25
காரைக்காலுக்கு அருகில் டிஆர் பட்டணம் என்ற ஊர் இருக்கிறது. திருமலை ராயன் பட்டணம் என்ற பெயரின் சுருக்கமே டிஆர் பட்டணம் என்பதாகும். இந்த ஊர் பற்றி 1901ஆம் ஆண்டு சுதேசமித்திரன் ஏட்டில் ‘திருமலை ராயன் பட்டணம்’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார் உவேசா. இந்த ஊருக்கு ஏடு தேடிச் சென்றதைப் பற்றி அக்கட்டுரையில் அவர் விவரிக்கிறார். திருமலைராயன் என்ற அரசன் பற்றியும், அவனிடம் சென்று புலமையை நிலைநிறுத்திய காளமேகப் புலவர் பற்றியும் வழங்கப்பட்ட வாய்மொழித் தகவல்களை அவர் முதலில் விவரிக்கிறார். அதில், பண்டை காலத்தில் இப்போதிருக்கும் நகருக்கு மேற்கே ஒரு நகரம் இருந்து அழிந்துபோனதாக ஒரு கதை இருப்பதைச் சுட்டுகிறார். காளமேகப் புலவரின் வசைகவியால் மண்மாரிப் பொழிந்து அழிந்ததாகக் காரணம் கூறுகிறார். அதோடு, அந்த இடத்தில் இப்போதும் செங்கற்களும் ஓடுகளும் மிகுதியாக இருப்பதை நேரில் கண்டதை வைத்து எழுதுகிறார். மண்மாரிப் பொழிதல் என்பது நந்தன் பற்றிய கதைகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் குறியீடாகும். அது அழிவின் குறியீடாகப் பொதுவாக வழங்கப்பட்டுவந்திருக்கிறது என்பதை அறிகிறோம். அங்கு சாபத்தால் பொழியும் மண்மாரி, காளமேகம் விசயத்தில் வசையால் பொழிகிறது. சாபம், வசை என யாவும் எதிர்மறைக் குறியீடுகளே. அந்த இடம் புன்செய் நிலங்களாக (பிஞ்ச) இருந்ததையும் உவேசா கூறுகிறார். இந்த வழக்காற்றுக் கதையை மட்டுமல்லாமல், திருமலைராயனின் அரண்மனைக்குப் போகும் வீதியாக இது இருந்திருக்கலாம் என்று மக்கள் கூறுவதையும் அவர் குறிப்பிடுகிறார். அந்த இடத்திற்கு நத்தமேடு என்ற பெயர் இருந்ததா என்பதை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆனால், நத்தமேடு என்று கூறப்படும் இடங்களுக்குப் பொருந்தும் எல்லாக் கூறுகளும் இந்த இடத்திற்கும் பொருந்துகின்றன. இவ்வாறு அழிந்துபோன இடத்தோடு அழிவோடு தொடர்புடைய கதைகளைப் பொருத்தும்போது அது வரலாறாக மாறுகிறது. அந்த இடத்தில் மன்னனின் அரண்மனை இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அங்கு ஒரு மன்னன் இருந்தான் என்பது தெரியவரும்போது, கோட்டை / அரண்மனை இடிந்திருக்கிறது என்று கூறும்போது பொருத்தம் வந்துவிடுகிறது. அங்கு ஓடும் புறவடையான் ஆற்றின் கரையில் செங்கற்கள் உடைந்து பரவிக்கிடக்கும் மேடொன்று இருக்கிறது என்றும், அதனை மக்கள் ‘கோட்டை மேடு’ (நத்தமேட்டுக்கு இணையாகக் கோட்டை மேடு) என்று அழைப்பதாகவும் உவேசா கூறுகிறார். கோட்டைமேடு என்பதற்குப் பண்பாட்டு அர்த்தம் (உள்மெய்) வேறாக இருந்தாலும், நேரடியாக (புறமெய்) அங்கு அரசன் இருந்ததால் அப்பெயர் வந்ததாக இன்றைக்கு நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அரசனோ, அவன் அரண்மனையோ இல்லாதிருந்த இடங்களிலும் கோட்டைமேடு இருக்கிறது என்பதே உண்மை. அதற்குப் பண்பாட்டு வாசிப்பு முக்கியமாகிறது.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





