செ.கு.தமிழரசன் (1953) தமிழ்நாட்டின் நூறாண்டுக்கும் மேலான நவீன தலித் அரசியலில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கால பயணத்தை மேற்கொண்டிருப்பவர். பழைய அம்பேத்கரியப் பெரியவர்களோடு இணைந்து செயற்பட்டவர். இன்றைய நிலையில் அம்பேத்கரிய அரசியலின் வரலாற்றைத் துல்லியமாக விவரித்துச் சொல்லக் கூடிய ஆளுமை இவர் மட்டுமே என்று சொன்னால் அது மிகையல்ல. தமிழ்நாட்டுத் தலித் அரசியல் வரலாற்றுக்கான அரிய நூலகம் அவர். அம்பேத்கரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த பேச்சாளர். தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரான இவர் நான்கு முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், இருமுறை தற்காலிக அவைத்தலைவராகவும் இருந்தார்.
அறிமுகம்: உங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்பது எங்களது நீண்ட காலத் திட்டம். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, உங்களுடைய அரசியல் பயணம் குறித்துத் தெரிந்துகொள்வது. மற்றொன்று, அம்பேத்கரிய இயக்கங்களின் கடந்தகாலச் செயல்பாடுகள், அதில் செயல்பட்ட முன்னோடிகள், பெரியவர்களின் பணிகள் பற்றித் தெரிந்துகொள்வது.
உங்களுடைய இளமைப் பருவம், குடும்பப் பின்னணி, தாய் – தந்தையர், படிப்பு குறித்துக் கூறுங்கள்?
தமிழ்நாட்டுத் தலித் இயக்கங்களுக்கு ஏறத்தாழ 150 ஆண்டு கால நெடிய வரலாறு உண்டு. அதில் என்னுடைய குடும்பத்திற்கும் பங்கு உண்டு. அன்று ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டம் (இன்றைய வேலூர் மாவட்டம்) பகுதியில் ஷெடியூல் காஸ்ட் ஃபெடரேஷன், இந்தியக் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளிலும் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாகக் களப்பணியாற்றியவர் என்னுடைய தந்தையார் செட்டிக்குப்பம் குப்புசாமி. அவர் முன்னாள் இராணுவ வீரர். இரண்டாம் உலகப் போரின்போது நம்முடைய இளைஞர்கள் இராணுவத்தில் சேர வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் அறைகூவல் விடுத்ததன் விளைவாக எங்கள் மாவட்டத்தில் பலர் தற்காலிகப் படையில் சேர்ந்தனர். அதில் ஒருவர் என் தந்தை. 1962ஆம் ஆண்டு வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தந்தை சிவராஜ் போட்டியிட்டபோது அவருக்காகத் தேர்தல் பணியாற்றியவர். அவரின் முதன்மைச் சீடர். திமுக கூட்டணியில் பங்குபெற்று நாடாளுமன்றத் தொகுதியில் தந்தை சிவராஜ் போட்டியிட்ட அதே தேர்தலில் எனது தந்தையின் உழைப்பைப் பார்த்துக் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு தந்தார். இவ்விருவரும் அன்றைக்கு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தனர். இந்தியக் குடியரசுக் கட்சியின் தென் மண்டலத் தேர்தல் ஆணையராக இருவர் நியமிக்கப்பட்டனர். ஒருவர் நான் பெரிதும் மதிக்கக்கூடிய, கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக விளங்கிய, ‘தங்கவயல் சிங்கம்’ என்று பாராட்டப்பட்ட தலைவர் சி.எம்.ஆறுமுகம். மற்றொருவர், எனது தந்தை. இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிகளில் புலமை கொண்டிருந்தார் தலைவர் ஆறுமுகம். என்னுடைய தந்தைக்குத் தமிழைத் தவிர வேறு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரியாது.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then