சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் பட்டியல் சாதியினரின் அரசியல் பிரதிநிதித்துவம், மக்கள் தொகையில் பெரும்பான்மையினரின் வாழ்க்கையை ஏன் மேம்படுத்த தவறிவிட்டது? பொதுவாகக் கூறப்படும் காரணம், முற்போக்கான அரசுக் கொள்கையைத் திறம்பட எதிர்க்கும் ஆதிக்கச் சமூகக் குழுக்களால் சாதியச் சமத்துவமின்மை நிலைநிறுத்தப்படுகிறது என்பது. சிலர் கூட்டுத் தேர்தல் தொகுதி அமைப்பைச் சுட்டுகின்றனர்: இத்தொகுதிகள் பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் பட்டியல் சாதி வாக்காளர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முதன்மையாகப் பிற சமூகத்தவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் நடப்பு நிலையை மாற்ற எதுவும் செய்ய மாட்டார்கள் என்பதாலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றும் வாதிடப்படுகிறது. ஆனால், நான் முன்வைப்பது என்னவென்றால், இந்தப் பிரதிநிதித்துவத்தின் குறைந்தபட்ச விளைவுகளை இந்த இரண்டு கூற்றுகளாலும் போதுமான அளவு விளக்க முடியாது. ஏனென்றால் இவை இரண்டும், அரசுக்கு வெளியே தனிப்பட்ட ஓர் உலகமாக ‘சமூகம்’ இருப்பதாகவும், அதில் முன்கூட்டியே கொடுக்கப்பட்ட குழுக்களின் நலன் சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்றும் கற்பனை செய்கின்றன. இதற்கு மாறாக, அரசின் நடவடிக்கைகள் எப்படிச் சாதிக் குழுக்களையும், சாதிகளுக்கு இடையேயான உறவுகளையும் நிர்வகிக்கின்றன, உற்பத்தி / மறுவுற்பத்தி செய்கின்றன என்பவற்றை ஆராய்வது அவசியம். இதை 1950களின் பிற்பகுதி முதல் 1980கள் வரை தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் அனுபவித்த அநீதிகளைக் களைய முயன்ற டாக்டர் சத்யவாணி முத்துவின் வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் விளக்கலாம். முத்துவின் திறமை, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவை அவரை ஒரு சிறந்த பிரதிநிதியாக மாற்றின. தமிழ்நாட்டின் நல்லாட்சியும், சமூகத்தில் அதன் முற்போக்கான சித்தாந்தத்தின் பரவல் குறித்த ஒருமித்த மதிப்பீட்டையும் கருத்தில் கொண்டு, இத்தகையதொரு செயல்பாட்டாளரின் வெற்றிக்கான சிறந்த-வகை சூழ்நிலையைத் தமிழ்நாடு வழங்கியிருக்க வேண்டும். அவரது முயற்சிகள் ஏன் குறைந்த அளவு பலனை மட்டுமே அளித்தன என்பது குறித்த ஒரு பகுப்பாய்வு, அரசியல் பிரதிநிதித்துவத்தின் தற்போதைய மாதிரிகளில் உள்ள பரவலான குறைபாடுகளை வெளிப்படுத்துகிறது.
விடுதலைக்குப் பிந்தைய தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதித்துவம்
சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் என்பது, ஆதிக்கம் செலுத்தும் குழுக்களுடன் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்வதற்கான இன்றியமையாத அரசியல் உள்ளடக்குதலின் ஒரு வடிவம் என்ற வாதம், நவீன பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் மிக முக்கியமான சட்டப்பூர்வக் கோரிக்கைகளில் ஒன்றாகும்.1 இந்தியா விடுதலை அடைந்தபோது, அது குழு பிரதிநிதித்துவத்தின் காலனித்துவ வடிவங்களின் நிறுவன, சித்தாந்த மரபுகளின் அடிப்படையில் கட்டடைக்கப்பட்டது. அதில் குறிப்பாக, பட்டியல் சாதியினருக்கான ஒதுக்கீடுகள் குறித்துச் சீர்திருத்தவாதிகளுக்கும் பழைமைவாதிகளுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் ஒரே முன்மாதிரியைக் கொண்டிருந்தனர். அதாவது, சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் என்பது ‘அதிகாரத்தின் சலுகை’ என்பதாகும். பழைமைவாதிகள் அதை ஒருங்கிணைந்த ‘தேசம்’ என்ற பெயரில் பொறாமையுடன் ஏகபோகமாக்க விரும்பினர். அதே சமயம் சிறுபான்மை உரிமைகளுக்காக வாதிடுபவர்கள், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம், சிறுபான்மை மக்களை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்றும், அது இறுதியில் அனைவருக்கும் பலன் தரும் என்றும் நம்பினர்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





