சமூகத்தில் பெரும் குற்றமொன்று நிகழ்ந்து அது சமூகத்தின் கவனத்தை அடையும்போது, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனையையும், அதுவே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் எனவும் பொதுப் புத்தியிலிருக்கின்றவர்கள் குரல் எழுப்புவதுண்டு, பொதுச் சமூகமும் அதனை அங்கீகரிக்கும். ஆனால், சாதியின் பெயரால் நிகழும் தீண்டாமை, பாகுபாடு, வன்கொடுமை குற்றங்களின்போது மட்டும் இந்தக் குரல்கள் மழுங்கிவிடும். மாறாக, இந்தக் குற்றங்களைத் தடுக்க உருவாக்கப்பட்டுள்ள வன்கொடுமை சட்டங்களையே நீக்க வேண்டும் என்கிற பகிரங்க குரல்களும் எழுவதுண்டு.
இந்தியாவில் நிகழும் சாதிய வன்முறைகளில் 40% கூட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளாகப் பதியப்படுவதில்லை. ஆனால், இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற பொதுப்புத்தியை விளைவித்ததின் மூலம், அளவுக்கதிகமான எதிர்ப்பைச் சந்திக்கும் சட்டமாக இது தொடர்ந்து விளங்குகிறது. இச்சட்டத்தைப் பாதுகாக்க நடந்த போராட்டங்களில் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இப்படி உயிரைக் கொடுத்துப் பாதுகாக்கப்பட்ட சட்டம் வேறு ஏதேனும் வரலாற்றில் இருந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.
நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்காக உள்ள தலித், பழங்குடியின மக்கள் மீதான உரிமை மீறல்களைப் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டதே ‘பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் (1989 திருத்தச் சட்டம் 2016, 2018, விதிகள் 1995, 2016)’. இதை எதிர்த்து ஆதிக்கச் சாதியினர் கூடி, எப்படியேனும் இச்சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் எனத் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில்தான் இச்சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என நாமும் தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறோம்.
இந்நிலையில் அண்மையில் வெளியாகியுள்ள ‘தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் 2023’ அறிக்கையின் விவரங்கள், இச்சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதி செய்கிறது. நாடு முழுவதும் தலித் மக்கள் மீதான வன்கொடுமைக் குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரிக்கின்றன. தமிழ்நாட்டிலும் இவ்வன்கொடுமைகள் அதிகரித்தபடியே உள்ளன என்பதை இந்த அறிக்கையின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக 2023ஆம் ஆண்டு 1921 வன்கொடுமை குற்றங்கள் நடந்துள்ளன. முறையே, 2022இல் 1761 குற்றங்களும் 2021இல் 1377குற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 400 குற்றங்கள் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. தலித் பழங்குடியினருக்கு எதிராக 2023ஆம் ஆண்டு 1969 குற்றங்களும், 2022இல் 1828 குற்றங்களும், 2021இல் 1416 குற்றங்களும் நடந்துள்ளன. 2023ஆம் ஆண்டு தலித் மக்களுக்கு எதிரான கும்பல் தாக்குதல்கள் – கலவரம் நடந்த மாநிலங்களில் தமிழ்நாடும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 66 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் 73 தலித்துகளும் 2 பழங்குடியினரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்; 57 பட்டியலினத்தவர்கள், ஒரு பழங்குடியினர் மீது கொலை முயற்சி நடந்துள்ளது.
பட்டியலினப் பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளைவிட 2023இல் அதிகரித்துள்ளன. 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 35 பட்டியலினப் பெண்களும், 4 பழங்குடியினப் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்குக் கீழே உள்ள சிறுமிகளில் 97 பட்டியலினச் சிறுமிகளும், 3 பழங்குடியினச் சிறுமிகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தலித் சிறுமிகள் அதிக அளவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் மாநிலங்களில் கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முதல் வரிசையில் உள்ளன. அதேபோல வன்கொடுமை வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் விரைந்து விடுதலை செய்யப்படுவதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. 2023ஆம் ஆண்டு 4343 பேர் அப்படி விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் தமிழ்நாடு 2023இல் 1075 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தேசிய சராசரி அளவுக்கு இணையாக இருப்பதைக் காண ஆறுதலாக இருந்தாலும், விசாரணை நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையில், தேசிய சராசரி 21.2 சதவிகிதமாகவும் தமிழ்நாட்டில் அது 37.7 சதவிகிதமாகவும் உள்ளது. அதாவது தேசிய சராசரியைவிட சுமார் இரண்டு மடங்கு அதிகமான வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றங்கள் போதிய அக்கறையுடன் செயல்படுவதில்லை. தமிழ்நாட்டில் நீதிமன்ற விசாரணையில் ஏற்கெனவே 6946 வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், 2023இல் புதிதாகப் பதியப்பட்ட 1502 வழக்குகளுடன் சேர்த்து மொத்தம் 8448 வழக்குகள் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளன. 2023ஆம் ஆண்டில் 21 வன்கொடுமை வழக்குகளை விசாரணை இல்லாமல் தள்ளுபடி செய்துள்ளன நீதிமன்றங்கள். 115 வழக்குகளில், 172 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 830 வழக்குகளில் 1475 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வன்கொடுமை வழக்குகளில் மிக மிகக் குறைவாக 12.2% வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய சராசரி 31.9% ஆக இருக்கிறது. தேசிய சராசரியில் பாதியளவுக்குக் கூட தமிழ்நாட்டில் தண்டனை வழங்கப்படுவதில்லை. இதற்குக் காரணம் இந்த வழக்குகளை நடத்தும் அரசுத் தரப்பு இதில் கவனம் செலுத்தாததும், நீதிமன்றங்களும் போதிய அளவுக்கு அக்கறை காட்டாததும்தான். உத்தரப்பிரதேசத்தில் 65.6%, பீகாரில் 30.1%, ராஜஸ்தானில் 61.4% என வன்கொடுமை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
உண்மைக்கு மாறானவை என வன்கொடுமை வழக்குகளைத் தள்ளுபடி செய்யும் நான்கு மாநிலங்களில் தமிழ்நாடும் அடங்கும். தேசிய அளவில் 2023இல் 1836 வன்கொடுமை வழக்குகள் விசாரணை நிலையிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்திய அளவில் 307 வழக்குகளைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. பீகார் 632 வழக்குகளையும், ராஜஸ்தான் 307 வழக்குகளையும், உத்தரப்பிரதேசம் 281 வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன, வன்கொடுமை குற்றங்கள் நாளுக்கு நாள் ஏன் அதிகரித்தபடி இருக்கின்றன என்பதற்குப் பின்னே இருக்கும் சமூகக் காரணிகள் ஒருபுறமிருக்கட்டும். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள சட்டங்களையும் அதன் விதிகளையும் மத்திய, மாநில அரசுகள் கடைபிடிப்பதில்லை. அவை சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவே இருந்துவருகின்றன என்பதைத்தான் தேசிய குற்ற ஆவண தகவல்கள் நமக்குணர்த்துகின்றன.
- வன்கொடுமைகளைத் தடுப்பது
- நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அழிப்பது
- தனியுறு சிறப்பு நீதிமன்றங்கள் (Exclusive Special Court) மூலம் விரைந்து நீதி வழங்குவது (நிவாரணம், தீருதவி, மறுவாழ்வு).
என இந்த மூன்று நிலைகளையும் அரசுகள் சரிவரப் பின்பற்றுவதில்லை. எவையெல்லாம் வன்கொடுமை குற்றங்கள் என வரையறுக்கப்பட்டு, அவற்றை 47 பிரிவுகளாகச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதோ, அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.
- வன்கொடுமைக் குற்றங்கள்: அடையாளம் காணக்கூடிய மற்றும் பிணையில் வெளிவர முடியாத குற்றங்கள் (பிரிவு 3).
- கடமை தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை (பிரிவு 4).
- முன்பிணை கிடையாது (பிரிவு 18).
- சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் (பிரிவு 14).
- அரசு தனிச் சிறப்பு வழக்கறிஞர் (பிரிவு 15).
- புலன் விசாரணை அதிகாரி; துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவிக்குக் குறையாத காவல் அதிகாரி (சட்டம் பிரிவு 9, விதி 7).
- நிவாரணம் மற்றும் மறுவாழ்வு (பிரிவு 15கி).
- பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் உரிமை (பிரிவு 15கி).
- அரசு வழக்கறிஞர்கள் செயல்பாடுகள் (விதி 4).
- ஆண்டு அறிக்கை (பிரிவு 21).
என முக்கியமான இந்தப் பத்து விதிகள் பின்பற்றப்பட்டால், வன்கொடுமைக் குற்றச் சம்பவங்கள் கட்டுக்குள் வருவதைக் கண்கூடாக நம்மால் பார்க்க முடியும்.
வன்கொடுமைக் குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்கள் என 2022ஆம் ஆண்டு மொத்தம் 430 பகுதிகளைத் தமிழ்நாடு அரசு அடையாளம் கண்டு, தனது ஏப்ரல் 2022 ஆண்டறிக்கையில் வெளியிட்டுள்ளது. 2023இல் 37 மாவட்டங்களில் 346 கிராமங்களிலும், 9 ஆணையரகங்களில் 48 கிராமங்களிலும் என மொத்தம் 394 பகுதிகளை வன்கொடுமைப் பகுதிகளாக அறிவித்துள்ளது. இப்போது 2024 ஆண்டுக்கான அறிக்கையில் 37 மாவட்டங்களில் 318 கிராமங்களிலும், 9 ஆணையரகங்களில் 44 கிராமங்களிலும் என மொத்தம் 362 பகுதிகளை வன்கொடுமைப் பகுதிகளாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
இந்தப் பகுதிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டிருந்தால், வன்கொடுமைகளைத் தடுத்திருக்க முடியும். அண்மையில் காஞ்சிபுரம் மாவட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தன் கடமையைச் சரியாகச் செய்யாத காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒருவரைக் கைது செய்ய உத்தரவிட்டுச் சிறையில் அடைத்தார். அடுத்தநாளே தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து, காஞ்சிபுரம் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை உயர் நீதிமன்றம் மூலம் ரத்து செய்தது. ஒரு சட்டத்தைச் சரிவரப் பின்பற்றாத காவல் துணைக் கண்காணிப்பாளரைத் துரிதமாகக் காப்பாற்றுவதா அரசினுடைய கடமை?
சாதி அமைப்பு மிகப் பழைமையானது, இந்தியப் பண்பாட்டில் வேரூன்றியிருக்கும் கலாச்சாரம் என்கிற வாதம் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரைக் காப்பாற்றவே பயன்பட்டுவருகிறது. இதில் அரசுகள் தமக்கிருக்கும் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கின்றன. அரசியல் தளத்தில் நிலவும் மௌனம், அரசு அதிகாரிகளின் சாதியச் செயற்பாடுகள் இதை மேலும் மேலும் மூர்க்கமாக்குகிறது. தமிழ்நாட்டிலும் இதுவே நடக்கிறது.
சமூகநீதி உரையாடலில் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது எனத் தொடர்ந்து மார்தட்டிக்கொண்டிருக்கும் திமுக அரசு, தலித்துகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதிலும், அதற்கு நீதி பெற்றுத் தருவதிலும் கடும் பின்னடைவைச் சந்திப்பது தொடர்பாகப் பதிலேதும் கூறாமல் ஏன் நழுவிக்கொள்கிறது? தமிழ்நாட்டின் சமூகநீதி என்பது தலித் மக்களின் சிவில் உரிமைகள் நீங்கலாக உருவகித்துக்கொண்டது என இதன் மூலம் புரிந்துகொள்ளலாமா?
சாதியக் குற்றவாளிகளைச் சமூகக் குற்றவாளிகளாக அணுகாமல், அவர்கள் சமூகநீதிக்கு அச்சுறுத்தலானவர்கள் என நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு சாதிய வன்முறை நிகழும்போதும், தீவிரமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைத் தண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தந்தால் ஒட்டுமொத்த ஆதிக்கச் சாதியினரையும் பகைத்துக்கொண்டதாய் அர்த்தம் கொள்ளப்படும் என அஞ்சியே இந்த அமைப்பைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது அரசுகள், இதில் திமுக அரசு எந்த வகையிலும் விதிவிலக்கு இல்லை.
அரசமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தமக்கு அடிபணிந்திருப்பதை வேறு எவரையும் விட சாதி இந்துச் சமூகம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதுவே குற்றமிழைக்கவும் தூண்டுகிறது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக சாதி இந்து அமைப்புகளும் அதன் பிரதிநிதிகளும் மிக வெளிப்படையாகப் பேசிவருவதும், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு கடந்து போவதும் இதனை உறுதிபடுத்துகிறது.
தமிழ்நாட்டில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளும், அதன் புள்ளி விவரங்களும் இங்கு பெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். வெகுஜன ஊடகங்கள் இப்புள்ளிவிவரப் பட்டியலை வெளியிட்டு விவாதங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும், தமிழ்நாட்டில் பதினைந்திற்கும் மேற்பட்ட செய்தி தொலைக்காட்சிகள் இருந்தும், ஒன்று கூட இப்புள்ளிவிவரங்களை விவாதமாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2020, 2021, 2022, 2023 ஆகிய நான்கு ஆண்டுகளில், பழங்குடியினர் வழக்குகளில் தண்டனை விகிதம் பூஜ்யம் என்பதை இந்த அரசு எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் கடக்கிறது. இது யாருக்கான சமூகநீதி? வட மாநிலங்களை ஒப்பீட்டுத் தம்மை ஒருபடி மேல் நிறுத்திக்கொள்ளும் திமுக அரசு, மலக்குழி மரணத்திலும், தலித்துகளுக்கு எதிரான குற்றத்திலும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தராமல் பாதுகாப்பதிலும் முன்வரிசையில் இருக்கிறது.
சாதியொழிப்பும் அதன் சாத்தியங்களும் ஆய்வுக்குட்பட்டது, கண்ணுக்கெட்டிய தொலைவில் அவை இல்லை என்பதே யதார்த்தம். சாதி ஒழிய வேண்டும், சாதியப் பாகுபாடு கூடாது என ஒற்றை வரியில் கொள்கை பிரகடனமாக அறிவித்துக்கொண்டு, அதைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச சட்ட ஏற்பாடுகளைக் கூட பின்பற்றாதவர்கள் எந்தச் சாதியை எக்கணம் ஒழிக்கப்போகிறார்கள்?




