரசியலில், தலித் பழங்குடிகளின் எதார்த்த வாழ்வை “உள்ளதை உள்ளாவறு” எடுத்துரைப்பதும், அதைப் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் நிலைக்குக் காட்சிப்படுத்துவதுதான் தலித் இயக்குநர்களின் தனித்துவம். இம்முயற்சியை இப்படத்தில் அதியன் ஆதிரை முன்னெடுத்துள்ளார்.
முதலாளித்துவத்தால் உருவாகியுள்ள நவீனக் கல்வியானது தொல்குடி சமூகத்துக்குள் காதலர்கள் இணைவதற்கு இடையூறாக இருப்பது, தொல்குடி சமூகத்தைச் சேர்ந்த நபரே தன் சமூகத்தின் நியாயத்துக்கு எதிராக நிற்பது போன்ற ‘உள் முரணை’ இயக்குநர் கவனப்படுத்தியுள்ளார். ஒரு சமூகத்துக்குள் உருவாகியுள்ள கல்வி, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளும், பொருளாதாரத்திற்காகப் பிறரைச் சார்ந்திருப்பதும் அவர்களின் இணக்கத்தைப் பிணக்குவதைக் காட்சிப்படுத்தியுள்ளார். தொல்குடிகளின் மீது பொய் வழக்குப் பதிவதையும் அவர்களை அடிப்பதையும் எதிர்க்கும் சடையன் (தினேஷ்) சிகப்புத் துண்டைத் தோளிலிட்டுக்கொண்டு வனத்துறை அதிகாரியிடம் துணிச்சலாகப் பேசி தன் மக்களை மீட்டுச் செல்லும் காட்சியில், கதாநாயகர் ஒரு ‘கம்யூனிஸ்ட்’ என்பதைக் குறியீடுகளாலும் செயல்களாலும் காட்டுகிறார். அதேசமயம், தொல்குடிகளில் சிலர் வனத்துறையில் கூலிகளாகப் பணியாற்றுகின்றனர். இப்பணி நிரந்தரமாகும் என்ற நம்பிக்கையால் பணிச் சுமையையும் தங்கள் மீதான ஆதிக்கத்தையும் சகிக்கின்றனர். கதாநாயகனின் உடன்பிறந்த தம்பியும் மற்றொரு கதாநாயகருமான முருகனும் (கலையரசன்) இதில் உள்ளடக்கம். வனத்துறை அதிகாரியை எதிர்த்ததால் அவரை ஆபத்தான காட்டுப் பணியில் நியமித்தபோது, அங்குக் கள்ளத்தனமாகக் கஞ்சாச் செடி வளர்ப்பதையும் இதற்கு வனத்துறை அதிகாரி உடந்தையாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதைத் தன் அண்ணனிடம் தெரிவிக்கிறார். தொல்குடிகளையும் தன்னையும் வதைக்கிற வனத்துறை அதிகாரியைப் பழிவாங்க இதையொரு வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றனர். உரிய ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி அவர்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கச் செய்கிறார் தினேஷ். இவ்விடத்தில் தினேஷ் எந்தக் கட்சியைச் சேர்ந்த நபராகவும், ஆயுதம் தாங்கிய ‘நக்ஸல்’ போராளியாகவும் இல்லை; அவர் சட்டத்திற்கு உட்பட்டு உழைத்து வாழ்கிற நேர்மையான நபராக இருக்கிறார். கஞ்சா முதலாளிக்கும், வனத்துறை அதிகாரிக்கும் தொல்குடி கதாநாயகர்களுக்கும் இடையேயான இத்தனி நபர் மோதல் கூர்மையடையவே வனத்துறையின் கூலிப் பணியிலிருந்து நீக்கப்படுகிறார் கலையரசன். அவர் சில ஆண்டுகள் பணியாற்றியதற்கான ஆவணங்களும் எரிக்கப்படுகின்றன. வனத்துறையில் நிரந்தரப் பணி கனவு சிதைக்கப்படுகிறது. இது இப்படத்தின் முதல் முரண். இதனால் அவர் வனத்துறையினருடன் வாக்குவாதம் செய்யும் நேரத்தில் அங்கு அமர்ந்திருக்கும் ஒரு நபர் அவரைச் சீருடைப் பணியில் சேர்வதற்கான பயிற்சியில் சேர்ப்பதாக ஆசை காட்டுகிறார். காதலியைக் கரம்பிடிக்கவும், தன் சமூகத்தில் முன்மாதிரியான ஆளுமையாக உருவெடுக்க முடிவெடுக்கும் கதாநாயகர்களும் அவர்களது குடும்பமும் அதற்காகத் தங்கள் நிலத்தை விற்கின்றனர்.
சீருடைப் பணிக்கான மிகக் கடுமையான பயிற்சியில் தமிழர் வடவர் பகை மேலெழுகிறது. இது இரண்டாவது முரண். தொல்குடிகளுக்குள்ளும் தலித்துகளுக்குள்ளும் மொழிகளால் பகைமை உருவாவது அரிது. வாழ்க்கை முழுவதும் ஒடுக்கப்படுகிற சமூகங்கள் ‘பிழைப்பு’க்காகச் சென்ற இடங்களில் வெவ்வேறு மொழிகளைப் பேசுவதாலேயே அவர்களுக்குள் பகை ஏற்படாது. அன்பும் காதலும் ததும்பி வழியும் தொல்குடி வாழ்க்கையில் வறுமை தலைவிரித்தாடவே அவர்கள் ‘போலி நக்ஸல்’களாக உருவாக்கப்பட்டதும், இருப்பினும் இப்போலியால் நிரந்தரப் பணியும் நம்பிக்கையான எதிர்காலமும் இருக்குமென நம்பியதாலும் மொழியால் ஏற்பட்ட பகையை மறந்து நண்பர்களாகின்றனர்.
அவர்கள் எதிர்பார்த்த அந்த நிரந்தரப் பணி முதலில் தன் நண்பனுக்குக் கிடைக்கவே தனக்கான தருணத்திற்குக் காத்திருக்கிறார் கலையரசன். அப்போதுதான் தற்செயலாக ஒரு பத்திரிகைச் செய்தியில் படை வீரனாகப் பணிக்குச் சென்ற தன் நண்பன் ‘நக்ஸல்’ எனக் கொல்லப்பட்டதை அறிகிறார். கொலை செய்யப்படுவதற்காகவே அவர்கள் ‘போலி நக்ஸல்’களாக உருவாக்கப்பட்டதையும் தாங்கள் ஏமாற்றப்பட்டதையும் உணர்கிறார். இது மூன்றாவது முரண். இதுதான் தண்டகாரண்யத்தின் மையக் கரு. இடைவேளைக்குப் பின்னரான இக்காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன; படத்துடன் ஒன்றிப்போகச் செய்கின்றன. இச்சிக்கலால் கதாநாயகனும் ஏற்கெனவே மொழியால் பகையானவர்களும் ஒன்றாகின்றனர். அரசியல் அதிகாரத்துக்காகவும் பணத்துக்காகவும் சட்டத்திற்கு முரணாகவும் தொல்குடிகளுக்கு எதிராகச் செயல்படும் சில தனிநபர் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் மக்களிடத்தில் அம்பலப்படுத்த அவர்கள் துடிக்கின்றனர். அப்பாவி இளைஞர்களை ஆசைகாட்டி போலி நக்ஸல்களாக்கி, அவர்களைக் கொல்லத் திட்டமிட்ட அதிகாரிகளுக்கும் ஏமாற்றப்பட்ட இளைஞர்களுக்கும் இடையே மோதல் நிகழ்கிறது. கதாநாயகன் கலையரசன் காப்பாற்றப்படுவாரா? என்ற கேள்வியும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற விருப்பமும் பார்வையாளர்களுக்கு மேலிடுகிறது. அது நிறைவேறவில்லை. அவர் கொல்லப்படுகிறார். இப்புள்ளியில் வழக்கமான தமிழ்த் திரைக்கதையிலிருந்து தண்டகாரண்யம் மாறுபட்டுள்ளது; கதாநாயகனைக் காப்பாற்றவில்லை. எதார்த்தத்தில் அவ்வாறுதான் நிகழும். ஒரேயொருவர் தப்பித்து உண்மையை ஊடகங்களில் எடுத்துரைக்கிறார். ஏற்கெனவே சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்ட முதலாளி, வனத்துறை அதிகாரியால் தாக்கப்பட்டதாலும், போலி நக்ஸலாக உருவாக்கப்பட்டதால் தங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டதாலும் தினேஷ் ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுக்கிறார். முன்புபோல் சட்டப் போராட்டத்தைக் கைக்கொள்ளவில்லை. பலிக்குப் பலிதான் இதன் அரசியல். தன் உடன்பிறந்த தம்பி கலையரசனின் கொலைக்குப் பதிலடி கொடுக்க இச்சிக்கலில் தொடர்புடைய அதிகாரிகள் இருவரை தினேஷ் சுட்டுக் கொல்கிறார். திரையரங்கில் பார்வையாளர்களின் கைதட்டலின் ஒலி அடங்க சற்றும் நேரமானது.
‘தண்டகாரண்யம்’ ஒரு புனைவு என்று சொல்லப்பட்டாலும், அது சமகாலத்தில் நிகழும் சிக்கல்தான். தண்டகாரண்யம் என்னுமிடத்தில் ஆயுதக் கிளர்ச்சியும் நடைபெற்றது. அப்பாவி இளைஞர்களைப் போலி நக்ஸல்களாக்கி அவர்களைச் சரணடையச் செய்வதும், கொல்வதும் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. மிதவாத, தீவிரவாத இடதுசாரி இயக்கத்தை மையப்படுத்தி ஏற்கெனவே தமிழில் சில திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அப்பாவி தொல்குடி இளைஞர்கள் போலி நக்ஸல்களாக்கப்பட்டுக் கொல்லப்படுவதைக் கருவாக்கி வெளியான முதல் படம் என்ற விதத்தில் ‘தண்டகாரண்யம்’ தமிழ்த் திரையுலகின் தனித்துவமான படம். படத்தின் பாத்திரங்கள் கதைக்கு வலுசேர்க்கின்றனர். கலையரசனைப் படை வீரராக்கியதும், தினேஷைப் போராளியாக்கியதும் பொருத்தமான தேர்வு. பிற நடிகர்களும் தங்களுக்குரிய பாத்திரத்தைச் சரியாக நிறைவேற்றியுள்ளனர். வனத்துறை, படைப்பிரிவு அதிகாரிகளும் அப்பதவிகளுக்குரிய மிடுக்குடன் நடித்துள்ளனர். பாடலும் பின்னணி இசையும் படத்துடன் ஒன்றியிருக்கின்றன.
‘தண்டகாரண்ய’த்தைத் தொல்குடிகளுக்கும் இந்த நாட்டுக்கும் மட்டுமேயான சிக்கலாகப் புரிந்துகொள்ளக் கூடாது. ஏனென்றால், “இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்த தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது” என்று பிரெடெரிக் எங்கெல்ஸ் 1876ஆம் ஆண்டில் கூறியது சமகாலத்துக்கும் பொருந்தும். இயற்கையின் பழிவாங்கல்கள் பெருவெள்ளமாகவும் நிலச்சரிவாகவும் இருக்கின்றன; அவை மொத்த சமூகத்தையும் இயற்கையையும் அஃறிணைகளையும் பாதிக்கின்றன. அக்கால கேரள சமஸ்தானங்களிலும் சென்னை மாகாணத்திலும் மலையிலும் சமவெளியிலும் பெரும் பாதிப்பை விளைவித்த 1924ஆம் ஆண்டுப் பெருவெள்ளத்துக்கும், சமீபத்தில் கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவுக்கும் காடுகள் அழிப்பும் காரணமாகும். எனவே ‘தண்டகாரண்யம்’ தொல்குடிகளுக்கும் நிலைகுடிகளுக்கும் இயற்கைக்குமான பாடம்; அது பொதுச் சமூக நலனுக்கான திரைப்படம் என்பது மிகைக் கூற்றல்ல.
வர்க்கச் சிக்கலினூடாகப் பேசப்பட்ட ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்துக்குப் பின் ‘தண்டகாரண்ய’த்தை அதியன் ஆதிரை உருவாக்கியுள்ளார். அரசியல்மயப்பட்ட நபர்கள் மட்டுமன்றி அரசியலற்ற வெகுமக்களும் ரசிக்கும்படி ‘தண்டகாரண்ய’த்தை இயக்கியுள்ளார். சமூகச் சிக்கல்களை அரசியல் பொருளாதார பின்புலத்துடன் திரைப்படமாக்குவது கடினமான சவால் நிறைந்தது. இதைச் சாமார்த்தியமாகக் கடந்து ‘தண்டகாரண்ய’த்தை வெகுமக்களிடத்தில் கொண்டு சேர்த்துள்ளார். இன்னும் நேர்த்தியாகக் காட்சிப்படுத்த வேண்டும்.
சமூக விடுதலைக்கான அரசியலைத் திரைத்துறையில் இயக்கியும் தயாரித்தும் செயல்படுகிற இயக்குநர் பா.இரஞ்சித் ‘தண்டகாரண்ய’த்தைத் தயாரித்துள்ளார். நாடுகளுக்கு இடையேயான ‘புற முரண்’களைப் பேசுகிற படங்களைக் கொண்டாடுவதுபோல், நாட்டின் ‘உள்/அக முரண்’களைக் காட்சிப்படுத்துகிற படங்களை வரவேற்பதும், பாராட்டுவதும், விவாதிப்பதும் அவசியம். நாட்டின் உண்மையான வளர்ச்சியும் குடிமக்களின் மகிழ்ச்சியும் ‘உள்/அக முரண்’களைக் களைவதிலிருந்தே உருவாகும். இவ்விடத்தில் அம்பேத்கரியத்தைப் பொருத்தினால் இதன் பொருள் விளங்கும். இந்திய அரசியல் சாசனம் உறுதிபடுத்தியுள்ள மனித மாண்பு வாழ்க்கை குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்க இதுபோன்ற திரைப்படங்களை அதியன் ஆதிரை இயக்குவாரென நம்பலாம்.