திரை வணிக வெற்றி தோல்விகளைக் கடந்து சமூகத்தில் தொடர் உரையாடல்களை நிகழ்த்திக்கொண்டிருக்கும் பா.இரஞ்சித், இயக்குநராக மட்டுமே தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் சமூகத்தின் மீது பற்றுக்கொண்டு பல முக்கியமான முன்னெடுப்புகளை எடுத்துவருவது கவனிக்க வேண்டிய ஒன்று.
நீலம் பண்பாட்டு அமைப்பு, நீலம் இதழ், நீலம் பதிப்பகம், நீலம் சோசியல், கூகை திரைப்பட இயக்கம், மார்கழியில் மக்களிசை என நீள்கிறது இவரது பண்பாட்டுச் செயல்பாடுகள்.
கடந்த ஆறு ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவரும் ‘மார்கழியில் மக்களிசை’, ஓர் எதிர்ப் பண்பாட்டு நிகழ்வு. மார்கழி மாதத்தில், ஓர் அரங்கினுள் செவ்வியல் இசையை மட்டுமே நிகழ்த்துவதை மரபாகக் கொண்டியங்கிய வரலாற்றை மறுத்து மக்களிசையைப் பொதுமைப்படுத்தும் நிகழ்வு இன்று வெற்றியடைந்திருக்கிறது. மார்கழி உற்சவம் என்ற நிலை போய், மார்கழியில் மக்களிசை என்னும் பெயர் நிலைபெறத் தொடங்கிவிட்டது. இந்த மாற்றம் மிக முக்கியமானது.
நீலத்தின் தொடர் செயல்பாடுகளைக் கவனித்துவரும் மக்கள் தங்களை அதனுடன் இணைத்துக்கொண்டு ஆதரவளிப்பது எப்போதும் நிகழக்கூடியவையாக இருந்தாலும், இந்த ஆண்டு மக்கள் பெரும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறார்கள். மூன்று நாட்களில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். மூன்றாம் நாள் இருபத்தைந்தாயிரத்திற்குக் குறைவில்லாமால் கூடினர். பொதுவாக, திரையிசை நிகழ்வுகளுக்கு இத்தகைய கூட்டம் கூடுவது இயல்பானது. ஆனால், நாட்டுப்புற – பழங்குடி கலைஞர்கள், சுயாதீனக் கலைஞர்கள் என 600க்கும் மேற்பட்டோர் பங்களித்த மக்களிசைக்குக் கிடைத்த இந்த வரவேற்பு இதுவரை இந்தியாவில் நிகழாதது என உறுதியாகச் சொல்ல முடியும். அத்தோடு, மேடையில் இசைக்கப்படும், பாடப்படும் அரசியலை உணர்ந்து கொண்டாடியது அமெரிக்காவில் அறுபதுகளில் நடந்த Harleem Cultural Festivalக்கு இணையானது.
இந்நிகழ்வின் முக்கியச் சிறப்பு ‘மக்களிசை மாமணி’ எனும் விருது. இதன்மூலம் மூத்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். இன்னும் சொல்வதெனில், கொண்டாடப்படுகிறார்கள். தமிழகத்தில் நாட்டுப்புறக் கலையோடு தங்களைப் பிணைத்துக்கொண்ட எத்தனையோ கலைஞர்கள் உரிய இடமோ, அங்கீகாரமோ, சிறு கௌரவமோ கிடைக்காமல் மறைந்துவிடுகின்றனர். அவர்களது வாழ்நாள் கனவான ‘கலைமாமணி’ விருது எட்டாக் கனியாகவே இருக்கிறது. பல்வேறு அரசியல் சூழலில் சாதியும் பணமும் தீர்மானிக்கும் ஒன்றாக அது மாறிவிட்டது. பல கலைஞர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகி, தற்கொலைக்கு முயன்றதும் நடந்திருக்கிறது.
இந்நிலையில் நீலம் பண்பாட்டு மையம் அமைப்பானது, குறைந்தது ஐம்பது வருடங்கள் கலைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மூத்த கலைஞர்களைக் கண்டடைந்து கொண்டாடுகிறது. இது மிகுந்த பாராட்டுக்குரியது. ஏனெனில், நாட்டுப்புறக் கலைஞர்கள் வறுமையோடு போராடுபவர்கள்; பொருளாதார அழுத்தத்திலிருந்து மீண்டு வர நினைப்பவர்கள் என்பதைக் கடந்து அங்கீகாரமே அவர்களது குறிக்கோள். இந்த அங்கீகாரத்தை நீலம் பண்பாட்டு மையம் வழங்குகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் கலைஞர்களைத் தனியாக ஆவணப்படுத்துகிறது. குறிப்பாக, பிரமாண்டமான மேடையில் அவர்களைப் பற்றிய காணொலி வெளியிடப்படுகிறது. மலர் கொத்து, பொன்னாடை, நினைவுப் பரிசு, ரொக்கப்பணம் என அங்கீகரிக்கப்படுகிறார்கள். அரசு சாரா நிகழ்வொன்றின் வெகுமதி இவ்வளவு கனம் நிறைந்ததாக அமைவதனால் கலைஞர்கள் மகிழ்ந்து போகிறார்கள்.
அந்த வகையில் நிகழ்வின் மூன்றாம் நாள் இறுதியில் ‘மக்களிசை மாமணி’ விருது வழங்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த ராஜா ராணி ஆட்டக்கலைஞர், ஒப்பாரி பாடகர் தருமாம்பாள்; புதுச்சேரி அருகிலுள்ள நாதஸ்வர இசைக் கலைஞர் ஷி.மூர்த்தி ஆகிய இருவருக்கும் விருதளித்த நேரத்தில் மக்கள் அவர்களை அங்கீகரித்துக் கொண்டாடியது ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்வை மேலும் நிறைவாக்கியது.
இந்த முயற்சியில் எங்கள் அழைப்பை ஏற்று வந்து சிறப்பு செய்த அரசியல் ஆளுமைகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், திரை பிரபலங்கள், இந்நிகழ்வின் நோக்கத்திற்கு உதவிய ஒட்டுமொத்த குழுவிற்கும் அன்பும் நன்றியும்.
புகைப்படங்கள்: பார்த்திபன், சக்தி, ஆலியா, ஹயாத்தி,பிரணவ், காளீஸ்







