முன்னொரு காலத்தில், தனது மூன்று மகன்களுடன் ஒரு பெண்மணி வாழ்ந்துவந்தாள். அவளது மகன்கள் தங்கள் அன்னையின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர், எப்போதும் தங்களது அன்னையை மகிழ்விக்க முயன்றனர். இறுதியில், அவள் மிகவும் முதுமையடைந்து, நலிந்துபோனாள். மூன்று மகன்களும் அம்மாவை அதீதமாக மகிழ்விக்க என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் துவங்கினர். மூத்தவன், அவள் இறந்ததும் அவளுக்காகக் கல்லில் ஓர் அருமையான கல்லறையை வெட்டுவதாக உறுதியளித்தான். இரண்டாமவன் அழகிய சவப்பெட்டி ஒன்றைச் செய்வதாகக் கூறினான். இளையவன், “நான் சென்று இளவரசி யானையின் வாலை எடுத்து வந்து அம்மாவின் சவப்பெட்டியில் வைப்பேன்” என்றான். உண்மையில், எல்லாவற்றையும் விட இந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதுதான் மிகவும் கடினமான ஒன்று.
இதையடுத்து, சிறிது காலத்திலேயே அவர்களின் தாயார் இறந்துபோனாள். இளைய மகன் உடனடியாகத் தன் தேடலைத் தொடங்கினான். வால் எங்கே கிடைக்கும் என்று கூட அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. மூன்று வாரங்கள் பயணம் செய்து, ஒரு சிறிய கிராமத்தை அடைந்தான். அங்கே வயதான கிழவியைச் சந்தித்தான். அவள் அவனைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டாள். “இதற்கு முன் மனித இனத்தைச் சேர்ந்த எவரும் இங்கு வந்ததேயில்லை” என்று கூறினாள். அவளிடம் இளவரசி யானையின் வாலைத் தேடும் தன் கதையைக் கூறினான். அந்தக் கிராமம்தான் அனைத்து யானைகளின் இருப்பிடம் என்றும், ஒவ்வோர் இரவும் இளவரசி யானை உட்பட எல்லா யானைகளும் அங்கேதான் உறங்கும் என்றும் கூறிய அந்தக் கிழவி, ஒருவேளை மிருகங்களின் கண்ணில் சிக்கிவிட்டால் அவை உன்னைக் கொன்றுவிடும் என்று எச்சரித்தாள். எனவே, அந்த இளைஞன் தன்னை ஒளித்து வைக்குமாறு கெஞ்சினான். அவளும் அவனை ஒரு பெரிய விறகுக் குவியலில் ஒளித்து வைத்தாள்.
“எல்லா யானைகளும் உறங்கும்போது, நீ எழுந்து கிழக்கு மூலைக்குச் செல்ல வேண்டும். அங்கே நீ இளவரசியைக் காணலாம். அதன் பின்னர், நீ தைரியமாகச் சென்று, அதன் வாலை வெட்டிவிட்டு அதே வழியில் திரும்ப வேண்டும். ஒருவேளை நீ பதுங்கிச் சென்றால், யானைகள் கண் விழித்து உன்னைப் பிடித்துவிடும்” என்று கிழவி அவனிடம் எச்சரித்தாள்.
பொழுது சாயும் நேரத்தில் மிருகங்கள் கிராமத்திற்குத் திரும்பின. வந்த உடனே, மனித வாடை வீசுவதாகக் கிழவியிடம் கூறின. கிழவியோ, அப்படி எந்த வாசமும் வீசவில்லை என்று உறுதியளித்தாள். அவற்றின் இரவு உணவு தயாராக இருந்தது. எனவே, அவை சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்றன.
நள்ளிரவில் அந்த இளைஞன் எழுந்து தைரியமாகச் சென்று இளவரசி உறங்கிக்கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அதன் வாலை வெட்டிவிட்டு, வந்த வழியே திரும்பினான். பிறகு, வாலை மிகவும் கவனமாக எடுத்துக்கொண்டு தன் வீட்டிற்குப் புறப்பட்டான்.
பொழுது விடிந்ததும் யானைகள் கண் விழித்தன. இளவரசியின் வால் திருடப்படுவது போல் கண்டதாக ஒரு யானை கூறியது. அப்படிச் சிந்தித்ததற்காகவே மற்ற யானைகள் அதை அடித்தன. இரண்டாவது யானையும் அதே கனவைக் கண்டதாகக் கூறியது, அதற்கும் அடி விழுந்தது. யானைகளிலேயே மிகவும் புத்திசாலியான ஒன்று, அந்தக் கனவு உண்மையா என்பதை நேரில் சென்று பார்ப்பது உசிதமாயிருக்கும் என்று யோசனை கூறியது. அப்படியே அவையனைத்தும் இளவரசியிடம் சென்றன. தன் வால் போனதை அறியாமல், இளவரசி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை மற்ற யானைகள் கண்டன. பின்னர், இளவரசியை எழுப்பிவிட்டு, அந்த இளைஞனைத் துரத்தத் துவங்கின.
அந்த யானைக் கூட்டம் மிக வேகமாகப் பயணித்ததால், சில மணி நேரங்களில் அவனை நெருங்கிவிட்டன. தன்னை நோக்கி யானைகள் வருவதைக் கண்டு பயந்து, தன் தலைமுடியில் எப்போதும் வைத்திருக்கும் தன் இஷ்ட தெய்வத்திடம், “ஓ என் ஜூஜூ டெபோர்! இப்போது நான் என்ன செய்வது?” என்று அலறினான். அந்த ஜூஜூ, ஒரு மரக்கிளையை அவனது தோளுக்கு மேல் வீசும்படி அறிவுறுத்தியது. அவன் அவ்வாறு வீசியதும் அந்தக் கிளை உடனடியாக ஒரு பெரிய மரமாக வளர்ந்து, யானைகளின் பாதையை மறித்தது. நின்ற யானைகள், அந்த மரம் முழுவதையும் தின்று தீர்க்கத் துவங்கின. அதற்குச் சிறிது நேரம் பிடித்தது.
பிறகு, மீண்டும் அவை தங்கள் வழியைத் தொடர்ந்தன. மீண்டும் அந்த இளைஞன், “ஓ என் ஜூஜூ டெபோர்! இப்போது நான் என்ன செய்வது?” என்று அலறினான். “அந்தச் சோளக்கதிரை உனக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிடு,” என்று ஜூஜூ பதிலளித்தது. அவனும் அவ்வாறே செய்தான், அது பெரிய மக்காச்சோள வயலாக உருமாறியது.
வயலில் இருந்த அனைத்து மக்காச்சோளத்தையும் யானைகள் சாப்பிட்டுக்கொண்டே நகர்ந்து சென்றன; ஆனால் மறுபக்கத்தை அடைந்தபோது, அவன் வீட்டை அடைந்துவிட்டிருந்தான். இதைக் கண்ட யானைகள், வேறுவழியின்றித் துரத்துவதைக் கைவிட்டுத் தங்கள் கிராமத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது. ஆனால், இளவரசி அதற்கு மறுத்து, “அந்தத் துடுக்கனை தண்டித்த பிறகே நான் திரும்பி வருவேன்” என்று முடிவுசெய்தாள்.
அதன்பின் இளவரசி ஓர் அழகான கன்னியாக மாறி, கையில் ஒரு சுரைக்காய் தாளத்தை எடுத்துக்கொண்டு கிராமத்தை நெருங்கினாள். இந்த அழகிய நங்கையை ரசிக்க மக்கள் அனைவரும் வெளியே வந்தனர்.
அந்தத் தாளத்தின் மீது யார் அம்பெய்து வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கே தான் மணமகளாவாள் என்று கிராமம் முழுவதும் அறிவிக்கச் செய்தாள். இளைஞர்கள் அனைவரும் முயன்று தோற்றுப் போனார்கள். அருகில் நின்ற ஒரு முதியவர், “யானை இளவரசியின் வாலை வெட்டிய குவேசி மட்டும் இங்கே இருந்திருந்தால், அவன் தாளத்தை அடித்திருப்பான்” என்றார். “அப்படியானால், தாளத்தை அடித்தாலும், அடிக்காவிட்டாலும் குவேசியைத்தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என்றாள்.
வயலில் உழுதுகொண்டிருந்த குவேசியை உடனடியாக அழைத்து வந்து, அவனது அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறினார்கள். எனினும், அவன் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை. அந்தக் கன்னி ஏதேனும் சூழ்ச்சி செய்கிறாளோ என்று சந்தேகப்பட்டான்.
இருப்பினும், அவன் எய்த அம்பு தாளத்தின் மையத்தில் துளைத்தது. அதன்படி அந்தப் பெண்ணுக்கும் அவனுக்கும் திருமணம் நடைபெற்றது. முழு நேரமும் அவனை தண்டிப்பதற்கான ஏற்பாடுகளை அவள் செய்துகொண்டே இருந்தாள்.
அவர்களின் திருமணத்திற்கு அடுத்த நாள் இரவு, குவேசி உறங்கிக்கொண்டிருந்தபோது அவள் யானையாக மாறி, அவனைக் கொல்லத் தயாரானாள். ஆனால், குவேசி சரியான நேரத்தில் விழித்துக்கொண்டான். உடனே, “ஓ என் ஜூஜூ டெபோர்! என்னைக் காப்பாற்று!” என்று அழைத்தான். ஜூஜூ அவனை, படுக்கையில் கிடந்த புற்களால் ஆன ஒரு பாயாக மாற்றியது, இளவரசியால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மிகவும் எரிச்சலடைந்த அவள், அடுத்த நாள் காலையில் அவன் இரவு முழுவதும் எங்கே இருந்தான் என்று கேட்டாள். “நீ யானையாக இருந்தபோது, நீ படுத்திருந்த பாயாக இருந்தேன்” என்றான் குவேசி. அந்தக் கன்னி படுக்கையிலிருந்த எல்லா பாய்களையும் எரித்துவிட்டாள்.
அடுத்த நாள் இரவு இளவரசி மீண்டும் யானையாக மாறி தன் கணவனைக் கொல்லத் தயாரானாள். இந்த முறை ஜூஜூ அவனை ஓர் ஊசியாக மாற்றியதால், அவளால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. காலையில் மீண்டும் அவன் எங்கே இருந்தான் என்று கேட்டாள். ஜூஜூ மீண்டும் அவனுக்கு உதவியதைத் தெரிந்துகொண்ட அவள், அந்தச் சிலையை எப்படியாவது கைப்பற்றி அழிக்க முடிவு செய்தாள்.
அடுத்த நாள் வயலை உழுவதற்குக் குவேசி தன் பண்ணைக்குச் சென்றான். தனக்குச் சிறிது உணவை, ஓய்வெடுக்கும் இடத்திற்குக் கொண்டு வருமாறு தன் மனைவியிடம் கூறினான். இந்தமுறை அவனைத் தப்பவிடக்கூடாது என்று அவள் உறுதியாக முடிவு செய்திருந்தாள். அவன் சாப்பிட்டு முடித்ததும், “இப்போது என் மடியில் உன் தலையை வைத்துத் தூங்கு” என்றாள். குவேசி தன் தலைமுடியில் ஜூஜூ மறைத்து வைக்கப்பட்டிருப்பதை முற்றிலும் மறந்துவிட்டு, அவள் சொன்னபடியே செய்தான். அவன் உறங்கியவுடன், அவனது தலைமுடியிலிருந்து ஜூஜூவை எடுத்து, அவள் தயார் செய்து வைத்திருந்த பெரிய நெருப்பில் வீசியெறிந்தாள். குவேசி கண் விழித்தபோது அவள் மீண்டும் யானையாக மாறியிருப்பதைக் கண்டான். மிகுந்த பயத்தில் அவன், “ஓ என் ஜூஜூ டெபோர்! நான் என்ன செய்வது?” என்று அலறினான். அவனுக்குக் கிடைத்த பதில் நெருப்பிலிருந்து வந்தது. “நான் எரிகிறேன், நான் எரிகிறேன், நான் எரிகிறேன்.” குவேசி ஜூஜூவை மீண்டும் உதவிக்கு அழைத்தான். ஜூஜூ பதிலளித்தது, “நீ பறப்பது போல் உன் கைகளை உயர்த்து.” அவன் அவ்வாறு செய்ததும் ஒரு பருந்தாக மாறினான்.
அதனால்தான் பருந்துகள் அடிக்கடி நெருப்புப் புகையின் மீது பறப்பதைக் காண முடிகிறது. அவை தங்களது தொலைந்துபோன ஜூஜூவைத் தேடிக்கொண்டிருக்கின்றன.





