உறுதி
நான் வாழ்தலில் நம்பிக்கை கொள்கிறேன்
பீட்டா நாட்களின்
காமா மக்களின் வண்ணக் கோர்வையை
நம்புகிறேன்.
நான் சூரிய ஒளியில் நம்பிக்கை கொள்கிறேன்
காற்றாலைகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும்
மிதிவண்டிகளிலும், ஆடும் நாற்காலிகளிலும்கூட.
விதைகள் முளைக்கும் என்று நான் நம்புகிறேன்
முளைப்பவை மரமாகும் என்றும்.
கைகளின் மாயத்தில்
கண்களின் ஞானத்தில்
நான் நம்பிக்கை கொள்கிறேன்.
மழையையும் கண்ணீரையும் நம்புகிறேன்.
முடிவிலியின் ரத்தத்திலும்
நான் வாழ்க்கையை நம்புகிறேன்.
இப்பூமியின் உடல் வழியாக மரணம்
ஊர்வலமாகச் செல்வதை,
செல்லும் பாதையில்
மண்ணில் உடல்களை வடிப்பதைப்
பார்த்திருக்கிறேன்.
பகல் ஒளியின் அழிவைப் பார்த்திருக்கிறேன்.
ரத்த வெறி பிடித்த புழுக்கள்
வணங்கப்படுவதையும் துதிக்கப்படுவதையும்.
ஓர் எளிய பாடத்தில்
நல்லவர்கள் கண்களை இழந்தவர்கள் ஆனதையும்
கண்களை இழந்தவர்கள் கட்டுப்படுத்தப்பட்டதையும்
பார்த்திருக்கிறேன்.
உடைந்த கண்ணாடித் துகள்களின் மீது நடந்திருக்கிறேன்.
பிழைகளால் தயாரிக்கப்பட்ட ரொட்டியையும் காகத்தையும் உண்டிருக்கிறேன்.*
அலட்சியத்தின் மோசமான வாசத்தை முகர்ந்திருக்கிறேன்.
சட்டமில்லாவதவர்களால் சிறை வைக்கப்பட்டிருக்கிறேன்
வெறுப்பாளர்களால் கைகள் பூட்டப்பட்டிருக்கிறேன்
பேராசைக் கொண்டவர்களால் வாயடைக்கப்பட்டிருக்கிறேன்.
இத்தனைக்குப் பிறகு, எனக்கு எதாவது தெரியுமென்றால்
அது இதுதான்
ஒரு சுவர் என்பது வெறும் சுவர்தான்.
அதைத் தாண்டி ஒன்றுமில்லை.
அதை உடைப்பது சாத்தியம்.
நான் வாழ்தலில் நம்புகிறேன்.
நான் பிறப்பில் நம்பிக்கை கொள்கிறேன்.
காதலின் வியர்வையிலும்
உண்மையின் நெருப்பிலும்
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
சோர்வுற்ற, பயணப்பிணிக் கொண்ட மாலுமிகளால்
செலுத்தப்பட்டாலும்
ஒரு தொலைந்த கப்பலை
அதன் துறைமுகத்தை நோக்கி
வழிநடத்த முடியும் என்பதை நான் நம்புகிறேன்.
* I have eaten crow and blunder bread என்பது அவமானங்களைக் குறிக்கும் என்றாலும், இங்கு நேரடி மொழிபெயர்ப்பே வலிமையாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது – மொ-ர்
¥
எனது மகள், காகுயாவுக்கு
நான் அறியாத தெளிவில்லாத விடுதலையைப் பற்றி
உனக்காகச் சில அலங்கோலமான கனவுகளை
வைத்திருக்கிறேன்.
என் குழந்தையே,
பசியிலோ, தாகத்திலோ, குளிரிலோ
நீயிருப்பதை
நான் விரும்பவில்லை.
உனது கனி பழுக்குமுன்
உறைபனி அதைக் கொல்வதையும்
நான் விரும்பவில்லை.
நான் ஒரு வெளிச்சமான இடத்தைப் பார்க்கிறேன் –
பச்சைப் பசேலென வெடிக்கும் வாழ்க்கையை.
அங்கு
மினுங்கும் உன் பழுப்புநிறத் தோல்
அனைத்துப் பூக்களுடனும் பூரான்களுடனும்
எளிதில் கலப்பதை.
அவமானத்திலிருந்து பிறக்காத வெடிச்சிரிப்பை
என்னால் கேட்க முடிகிறது.
தன்னகங்காரம், பொறாமை, பேராசையிலிருந்து பிறக்காத
வார்த்தைகளையும்.
வெறுப்பை அன்பும்
நானை நாமும்
இட்டு நிரப்பும்
ஓர் உலகத்தை நான் பார்க்கிறேன்.
நீ கட்டியெழுப்பிய, கண்டறிய விரும்பிய
வலிமையான, நிறைவான ஓர் உலகை
நீ புரிந்துகொண்ட ஓர் உலகை
நான் பார்க்கிறேன்.
எனது அலங்கோலமான கனவுகளைத் தாண்டி
நீ பயணிப்பதையும்.
¥
நீ இறந்து போனாய்.
நான் அழுதேன்.
ஆனால் மீண்டும் எழுந்தேன்.
சற்று நிதானமாக.
இன்னும் அதிக தீவிரமாக.
¥
அன்னியன்
நீ நேசிக்கும் அனைத்தும்
வேறோர் உலகத்தைச் சேர்ந்தது.
பசியுடன் இருக்கும் நீ,
உனது மூக்கை
எனது சோற்றிலும் பருப்பிலும்
நீட்டுகிறாய்.
l




