அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது விழா

பதிவு

லித்தியம், மார்க்சியம், பெண்ணியம் என்னும் இணைப்பில் சாதி எதிர்ப்புச் சொல்லாடலைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டிருந்தவர் அறிஞர் ராஜ் கௌதமன். அவர் மறைந்ததையொட்டி ‘அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை’யை அவருடைய குடும்பத்தாரும் நீலம் பண்பாட்டு மையமும் இணைந்து உருவாக்கியுள்ளனர். மக்களுக்காக எழுதியவர்களை இனங்காண்பது மட்டுமன்று அவருக்கு அணுக்கமான ஆய்வுகளையும், ஆய்வாளர்களையும் அங்கீகரிக்கவும் பரவலாக்கவும் அவர் பெயரிலான விருது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தலித்தியம், பண்பாடு – கோட்பாட்டு ஆய்வுகள், மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்கள் வரலாறு, நவீன ஆய்வுகள் உள்ளிட்ட களங்களில் பங்களித்தவர்களைக் கண்டுணர்ந்து இவ்விருதை வழங்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். அந்த வகையில் ராஜ் கௌதமன் அவர்களோடு தனிப்பட்ட முறையிலும் ஆய்வு சார்ந்தும் தோழமை கொண்டிருந்த வ.கீதா அவர்களுக்கு, சாதி எதிர்ப்பு வரலாறு சார்ந்து நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் அவரது பங்களிப்புகளைப் பாராட்டி ‘அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது’ தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் சிற்றமர் அரங்கத்தில் கடந்த நவம்பர் 16 அன்று வழங்கப்பட்டது.

விருது பெற்ற ஆய்வாளர் வ.கீதாவின் பங்களிப்புகள் 

1980களிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகப் பிரதி என்று இயங்கிவருபவர் ஆய்வாளர் வ.கீதா. அம்பேத்கரியம், மார்க்சியம், பெரியாரியம், பெண்ணியம், காந்தியம் சார்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதோடு அவை குறித்த பல்வேறு விவாதங்களுக்கும் கவனப்படுத்தலுக்கும் காரணமானவர்களில் முதன்மையானவராகத் திகழ்கிறார். பெரியாரியம் பற்றித் தமிழில் உருவாகியிருக்கும் இன்றைய விழிப்புணர்வுக்குத் தொடக்கமாக அமைந்த நூல்களை எஸ்.வி.ராஜதுரையோடு இணைந்து எழுதியவர்.

மார்க்சியத்தின் பல்வேறு போக்குகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் பின்னை மார்க்சியச் சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் எஸ்.வி.ராஜதுரையோடு இணைந்து தமிழில் அறிமுகப்படுத்தியவர். தலித்தியம், அம்பேத்கரியம் பற்றியும் ஆரம்பத்திலிருந்தே கவனமெடுத்து எழுதிவந்த அவர், தானெழுதிய பிற விசயங்களிலும் அம்பேத்கரிய ஓர்மையை இணைத்து யோசித்தவர். அந்த வகையில் அண்மையில் அம்பேத்கரையும் சோஷலிசத்தையும் ஒப்ப வைத்து அவர் எழுதியிருக்கும் ஆங்கில நூலான ‘Bhimrao Ramji Ambedkar and the Question of Socialism in India’ குறிப்பிடத்தக்கது. அதேபோல பண்டிதர் அயோத்திதாசர் குறித்தும், அவரின் பௌத்தம் குறித்தும் புரிந்துகொள்வதற்கான தரவுகளையும் தர்க்கங்களையும் தொடர்ந்து முன்வைத்து வந்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலும் மாணவர்களிடையேயும், சமூகச் செயற்பாட்டாளர்களிடையேயும் அவர் நடத்திவரும் அம்பேத்கர் குறித்த வகுப்புகளும் பட்டறைகளும் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதத்தைச் சமூக நீதி மாதமாக அறிவித்து, தன் நண்பர்களோடு சேர்ந்து நிகழ்வுகளை நடத்திவந்திருக்கிறார். இந்தியாவின் குறிப்பிடத்தக்கப் பெண்ணிய வரலாற்றாளரான வ.கீதா, பெண்ணிய நோக்கில் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கும் நூல்கள் முக்கியமானவை. குறிப்பாக இந்தியாவின் மற்றொரு பெண்ணியச் சிந்தனையாளரான உமா சக்கரவர்த்தியோடு சேர்ந்து சர்மிளா ரெகே எழுத்துகள் குறித்து ஆங்கிலத்தில் அவர் தொகுத்திருக்கும் நூல்கள் முக்கியமானவை. எழுத்துத் தளம் மட்டுமல்லாமல் பெண்களுக்கான  இயக்கம், இதழியல், பயிலரங்குகள், வாசிப்புக் கூடுகைகள் போன்றவற்றில் பங்குபெறுவதிலும் ஒருங்கிணைப்பதிலும் பாடாற்றியவர். ஆய்வுகள் சார்ந்து மட்டுமல்லாமல் புனைவுகள் சார்ந்தும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். மூன்றாம் உலகக் கவிதைகள் உள்ளிட்ட தொகுப்புகளை எஸ்.வி.ராஜதுரையோடு சேர்ந்து மொழிபெயர்த்துக் கொணர்ந்த அவர், பெருமாள்முருகனின் கூளமாதரி, நிழல்முற்றம் போன்ற நாவல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ்நாட்டுப் பெண்ணிய வரலாற்றை விமர்சனப் பெண்ணியம் சார்ந்து காலக்கனவு, ஆண்மையோ ஆண்மை போன்ற நாடகப் பிரதிகளாக எழுதி, பெண்ணியலாளர் அ.மங்கையோடு சேர்ந்து அரங்கேற்றியுள்ளார். குழந்தைகள் கல்வி குறித்தும் அக்கறை செலுத்திவருகிறார். இவ்வாறு விரிவான அர்த்தத்தில் சாதி எதிர்ப்பு வரலாற்றையும், சாதி எதிர்ப்புச் சொல்லாடல்களையும், உலகில் நடந்துவரும் நவீன மாற்றங்களுக்குட்பட்டுச் சிந்திப்பவராக வ.கீதா அறியப்படுகிறார்.

நிகழ்வு

இந்நிகழ்வில் அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை உறுப்பினர்களும், அவரது குடும்பத்தினரும் ராஜ் கௌதமன் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இவ் அறக்கட்டளையின் செயற்பாடுகள் குறித்த நோக்க உரையை நீலம் இதழின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கர் வழங்கினார். நீலம் அமைப்பின் செயல்பாடுகள், அறக்கட்டளையின் நோக்கங்கள், மாணவர்களுக்கு ராஜ் கௌதமன் பெயரில் வழங்க இருக்கும் ஆய்வு நிதிநல்கை (Research Fellowship) குறித்து அவர் உரையாற்றினார். ‘தமிழ் அறிவுலகில் ராஜ் கௌதமன் பங்களிப்பு’ எனும் தலைப்பில் பேசிய எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம், இரண்டாயிரமாண்டு தமிழ் வரலாற்றில் ராஜ் கௌதமன் செய்த இடையீடும் குறித்தும், ‘தலித்’ என்பதை சாதியாகப் புரிந்துகொள்ளாமல் ஒரு குணமாகப் புரிந்துகொண்டது குறித்தும் விரிவாகப் பேசினார். அடுத்த நிகழ்வாக சந்துரு மாயவன் தொகுத்து, பதிப்பித்த ‘ஒளிரும் சொற்கள் – தொகுக்கப்படாத ராஜ் கௌதமன் எழுத்துகள்’ நூலை எழுத்தாளர் பெருமாள்முருகன் வெளியிட சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறைத் தலைவர் கோ.பழனி பெற்றுக்கொண்டார்.

அடுத்ததாக விருது பெற்ற வ.கீதா குறித்த மதிப்பீட்டு உரையை மூவர் வழங்கினர். வ.கீதாவின் பெண்ணியச் செயல்பாடு, இயக்கச் செய்பாடு, மனித உரிமை களங்களில் அவரின் பங்களிப்புகள் குறித்து விரிவாகப் பேசினார் எழுத்தாளர் பிரேமா ரேவதி; மாணவர் – ஆசிரியர் உறவு, பாபாசாகேப் அம்பேத்கர் வகுப்புகள், ஆய்வாளருக்கான வழிகாட்டியாக வ.கீதா செயல்பட்ட விதம், அவரின் பண்புகள் குறித்து உதவிப் பேராசிரியர் உமா கஸ்தூரி உரையாற்றினார்; எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணைந்து செய்த மொழிபெயர்ப்புகள், பெண் மொழியின் தனித்த அடையாளங்கள், வ.கீதா கவனிக்க மறந்த ஆய்வுக் களங்கள், கறுப்பின இலக்கியம் குறித்த அவதானிப்புகள், அம்பேத்கரிய வாசிப்பு உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார் ஆசிரியர் பயிற்றுனர் சீ.சிவா.

இயக்குநர் பா.இரஞ்சித், எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, பெருமாள்முருகன், ஸ்டாலின் ராஜாங்கம், பிரேமா ரேவதி, தமிழ்ப்பிரபா, வாசுகி பாஸ்கர், வழக்கறிஞர் ஏ.பி.ராஜசேகரன், ராஜ் கௌதமன் குடும்பத்தைச் சேர்ந்த ப்யூலா ஆகியோர் இணைந்து வ.கீதாவுக்கு அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருதை வழங்கினர். சிறப்புரையாற்றிய ஆதவன் தீட்சண்யா, கீதாவின் சமூகவியல் பங்களிப்புகள், எட்வர்ட் சையத், கூகிவா தியாங்கோ ஆகியோரிடம் வ.கீதா மாணவராகக் கற்ற வரலாறு, ஆண் மொழியின் வக்கிரங்கள் ஆகியவை குறித்துப் பேசினார். பெருமாள்முருகன் பேசும்போது ‘கூளமாதாரி’ நாவல் மொழிபெயர்ப்பில் வ.கீதா கையாண்ட நுட்பங்கள், வட்டார நாவலை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் எதிர்கொள்ளும்  சிக்கல்கள், சிறார் பயிலரங்கம், மொழிபெயர்ப்பாளரின் ஆலோசனையால் மூலப் பிரதியில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவை குறித்து உரையாற்றினார்.  இயக்குநர் பா.இரஞ்சித் பேசும்போது நீலம் அமைப்பின் செயல்பாடுகள், தலித் அமைப்பைப் பொதுச் சமூகம் எப்படிப் பார்க்கிறது, அதன் விலகல் தன்மை குறித்துப் பேசினார். “ராஜ் கௌதமனின் இணையர் க.பரிமளம், அறிஞர் ராஜ் கௌதமன் அறக்கட்டளை தொடங்க ரூபாய் பத்து லட்சம் கொடுத்தார். அதை நீலத்தின் செயல்பாடுகள் மீது அவர் கொண்ட நம்பிக்கை என்றே கருதுகிறேன். பாபாசாகேப் அம்பேத்கரை இடதுசாரிகள் படிக்காமல் விட்டதன் விளைவே சமூகம் மோசமாக இருப்பதற்குக் காரணம்” என்று பேசினார். இந்நிகழ்வை ரோஸ்லின் அனிஷா தொகுத்து வழங்கினார். நாடகவியலாளர்கள் அ.மங்கை,  பிரளயன், பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர்கள் இந்திரன், ஜெயராணி, இலஞ்சி அ.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புகைப்படங்கள்: ரா.தமயந்தி      

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger