புகைப் போக்கி

சாலமன்

ரும் சேரியுமாகப் பிரிந்திருக்கக் கூடிய வயலூர் கிராம மக்களின் பல நூற்றாண்டுக் கால உணர்வுகளும் உறவுகளும் வாழ்வுகளும் ஏற்றத்தாழ்வோடு, பகையோடு, போலியான அன்போடு இயங்கக் கூடியன. அத்தகைய இயக்கத்தின் ஒரு துணுக்குதான் அஞ்சலை – ஆறுமுகத்தின் குடும்பம். இவர்களின் வீட்டிலிருந்து நூறு அடியில் ஊர் சுடுகாடு. அதற்கும் சற்றுத் தொலைவில் சேரி சுடுகாடு. அஞ்சலைக்கு வயது இருபத்தைந்து, ஆறுமுகத்துக்கு முப்பது. விவசாயக் கூலி வேலை தவிர வேறெந்த வேலையும் இவர்களுக்கு இப்போதைக்குப் படைக்கப்படவில்லை. இவர்களுக்கு மொத்தம் இரண்டு குழந்தைகள். நான்கு வயதான அபிராமி என்ற முதல் குழந்தை இறந்து இரண்டு வருடங்களே ஆகின்றன. இரண்டாவது குழந்தை வேலாயுதம் பிறந்து இரண்டாண்டுகள் ஆகின்றன.

சூரியனின் கதிரொலி புவியைப் பரப்பும் காலை வேலையில் பறவைகளின் கீச்சொலிகளோடே காற்றில் மிதந்து வந்தது பறையின் ஓசை. வேலைக்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த ஆறுமுகம் அதைக் கூர்ந்து கேட்டு, “இது நலங்கு மோளம் இல்ல, சாவு மோளம்” எனக் கூற அஞ்சலையின் புருவங்கள் உயர்ந்தன. அவர்களின் நெஞ்சங்கள் படபடத்தன. பறையிசை வந்த திசையின் பக்கம் அவர்களின் காதுகளை மீண்டும் கூர்மையாக்கினார்கள்.

“ஊர்த் தெருவிலதான் கேக்குது.” ஆறுமுகத்தின் வார்த்தைகள் சோகத்தைச் சுமந்து வந்தன. குடிசையின் புடவைத் தூளியில் தூங்கிக்கொண்டிருக்கும் தன் பிள்ளையின் முகத்தைச் சோகமாய் பார்த்தவாறே “இன்னைக்கு ராவு வூட்ல தூங்கனா அந்தப் பொணத்தோட பொக இருக்குற ஒத்தப் புள்ளையையும் காவு வாங்கிடும். என்ன பண்ணலாம்?”

“இன்னைக்கு வேற மோலியார் கையினில அறப்பு இருக்குது. அறப்பு முடிஞ்சி கதுரெல்லாத்தையும் களத்து மோட்ல போட்றதுக்கே பொழுது சாஞ்சிறும். கதுருக்கு நான்தான் காவ காக்கணும்”

“நா வேணும்னா ராத்திரிக்குத் தீப்பாஞ்சி ஆயா வூட்ல படுத்துக்கிட்டா?”

“அந்த ஆயாவோட பொண்ணு நேத்துதான் வூட்டுக்கார, புள்ளைங்களோட ஊர்ல இருந்து வந்துச்சி. அங்க போயி  கொழந்தைய வச்சிக்கிட்டு எப்டி தூங்குவ?

“கொழந்தைய கழனிக்கே தூக்கினு வா, ராத்திரிக்குக் களத்து மோட்லையே படுத்துக்கலாம்”

“இருக்குற கஞ்சிய இப்ப குடிச்சிடலா, மதியாந்திக்கு கயனிகாரன் வூட்லருந்து சோறு வந்துரும். ராய்க்கு என்னா பண்றது?”

“ராய்க்கு தீப்பாஞ்சி ஆயா வூட்ல சோறு வாங்கிக்கலாம். கழனிக்கு வரதுக்கு முன்னாடி அந்த ஆயாகிட்ட ஒரு கை அரிசி அதிகமா போடச் சொல்லு” என தன் மனைவியிடம் கூறி, இருக்கிற கஞ்சியில் கொஞ்சத்தை அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு, குடிசையின் உள்புறம் சொருகி வைத்திருந்த இரண்டு கதிரருவாள்களை எடுத்துக்கொண்டு,

“ஊ அருவாளையும் நானே எடுத்துட்டுப் போறேன். நீ கஞ்சி குடிச்சிட்டு, கொழந்தைய தூக்கிக்குனு கழனிமோடு வந்து சேரு” எனக் கூறிவிட்டு வேகமாய் நடந்தான்.

தலை சாய்ந்திருக்கும் கதிர்கள் கழனிகளில் தங்கத்தைப் பரப்பியது போன்று சூரிய ஒளியில் மின்னின. கதிரறுக்க வரப்பின் மீது பத்துக்கும் மேற்பட்ட சேரியின் ஆண்களும் பெண்களும் நின்றுகொண்டிருந்தார்கள். முதல் ஆளாய் கழனியில் இறங்கி கதிரருவாளைப் பிடித்தவாறே சாந்தி ஆயா சூரியனை நோக்கிக் கும்பிட்டு, அறுவடைக்குச் சம்மதம் தெரிவித்து, தலைகுனிந்து நிற்கும் கதிர்களை நெல்மணிகள் உதிராதவாறு லேசாகத் தடவி, கொஞ்சம் கதிர் கொத்துகளை அறுத்து நிமிர்ந்து மற்றவர்களைப் பார்க்க, அவர்களும் இறங்கினார்கள். கதிரருக்கும் ஓசை அதிகமாக ஒலிக்க அந்த இசை அனைவரின் இதயங்களிலும் ஈரத்தைச் சுரக்க வைத்தது.

அறுவடை செய்துகொண்டிருக்கும்போது அடிக்கடி நிமிர்ந்து தூளியில் இருக்கும் தன் குழந்தையைப் பார்த்துக்கொண்டாள் அஞ்சலை. குழந்தை அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.

கதிரருக்கும் இசை அவளை இரண்டு வருடங்களுக்கு முன்பாக அழைத்துச் சென்றது.

இறந்த அவளின் குழந்தை அபிராமியின் முகமும் அப்போதைய காலமும் அவள் சிந்தனையில் பளிச்சென வந்தது.

“யம்மா கயனிலிருந்து வர சொல்ல எனுக்கு பிஸ்கேட் வாங்கிணு வாமா” குழந்தை அபிராமி கூற,

“நாங்க வர வரைக்கும் இருக்குற கஞ்சி குடிச்சிட்டு, வூடு கிட்டையே விளையாடணும். எங்கேயும் வெளிய சுத்தக் கூடாது, சரியா?”

“எங்கியும் போவாம வூட்லியே இருக்கிறமா, நீயும் அப்பாவும் வரும்போது பிஸ்கேட் மட்டும் வாங்கினு வாங்க”

அதுவும் ஓர் அறுவடை நாள்தான். நாள் முழுக்க உழைத்துக் களைத்து, பொழுது சாய வீட்டிற்குப் போகும்போது மறக்காமல் அபிராமிக்கான பிஸ்கெட் அஞ்சலையின் முந்தானையில் இருந்தது. அப்போது மேற்குப் பக்கம் அடித்த காற்றில் அவர்களது வீட்டை நோக்கிப் புகை வந்துகொண்டே இருந்தது. வீட்டின் அருகில் செல்லச் செல்ல அந்தப் புகையை அஞ்சலையும் ஆறுமுகமும் முகர்ந்தார்கள். எந்தவோர் உயிரினமும் உள்ளுக்கிழுக்க முடியாத புகை அது.

“என்ன பொண நாத்தம் நாறுது” என அஞ்சலை கேட்க,

“உண்மையிலேயே பொணம்தான்டி நாறுது” என ஆறுமுகம் சொல்ல,

“காலாகாலத்துக்கும் இவனுங்களோட பொணத்துப் பொகைய மோந்து மோந்துதான் நாம சாகணும்னு இருக்கு.” முகத்தைச் சுளித்தவாறே அஞ்சலை கூறினாள்.

இருவரும் தம் வீட்டைப் பார்த்தார்கள். அது பிணப் புகையால் சூழப்பட்டிருந்தது. வேகமாய் இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். வீட்டினுள் ஒரே புகை மண்டலம். அதனுள் அபிராமி பேச்சு மூச்சற்றுச் சுருண்டு கிடந்தாள்.

அவளைத் தூக்கி வந்து வெளியில் கிடத்தினார்கள். அஞ்சலை ஓவென அழுதாள். அதற்குள் கிராம மக்கள் கூட ஆரம்பித்துவிட்டார்கள். ஆறுமுகம் அபிராமியின் கன்னத்தைத் தட்டித் தட்டி எழுப்பினார், அவள் லேசாய் முனகினாள்.

“ஏ அழாதடி, கொழந்த மூச்சிக்ணுதா இருக்குது”

“ஏம்பா ஆறுமுகம் வா.. ஒடனே பக்கத்துல இருக்குற தர்ம ஆஸ்பித்திரிக்குத் தூக்கினு போலாம்” எனக் கிராமத்தவர் ஒருவர் கூற,

ஆறுமுகம் அபிராமியைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு வேகமாய் நடந்தார். அஞ்சலை “ஐயோ ஏ புள்ளைய வுட்டுட்டமேஞ் பாழா போனவனுங்க எவ்வளவு சொல்லியும் இங்கதா பொணத்தக் கொளுத்துறானுங்க” எனப் புலம்பியும் சாடியும் கூடவே ஓடிக்கொண்டிருந்தாள். கிராம மக்கள் ஆண்களும் பெண்களுமாய் பத்துப் பேருக்கும் மேல் உடன் சென்றனர்.

இரவு மணி ஏழு இருக்கும். அந்த ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை. செவிலியர் மட்டுமே இருந்தார். திண்ணையில் குழந்தையைக் கிடத்தினார்கள். நர்ஸ் வந்து சோதித்துப் பார்த்தார்.

“கொழந்த செத்துடுச்சி…” அவர் கூறியதும் அனைவரும் கதறி அழுதார்கள். அஞ்சலை புரண்டு உருண்டு அழுதாள். தன் முந்தானையில் கட்டி வைத்திருக்கிற பிஸ்கட் பாக்கட்டைப் பிரித்து, “இந்தாடி நீ கேட்ட பிஸ்கேட்டு” என அஞ்சலை பிணமாகக் கிடக்கும் அபிராமியின் வாயில் ஊட்டப் போகும்போது அனைவரும் கதறி அழுதார்கள். குழந்தையைக் கொஞ்சம் மூச்சோடு தூக்கிச் சென்றவர்கள், பிணமாகத் தோளில் சுமந்து வந்தார்கள். அப்போதும் அந்த ஊர்ப் பிணம் எரிந்துகொண்டுதான் இருந்தது. அதன் புகை சேரி மீதே பாய்ந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த சேரிப் பெண்கள்,

“உசுரோட இருக்கும்போதுதான் எங்க ரத்தத்த உறுஞ்சுறீங்க, செத்துப் பொணமா எரிஞ்சாலும் எங்கல சாகடிக்கிறீங்களே படுபாவீங்களா… நீங்க நல்லா இருக்க மாட்டீங்க” என ஒப்பாரியின் ஊடே மண்ணை வாரித் தூற்றினார்கள்.

“இதோட இதுக்கு ஒரு முடிவு கட்டணும்” ஆண்கள் பேசிக்கொண்டார்கள்.

மறுநாள் காலை, ஆறுமுகத்தின் வீட்டில் பிணம் கிடக்க, ஊர்த் தெருவில் உள்ள நிலவுடைமையாளன் பொன்ராசு வீட்டின் முன்பு சேரி ஆண்கள் குழுமினார்கள். அவர்களைப் பார்த்த ஊர்த் தெருவின் கண்கள்,

“ஒன்னா சேர்ந்து வர அளவுக்குத் திமிராயிடிச்சா” எனக் கோபத்தை உமிழ்ந்தன.

பொன்ராசு அவன் வீட்டின் திண்ணையில் அமர்ந்தான். சேரியர்கள் நின்றுகொண்டிருந்தனர். “மோலியாரே காலனிக்குப் பக்கத்துல பொணத்தக் கொளுத்துறதால சேரி ஜனங்களுக்கு நிறைய நோவு வருது. நேத்து கொளுத்துன பொணத்தோட பொக அடிச்சி நாலு வயசு கொழந்த செத்துப் போச்சு” என பெரியவர் ஒருவர் சொல்ல,

“உங்க வூட்டுப் பக்கம் ஒன்னும் எங்க சுடுகாடு இல்ல. எங்க சுடுகாட்லதான்டா உங்க வூடுங்களே இருக்குது. நீங்க சுடுகாட்டுப் பக்கம் வூடு கட்டும்போதே தடுத்திருக்கணும். போனா போதுன்னு அப்போ உட்டுட்டோம். இப்ப என்னடான்னா எங்க சுடுகாட்டு மேலயே பழிய போட்றீங்க” எனப் பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினான் பொன்ராசு.

“நம்ம ஊருக்கு வயசு ஆயிரம் வருசத்துக்கு மேல இருக்கும்னு சொல்லுவாங்க. நம்ம ஜனங்களுக்கும் அதே வயசுதானே இருக்கும். குடும்பம் பெருத்ததுனால நெலபுலம் இல்லாத சேரி ஜனங்க பழம் பறச்சேரியிலிருந்து கொஞ்சம் தள்ளி வந்து சுடுகாட்டுப் பக்கம் குடிச போட்டது வாஸ்தவம்தான். ஆனா, அதெல்லாம் நடந்தது அஞ்சாறு தலமொறைக்கு முன்னாடி. அப்ப நீங்களும் நானும் பொறக்கவே இல்ல.” சேரியின் பெரியவர் இப்படி விவரமாய் பேசுவது பொன்ராசுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.

“இப்ப என்னதாயா பண்ணணும்னு சொல்றீங்க” எனச் சற்றுக் குரலுயர்த்திப் பேசினான்.

“இனிமே அங்க பொணத்த எரிக்கக் கூடாதுன்னு சொல்றோம். நம்ம ஊர்ல எவ்வளவோ பொறம்போக்கு நெலம் இருக்கு, அங்க சுடுகாட்ட வச்சிக்கலாம்னு சொல்றோம்.” இந்த வார்த்தைகளைக் கேட்ட பொன்ராசுவுக்குக் கோபம் கொப்பளித்தது. திண்ணையில் அமர்ந்திருந்தவன் தோளில் உள்ள துண்டை உதறியவாறே,

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம்ம ஊருக்கு வயசு ஆயிரம் வருஷத்துக்கு மேலன்னு நீதான் சொன்ன, அப்படி ஆயிரம் வருஷத்துக்கு மேல தலமொற தலமொறையா செஞ்சிட்டு வர ஒரு விஷயத்த எப்படியா மாத்த முடியும்?” பொன்ராசுவின் குரல் மேலும் உயர்ந்தது. அதற்குச் சேரியின் பெரியவர் நிதானமாகக் கூறினார்,

“பாம்புக் கூடத்தாங்க நமக்கு முன்னாடி இருந்தே இருக்குது. அதுக்காக நம்மல கடிச்சா சும்மா உட முடியுமா?”

“படி அளக்குற எங்கள பாம்புங்கிறியா?”

“உங்கள சொல்லல, நீங்க கடபுடிக்கிற நடமொறையத்தான் சொல்றோம். நிம்மதியா வாழுறவுங்கள பொணத்தக் கொளுத்திக் கொல்லாதீங்கன்னு சொல்றோம்”

பேச்சு முற்றிக்கொண்டே வர, அந்த இடத்தில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

“என்னய்யா பிரச்சன இங்க?” எனக் காவல் ஆய்வாளர் கேட்க, நடந்ததைச் சொன்னார் சேரியின் பெரியவர். பொறுமையாகக் கேட்ட ஆய்வாளர்,

“இதோ பாருங்கய்யா, சுடுகாடு கவர்மெண்ட் ரிஜிஸ்டர்ல இருக்கு. உங்க வூடுங்கதான் பொறம்போக்கு நெலத்துல இருக்கு. மோலியாருங்க கம்ப்ளெய்ண்ட் கொடுத்தா உங்க வூடும் அந்த இடத்துல இருக்காது. நீங்களும் ஜெயிலுக்குப் போயிடுவீங்க” என மிரட்ட,

“சார் அதெல்லாம் வேணாங்க, நம்ம ஊருக்காரங்கதான். ஏதோ கொழந்த செத்துப் போச்சின்னு ஆதங்கத்துல பேசுறாங்க” என ஆய்வாளரிடம் கூறியவாறே சேரியரைப் பார்த்து,

“இந்தா பாருங்கய்யா, சின்ன கொழந்த செத்தா எல்லோருக்கும் ஆதங்கம் இருக்கும்., இல்லன்னு சொல்லல. கொஞ்சம் நாளு கழியட்டும், எல்லாம் சரியாகிடும்” என பொன்ராசு கூற, எவ்வித அதிகாரமும் இல்லாத சேரிக் கூட்டம் கையறு நிலையில் சேரிக்குத் திரும்பி குழந்தை அபிராமியைப் புதைத்தது. அஞ்சலையின் ஒப்பாரி நிற்கப் பல வாரங்கள் ஆகின.

நெற்கதிற்களை அறுவடை செய்துகொண்டே இதையெல்லாம் நினைத்துப் பார்த்தாள் அஞ்சலை.

ஊர்த்தெருவில் ஒலிக்கும் பறையிசையைக் காற்று கழனிக் காட்டில் மட்டுமல்ல அஞ்சலை, ஆறுமுகத்தின் மனசிலும் கொட்டிச் சென்றது. மீண்டும் தூளியில் உறங்கும் தன் குழந்தையைப் பார்த்தாள் அஞ்சலை. குழந்தை தூளிக்குள்ளேயே கைகால்களை உதைத்துக்கொண்டு விளையாடுவதைப் புரிந்துகொண்டாள்.

சேரிக்கும் ஊருக்கும் இடையில் இருக்கும் களத்து மேட்டில் கதிர் கட்டுகளைக் கொண்டுவந்து சேர்க்கப் பொழுது சாய்ந்தது. அன்றைய இரவு அஞ்சலையின் குடும்பத்திற்குக் களத்து மேடே வீடானது. இந்த நாள் மட்டுமல்ல, ஊர்த்தெரு பிணங்கள் எரியும்போதெல்லாம் களத்து மேடும் உறவினர்களின் வீடுமே அஞ்சலையின் குடும்பத்திற்கு அடைக்கலமானது. இப்படியே காலங்கள் உருண்டோடின.

பொன்ராசு சொன்ன அந்தக் கொஞ்ச காலம் இருபது வருடங்கள் கடந்தும் இன்னும் வரவில்லை. அஞ்சலையின் வீடு குடிசையிலிருந்து அரசுத் தொகுப்பு வீடாக மாறியிருந்தது. கிட்டத்தட்ட இருபது கிலோ மீட்டர் தொலைவில் பல வெளிநாட்டுத் தொழிற்சாலைகள் புதிதாக அமைந்திருந்தன. அதில் ஒரு தொழிற்சாலையில் அஞ்சலையின் மகன் வேலாயுதம் பணிபுரிந்துவந்தான். இவன் மட்டுமல்ல, அந்தச் சேரியின் இளைஞர்கள் அனைவரும் இப்போது தொழிற்சாலையிலேயே வேலை செய்துவந்தனர். சேரியரின் உணவு, உடை, வீடு ஆகியவை மாறினாலும் இப்போதும் ஊர்த் தெருவின் பிணம் அதே இடத்திலேயே கொளுத்தப்பட்டுவந்தது.

ஒருநாள் காலை பத்து மணி பொழுதில் ஊர்த்தெரு மயானத்திற்கு எதிரே உள்ள விளைநிலம் இயந்திரங்களால் மைதானமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. கிராம ஜனங்கள் அதை வேடிக்கை பார்த்தார்கள்.

“வெளிநாட்டுக்காரன் இங்க வந்து கம்பெனி கட்டப் போறானாம்” என்ற செய்தி ஊர் – சேரி முழுவதும் வேகமாய்ப் பரவியது. எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பின.

“விளைநெலத்துல கம்பெனி கட்டுனா நம்ப கிராமமே பாழாப் போயிடும்” என ஊர்த்தெருவில் பல பேர் கூற, அதற்குச் சேரி தெருவிலேயும் கொஞ்சம் ஆதரவு இருந்தது.

“நம்ப கிராமத்துக்குக் கம்பெனி வந்தா நமக்கெல்லாம் வேலை கிடைக்கும்” என சேரியர் பலர் கூற அதற்கு ஊர்த்தெருவிலேயும் கொஞ்சம் ஆதரவு இருந்தது.

வேலாயுதமும் இக்கருத்தின் பக்கம் நின்றான். ஆனால், காரணம் இன்னொன்றாக இருந்தது.

“வேல கெடைக்குதோ இல்லையோ. ஊர்த்தெரு சுடுகாட்டுக்கு எதிர இந்த கம்பெனி வந்தா சுடுகாட்டுப் பொக கம்பெனி மேல வரத வெளிநாட்டுக்காரன் சகிச்சிக்க மாட்டான். அதனால அந்தச் சுடுகாட்டத் தூக்கி வேற இடத்துல வச்சிடுவான். அதுக்கப்புறம் நாம நிம்மதியா வாழலாம். நம்ப அக்கா அபிராமி மாதிரி யாரும் சாவ மாட்டாங்க” என்பதே வேலாயுதத்தின் கருத்தும் எண்ணமும். அஞ்சலையும் ஆறுமுகமும் இதையே எதிர்பார்த்தனர்.

பல எதிர்ப்புகளை மீறி தொழிற்சாலை கட்டுமானப் பணிகள் முடிந்து உற்பத்தித் தொடங்கியது. காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கக் கூடிய அந்தத் தொழிற்சாலையின் முகப்பு பளபளப்புக் கண்ணாடிகளால் மின்னியது. தொழிற்சாலையின் புகை போக்கி எந்நேரமும் புகையைக் கக்கிக்கொண்டே இருந்தது. அந்தப் புகை ஊர் சேரி இரண்டு பகுதிகளின் மீதும் பரவியது. அது பிணப் புகையை விட கொடுமையாக இருந்தது.

ஒருநாள் மாலை ஊர்த்தெருவில் பறை ஓசைக் கேட்டது. எப்போதும்போல் அஞ்சலையும் ஆறுமுகமும் அதைக் கூர்ந்து கேட்டார்கள். அது சாவுக்காக இசைக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த மகன் வேலாயுதத்திடம்,

“ஊர்த்தெருவுல சாவு மோளம் அடிக்கிறாங்களே, யாரு செத்தது?” என அஞ்சலை கேட்க,

“பொன்ராசு மோலியாரோட பேத்தின்னு சொல்றாங்கமா. கம்பெனி பொக அடிச்சி ஆஸ்பத்திரியில சிக்கா இருந்ததாம். ஆனாலும் காப்பாத்த முடியலையாம்” என மகன் கூற,

அஞ்சலையின் கண்கள் பொன்ராசுவின் பேத்திக்காக அழுதன.

மறுநாள் மாலை பொன்ராசுவின் பேத்தி பிணம் ஊர்த்தெரு சுடுகாட்டில் கொளுத்தப்பட்டது. இந்தப் புகையிடமிருந்து தப்பிக்க அஞ்சலையின் குடும்பம் இப்போதும் இடம்பெயரத் தயாராகிக்கொண்டிருந்தது.

u [email protected]

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger