குலப் புதல்வி

பா.விக்னேஷ்

விடிந்ததுமே எலுமிச்சை வியாபாரி அய்யனார் வீட்டின் முன்பு கூட்டம் கூடிவிட்டது. அய்யனார் வீட்டுத் திண்ணையில் துண்டை வயிற்றில் கட்டிக்கொண்டு கண்களில் பூளை தள்ள துக்கத்தில் உட்கார்ந்திருந்தார். அய்யனாரின் இரு மகன்களின் குழந்தைகள் அவரைச் சுற்றி அரை தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். மருமகள்கள் வீட்டை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர். விளையாட்டுச் சாமான்கள், பாடப்புத்தகம், பைபிள், தின்பண்டங்கள் என எப்போதும் அலங்கோலமாக இருக்கும் வீடு, அன்று வித்தியாசமாகக் காட்சியளித்தது. தினமும் காலையில் அய்யனார் வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு மருமகள்களை “இன்னும் எழுந்திரிக்கலயா? வாசலக் கூட்டிப் பெருக்கித் தண்ணித் தெளிச்சுக் கோலம் போடுறதுல என்ன வம்போ தெரில” என்று அவர்களின் காதில் விழ கத்திக்கொண்டிருப்பார். நேற்று இரவு பெய்த மழை வாசலைச் சொதசொதவென்று ஆக்கியிருந்தது. கோழிகள் மண்ணைக் கிளறிப் புழுக்களைக் கொத்தித் தின்றுகொண்டிருக்க, மழை பெய்த ஈரத்தரையில் நாய்கள் நெளிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தன. அன்று தெருவில் யார் வீட்டிலும் சோறு பொங்கவில்லை. தெருவே முடங்கிப் போய் இருந்தது. கிழவிகள் ஒப்பாரியும் ஓலமுமாய் அய்யனாரைச் சுற்றிவளைத்து தலையிலும் மாரிலும் அடித்து அழுதனர். வீட்டின் உள்ளே சென்று வட்டமாக அமர்ந்து ஒப்பாரி பாடலைப் பாட ஆரம்பிக்க, கூட்டம் மேலும் கூடியது.

அய்யனாரின் மனைவி விஜயா ரொம்ப நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் சொல்லியிருந்தனர். ஒருவாரமாக கவலைக்கிடமாக இருந்தவரின் உயிர் பிரிந்ததாக நேற்று இரவே ஆஸ்பத்திரியில் இருந்து தகவல் வந்துவிட்டது. குமாரும் அர்ச்சுனனும் தங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் இரவே தகவலைத் தெரிவித்தனர்.

பங்காளி முறையாகிய நாகேந்திரன் “செரி, அடுத்து ஆக வேண்டிய வேலையப் பாப்போம்” என்று பேச்சைத் தொடங்கினார். “ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்குக் கொண்டு வர வேணாம். ஆம்புலன்ஸ்லயே நேர எரிக்கக் கொண்டு போயிருவோம்.”

“ஆமா, அதான் சரி” என்று கூடி இருந்த பெரியவர்கள் முடிவெடுத்தனர்.

“குமாரு, அர்ச்சன ஆஸ்பத்திரியில ஆகுற வேலைய பாக்கட்டும். கடேசி உள்ளவன் சந்துரு இங்கதான இறுக்கியான். மூணாவது படிக்குத் தகவல் சொல்லியாச்சா?” என்றார் நாகேந்திரன்.

“நேத்து நைட்டே போன் பண்ணிச் சொல்லிட்டேன். வந்துட்டு இருக்காங்க பக்கத்துல” என்றான் சந்துரு.

“வந்துட்டு இருக்காங்களாஞ் வேற யாரு வரா அவன் கூட?”

“அவ போய் தங்கியிருந்த இடத்துல இருந்தவங்களும் வராங்க”

“ஏய், அவன் இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ண பாக்குறானா? அவைங்க வந்தாய்ங்கன்னா சாதி சனங்க எவனும் அண்டமாட்டாய்ங்க பாத்துக்கோங்க…”

“அவ பாக்குறது முக்கியமா, இல்ல சாதி சனங்க முக்கியமா? அவ இருக்கும்போது இப்டிலாம் பேசாதீங்க… அப்றம் அவ நல்லா கேப்பா.”

“என்னடா அவ இவனு பேசிட்டு இருக்க, குடும்பமா கூடிட்டிங்களா”

சரக்கு ஆட்டோ வண்டி ஒன்று ஹார்ன் அடித்துக்கொண்டு தெருவுக்குள் நுழைந்தது. அந்த வண்டியில் கண்ணாடி ஐஸ்பெட்டி கொண்டு வரப்பட்டது. பெட்டியை எங்கே இறக்கி வைக்க வேண்டும் என்று டிரைவர் கேட்டார்.

“எதுக்குப்பா, யாருக்கு எடுத்து வந்துருக்கீங்க?”

“இந்திரானு சொல்லிட்டு ஒருத்தவங்கதான் ஆர்டர் கொடுத்துருக்காங்க. இந்த அட்ரஸ்தான் கொடுத்தாங்க.”

“இந்திராவா… அது யாரு?”

“அது நம்ம பிரபுவதான் இந்திரான்னு சொல்றாரு” என்றான் சந்துரு.

அவள் அவன் என குழம்பிப் போனார் நாகேந்திரன்.

“ஆஸ்பத்திரியில அறுத்துக் கொண்டுவரத வீட்டுலயா வைப்பீங்க, என்னட பேச்சு பேசுறீங்க…”

“எதுக்கு அவன் இந்த வேலைலாம் பன்றான்… அவன் இஷ்டத்துக்கு முடிவு பண்ணுவான? இவன் வரதே பாவம்… இப்போ ஒரு கூட்டத்த வேற வண்டி ஏத்திக் கொண்டுவரப் போறயான்.”

“அவங்கலாம் அவ கூட வேலை பாக்குறவங்க, தங்கியிருக்குறவங்க, படிக்குறவங்க” என்று சற்று கோபமாகச் சொன்னான் சந்துரு.

“என்னடா நீயும் அவ இவனு சொல்லிட்டு இருக்க… ஒங் அண்ணங்காரன”

“ஏன் அவ ஊர விட்டுப் போய் மாறுனது உங்களுக்குத் தெரியாதா?”

m

வருடங்களுக்கு முன்பு பிழைப்பிற்காகச் சொந்த ஊரில் இருந்து மதுரையில் உள்ள நிலையூர் கிராமத்தில் தஞ்சம் அடைந்தவர்கள்தான் அய்யனாரும் அவரது மனைவி விஜயாவும். அப்போது மூத்த மகன் குமாரும் இளைய மகன் அர்ச்சுனனும் சிறுவர்கள். பிரபு கைக்குழந்தை. அங்கு தோட்டவேலை, காட்டுவேலைகள் செய்து படிப்படியாக

முன்னேறி எலுமிச்சைப்பழம் வியாபாரம் செய்யத் தொடங்கினர். மூன்றாவது கண்டிப்பாக பெண் குழந்தைதான் பிறக்கும் என நம்பிக்கையாக இருந்தாள் விஜயா. ஆனால், மூன்றாவதும் ஆண் குழந்தையாக பிறந்தது. குமார், அர்ச்சுனனை விட பிரபுவைச் செல்லமாகவும் பாசமாகவும் வளர்த்தாள் விஜயா. தனி கவனிப்பாக பிரபுவைக் குளிப்பாட்டி, ஜடைப்பின்னி, பவுடர் அடித்து, பாவாடை சட்டை அணிவித்து, பொட்டு வைத்துப் பெண்பிள்ளை போல பாவித்து வளர்த்துவந்தாள். கடைசியாகப் பிறந்தவன் சந்துரு இருந்தும் பிரபு மீதான பாசமும் கவனிப்பும் குறையவில்லை. குமாரும் அர்ச்சுனனும் முடிவெட்டச் சென்றாலும் பிரபுவை வெட்டவிடுவதில்லை விஜயா. “நம்ம குலதெய்வம் பறநாச்சிக்கு நேந்து வெட்டிக்கலாம்” என்று சொல்லுவாள். “டேய் நீ ரொம்பலாம் வளக்க வேணா, கழுத்து வர வளத்துக்கோடா அம்மாவுக்காக” என்பாள் விஜயா. பிரபுவும் தன் அம்மாவுக்காக முடி வெட்டுவதில்லை. நம்மளை விட பிரபுவுக்கு முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்கிறதே என்று இவன் பள்ளித் தோழிகளும் தெருப் பெண்களும் ஆச்சரியமடைவதுண்டு. “அம்மாக்காரி பேச்ச கேட்டுக்கிட்டு இப்டித் திரியுறான்” என்று அய்யனாரும் கண்டுகொள்ளாமல் இருந்தார்.

எலுமிச்சை வியாபாரமும் சரிவர இல்லை. பிறகு அத்தொழிலை விட்டுவிட்டார். இருந்தாலும் எலுமிச்சை வியாபாரி அய்யனார் என்ற பெயர் மட்டும் நிரந்தரமாகிவிட்டது. குமாரும் அர்ச்சுனனும் பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிக்கவில்லை. அவர்களது தந்தை கட்டட வேலைக்குச் சேர்த்துவிட்டார். ஆனால், பிரபு படிப்பில் கெட்டிக்காரன். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களுக்கும் பிடித்தமான மாணவனாக இருந்தான். பிரபு ஆறாம் வகுப்பு படிக்கும்போது பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் மாறுவேடப் போட்டியில் இந்திரா காந்தி வேடம் அணிந்து முதல் பரிசை வென்று வந்தான். விஜயாதான் அலங்காரம் செய்து பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். நன்கு வளர்ந்த முடியும் அவனின் சிகப்பு நிறமும் அப்படியே இந்திரா காந்தி வேடத்திற்குப் பொருந்திப் போனது. பள்ளியில் பசங்களிடம் பேசுவதை விட தோழிகளிடமே அதிகமாகப் பழகவும், பேசவும், விளையாடவும் சேர்ந்து படிக்கவுமாக இருந்தான் பிரபு. சில மாணவர்கள் அவனைக் கேலி செய்தாலும் பொருட்படுத்துவதில்லை. அவன் தோழிகளும் அவனை விட்டுக்கொடுப்பதில்லை. தோழிகளுக்குப் பிடித்தவனாக இருந்தான். இதுவே ஒருநாள் பெரிய பிரச்சினையாகக் கிளம்பியது. “அந்தத் தெரு பையன் எதுக்கு நம்மத் தெரு பொண்ணுங்ககிட்ட பேசுறான்” என்று தெருவில் கூடி சலசலப்பு உண்டாகி தள்ளுமுள்ளு சண்டையானது. அய்யனார் பிரபுவைக் கயிறால் கட்டிவைத்து தண்டித்தார். “பொம்பள பிள்ளைங்க கூட இனிமே பேசுவியா, பழகுவியா?” என்று அடியும் உதையும் விழுந்தது. “பசங்கட்டதான் பேசணும் பழகணும்… ஆம்புள புள்ள மாதிரி நடந்துக்க” என்று கண்டித்தார்.

வீட்டில் அம்மாவுக்கு உதவி செய்வது, சமையல் செய்வது, தெருக்குழாயில் தண்ணீர்ப் பிடித்து வைப்பது என அவனால் முடிந்த வீட்டு வேலைகளை எல்லாம் செய்வான். விஜயாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமால் போகும்போதெல்லாம் அவன்தான் காலையில் எழுந்து வீடு வாசல் கூட்டி, சோறு வடித்து, இரவு பாத்திரம் கழுவி முடித்து, தூங்கப் போவான். “அப்பனும் அண்ணைங்களும் இப்போ மட்டும் ஏன்டா பொம்பள மாதிரி வேலை பாக்குறனு ஒரு வார்த்தை பேச மாட்டாய்ங்கஞ் தின்னுட்டுபுட்டு மோட்டம் மட்டும் பாக்குறது. நான் இல்லனா உன் புருஷன், மயங்க நாறிப் புடுவாய்ங்க” என்று அவன் அம்மாவிடம் சலித்துக்கொள்வான். அய்யனாரின் பங்காளிகள், சொந்தங்கள் இவனது செயலைக் கண்டு கேலியாகச் சிரித்தனர்.

அய்யனாரும் நாளடைவில் சரியாகிவிடுவான் என்று நினைத்துக்கொண்டு மேம்போக்காக அவனைக் கண்டித்து விட்டுவிடுவார். பன்னிரண்டாம் வகுப்புவரை அவனது பேச்சுத்தொனி, செயல்கள், பாவனைகள் எல்லாம் பெண் போலவே இருந்தது. இப்போதே கண்டிக்காவிட்டால் பிரச்சினையாகிவிடும் என்று அய்யனார் பிரபுவைக் கடுமையாக நடத்தினார். அடிப்பதும் உதைப்பதுமாக காலங்கள் ஓடின. அவனுக்கு ஆறுதலாக இருப்பது அம்மா விஜயா மட்டுமே. விஜயாவும் குற்றவுணர்ச்சியோடு,

“டேய் பிரபு, ஏன்டா இப்டி நடந்துக்குற… மத்த பசங்க மாதிரி இருடா.”

“ஏமா, உனக்கும் பிடிக்கலையா நான் இப்படி இருக்குறது?”

“எப்புறா உன்ன இப்டியே இருக்கவிட முடியும். நா பண்ண தப்புதான்… சின்ன புள்ளல இருந்து பொண்ணு மாதிரிதான் வளத்தேன்… ஆனா இப்போ அப்டி இருக்க முடியாதுல”

“நீ அப்படி என்ன வளக்கலானாலும் இப்டிதான் எனக்கு இருக்கப் புடிச்சிருக்கும். பொம்பள மாதிரி வேலைலாம் செய்றானு எல்லோரும் சிரிக்குறாய்ங்க, கேலி பண்றாய்ங்க. உனக்கு ஒதவியா இருக்கணும்னுதானே வீட்டு வேலைலாம் செய்யுறேன்.”

m

Illustration: Eleanor-Taylor

ஆட்கள் நிறைந்த கார் ஒன்று தெருக்குள் நுழைந்தது. தெருவில் நின்றுகொண்டிருந்தவர்கள் காருக்கு வழிவிட்டு பரபரப்போடு யார் வந்திருக்கிறார்கள் என்று எதிர்பார்ப்போடு பார்த்தனர். காரில் இருந்து இந்திரா கால்கள் தள்ளாட கதறிக்கொண்டு “யம்மா யம்மா” என்று தன் வீட்டை நோக்கிச் சென்றாள். இந்திரா துப்பட்டாவை முகத்தில் வைத்து அழுதுகொண்டே தன் அப்பா அய்யனார் முன் நின்று அழுதாள். அண்ணன்களின் குழந்தைகள் எழுந்து தன் அம்மாக்களிடம் ஓடின. காரில் இருந்த மீதமுள்ளவர்கள் கீழே இறங்கவில்லை. முணுமுணுப்புச் சத்தம் மட்டும் காருக்குள் கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டுக்குள் ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்த கிழவிகள் வெளிச் சத்தம் கேட்டு மூக்கைச் சிந்தியபடி வெளியே வந்தனர். கிழவி ஒருத்தி இந்திராவை அடையாளம் கண்டுகொண்டு, “எங்கடா போன இந்த கொலதெய்வத்த விட்டுபுட்டு இத்தன நாளா… பெணமா போனதுக்கு அப்புறமா வந்துருகியடா” என்று மாரில் அடித்துக்கொண்டாள். வெளியே வந்த கிழவிகள் இரண்டு மூன்று பேருமாகச் சென்று காரின் உள்ளே எட்டிப் பார்த்தனர். வாயைக் கையால் மூடிக்கொண்டும், தலையிலும் கால் தொடையிலும் அடித்துக்கொண்டும் சென்றனர்.

அய்யனார் இந்திரா வந்தது அறிந்தும் அவளைத் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவளின் கதறல் மட்டுமே அவர் காதுகளுக்குக் கேட்டது. மருத்துவமனையில் விஜயா அய்யனாரிடம் கடைசியாக இந்திராவைப் பற்றிதான் பேசினாள்.

“நான் பொழைக்கலனா இந்திராவ கூப்டு வந்து மகளா வளத்துப் பாத்துக்கோ. அவளும் உன்ன பாத்துப்பா. அவ சொமையா இருக்க மாட்டா, ஒதவியாதான் இருப்பா உனக்கு.”

கூடியிருந்த கூட்டம் இந்திராவை ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தனர். “பிரபுவா இப்டி வந்துருக்கான்” என்று பேசிக்கொண்டனர். லதாவும் ஜெபாவும் வாசற்படியில் நின்றுகொண்டு ‘அப்படியே பெண் போலவே இருக்கிறான்’ என்று பார்வை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். அய்யனார் இந்திராவை முகம் கொடுத்துப் பார்க்கவில்லை, நெடுநேரம் நின்று அழுது களைத்துப் பக்கத்துத் திண்ணையில் அமர்ந்தாள் இந்திரா.

இந்திரா காரில் இருந்தவர்களை வெளியே வரும்படிச் சொன்னாள். அவர்களும் காரில் இருந்து இறங்கி வீட்டின் திண்ணை அருகே வந்து நின்றனர். அங்கே கூடியிருந்தவர்கள் ஏதும் பேசாமல் அந்தப் பெண்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். லதாவும் ஜெபாவும் அவர்களை வீட்டுக்குள் வந்து உட்காரச் சொன்னார்கள். நம் தோழிகளின் வருகை அவர்களையே சங்கடத்தில் ஆழ்த்திவிடும் என்று வருத்தத்தில் இருந்தாள். ஆனால், அண்ணிகளின் அனுசரிப்பு இந்ராவுக்குச் சற்று நிம்மதியைத் தந்தது.

m

பல கதைகளையும் புரளிகளையும் மாறி மாறிப் பேசிக்கொண்டது கூட்டம். பிரபு தன் விருப்பத்திற்கே வீட்டைவிட்டு வெளியேறினான். இங்கேயே இருந்தால் நாம் நினைத்தபடி முன்னேறி வர முடியாது என்று. தன் உடலின் உண்மை உணர்வை முழுதாக்க எண்ணினான். பி.ஏ ஆங்கிலம் பயின்ற பிரபு, கல்லூரி பேராசிரியர்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவனாக இருந்தான். அவனது உணர்வுகளை மதிப்பவர்களாகச் சில பேராசிரியர்கள் இருந்தனர். பிரபு அவர்களிடம் தன் எண்ணங்களைத் தாராளமாகப் பகிர்ந்துகொள்ள முடிந்தது. மதியம் கல்லூரி நேரம் முடிந்து பிறகு, பகுதி நேரமாக சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பில்லிங் வேலை செய்தான். பெரும்பாலும் படிப்புச் செலவிற்குத் தன் பெற்றோரையும் அண்ணன்களையும் நம்பியிருக்கவில்லை. கல்லூரியில் சேரும்போதும் மட்டும் தன் அம்மா நகையை அடகு வைத்துக் கட்டணம் செலுத்தினான். வேலை பார்த்து சேமித்த பணத்தை வைத்து, தனக்குத் தெரிந்தவர்களிடமும், ஆசிரியர்களிடமும், பேராசிரியர்களிடமும் விசாரித்து சென்னையில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை முடிந்தது. பிரபு முழுதாக இந்திராவாக மாறினாள்.

தனக்குப் பிடித்த மாதிரி தன்னை மாற்றிக்கொண்டதாக அம்மாவிடம் தொலைபேசியில் தெரிவித்தாள் இந்திரா. இவளைப் போன்றே அறுவைச் சிகிச்சை செய்தவர்களின் பழக்கமும் நட்பும் கிடைத்தது. அவர்களுடன் சேர்ந்து வேலைக்குச் சென்று அவர்களுடனேயே தங்கிவிட்டாள். இந்திராவுக்கு இவர்களுடன் இருப்பது மிகவும் பிடித்துப்போனது. அவள் மனதளவில் தன்னை மாற்றிக்கொண்டாலும், உடளவில் பல குழப்பங்களும் பயமும் இருந்தன. உடலின் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அவளுக்கு நேரம் தேவைப்பட்டது. அவளின் புது தோழிகளும் மனிதர்களும் அவளுக்கு உறுதுணையாகவும் குழப்பங்களுக்கு விடை கொடுப்பவர்களாகவும் இருந்தனர். இந்த நங்கைகள் கூட்டம் எப்போதும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுப்பதில்லை. தங்களைப் போன்ற பெண்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைப்பாகவும் அன்பாகவும் பார்த்துக்கொண்டனர். சேர்ந்து வேலைக்குச் செல்வது, சேர்ந்து படிப்பது என்று தனிக் கூட்டமைப்பாக வாழ்ந்துவந்தனர். தங்கள் குடும்பம், வெளிச்சமூகம் பற்றி அவர்கள் பெரிதும் கவலைப்படுவதில்லை. சிலர் சம்பாதிக்கும் பணத்தை தங்கள் குடும்பத்திற்கு அனுப்பி வைப்பார்கள். எப்போதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவே இருக்க நினைப்பார்கள். அவர்களுக்குள் ஒரு போட்டி உண்டு, யார் முதலில் கல்யாணம் பண்ணுவது என்று. ஏற்கெனவே தங்கள் கூட்டத்தில் ஒருத்தி கல்யாணம் முடித்துச் சென்றுவிட்டாள்.

பல நாட்கள் கழித்துத் தன் முகத்தையும் உடம்பையும் வீடியோ கால் மூலம் அம்மாவிற்குக் காட்டினாள். அன்று அவள் பட்டுச் சேலை அணிந்து அலங்கரித்து மணப்பெண் போல் இருந்தாள். முதன்முதலில் இந்திராவைப் பார்த்ததும் விஜயாவுக்குச் சிறு புன்னகை வந்தது, பிறகு அழுகையும் வந்தது. சந்தோசமும் அழுகையுமாய், “டேய் பிரபு!”

“என் பேரு இப்போ என்ன தெரியுமா?”

“என்னடா பேரு மாத்திக்கிட்டியா?”

“ஆமா, இனிமே என்னடா, வாடா, டேய் பிரபுனு கூப்ட கூடாது. இந்திரானுதான் கூப்டணும்”

விஜயா அழுகையும் சிரிப்பும் கலந்து “இந்திராவா?”

“ஆமா எங்க கூப்டு” சிரித்துக்கொண்டே கேட்டாள்.

“டேய் இந்திரா”

இந்திராவும் விஜயாவும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.

இந்திராவுக்கும் தன் வீட்டுக்கும் உள்ள ஒரே தொடர்பு தொலைபேசி மட்டுமே. அதுவும் விஜயா தன் கடைசி பையன் சந்துருவிடம் கெஞ்சிக் கூத்தாடி போனை வாங்கி இந்திராவிடம் பேசுவாள். அவர்களின் தொலைபேசி உரையாடல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே சென்றது. அய்யனார் தன் மனைவியைக் கடிந்துகொண்டார்.

“அவன் கூட போன்ல பேசுறத நிப்பாட்டு. அவன் எங்கயோ தொலைஞ்சு போகட்டும். வீட்டுப்பக்கலாம் வரக்கூடாது”

குடும்பத்தில் உள்ளவர்களும் அவள் எப்படி இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்று கேட்பதில்லை. அவள் தம்பி சந்துரு மட்டும் எப்போவாவது போனில் பேசிக்கொள்வான்.

“செலவுக்கு ஏதும் காசு வேணும்னா கேளுட, நல்ல வேலைக்குப் போய்தான் சம்பாரிக்குறேன்.”

சந்துருவுக்குத் தன் அக்கா மீது வெறுப்போ கோபமோ இல்லை. அவளை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் இருந்தான். இந்திராவிடம் இருந்து போன் வந்தால் உடனே போய் தன் அம்மாவிடம் கொடுத்துவிடுவான்.

m

அப்பா தன்னிடம் முகம் பார்த்துப் பேசுவார் என்று எதிர்பார்த்துப் பக்கத்துத் திண்ணையில் உட்கார்ந்து

கொண்டிருந்தாள். ஆனால், அவர் குனிந்த தலை நிமிராமலே இருந்தார். சிறிது நேரம் கழிய கொட்டுக் குழு ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கியது. அங்கிருந்த கூட்டம் சலசலப்புக்கு உண்டானது. இரண்டு மூன்று பேர் தப்பாட்டக் குழுவினரிடம் போய் பேசினர். “இங்கு யாரும் கொட்டு மேளம் கேட்கலையே, யார் வர சொன்னது?” அவர்கள் இந்திரா என்ற பெண்தான் முன்பணம் கொடுத்து வரச் சொன்னதாகச் சொன்னார்கள். ‘அதெல்லாம் வேணாம், நீங்கள் கிளம்புங்கள்’ என்று வாக்குவாதம் பண்ணினார்கள். இந்திரா பக்கத்துத் திண்ணையில் அமர்ந்திருந்தாள்.

“அவதா வர சொல்லிருக்கால, அப்றம் எதுக்கு வாக்குவாதம் பண்றிங்க… அவ என்னமும் பண்ணிட்டுப் போறா… ஒங்களுக்கு என்ன?” என்று சந்துரு வாதாடினான்.

அய்யனார் இப்போதாவது கண்டிப்பாகப் பேசுவார் என எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் வாயைத் திறக்கவேயில்லை. லதா இங்கு நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் அவ்வப்போது தொலைபேசியில் தன் கணவன் குமாருக்குத் தெரிவித்துக்கொண்டிருந்தாள். அவளும் மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

கொட்டுக்காரர்கள் தீயை மூட்டி மிதமான சூட்டில் கொட்டுமேளத்தைத் தட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். சேர்கள் எல்லாம் ஓரத்தில் நகர்த்தப்பட்டு, கொட்டுக்கார்கள் பந்தல் நடுவே வட்டமாக நின்று மரியாதை செய்தனர். கொட்டும் பறை சத்தம் மெதுவாக எழும்பி, பிறகு காதைப் பிளக்க எகிறியது. பக்கத்துத் தெருவிலிருந்து குழந்தைகள் ஓடிவந்து கூடினர். கொட்டுச்சத்தத்தில் முணுமுணுப்புகள் சலசலப்புகள் பார்க்க முடிந்ததே தவிர, கேட்க முடியவில்லை.

“அவன் இஷ்டத்துக்குப் பொணத்த வீட்டுக்கு வர வச்சு படுக்கப் போடுறான். யாரைக் கேட்டு முடிவு பன்றான். பங்காளி மக்க ஒருத்தனும் பொணத்த தூக்க வரமாட்டோம் பாத்துக்கோ” என்று அய்யனாரிடம் முறையிட்டனர் பெரியவர்களும் பங்காளிமார்களும்.

இந்திரா திண்ணையில் உட்கார்ந்தபடியே “எவனும் எங்க அம்மாவத் தூக்கிக்கொண்டு போயி அடக்கம் பண்ண வேணாம். அத எப்படிப் பண்ணணும்னு எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரம் இல்லனா வாய அமிக்கிட்டு இருக்கணும்” என்று உரக்கச் சொன்னாள். எல்லோரும் அடங்கிப் போனார்கள்.

“அவ என்னவோ பண்ணிட்டுப் போறா, விட்டுப்போக வேண்டியதுதானே… அப்பதான நாலு பேரு வந்துட்டுப் போவாங்க” என்று ஜெபா லதாவை வீட்டுக்குள் அழைத்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

“நீ எதுக்கு இதச் சொல்றனு எனக்குத் தெரியும்ல” என ஜாடையாகச் சொன்னாள் லதா.

நீல வானத்தில் மேகங்கள் வேகமாக நகர்ந்து சென்றன, வெயிலும் மந்தமாக இருந்தது. பந்தல் நிழலும் வெளி நிழலும் ஒன்றாகவே இருந்தன. கருமேகங்கள் உண்டாகச் சில நேரம் இருந்தது.

கொட்டும் பறைச் சத்தம் அவ்வப்போது விட்டுவிட்டு ஒலித்தன. போஸ்ட் மார்ட்டம் முடிந்துவிட்டதாகவும், சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலமாக வந்துவிடுவோம் என சந்துருவுக்கு அர்ச்சுனன் தொலைபேசியில் தகவலைச் சொன்னான்.

இறந்த உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லும் இரு பக்கமும் கம்பீரமாகச் சிங்கங்கள் பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தி வந்து சேர்ந்தது. “நெனச்ச மாதிரியே எல்லாத்தையும் பண்ணிட்டான்ல” என்று அங்கே இருந்தவர்கள் பேசிக்கொண்டனர். கருமேகங்கள் சூழ்ந்தன. எல்லோர் முகமும் இருட்டடித்தது கொட்டும் பறையில் சாமி இறங்கி ஆடுவதுபோல மழை இறங்கிக்கொண்டிருந்தது. சிலர் முன்னெச்சரிக்கையாக அய்யனார் வீட்டுக்குள் சென்றுவிட்டனர். சிலர் பக்கத்து வீட்டினுள் தஞ்சம் அடைந்தனர். முதல் மழைத் துளி தரையில் விழும்வரை பறைச் சத்தம் அடங்கவில்லை. சில நொடிகளிலேயே சடசடவென்று கொட்டியது மேகம். நாய், பூனை, கோழி, மாடுகள் அனைத்தும் ஓடி அடைந்தன. சிறிது நேரம் துக்கம் தொலைந்தது. சேதம் அடைந்த சிமெண்ட் சாலையில் மழைநீர் தேங்கியது. சாமியானா பந்தல் கலையிழந்து ஒடுங்கியிருந்தது.

உடல் ஆம்புலன்ஸில் வந்துகொண்டிருக்கிறது என்ற தகவல் தெரிந்ததும் அய்யனார் திண்ணையில் இருந்து எழுந்தார். நீண்ட நேரம் கழித்து அப்போதுதான் அய்யனார் எழுந்ததை எல்லோரும் பார்த்தனர். அவர் துண்டை எடுத்துத் தோளில் போட்டு ஒரு சேரை எடுத்துப் பந்தல் நடுவே போடப்பட்டிருந்த ஐஸ் கண்ணாடிப் பெட்டி அருகே வந்தமர்ந்து, பெட்டி மீதுள்ள மழைத் தண்ணீரைத் துண்டால் துடைத்துவிட்டார். எல்லோரும் அய்யனார் செய்வதைப் பார்த்துக் கலங்கி நின்றனர்.

மழை ஓய்ந்தது. பந்தலில் இருந்து ஒழுகிய நீர் தரையை ஈரமாக்கி, தரையில் சிறு சிறு ஊத்து குழிபோல உருவாக்கியது. கண்ணாடிப் பெட்டி மீது சொட்டுச் சொட்டாக மழைத்துளி பட்டுத் தெறித்தன.

ஆம்புலன்ஸ் அருகே வந்துவிட்டதாக சந்துருவுக்கு அர்ச்சுனன் போனில் தெரிவித்தான். எல்லோரும் பரபரப்புடன் தெருவில் கூடினர். ஒப்பாரி ஓலச்சத்தம் மீண்டும் ஆரம்பித்தது. இந்திரா, லதா, ஜெபா மூவரும் ஒருவருக்கொருவர் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு கதறி அழுக குழந்தைகளும் பரபரப்பு தாங்காமல் அவர்கள் அம்மா அழுவதைக் கண்டு அழுதனர். அய்யனார் சேரில் இருந்து எழவேயில்லை. கண்ணாடிப் பெட்டி அருகே இரு கைகளையும் கூப்பி மாரில் வைத்துக்கொண்டார். கொட்டுக்காரர்கள் பறை அடிப்பதை நிறுத்திக்கொண்டனர். வாங்கி வந்த மாலை, சேலை, வேஷ்டிகளைத் தயாராக எடுத்து வைத்தனர் சொந்தங்களும் பங்காளிகளும், குமாரும், அர்ச்சுனனும் டூவீலரில் முதலில் வந்து இறங்கினர். இருவரையும் பெண்கள் கிழவிகள் சூழ்ந்துகொண்டு அழுதனர். ஆம்புலன்ஸ் எதிர்த் தெருவில் சென்று பின்நோக்கி அய்யனார் வீட்டு முன்பு வந்து நின்றது. சந்துரு வண்டியில் ஏறி தன் அம்மா உடலைத் தொட்டுக் கும்பிட்டு உடலை வெளியே தள்ளினான். அர்ச்சுனன் குமாரும் சேர்ந்து ஒன்றாகத் தங்களது அம்மாவின் உடலைத் தூக்கிச்சென்று கண்ணாடிப் பெட்டி மீது வைத்தனர். அம்மாவைக் கட்டியணைத்துக் கதறினாள் இந்திரா. அய்யனார் தன் மனைவி விஜயா தலையில் கையை வைத்துத் துக்கம் தாளாமல் அழுதார். விஜயா தன்னிடம் கடைசியாகப் பேசிய வார்த்தைகள்தான் அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தன. இந்திரா வாங்கி வந்த சேலையை விஜயா உடலைச் சுற்றி வைத்தனர். உடல் மீது கண்ணடிப் பெட்டியால் மூடப்பட்டு அதன் மீது மாலைகள், சேலைகள், வேஷ்டிகள் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்திராவின் தோழிகள் வந்து விஜயாவுக்கு இரங்கல் தெரிவித்துவிட்டு, அய்யனாருக்கு ஆறுதல் சொல்லினர். அய்யனார் தலை நிமிர்ந்து அவர்களைப் பார்த்து நன்றி உணர்வாகக் கையெடுத்துக் கும்பிட்டார். கொட்டுப் பறை மீண்டும் ஒலித்தது. இந்திரா தன் அப்பா அருகிலேயே அமர்ந்திருந்தாள். அப்பா தன்னிடம் முகம் கொடுத்துப் பேசுவார் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். ஆனால், அய்யனார் தலையைக் குனிந்து கண்ணாடி பக்கவாட்டில் மனைவி முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். லதாவும் ஜெபாவும் பெட்டி மீது போடப்பட்டிருந்த பூமாலைகளை எடுத்துத் திண்ணையில் குவித்தனர். ஜெபா சிலர் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பயமும் இருந்தது, அவர்கள் வந்தால் என்ன பிரச்சினை வருமென்று. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எல்லோரும் இத்திராவையும் அவளுடன் வந்த பெண்களைப் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தனர். சிலர் குமாரிடமும் அர்ச்சுனனிடமும் இந்திரா வந்ததையும் அவள் செய்யும் செயலையும் பற்றிப் புகார் கூறினர். “உங்க அப்பாவும் காலைல இருந்து ஏதும் வாய தொறக்க மாட்றாரு… உங் தம்பிக்காரன் இஸ்டத்துக்குப் பண்றியான், என்ன ஏதுனு கேக்கணும்ல” என்று நாகேந்திரன் மீண்டும் வாயாடினார். “நாங்க செய்ய வேண்டியதெல்லாம் அவ பண்ணிட்டுப் போறா விடுங்க… அவளே இப்போதான் இங்க வந்துருக்கா” என்று குமார் சொன்னான். அர்ச்சுனனும் எதுவும் பேசாமல் தன் அண்ணன் கூறியது சரியே என்று இருந்தான். குடும்பத்தார்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பது சிலருக்குப் பிடிக்கவேயில்லை. அய்யனாரும் வாய் திறக்காமல் இருப்பது எரிச்சலாகவும் கோபமாகவும் இருந்தது அவர்களுக்கு. எல்லோரும் அஞ்சலி செலுத்திய பின்னர், நீர்மாலை எடுப்பதற்கான வேலை நடந்துகொண்டிருந்தது. ஆட்டோவில் இருந்து வெள்ளை உடையணிந்த இரண்டு பாதிரியார்கள் வந்து இறங்கினார்கள். அர்ச்சுனன் அவர்களை அழைத்து வந்தான். பாதிரியார்கள் வருவதைப் பார்த்ததும் ஜெபா சேலை முந்தானையை எடுத்துத் தலையில் முக்காடு போட்டுக்கொண்டாள். அவர்களின் வருகையை எதிர்த்து சிலர் “நீங்க எதுக்கு வந்துருக்கீங்க? உங்க கடவுளயா இங்க கும்புடுறாங்க… கௌம்புங்க இங்க இருந்து” என்று நாகேந்திரனும் மற்ற சிலரும் எச்சரித்தனர். “எங்க அம்மாவுக்கு மரியாத பண்ண வந்துருக்காங்க உங்களுக்கு என்ன?” என்று அர்ச்சுனன் எதிர்த்துக் கேட்டான். மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு உண்டானது. அவர்கள் கண்டிப்பாக வரக்கூடாது என்று உறுதியாக இருந்தனர் நாகேந்திரனும் சிலரும். பொறுமை தாளாமல் இந்திரா எழுந்து கூட்டத்தை விலக்கி “செத்துப் போனது எங்க அம்மா, யாரு வேணும்னாலும் வந்து மரியாதை பண்ணிட்டுப் போறாங்க. உங்களுக்கு என்ன? யாரும் வரணும் யாரு வரக்கூடாதுனு நீங்க எதுக்கு முடிவு செயிரிங்க?” என்று உரக்கச் சொன்னாள். எல்லோரும் அமைதியாகிப் போனார்கள். பாதிரியார்களை அழைத்து வருமாறு ஜெபாவிடம் கூறினாள் இந்திரா. இரண்டு பாதிரியார்களும் இந்திராவின் தோழி ஒருத்தியும் பைபிள் வாசகங்களைப் படித்து விஜயாவுக்கு அஞ்சலி செலுத்தினர். அய்யனாருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஆறுதல் கூறி “என்ன உதவி வேணும்னாலும் செய்ய நாங்கள் இருக்கிறோம்” என்று ஆசிர்வதித்துக் கிளம்பினர். பாதிரியார்கள் வந்து சென்ற பிறகுதான் ஜெபாவுக்கு நிம்மதி வந்தது.

தெரு முனையில் உள்ள குழாயில் அய்யனார் குடும்பம் தலை மூழ்கி நீர்மாலை எடுத்து வந்தனர். இந்திராவுக்குச் சேலை மாற்றப்பட்டு, தலையில் தண்ணீர்க்குடம் ஏற்றிக்கொண்டாள். முதல் ஆளாக அய்யனார் விஜயாவுக்கு வாய்க்கரிசி போட்டார். பின்பு மகன்கள் மனைவிமார்கள் போட்டனர், கடைசியாக இந்திரா தன் அம்மாவுக்கு வாய்க்கரிசி போட்டாள். இந்திராவாகத் தன்னை அம்மா பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் வருத்தம் அவளை உலுக்கியது. மீண்டும் மழை வருவது போல் இருந்தது. சீக்கிரம் உடலை எடுக்க வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள். விஜயாவின் உடலைப் பெட்டியில் இருந்து எடுக்கும்போது, இந்திரா சாமி ஆடுவது போல கதறி தன் அம்மாவைக் கட்டிப் பற்றிக்கொண்டாள். அவளைச் சமாதானப்படுத்த எந்தப் பெண்களும் முன்வரவில்லை. இந்திராவின் தோழிகள் மட்டுமே அவளைப் பிடித்து இழுத்தனர். பிறகு லதாவும் ஜெபாவும் இந்திராவை தாங்கிப் பிடித்துக்கொண்டனர். விஜயாவின் உடல் அலங்கார ஊர்தியில் படுக்க வைக்கப்பட்டது. கொட்டுப் பறைச் சத்தம் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தது. அரை வட்ட வானவில் வானில் தோன்றியது. எல்லோரும் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். தெரு முனையில் பானை உடைக்கப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது.

“ஏய், இந்திரா அமைதியா இரு” என்று ஜெபா இந்திராவின் கையைப் பற்றி இறுக்கிக்கொண்டாள். “யம்மா போகதமா யம்மா… யப்பா என்னையும் கூட்டிட்டு போப்பா, நானும் வரேன்” என்று திமிறினாள். அய்யனார் கையில் தீச்சட்டியுடன் இந்திரா முன் வந்தார். இப்போதுதான் அய்யனார் இந்திராவின் முகத்தை முழுதாகப் பார்த்தார். “கைய விடுங்க, கைய விடுங்க… அவ வரட்டும்” என இந்திராவின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார்.

] pvvignesh68@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger