நகைப் பட்டறையில் நின்றுகொண்டிருந்த கழுதைகள் காணாமல் போவதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் நான் முதன்முதலாக அவற்றைப் பார்க்கிறேன். மூக்குத்தி செய்வதற்காக அம்மா என்னை நகைப் பட்டறைக்கு அழைத்துச் சென்றாள். எங்கள் ஊரில் நகைநட்டு வைத்திருக்கிற அத்தனை பேருக்கும் பொற்பனைய்யா ஆசாரியைத் தெரியும். கழுதாசாரி என்றுதான் அடையாளம் சொல்ல முடியும். ஊரில் எந்த வீட்டில் சடங்கு, காதுக்குத்து, கல்யாணம் என்றாலும் கழுதாசாரியிடம் போகாமல் அது நல்லபடியாக முடிந்ததில்லை. கழுதாசாரி செய்கிற தங்கம் நூறு வருடத்திற்கும் ஒரு பொட்டுக் கிராம்கூடத் தேயாது. தங்கம் அவ்வளவு திருத்தமாக இருக்கும். எங்கள் ஊருக்கு அசலூர்க்காரர்கள் பெண்ணெடுத்துப் பெண் கொடுத்ததே கழுதாசாரியால்தான் என்கிற கதையும் உண்டு. இத்தனைக்கும் எங்கள் ஊர்ப் பெண்களைப் போல (நானும்தான்) அத்தனை கருப்பானவர்களை வேறு எந்த ஊரிலும் பார்க்க முடியாது. கறிவேப்பிலை அழகிகளின் உடம்பில் நகை, பாம்புபோல ஊறுவதாகத் திருவிழாக் கூட்டத்திற்குள் இளந்தாரிகள் முதுகுக்குப் பின்னால் முணுமுணுப்பார்கள். ஆனால், எங்களைப் போல செம்பாட்டூர் பூமி செழிப்பாக இல்லை. காவிரியை விட்டால், நான்கு பருவத்துக்கும் வற்றாத கானலாறும் நீரைப் பிரசவிக்காத மலட்டு நிலமும்தான் எங்களுடைய விதி. அதனால் தொழிலுக்காக ஆண்கள் பெருநகரத்திற்குக் கிளம்பிப் போனதற்குப் பிறகு ஊரே அசமந்தமாகத்தான் கிடக்கும்.
வேலைக்காக ஊரைத் தாண்டியவர்கள் அய்யனார் திருவிழாவுக்குத்தான் திரும்புவது வழக்கம். அதாவது, காப்புக் கட்டி நாற்பத்தியோராவது நாள் அய்யனார் பூமிதி. காப்புக்கு வருகிற ஆண்கள் சம்பாதித்த காசுப் பணத்தை வீட்டில் கொடுத்துவிட்டு மறுபடியும் திருவிழாவுக்கு வருவார்கள். அய்யனார் பூமிதி அன்று அங்காளம்மனுக்குப் பட்டம் கட்டும் சடங்கு ஏற்பாடு. அன்றைக்குக் கடுகுமணித் தங்கமாவது பெண்களின் உடம்பில் இருப்பது அவசியம். முடியாவிட்டால் இரவல் வாங்கி அணிந்தாவது அங்காளம்மனிடம் காட்டிவிட வேண்டும். ஊரையே காத்த அய்யனார் தன் மனைவி அங்காளம்மனைப் பாராது போக, கடுங்கோபத்துடன் வனம் புகுந்துவிட்டதாகவும் அன்றையிலிருந்து ஊர் பாழும் காடானதாகவும் அவளைத் திரும்ப அழைக்க ஒவ்வொரு வருடமும் அய்யனார், மலர்களும் மாலைகளுடன் பொன்னையும் அளிப்பதாக இந்த வேண்டுதல். அங்காளம்மன் இன்றுவரை ஊர்த்திரும்பவில்லை. அய்யானார் சார்பாக ஊரிலிருக்கும் ஆண்கள், புதுத்துணியும் பொன்னும் வாங்கித் தருவதை, அங்காளம்மனுக்குச் சாத்துவதாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை அவளிடம் காட்டுகிற இரவுதான் அய்யனாரும் அவளைக் காண்கிறார். அன்றைக்குத்தான் அங்காளம்மன் முகத்தில் கோபம் தணிந்து வெட்கம் விகசிக்கும். அதைக் காணத்தான் அய்யனார் வருடம் முழுக்கக் காத்திருப்பதாகவும் அந்த வெட்கம் மழையாக ஊர்மேல் தோன்றுவதாகவும் (வருடத்தின் முதலும் கடைசியுமான மழை அன்றைக்குச் செம்பாட்டூருக்கு நிச்சயம்) நாங்கள் நம்புவது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





