கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘ஹோம்பௌண்ட்’ (Homebound) திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் நீரஜ் கெய்வான், அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் உலகப் புகழ் பெற்ற இயக்குநருமான மார்ட்டின் ஸ்கார்செஸி இருவரும் கடந்த நவம்பர் மாதம் அத்திரைப்படத்தை நியூயார்க்கில் திரையிட்டபோது உரையாடினர். அதன் சுருக்கமான தமிழ் வடிவம் உங்கள் வாசிப்பிற்கு.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
உங்களுடைய முதல் திரைப்படமான ‘மசான்’ (Masaan) படத்திற்கு நான் பெரிய ரசிகன். அந்தப் படத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னால் இந்த உரையாடலின் தொடக்கத்திற்கு ஏதுவாக அமையும் என நினைக்கிறேன்.
நீரஜ் கெய்வான்:
நன்றி சார். ‘மசான்’ 2015இல் உருவானது. மெலிடா டஸ்கன்தான் அந்தப் படத்தின் தயாரிப்பாளர். அன்று முதல் இன்றுவரை சினிமா உலகில் அவர் எனது நலன்விரும்பியாகவும், வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அந்தப் படம் பல தனிப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாடாக அமைந்தது. இந்தியா – பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பாக அது உருவானது, அதற்கு மெலிடா மிக முக்கியப் பங்காற்றினார். உங்களுக்கு அந்தப் படம் பிடித்திருந்தது என்பதையும், நீங்கள் அதில் இணைந்து பணியாற்ற விரும்பினீர்கள் என்பதையும் என்னால் நீண்ட நாட்களாக நம்பவே முடியவில்லை; ஆனால் கெடுவாய்ப்பாக அப்போது அது நடக்கவில்லை.
இப்போது இந்த ‘ஹோம்பவுண்ட்’ படம்… மன்னிக்கவும், எங்கள் குழுவினர் சிலரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். தயாரிப்பாளர்கள் அபூர்வா மேத்தா, சௌமின் மிஸ்ரா இருவரும் இங்கே இருக்கிறார்கள். அதார் பூனாவாலா, கரண் ஜோஹர் ஆகியோரால் வர இயலவில்லை. இன்று கரண் இங்கு இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ஜான்வி கபூரும் வரவில்லை. ஆனால், எங்களது அருமையான நடிகர்கள் இஷான் கட்டர், விஷால் ஜெத்வா இரண்டு பேரும் இங்கே உள்ளனர். எங்களது இணைத் தயாரிப்பாளர் மரிகே டி’சோசா, விநியோகத் தலைவர் அங்குர் சுரேயல் ஆகியோரும் வந்துள்ளனர். மேலும், மெலிடா டஸ்கன் டப்ளின்டியர் இங்கே இருக்கிறார். அவர் எனது முதல் படமான ‘மசான்’- இன் தயாரிப்பாளர். இந்தப் படத்திற்கும் இணைத் தயாரிப்பாளர். திரு.ஸ்கார்செஸி உடனான இந்தத் தொடர்பைச் சாத்தியப்படுத்தியவரும் அவரே. நன்றியும் அன்பும் மெலிடா.
சார், எனக்கு எல்லாமே சினிமாதான். இதுவரையிலான எனது வாழ்க்கைப் பயணம் என்பது நிறைய சந்தோஷங்களும், சில வெற்றிகளும், சினிமா மீதான காதலும் என்பதாகவே இருந்துள்ளது. பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை நிர்வாகியாக இருந்த காலத்தில்கூட, நான் வீட்டிற்கு வந்து 7.5 மணிநேரம் ஓடும் பெலா தாரின் (Bela Tarr) படத்தைப் (Sátántangó) பார்த்துவிட்டு அதைப் பற்றி எழுதுவேன். இந்தப் பயணம், ‘Raging Bull’ படத்தில் வருவது போன்ற அடையாளத்திற்கான போராட்டத்தையும், அதைத் தொடர்ந்த சங்கடங்களையும் கொண்டது. இதில் பல தியாகங்கள் உள்ளன – அவை என்னுடையது மட்டுமல்ல, எனது குடும்பத்தினருடையதும், எனது முன்னோர்களுடையதும் கூட. அவர்களின் கனவுகளை நான் சுமந்துகொண்டிருக்கிறேன். வலிகள், குறைகள், வெற்றிகள் நிறைந்த இந்தப் பயணத்தின் உச்சகட்டமும், மிகவும் அர்த்தமுள்ள தருணமும் இதோ இன்று உங்கள் முன்னால் அமர்ந்திருப்பதுதான். இது எனது சினிமா வாழ்வின் பெரும்பேறு.
மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். திரைக்கதை முதல் படத்தொகுப்பு வரை ஒருவருட காலமாக உங்களுடன் பணியாற்றியபோது, உங்கள் பெயரை நாங்கள் எங்கும் பயன்படுத்தவில்லை. இறுதி வரை அதை ரகசியமாக வைக்க விரும்பினோம். அதனால் உங்களைக் குறிக்க, ‘பெரியப்பா’ என்ற குறியீட்டுப் பெயரைப் பயன்படுத்தினோம். சார், இந்தப் படத்தின் எதிர்காலம் என்னவாகும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், உங்கள் முன்னால் அமர்ந்திருக்கும் இந்தத் தருணமே எனக்கு மிகப்பெரிய வெகுமதி.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
மிக்க நன்றி. இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் நடிகர்களிடமும் இதைத்தான் சொன்னேன் – இந்தப் படத்தை நான் பலமுறை பார்த்துவிட்டேன். உங்களுடனும் மெலிடாவுடனும் இது குறித்து உரையாடியிருக்கிறேன். திரைக்கதையையும் முழுமையாகப் படித்திருக்கிறேன். அப்போது நான் ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’ (Killers of the Flower Moon) படப் பணிகளில் இருந்தேன் என்பதை மறந்துவிடாதீர்கள்; அது மூன்றரை மணிநேரப் படம், அதில் நான் முழுமையாக மூழ்கியிருந்தேன். ஆனாலும் உங்கள் படத்தின் திரைக்கதை எனக்கு நினைவிருக்கிறது. ஒருவகையில், மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்துடனேயே நான் வாழ்ந்துவருகிறேன். இது எனக்கு மிகுந்த திருப்தியைத் தருகிறது. அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஏனென்றால், இது உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்று எனக்குத் தெரியும். கோவிட் காலத்தில் நாம் அனைவரும் அனுபவித்த துயரங்களைத் தாண்டி, இதில் எனக்குச் சுவாரஸ்யமாகத் தெரிந்தது என்னவென்றால் – அந்தப் பிம்பங்களில் இருக்கும் துயரத்தைத் தாண்டி, இந்த இரண்டு இளைஞர்களின் மகிழ்ச்சியையும், வாழ்வின் கொண்டாட்டத்தையும் நீங்கள் கையாண்ட விதம். ஒரு கனமான விரிவுரை போலவோ அல்லது உபதேசம் போலவோ இல்லாமல், இவ்வளவு நேர்த்தியாக இந்தக் கதையை நீங்கள் எப்படி அணுகினீர்கள் என்று வியக்கிறேன். பொதுவாக உபதேசங்கள் செய்தால், ஏற்கெனவே உங்கள் கருத்தோடு உடன்படுபவர்கள் மட்டுமே அதைக் கேட்பார்கள். ஆனால் இங்கே, நீங்கள் இந்த இரு இளைஞர்களினுடைய மனிதாபிமானத்தின் வழியே கதையை அணுகியிருக்கிறீர்கள். இது அவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் பற்றியது.
நான் என்ன சொல்ல வந்தேன் என்றால், தெரிந்த விஷயத்தையே திரும்பத் திரும்ப உபதேசிப்பதற்குப் பதிலாக, இந்த இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களின் குடும்பங்கள், உங்கள் கலாச்சாரத்தின் நுணுக்கங்களை நீங்கள் கையாண்ட விதம் சிறப்பு. பல நேரங்களில் மக்கள் இதுபோன்ற செய்திகளைப் பார்க்கும்போது ‘அச்சச்சோ, எவ்வளவு கொடுமை’ என்று சொல்லிவிட்டுத் தங்கள் வேலைகளைப் பார்க்கப் போய்விடுவார்கள். ஆனால், நீங்கள் அப்படிச் செய்யவில்லை. உங்கள் மனம் அவர்களை நோக்கிச் சென்றது, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அந்த உலகத்தைப் பற்றிப் பேசியிருக்கிறீர்கள்.
நீரஜ் கெய்வான்:
எங்கள் தயாரிப்பாளர்களில் ஒருவரான சௌமின் மிஸ்ரா, நியூயார்க் டைம்ஸ் இதழில் பஷாரத் பீர் எழுதிய ஒரு கட்டுரையை எனக்கு அறிமுகப்படுத்தினார். அதைப் படித்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். அந்த இரு இளைஞர்களும் அனுபவித்த வலி அளவிட முடியாதது. அவர்களின் நிஜப் பெயர்கள் முஹம்மது சயுப், அம்ரித் குமார். அவர்களின் கதையை வாசித்தபோது நான் நிலைகுலைந்து போனேன். அவர்களின் நட்பை ஒரு தொடக்கப்புள்ளியாகக் கொண்டு, என்னைப் பாதித்த உலகளாவிய கேள்வி ஒன்றைப் பற்றிப் பேச நினைத்தேன்: ‘புலம்பெயர்ந்தவர்கள் ஏன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள்?’ அதுவே பல பதில்களைத் தரும் ஒரு கேள்வியாக அமைந்தது.
இந்தியச் சூழலைப் பொறுத்தவரை, சுமார் 50 முதல் 60 கோடி மக்கள் உள்நாட்டு அகதிகளாக இருக்கிறார்கள். முறையான புள்ளிவிவரங்கள் இல்லாததால் இந்தத் தரவுகள் விவாதத்திற்குரியவை. இவர்களில் பெரும்பாலோர் விளிம்புநிலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களிடம் முன்னேறுவதற்குத் தேவையான சமூக மூலதனம் (social capital) இல்லை. இந்தியாவின் பொருளாதாரம் முதன்மையாக விவசாயத்தைச் சார்ந்தது. ஆனால், கிராமப்புறங்களில் விவசாயம் இப்போது போதிய வருமானத்தைத் தருவதில்லை. அவர்களுக்கு நிலம் இல்லை, வேலைவாய்ப்புகளும் குறைவு. எனவே அவர்கள் அரசு வேலைகளை நாடுகிறார்கள். அது அவர்களுக்குக் கௌரவத்தையும் மரியாதையையும் தரும் பாதுகாப்பான வழியாகக் கருதப்படுகிறது. ஆனால், அதை அடைவது என்பது மிக நீண்ட, அதேசமயம் கடினமான ஒரு போராட்டம்.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
உண்மையில், இதைத்தான் நான் தொடக்கத்திலேயே சொல்ல நினைத்தேன். திரைக்கதையில் வாசிக்கும்போது… அவர்கள் குடிமைப் பணித் (சிவில் சர்வீஸ்) தேர்வுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அதன் காட்சிகளைப் பார்த்தபோது… அது பிரமிக்க வைத்தது. யார் எதைப் படிக்கிறார்கள், அந்த இளம் பெண் அவனிடம் பேசுவது என அனைத்தும்… அது மிகவும் சிக்கலானது. அதன் முக்கியத்துவத்தையும், அதன் பின்னாலிருக்கும் அந்த விரக்தியையும் என்னால் முதலில் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அதிகாரத்துவம் (bureaucracy) நோக்கிய நெரிசல் ஒருபக்கம் என்றால், அதோடு நீங்கள் ‘சாதி’ (Caste) என்ற விஷயத்தையும் இணைக்கிறீர்கள். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்ல முடியுமா?
நீரஜ் கெய்வான்:
இந்தப் படத்தை… உண்மையில், குறைவான படங்களே செய்திருக்கிறேன் என்றாலும், ஒவ்வொரு படைப்பையும் எனக்கு மிக நெருக்கமான ஒன்றாக (Personal) மாற்றிக்கொண்டால் மட்டுமே என்னால் அதில் முழுமையாக உழைக்க முடியும். ஏன் அப்படிச் செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. இந்தப் படத்திற்காக நான் எனது குழந்தைப் பருவத்திற்கே சென்றேன். நான் ஒரு தலித் குடும்பத்தில் வளர்ந்தவன். வளரும்போது ஓர் ‘உயர் சாதியினன்’ போல நடித்துக்கொண்டே 35 வருடங்கள் வாழ்ந்தேன். அது மிகவும் கடினமானது. யாராவது என்னைக் கண்டுபிடித்துவிடுவார்களோ, யாராவது என்னைப் பற்றிச் சொல்லிவிடுவார்களோ, எனது நண்பர்கள் நான் யார் என்பதைத் தெரிந்துகொள்வார்களோ, என்னை ஒதுக்கிவிடுவார்களோ என்ற பயத்திலேயே எந்நேரமும் பதற்றத்துடன் இருப்பேன். பல வருடங்கள் அந்த அவமானத்தை எனக்குள்ளேயே சுமந்தேன். ஒருகட்டம் வரைக்கும், படத்தில் வரும் சந்தனைப் போல இருந்தவன்தான் நானும் என்பதை உணர்ந்தேன். நான் எப்போதும் எனது பெயரை ‘நீரஜ் குமார்’ என்றுதான் சொல்வேன், எனது சாதிப் பெயரையோ, குடும்பப் பெயரையோ (Last name) ஒருபோதும் சொல்லமாட்டேன்.
பெயரைப் பற்றி ஒரு விஷயம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஷேக்ஸ்பியர் ‘பெயரில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டார், ஆனால் அவர் இந்தியாவுக்கு வர வேண்டும். இங்கே பெயர்தான் எல்லாம். உங்கள் குடும்பப் பெயரைக் தெரிந்துகொண்ட ஒரே நொடியில் உங்கள் முன்னோர்களின் 2,000 வருட வரலாற்றையே கணித்துவிடுவார்கள். அந்தப் பெயர் எதைக் குறிக்கிறது, அதன் வேர்ச்சொல் என்ன என்பதை ஆராய்ந்து உங்கள் சாதியைத் தெரிந்துகொள்ள முயல்வார்கள். அது மிகவும் கொடுமையானது.

நீங்கள் பிற சமூக மக்களுடன் பழக அனுமதி இல்லை. உங்களுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது. பள்ளிக்குச் சென்றாலும் பின்வரிசையிலோ, தரையிலோ அல்லது சாக்குப் பையிலோ உட்கார வைக்கப்படுகிறீர்கள். இந்த வைரஸைக் கண்டறிய ‘RT-PCR’ சோதனைகள் எதுவும் கிடையாது; உங்கள் ‘பிறப்பு’தான் ஒரே பரிசோதனை. அதில் ‘பாசிட்டிவ்’ முடிவு வந்தால், பிறகு உங்களுக்குக் கல்வி இல்லை, பொதுச் சுகாதாரம் இல்லை, வேலைவாய்ப்பு இல்லை. உங்களால் சமூக ரீதியாக முன்னேறவே முடியாது. நீங்கள் பாதிக்கப்பட்ட ஒருவரையேதான் (அதே சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்துகொள்ள வேண்டும். இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை, இதற்குக் தடுப்பூசியும் கிடையாது. ஏனெனில், உண்மையில் அந்த வைரஸ் உங்களிடம் இல்லை; உங்களை ஒதுக்கி வைத்தவனின் மனதில்தான் இருக்கிறது. இதுதான் இந்தியச் சாதியமைப்பு.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
வியப்பாக இருக்கிறது. இதை இவ்வளவு நேர்த்தியாகவும், அறிவுப்பூர்வமாகவும் முன்வைத்தது மட்டுமல்லாமல், நகைச்சுவையைப் பயன்படுத்தி அதன் பாரத்தைக் குறைத்து, பாதிக்கப்பட்டவர்களின் புலம்பலாகத் தெரியாமல் செய்திருக்கிறீர்கள். தற்போதைய இந்தியாவின் அரசியல் சூழலில் இந்தக் கதையை எப்படிப் பயன்படுத்தினீர்கள்? அரசியல் சிக்கல்களைத் தவிர்த்துவிட்டு, அதன் ஆணிவேரைத் தொட்ட அந்த நுணுக்கமான தைரியத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
நீரஜ் கெய்வான்:
இந்தப் படத்தை எடுக்க நான் மிகவும் பயந்தேன். ஏனெனில், இதற்குப் பல எதிர்ப்புகள் வரும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இதைப் பிரச்சாரமாகவோ, அரசியல் முழக்கங்களாகவோ மாற்றாமல், ‘நட்பு’ என்ற புள்ளியின் மூலம் சொல்ல நினைத்தேன். ஒருவருக்கொருவர் இணைவது (Connection) என்பதே ஒருவகையான எதிர்ப்புதான். சென்சார் போர்டு சில சொற்களை வேண்டுமானால் நீக்கலாம். ஆனால், ‘நட்பை’ அவர்களால் எப்படித் தணிக்கை செய்ய முடியும்? எனது படம் அதிகாரத்திற்கு எதிரானது அல்ல; அது மனிதாபிமானத்திற்கு ஆதரவானது.
உலகம் போய்க்கொண்டிருக்கும் விதத்தைப் பார்த்தால், எல்லா இடங்களிலும் வெறுப்பு நிறைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. நாம் ஒருவரைப் பார்த்து “நீ இப்படி இருக்கிறாய், நீ இதைச் சாப்பிடுகிறாய், இப்படிப் பிரார்த்தனை செய்கிறாய், எனவே உன்னை எனக்குப் பிடிக்கவில்லை” என்று முத்திரை குத்துகிறோம். இந்த வெறுப்பு எல்லை மீறிச் சென்றுவிட்டது. எதிர்க் கருத்துள்ளவர்களுடனும் நாம் அமர்ந்து பேச வேண்டும், அவர்களின் தரப்பைப் புரிந்துகொள்ள வேண்டும் (Empathy). நாம் சித்தாந்த ரீதியாக மாறுபடலாம், ஆனால் நமக்கிடையேயான மனிதாபிமானத்தை மறந்துவிடக் கூடாது. அதுதான் இந்தப் படத்தின் நோக்கம். அதிகாரத்தில் இருப்பவர்களும் அதை உணர்ந்ததால்தான் படத்திற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
உண்மைதான். இந்தப் படத்தின் வலிமை உங்கள் நடிகர்களிடம் இருந்தும் வருகிறது. நீங்கள் அவர்களுடன் பணியாற்றிய விதம் பற்றிச் சொல்லுங்கள். எனக்கு இந்திய சினிமா பற்றி ஓரளவுக்குத் தெரியும். 14 அல்லது 15 வயதிருக்கும்போது தொலைக்காட்சியில் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்ட ‘பதேர் பாஞ்சாலி’ பார்த்திருக்கிறேன். பிறகு திரையரங்கில் ‘அபுர் சன்சார்’ பார்த்தேன். சமீபத்தில் ‘Days and Nights in the Forest’ படத்தின் புதுப்பிக்கப்பட்ட (restoration) வடிவத்தைப் பார்த்தேன். அத்தகைய படம் புதுப்பிக்கப்படுவது உண்மையில் நல்ல விஷயம். சத்யஜித் ராய் மட்டுமல்லாமல் குரு தத், மிருணாள் சென் எனப் பலரையும் நான் அறிவேன்…
இந்தியாவின் கலாச்சாரப் பின்னணி, சமூக – அரசியல் சிக்கல்கள் என இவ்வளவு அடுக்குகளைக் கொண்ட ஒரு கதையில் உங்கள் நடிகர்கள் எப்படி இவ்வளவு உணர்வுப்பூர்வமாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டார்கள்? அவர்கள் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நீரஜ் கெய்வான்:
உண்மையில் இதற்கான பணிகள் படப்பிடிப்புக்கு வெகு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. நான் திரைக்கதை எழுதும்போது, அதை எனக்கு நெருக்கமான ஒன்றாக மாற்ற விரும்புவேன். அதற்காக இந்தியா முழுவதும் பல கிராமங்களுக்குச் சென்றேன். அங்கே நான் பார்த்தது வெறும் ஷோயப் – சந்தன் கதையை மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான ஷோயப்கள் – சந்தன்களின் கதையை.
நடிகர்களிடம் நான் சொன்ன முதல் விஷயம்: ‘நீங்கள் சிறந்த நடிகர்களாக இருக்கலாம், ஆனால் அது மட்டும் எனக்குப் போதாது. நீங்கள் இந்தக் கதாபாத்திரங்களின் நிஜ வாழ்க்கைக்கு மிக நெருக்கமாகச் செல்ல வேண்டும்.’ இதற்காக அவர்களுக்கு, சாதியமைப்பைப் பற்றிய மிக முக்கியமான நூலான ‘சாதி ஒழிப்பு’ (Annihilation of Caste) புத்தகத்தைக் கொடுத்தேன். அதைப் படித்த பிறகுதான் அவர்கள் தங்களுக்கு இருக்கும் சமூகச் சலுகைகளை (Privilege) உணர்ந்து, இந்த உலகிற்குள் தங்களை ஒப்படைக்கத் தொடங்கினர். அவர்கள் என்னுடன் கிராமங்களுக்கு வந்தார்கள், எளிய வீடுகளில் சாப்பிட்டார்கள். அவர்கள் அந்த மக்களுடன் மக்களாகக் கலந்துபோவதற்காக, ஆரம்பத்திலேயே அவர்களுக்குச் சாதாரண உடைகளை வழங்கினேன்.
நடிகர்கள் மட்டுமல்ல, எனது படக்குழுவினரும் அதே மனிதாபிமானமும், உலகப் பார்வையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். திறமையை விட மனிதாபிமானம் (Empathy) மிக முக்கியம். படப்பிடிப்பில் ‘கோட் 360’ (Code 360) என்ற முறையைப் பின்பற்றுவோம். அந்தச் சமயத்தில் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள். நடிகர்களிடம் பேசும்போது கூட அந்தக் காட்சியின் உணர்வு குறையாமல் மெதுவாகப் பேசுவோம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், ஒவ்வொரு காட்சிக்கும் தனித்தனியான இசைப் பட்டியலை (Playlist) உருவாக்கி அதை ஒலிக்கச் செய்வேன். கிளாப் போர்டுக்கும் (clap board) இதே வழிமுறையையே பின்பற்றினேன். இன்னொரு விஷயத்தை நீங்கள் பெரும்பாலும் கவனித்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தனி பேச்சுவழக்கைப் பயன்படுத்தியிருப்பேன். மொழி – பண்பாடு போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பேன். ஏனெனில், சமூகம் அப்படித்தான் இருக்கிறது.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
ஆம், பேச்சுவழக்கு முக்கியமானதுதான். என்னுடைய ‘Mean Streets’ இங்கிலாந்தில் வெளியானபோது அவர்கள், “இந்தப் படத்திற்கு subtitles தேவைப்படும்” என்றார்கள். நானும் அதை ஆமோதித்தேன். படக்குழுவினர் இதில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொன்னதும் மிகச் சரியான ஒன்று.
நான் ‘ரேஜிங் புல்’ (Raging Bull) எடுத்தபோது, படத்தின் தன்மை குறித்து உடன் பணிபுரிபவர்கள் எல்லோரும் என்னைப் போலவே உணர்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் ஒருநாள் படப்பிடிப்பில், ‘யார் இந்த ஆளுடன் படம் எடுக்க விரும்புவார்கள்? எல்லோரும் மோசமான ஆட்கள்’ என்று படக்குழுவினர் ரகசியமாகப் பேசிக்கொண்டதைக் கேட்டேன். அவர்கள் தொழில்முறை கலைஞர்களாக இருந்தாலும், அந்தப் படத்தையும் அதன் மனிதர்களையும் வெறுத்தார்கள். ஆனால் உங்கள் படத்தில், அந்த மக்களின் மீது சமூக அன்பும் ஈடுபாடும் இருப்பதை என்னால் உணர முடிகிறது.
மேலும், இந்தப் படத்தின் வேகம் (Pacing) பற்றிச் சொல்லுங்கள். அந்த நீண்ட சாலைப் பயணம்… அவர்கள் படும் துயரம் எல்லாம் நம்மால் உணர முடிகிறது. ஆனால் அது எங்கும் சலிப்பைத் தந்துவிடவில்லை. குறிப்பாக, பேருந்தில் இருந்து அவர்கள் இறக்கிவிடப்படும் காட்சி. இறுதியில் அந்த இரு இளைஞர்கள் மட்டும் சாலையில் தனியாக நடப்பது… அதேபோல் தேர்வெழுதச் செல்வதற்காக எல்லோரும் இரயில் நிலையத்தில் காத்திருக்கும் அந்தப் பிரமிப்பான காட்சி… இவற்றைப் படமாக்கிய விதம் பற்றிச் சொல்லுங்கள்.
நீரஜ் கெய்வான்:
அதற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். திரைக்கதை விவாதத்தின்போதே நீங்கள் எனக்கு ஒரு மந்திரத்தைச் சொன்னீர்கள்: Stay with the boys. அது எனக்குப் பெரிய உதவியாக இருந்தது. படத்தில் நிறைய துணை கதாபாத்திரங்களும் அவர்களுக்கான பின்னணியும் இருந்ததால் எனக்கும் என்னுடன் திரைக்கதை எழுதிய சுமித் ராய்க்கும் இந்த மந்திரம் உதவியாக இருந்தது. படத்தொகுப்பின்போதும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், மைய கதாபாத்திரங்களான நண்பர்களுக்கு நான் ஒரு பாடல் காட்சியை எடுத்தேன். அது தேவையில்லை என்று நீங்கள் சொன்னபோது, நான் ஆரம்பத்தில் பிடிவாதமாக மறுத்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன், அந்தப் பகுதியை நீக்கியது கதையின் ஓட்டத்தை எவ்வளவு சீராக்கியது என்று. இயக்குநராக நமது படைப்பின் மீது நமக்கு ஈர்ப்பு இருக்கும், கிட்டத்தட்ட நமது குழந்தை போல. ஆனால் என்ன செய்வது, சில நேரங்களில் படத்தின் நன்மைக்காக இரசித்து எடுத்த காட்சிகளைக் கூட நீக்கத்தான் வேண்டியிருக்கிறது (Kill your darlings).
மார்ட்டின் ஸ்கார்செஸி:
ஆம், அந்தப் பாடலை நீக்கியதால்தான் அந்த இளைஞர்களின் மீதான அக்கறை பார்வையாளர்களுக்குக் கூடுகிறது. அவர்களின் அரசியல் – சமூகச் சிக்கல்கள் முழுமையாகப் புரியவில்லை என்றாலும், அவர்களின் மனிதாபிமானம் நம்மை வந்தடைகிறது. இன்னொன்று கேட்க வேண்டும்… படத்தில் சுமார் மூன்று அல்லது நான்கு முறை ஒருவரின் புகைப்படம் வருகிறது. டாக்டர்… அவர் பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை…
நீரஜ் கெய்வான்:
டாக்டர் அம்பேத்கர்
மார்ட்டின் ஸ்கார்செஸி:
அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
நீரஜ் கெய்வான்:
அது பெரிய வரலாறு. அவர் எங்களது ஆகச்சிறந்த நாயகன். இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும் போராடியவர். அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங் எப்படியோ, அதுபோல எங்கள் நாட்டின் மிக முக்கியமான தலைவர் அவர். டாக்டர் அம்பேத்கர் கொண்டு வந்த இடஒதுக்கீடு போன்ற உரிமைகளால்தான் என் குடும்பத்திலேயே முதன்முறையாக என் தந்தை பள்ளிக்குச் சென்றார். அவர் சென்றதால்தான் என்னால் ஒரு நல்ல பள்ளிக்குச் செல்ல முடிந்தது, பொறியியல், எம்பிஏ (MBA) எல்லாம் படிக்க முடிந்தது. இன்று நான் ஒரு திரைப்பட இயக்குநராக இருப்பதற்கும், எனக்கு இந்தச் சமூக அங்கீகாரம் கிடைத்திருப்பதற்கும் அவரே தொடக்கப்புள்ளி. நான் இந்தப் படத்திற்காகச் சந்தித்த அந்த ஏழைக் குடும்பங்களின் குடிசையில் வேறு எந்தச் சொத்துமே இல்லை, ஆனால் சுவரில் அம்பேத்கரின் நிழற்படம் இருந்தது. அது எங்களுக்கு வெறும் புகைப்படம் அல்ல; அது எதிர்ப்பின் அடையாளம். இனி நாங்கள் அவமானத்தைச் சுமக்கத் தயாரில்லை என்பதற்கான சான்று அது.

மிகச் சிறப்பான விஷயம். கடைசியாக ஒரு கேள்வி, உங்கள் மீது செல்வாக்கு செலுத்திய சினிமாக்கள் அல்லது இயக்குநர்கள் யார்? நீங்கள் வளர்ந்த சூழலில் உங்களைக் கவர்ந்த படங்கள் எவை?
நீரஜ் கெய்வான்:
நிச்சயமாக, அனுராக் காஷ்யப் எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர்’ (Gangs of Wasseypur) படத்தில் மூன்று ஆண்டுகள் உதவி இயக்குநராக இருந்தேன். அவரால்தான் இன்று ஓர் இயக்குநராக இங்கே இருக்கிறேன். கார்ப்பரேட் உலகில் கைநிறைய சம்பளம் வாங்குவதுதான் மகிழ்ச்சி என்று நினைத்துக்கொண்டிருந்த என்னை சினிமா மாற்றியது. எனது ரசனை மிகவும் பரந்தது. பெலினி (Federico Fellini), டார்டென் சகோதரர்கள் (Dardenne brothers), கென் லோச் (Ken Loach), பிறகு உங்கள் படங்கள் என் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் சத்யஜித் ராய் படைப்புகளும் எனக்குப் பிடிக்கும். சொல்லப்போனால், எனது வீட்டில் இருக்கும் இரு பூனைகளுக்கு ‘பெலா’ (Bela Tarr நினைவாக), ‘பெலினி’ என்றுதான் பெயர் வைத்துள்ளேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் சார். பொதுவாக நாம் ஒரு திரைப்படம் எடுக்கும்போது அது பெரிய உலகத் திருவிழாக்களுக்குச் செல்ல வேண்டும், விருதுகளை வெல்ல வேண்டும் என்று நினைப்போம். ஆனால், யாருடைய கதையை நாம் படமாக எடுக்கிறோமோ, அந்த விளிம்புநிலை மக்கள் அந்தப் படத்தைப் பார்ப்பதே இல்லை. அதனால்தான், விருதுகளை விட அந்த மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஒருவரின் பார்வையை இந்தப் படம் மாற்றினால் கூட அது எனக்குப் பெரிய விருதுதான்.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
உண்மைதான். இப்போது ஓடிடி தளங்கள் இருப்பதால் இந்தக் கதைகள் உலகெங்கும் உள்ள மக்களிடம் எளிதாகச் சென்றடைகின்றன. பல்வேறு மக்கள், பல்வேறு கலாச்சாரங்கள் என யாவும் இன்று கையடக்கத்திலேயே காணக் கிடைக்கின்றன. ஒருவன் தன்னைத் திரையில் காண்பது என்பது மிக அற்புதமான உணர்வு. உங்கள் முதல் படமான ‘மசான்’, இந்தியாவிலிருந்து வந்த ஒரு மிகச்சிறந்த சுயாதீனத் திரைப்படத்திற்கு (Independent Cinema) சிறந்த உதாரணம்.
நீரஜ் கெய்வான்:
ஆமாம். இந்தியத் திரைப்படங்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட மேலைநாட்டுப் பாணியைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் நிலவுகிறது. ஆனால், நான் அதன் இந்தியத் தன்மையை (Indianness) மாற்றாமல் சொந்த மொழியில் கதை சொல்ல விரும்பினேன். அதற்காகப் பெரிய விருதுகளை இழக்க நேரிட்டாலும் எனக்குக் கவலையில்லை.
மார்ட்டின் ஸ்கார்செஸி:
அதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். உங்களுக்குத் தேவையானதை நீங்களே உருவாக்க வேண்டும். உங்கள் வழியைப் பின்பற்றுங்கள். தெருமுனையில் நின்றுதான் உங்கள் படத்தைக் காண்பிக்க வேண்டும் என்றாலும், அதைச் செய்யுங்கள். அந்த இயக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
தமிழில்: சிவராஜ் பாரதி
] sivaraj53.sb@gmail.com




