26
சில ஊர்களின் பெயர்கள் நிறைய இடங்களில் வழங்கப்படுவதுண்டு. அதற்கான காரணம், சில இடங்களில் துல்லியமாகவும் சில இடங்களில் பொதுவாகவும் சொல்லப்படும். அந்த வகையில் தமிழகத்தில் அதிகமாக வழங்கப்படும் ஊர்ப்பெயர்களில் ஒன்று ஆதனூர். திட்டக்குடி வட்டத்தில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆதனூர்கள் உள்ளன. வண்டலூர் அருகே ஆதனூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள ஆதனூர், வேதாரண்யம் ஆதனூர், பாபநாசம் ஆதனூர், திருத்துறைப்பூண்டி ஆதனூர், நீடாமங்கலம் ஆதனூர், கும்பகோணம் ஆதனூர், காட்டுமன்னார்குடி ம.ஆதனூர், சேத்தியாதோப்பு பு.ஆதனூர், கம்மாபுரம் கோ.ஆதனூர், ஊ.ஆதனூர், குன்னம் வட்டத்தில் இரண்டு ஆதனூர்கள் எனப் பல இடங்களில் இருக்கின்றன. ஆதனூர் என்பதை ஆதன் + ஊர் என்று பிரிக்கலாம். இதன்படி, ஆதனூர் மட்டுமல்ல ஆதன் என்பதை அடியாகக் கொண்ட பிற பெயர்களும் இருக்கின்றன. திட்டக்குடி, திருக்குவளை, கலசபாக்கம் ஆகிய வட்டங்களில் ஆதமங்கலம் என்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன. திட்டக்குடி வட்டத்தில் மேலாதனூர், கீழாதனூர் உள்ளன. குத்தாலம் அருகே அகர ஆதனூர், செந்துறை ஆதனக்குறிச்சி, புதுக்கோட்டை ஒரத்தநாடு ஆகிய இரண்டு வட்டங்களிலும் ஆதனக்கோட்டை உள்ளன.
நந்தனார் பிறந்த ஆதனூர்
ஆதனூர் என்ற பெயர் வேறுவிதத்தில் முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. அதாவது, நந்தனார் பற்றிய எல்லாக் கதைகளிலும் அவர் பிறந்த ஊர் ஆதனூர் என்று குறிப்பிடப்படுகிறது. சிதம்பரம் பகுதியில் நிறைய ஆதனூர்கள் இருப்பதால், நந்தனார் பிறந்த ஆதனூர் எது என்பதில் பல விவாதங்களும் போட்டிகளும் இருந்தன. காட்டுமன்னார்குடி ம.ஆதனூரில் சிலையோடு கூடிய நந்தனார் கோயில் திறந்தது மூலம் அதுதான் அவர் பிறந்த ஊர் என்று தற்காலிக முடிவு எட்டப்பட்டிருக்கிறது. வைத்தீஸ்வரன் கோயில் அருகேயுள்ள ஆதமங்கலம் சென்றபோது ஏற்கெனவே அங்கிருந்த தர்மசாஸ்தா கோயில் புணரமைத்துக் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அங்கிருந்த ஒருவர் ஆதமங்கலம்தான் அந்தக் காலத்தைய ஆதனூர் என்றார். எனவே, மக்களிடம் ஆதமங்கலம் என்பதையும் ஆதனூர் என்பதையும் ஒன்றாகக் கருதும் எண்ணம் இருப்பதைப் பார்க்க முடிந்தது. மங்கலம் என்னும்போது அது இறையிலி, நிலதானம் என்பவற்றோடு தொடர்புடையதாகிறது. இதுவரை கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது ஆதன் என்பதும், ஆதனூர் என்பதும் பழைய பெயர் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதேவேளையில் இன்றைக்கு ஆதனூர் என்னும் பெயரிலிருக்கும் ஊர்கள் பெரும்பாலானவை கிராமங்களே. ம.ஆதனூரிலிருந்த ஒரு பூசாரியிடம் பேசியபோது, ஆதனூர் ஒரு காலத்தில் பெரிய ஊராக இருந்ததாகவும், இதே பெயரில் 22 கிராமங்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில், ஆதனூரில் நந்தனார் பிறந்தாரா இல்லையா என்பதைவிட அவர் பிறந்த ஊர் ஆதனூர் என்று சொல்லப்பட்டிருப்பதற்கான காரணத்தை அறிவதே இங்கு முக்கியமாகிறது.
வழக்காற்றில் ஆதன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தன் உறுப்பினர்களுக்குத் தமிழ்ப்பெயர் மாற்றத்தை முன்னெடுத்தபோது, மதுரையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தன் பெயரை ஆதிவளவன் என்று மாற்றிக்கொண்டார். ஒருநாள், இந்தப் பெயரில் ஆதி என்பதைச் சேர்த்துக்கொள்ளும் யோசனை எவ்வாறு தோன்றியது என்று கேட்டேன். குலதெய்வமாகிய ஆதினமிளகி அய்யனார் பெயரே தன்னுடைய முந்தைய பெயராக இருந்தது என்றும், தமிழ்ப்பெயர் மாற்றும் முடிவுக்கு வந்தபோது தெய்வத்தைக் குறிக்கும் வகையில் ஆதியை இணைத்துக் கொண்டேன் என்றார். மேலும், குலதெய்வத்தின் அடிப்படையை எல்லா நிலையிலும் பொருத்தியிருந்த தன்னுடைய முன்னோர்களைப் பற்றிக் குறிப்பிட்டார். அதாவது, தங்களை ஆதன் கூட்டம் என்று குறிப்பிட்டார். பறையர் வகுப்பிற்குள்ளிருக்கும் ஒரு கூட்டத்தின் பெயராகவும் அதைக் குறிப்பிட்டார். கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றாக ஆதன் இருந்ததும், கீழடிக்கு வெகுஅருகிலுள்ள ஊரான புளியங்குளத்தைச் சேர்ந்த ஒருவர், தன்னுடைய குழுவின் பெயர் ஆதன் கூட்டம் என்று கூறியதும் கவனத்தை ஈர்த்தது. அவர் கூற்றை அடிப்படையாகக் கொண்டு ஆதினமிளகி அய்யனாரை வணங்கும் குழுவினரைத் தேடியபோது மதுரையில் ஒத்தக்கடை வவ்வால் தோட்டம், வரிச்சியூர் அழகு நாச்சியாபுரம், சித்தானை, உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, திருமங்கலம் மேல உரப்பனூர் ஆகிய ஊர்களில் பறையர் வகுப்பிற்குள்ளேயே ஆதான் அல்லது ஆதன் வகையறா என்று அழைத்துக்கொள்ளும் குழுவினர் இருந்ததை அறிய முடிந்தது. இவர்கள் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தாலும், சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி என்ற கிராமத்திலிருக்கும் ஆதினமிளகி அய்யனார் கோயிலுக்குச் சென்று வணங்குபவர்களாக இருக்கின்றனர். எங்கெங்கு வாழ்ந்தாலும் ஆதி, ஆதன் என்கிற முன்னொட்டைக் கொண்ட பெயர்களைச் சூட்டுகின்றனர். அந்த வகையில் ஆதன், ஆதான், ஆதி, ஆதாம்மாள், ஆதி ஈஸ்வரி, ஆதப்பன் போன்ற பெயர்கள் உள்ள நபர்களைப் பார்க்க முடிந்தது. ஆதினமிளகி அய்யனாரை வணங்கும் பிற வகுப்பினர் மத்தியில் இத்தகைய வகையறா பகுப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. இந்தத் தலைமுறையில் குடும்பத்திற்காகச் சாமிப் பெயரையும், அதிகாரப்பூர்வமாக இன்னொரு ‘நாகரிக’ பெயரையும் சூடிக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். நாகரிக பெயரே ஆயினும் சாமியைக் குறிக்கும் முன்னெழுத்து இருந்துவிட்டால் திருப்திக் கொள்கிறார்கள்.
ஆதனூர் என்ற பெயரோ, அதனை அடியாகக் கொண்ட பெயரோ தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்டாலும் சோழ மண்டல பகுதியிலேயே அடர்த்தியாகவும் அதிகமாகவும் காணப்படுகின்றன. நந்தனார் கதையும் அப்பகுதியைச் சேர்ந்த ஆதனூரில் தொடங்கி சிதம்பரத்தில் முடிவதாகவே கூறப்படுகிறது. ஆதன் என்ற பெயரில் ஊர்ப்பெயர்கள் இருப்பதைத் தாண்டி சோழ மண்டத்திலோ, தமிழகத்தின் பிற பகுதிகளிலோ மதுரை பகுதியில் இருப்பதைப் போன்று வகையறாவாக / கூட்டமாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அவை தொடர் ஆய்வில் கண்டறியப்பட வேண்டியது. ஆனால், பாண்டிய நாட்டுப் பகுதியில் இத்தகைய பெயரில் ஒரு கூட்டம் இருப்பது வியப்படைய வைக்கிறது. அதிலும் நந்தனார் வகுப்பைச் சேர்ந்தவர்களிலேயே இப்பெயர் இருப்பது முக்கியமான ஒற்றுமையாக இருக்கிறது. ஆனால், ஆதன் குழுவினரின் கதைகளில் நந்தனார் பற்றிய எந்தக் குறிப்பும் இருப்பதில்லை. மாறாக, முழுக்க முழுக்கத் தாங்கள் வணங்கும் தெய்வத் தடத்தின் அடிப்படையிலேயே தங்கள் வரலாற்றைக் கூறுகின்றனர். தங்கள் மூதாதையர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டல பகுதியிலிருந்து புதுக்கோட்டை சிவகங்கை பகுதிகளில் குடியேறி, பிறகு மதுரை நோக்கிப் பிரிந்து குடியமர்ந்ததாகக் கூறுகின்றனர். அப்போது தங்களை வழிநடத்திய மூதாதையர்கள் சிவகங்கை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வணக்கத்திற்குரியவர்களாக மாறினார்கள் என்கின்றனர். அந்த வகையில் சிவகங்கை கீழப்பூங்குடியிலுள்ள ஆதினமிளகி அய்யனார் அவர்களின் தெய்வமாக இருக்கிறது. மற்றபடி, அவர்களின் இந்த நினைவுகூரல்களில் ஆண்ட பெருமையோ அடிமையெனும் இழிவோ இல்லை. ஆனால், தாங்கள் இடம்பெயர்ந்திருந்தாலும் பழைமையானவர்கள் என்கிற மனப்பதிவு அவர்தம் நினைவுகளில் அழுத்தமாக இருக்கிறது. ஆதினமிளகி என்பதிலுள்ள ஆதினம் என்பது ஆதியைக் குறிப்பதாகவே அவர்களால் கருதப்படுகிறது. அதனாலேயே அவர்கள் பெயர்களில் ஆதின என்பதற்கு மாற்றாக ஆதி என்ற பெயர் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் சோழ மண்டல பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தமைக்கான கதைகள் அறியப்பட்டால், இந்த ஆதி என்பதன் பொருள் விரிவடையலாம். ஆதனூர் என்ற ஊர்ப்பெயர்கள் அதிகமிருக்கும் சோழ மண்டல பகுதியிலிருந்து வந்தவர்கள் ஆதன் குழுவினர்களாக இருக்கிறார்கள் என்பதே இப்போதுவரை அறியப்பட்டிருக்கும் ஒற்றுமையாக இருக்கிறது. இவ்வாறு புராணக் கதைகளில் ஒரு பெயராக மட்டுமே அறியப்பட்ட ஆதன் என்ற அடையாளம் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்கள் குழுவினரிடம் இடப் பெயராகவும் நினைவுகளாகவும் இருப்பதை இங்கே பார்க்கிறோம். இவற்றை ஆதன் பற்றி நிலவும் வழக்காறுகளாகக் கருதலாம்.
எழுத்துப் பிரதிகளில் ஆதன்
இவ்வாறு ஆதனூர் என்ற பெயரும், ஆதன் என்ற பெயரும் மக்கள் வழக்கில் உள்ள நிலையில் பிற சான்றுகளில் இருந்திருக்கிறதா என்று தேடும்போது, பழைய சான்றாகத் தமிழ் இலக்கியங்களில் சங்கப் பாடல்களில் இப்பெயர் காணப்படுகிறது. அப்பாடல்களில் மன்னர் மரபினரோடு சேர்த்து இப்பெயர் கையாளப்பட்டுள்ளது. அதாவது, சேர மன்னர்களோடு இப்பெயர் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. ஆதன் எழினி, ஆதன் ஓரி, ஆதன் அவினி, உதியஞ்சேரலாதன், நெடுஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், செல்வக் கடுக்கோ வாழியாதன் என்பன சேர மரபிலுள்ள மன்னர்கள் சிலரின் பெயர்களாகும். இதன்படி, நந்தனார் பிறந்த ஊராகக் கருதப்படும் ஊரின் அடியாக உள்ள ஆதன் என்ற பெயர் மன்னர் மரபைக் குறிக்கும் என்பதற்கான சான்றினைத் தமிழ்ப் பின்புலத்திலேயே காண்கிறோம். அதேவேளையில் மற்றோர் உண்மையையும் இங்கே அறிய வேண்டியிருக்கிறது. அதாவது, சேரநாடு என்பது இன்றைய மேற்கு தமிழ்ப் பகுதியைக் குறிப்பதாக அறிகிறோம். இன்றைய கேரளாவே பழைய சேர நாடு என்று கூறுவது மூலம் சேரர்களைப் பிற தமிழ்ப் பகுதிகளோடு தொடர்புப்படுத்திப் பார்க்காமல் விட்டுவிடுகிறோம். இவ்வாறு விடுவதையே வரலாற்று ஆதாரம் என்று கருதுகிறோம். சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களில் சேரர்களே தொன்மையானவர்கள். மூவரில் சோழ பாண்டியர் நீண்டகாலமிருந்து அரசாக வளர்ச்சி பெற்றனர். ஆனால், சேர மரபு முன்கூட்டியே முடிவுக்கு வந்ததோடு பெருமாள் மரபாகச் சிறிய அளவில் இருந்து ‘மறைந்திருக்கிறது’. பேரரசாக வளர்ச்சி பெறும் முன்பே முடிவுக்கு வந்ததால் சேர மரபினரிடம் அரசு வடிவத்தின் தொடக்க நிலையையே பார்க்க முடிகிறது. அதாவது, சேரர்கள் குழுத்தன்மையில் இருந்தவர்கள் ஆவர். எனவே, மூவரில் சேர மரபினரிடமே பண்டைய சமூக அமைப்பின் எச்சங்களைப் பார்க்கிறோம். சேரர்கள் மலையோடும் கல்லோடும் தொடர்புடையவர்களாகக் காணப்படுகின்றனர். சேரர்கள் ஆண்ட பகுதிகளாக அறியப்படுபவற்றுள் இன்றுவரையிலும் மலைப்பகுதிகளும் காட்டுப்பகுதிகளுமே அதிகமாக இருக்கின்றன என்றால், பண்டை காலத்தில் எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. பண்டைய மனிதர்களின் வாழ்விடங்கள் பெரும்பாலும் காடுகளும் மேட்டுப்பகுதிகளும்தான். அதனால்தான் அவர்கள் தொடர்பான தொன்மையான தடயங்களை ஈமச்சின்னங்களாக காடுகளிலும் மலைகளிலும் காண்கிறோம். சேரர்கள் தொன்மையானவர்கள் என்பதற்கு அவர்களின் பெயர்க் காரணமே ஒரு சான்றாக இருக்கிறது. சேரர் என்றால் மலை அடுக்கு என்று பொருள் என்கிறார் அ.சிதம்பரனார் (சேரர் வரலாறு, 1954). மலை அடுக்குகள் அடுத்தடுத்துப் பிணைந்து நெருங்கியிருப்பதற்குச் சேரல் என்று பெயர் என்கிறார் அவர். சேரர்களில் உதியன் என்ற பெயருடைய மரபினர் இருப்பதைப் போலவே பொறையன் என்ற மரபினரும் உண்டு. இவ்விரண்டு மரபினரையும் குறிப்பதற்கு வழங்கப்படும் பொதுப்பெயர்களுள் ஒன்று ஆதன். பொறையர் என்னும் சொல்லானது பொறை என்ற பகுதியின் அடியாகப் பிறந்தது என்று குறிப்பிடும் அ.சிதம்பரனார், பொறை என்றால் மலை அடுக்கு என்றும், பொறையர் என்றால் மலைநாட்டையுடைய அரசர் என்றும் கூறுவதைப் பார்க்கலாம். தொடக்க நிலையிலான இனக்குழு பண்பைக் கொண்டவர்கள் என்ற முறையில் சேரர்களோடு வேளிர் உள்ளிட்ட குழுவினரும் அடங்கிவிடுகின்றனர். மூவேந்தர்கள் ஆட்சி உருவாவதற்கு முன்பே வேளிர்கள் உருவாகிவிட்டனர். சேரர் மரபு அவற்றோடும் கலந்து அறியப்படுகிறது. சேரர் ஆட்சிக்கு முன்பே வேளிர் ஆட்சி நடைபெற்றிருக்கிறது. பிறகு, இரண்டு மரபுகளும் இணைந்தும் அறியப்பட்டிருக்கிறது. ஆய் என்ற குடிமரபு ஆட்சியினர் வேள் என்றும், மாவேள் என்றும் அழைக்கப்பட்டனர். சங்க இலக்கியம் காட்டும் வேளிர் பெயர்களில் ஒன்று நெடுவேள் ஆதன். வேள் என்பதன் பன்மை விளிதான் வேளிர்.
இலக்கியம் இவ்விதம் கூறுவதற்கு மாறாக, சோழ பகுதியிலும் பாண்டிய பகுதியிலும் ஆதன் என்ற நினைவு உலவிவருகிறது என்பதை வழக்காறு காட்டுகிறது. எழுத்துப் பிரதியை மட்டும் வைத்து வரலாறு எழுதுவது ஒருபக்க உண்மையையே காட்டும் என்பதற்கு இது தக்க உதாரணமாகிறது. சோழ – பாண்டிய பகுதிகளில் சேரர்கள் ஆண்டதற்கான சான்றுகள் கிடைத்திராத நிலையில் ஆதன் என்ற பெயர் மட்டும் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒருவேளை பிற்காலத்தில் பரவியிருக்கும் என்று சொல்வார்களேயானால் அது ஏன் என்று இதுவரை ஆராயப்படவில்லை என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.
தொல்லியல் களங்களில் ஆதன்
இவ்விடத்தில்தான் அண்மையில் உருவாகிவரும் தொல்லியல் அகழ்வாய்வு சார்ந்த விழிப்புணர்வு ஆதன் பற்றிய புதிய புரிதலைக் கொண்டுவந்து சேர்த்திருப்பதைப் பார்க்கிறோம். அதாவது, ஆதன் என்பது சேர சோழ பாண்டியர் என்கிற அரசுகளின் வட்டத்தில் இருப்பது மட்டுமல்ல, அவற்றையும் தாண்டி விரியும் ஓர் அடையாளமாக இருந்திருப்பதைத் தொல்லியல் ஆய்வுகள் மூலம் புரிந்துகொள்கிறோம். பாண்டிய நாடாகிய மதுரை கீழடியில் கிடைத்த பெயர்களில் ஒன்றாக ஆதன் இருக்கிறது. ஏற்கெனவே தேனி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டில் ஆதன் என்ற பெயர் இருந்தமை அறுதியிடப்பட்டிருக்கிறது. மேட்டுப்பட்டி கல்வெட்டில் குவிரத்தை வேள் ஆ(அ)தன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொடுமணல் அகழ்வாய்வில் கண்ணன் ஆதன் என்றும் வேளாதன் (வேள்+ஆதன்) என்றும் பெயர்கள் கிடைத்துள்ளன. கரூர் புகழுர் ஆர்நாட்டார் மலைக் கல்வெட்டில் கோ ஆதன் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல தென்பாண்டி நாடு என்று கூறப்படும் நெல்லைக்கு அருகில் சிவகளையில் அண்மையில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் ஆதன் என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட பானையோடு கிடைக்கப்பட்டது. வட தமிழ்நாட்டின் பாலாற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட கணையாழியில் ஆதன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாக ம.மதுரைவீரன் கூறியுள்ளார் (ஆதனின் கணையாழி, சாசனம் ஸ்ஷீறீ. 10, 2024 – 2025). இப்பெயர் கிட்டத்தட்ட தமிழ்ப்பகுதி முழுவதும் பரவியிருந்த பெயராகத் தெரிகிறது. இதன்படி சேரர்கள் மட்டும் ஆதன் என்ற பெயரில் அழைக்கப்படவில்லை என்பதைத் தெரிந்துகொள்கிறோம். பொதுப்பெயர் போல வழங்கப்பட்டிருக்கிறது. எனில் அப்பெயர் சேரர்கள் உள்ளிட்ட சிறுகுடிகளைக் குறிப்பதற்கு மட்டும் ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதை அறிவது அவசியம்.
ஆதன் – அர்த்தங்கள்
ஆதன் என்பதற்குப் பின்னாட்களில் வெவ்வேறு அர்த்தங்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன என்றாலும் பழைய சான்றுகள் குறிப்பிடத்தக்கவை. பண்டை காலத்து மக்களின் இயற்பெயர்களென்று ஆதன், பூதன் என்கிற இரண்டு பெயர்களைக் கூறுகிறது தொல்காப்பியம் (348, எழுத்ததிகாரம்).
ஆதன் என்பதற்கு முனிவர், தலைவன், சூரியன் (ஆதி, ஆதித்தன்) மன்னன், முதல்வன், புத்தன் அருகன் என்றெல்லாம் பொருள்கள் இருக்கின்றன. மூவேந்தராட்சிக்கு முந்தைய இனக்குழு மரபின் அரசனான ஓரி ஆதனோரி (ஆதன் + பூரி) எனவும் அழைக்கப்பட்டான் என்கிறது பெருஞ்சொல்லகராதி (தொகுதி இரண்டு). முதியன் என்னும் பெயரையும் காட்டுகிறது அந்த அகராதி. ஆதன் என்ற சொல்லுக்கான இணைச் சொற்களாக ஆந்தை (ஆதன் + தந்தை), அதன் (அதங்கோட்டாசான்), அத்தன், அத்தி, அதியன், அதிகை போன்றவற்றைப் பார்க்கலாம்.
இப்பெயர்களுக்கிடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சூரியன்தான் உலகின் முதல்வன் / ஆதி. அதனால் அது தலைமையானதாக (தலைவர்) அறியப்படுகிறது. மன்னனும் முனிவரும் வழிகாட்டுபவர்கள் ஆதலால் தலைமையானவர்களாக ஆகலாம். புத்தனும் அருகனும் ஞானத்தை அளித்த ஞாயிறு ஆவர். எனவே அவர்களும் முதல்வர் ஆகிறார்கள். வேள் (வேளிர்) என்பதன் அடிச்சொல்லான வெள், வெண்மை என்னும் சொற்கள் ஒளி என்பதைக் குறிக்கும் இணைச் சொற்களாகும். தேவாரம் புத்தனை ஆதன் என்று குறிப்பிடுகிறது. அருகன் என்கிறது சூடாமணி நிகண்டு. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பேரகராதி ஆதி என்பதற்கு அருகன், இறைவன், சிவம், பிரமன், புத்தன், விட்டுணு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது (ப. 161). ஆதியோடு தொடர்புடைய எல்லாப் பெயர்களும் அருகனையே குறிப்பிடுகிறது (ஆதித்த புத்தி – அருக்கபுத்தி, ஆதிநாதன் – ஓர் ஜைனகுரு, ஆதி புங்கவன் – அருகன் கடவுள், ஆதியங்கடவுள் – அருகன், ஆதிவிராகன் – அருகன் சிவன், ஆத்தன் – அருகன்). அருகன் என்ற பெயர் ஜைன மதத்தை மட்டுமல்லாது, பௌத்த மதத்தையும் குறிக்கும். அப்பன், அத்தன், ஆதன் ஆகிய சொற்களுக்கு புத்தர் குழு என்றும் பொருள் உண்டு. மேலும், ஆதர்கள் என்பதற்குச் சங்கம் என்றும் பொருளுண்டு.
‘முதல்’
ஆதன் ‘முதல்’ என்பதைக் குறிக்கும் என்ற முறையில் ஆதி, ஆதவன் என்ற இரண்டு சொற்களும் ஆதன் என்பதற்கான மாற்றுச் சொற்களாகும். ஆதவன் என்றால் உலக முதல்வனான சூரியனைக் குறிக்கும். ஆனால், பண்டைய தமிழில் ஆதவன் என்ற சொல் இல்லை. ஆதன் என்ற சொல்லே இப்பொருளில் இருந்தது. தற்காலத்தில் ஆதன் என்ற பெயர் இல்லை. முந்தைய ஆதன் என்பதே நீண்டு தற்காலத்தில் ஆதவன் என்று வழங்கப்படுகிறது. ஆதவம் என்ற சொல்லுக்கு ஒளி, வெயில் என்று பொருள் தருகிறது பிங்கல நிகண்டு. இதன்படி ஆதன் என்பதைத் தமிழில் வழங்கப்படும் உலகு தழுவிய சொல் என்று கூறலாம். எனவே, ஆதன் என்பதற்காக வழங்கப்படும் பல அர்த்தங்களையும் தொகுத்துப் பொதுவாக முதல் என்று வைத்துக்கொள்ளலாம். கிறித்தவ சமயத்தில் முதல் மனிதனின் பெயர் ஆதாம். எபிரேய விவிலியத்தில் கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் அவர். ஆதாம் என்னும் சொல் விவிலியத்தில் இடப்பெயர் சொல்லாகவும், ஒரு மனிதனையோ அல்லது மனித குலம் முழுவதையோ குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இசுலாத்திலும் இதே நிலைமைதான். குரான் ஆதம் என்பவரை முதல் மனிதனாகவும், முதல் நபியாகவும், அவ்வாவின் (ஏவாளின் அரபு வடிவம்) கணவன் எனவும் குறிப்பிடுகிறது. இப்பெயர்களுக்கு இடையே ஒற்றுமை இருப்பதைப் பார்க்கிறோம். கிட்டத்தட்ட இதே பொருளில்தான் தமிழில் ஆதன் என்ற பெயர் வழங்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். கிபீணீனீ என்ற ஐரோப்பியத் தொன்மப் பெயருடன் ஒலியொப்புமை இருக்கிறது. சிரமண மரபைச் சேர்ந்த குறளின் முதல் பாடலில் ஆதிபகவன் துதிக்கப்படுகிறான்.
சிரமண மரபு
ஆதன் என்பதற்கு இவ்வாறு விரிவான அர்த்தங்கள் இருக்கும் நிலையில் அப்பெயர் சேரர்களுக்கும், சேரர்களை ஒத்த சிற்றரசர்களுக்கும் வழங்கப்பட்ட காரணம் என்னவாக இருக்க முடியும்? சேரர்கள் உள்ளிட்ட குடிகளின் சமயமரபு பற்றி நுண்ணிய ஆய்வுகள் நடைபெறவில்லை. அவற்றை அறுதியிடுவதற்கான சான்றுகள் கிடைக்காதது மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டில் மொழியை முதலாக வைத்துப் பண்டைக்குடிகளை ஆய்வு செய்யும் போக்கு செல்வாக்காக இருந்ததால் மொழியைப் பின்னுக்குத் தள்ளும் மெய்யியல் தளத்தை ஆராயும் நிலை உருவாகாமல் போய்விட்டது. சேரர்கள் உள்ளிட்ட குடிகளின் வழிபாடு, குலக்குறி போன்ற சான்றுகள் குறைவாகக் கிடைத்துள்ள நிலையில் அவர்களிடையே சிரமண மரபின் தாக்கங்கள் இருப்பதையும் ஒருபுடை அறிய முடிகிறது. இவை மேலதிக ஆய்வுக்கு உட்பட்டது. எனினும், இத்தகைய பார்வைக்கான சாத்தியமிருப்பதை நாம் புறக்கணித்துவிட முடியாது. புத்தனை / அருகனைக் குறிப்பிடும் ஆதன் என்ற பெயர் இக்குடிகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது அத்தகைய சான்றுகளில் ஒன்று. ஆதன் என்ற பெயர் பொதுப்பெயர் போல இருந்துள்ளது. மனிதர்கள் அடைந்த குறிப்பிட்ட தன்மையை, நிலையைக் குறிப்பிட அப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கூட்டத்தின் தலைவன் அல்லது வழிகாட்டி ஆகிறவர் அப்பெயரால் அழைக்கப்பட்டிருக்க வேண்டும். மன்னர்களுக்கும் முனிவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இரண்டு பேருமே காவலர்கள்தாம்; வழிகாட்டிகள்தாம். தலைவர்களாக இருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட ஆதன் என்ற பெயரே பிற்கால சேர மரபில் பெருமாள் என்பதாக மாறியது. மன்னர்களுக்கு வழங்கப்பட்ட இப்பெயரே துறவிகளுக்கும் வழங்கப்பட்டு, இன்று தெய்வங்களின் பெயராக நிலைத்திருக்கிறது. உண்மையில் இந்தத் தெய்வ வழிபாடுகள் எல்லாம் துறவிகளை வணங்கியதன் தொடர்ச்சியில் உருவானதேயாகும். இன்றைக்கும் சிரமண மரபினரின் குகைகளும் படுக்கைகளும் உள்ள மலைகளை பெருமாள் மலை என்றழைப்பதைப் பார்க்கலாம். இன்றைய இந்து சமய பெருமாள் கோயில்கள் உள்ள மலைகளும் தொன்மையில் சிரமண மரபினரின் கோயில்களாக இருந்து இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன. ஆதன் குன்றவன், மாலவன் என்ற பெயர் இருப்பதைப் பார்க்கிறோம். இவை பின்னாட்களில் விஷ்ணு மரபோடு சேர்க்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் வைணவ மரபின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக கும்பகோணம் அருகேயுள்ள ஆதனூரைச் சொல்கிறார்கள். சைவ அடியார் வழியாக சைவத் தலம் போலச் சொல்லப்படும் ஊர்ப்பெயர், வைணவத்திற்கும் பொருந்துவது ஏன்? இவ்விரண்டு மரபுக்கும் வெளியேயிருந்து வந்த அடையாளம் என்பதால் இந்தக் குழப்பம் நிலவுகிறது. வடமால் குன்றவன் என்றழைக்கப்படக்கூடிய திருப்பதி வெங்கடாசலபதி கோயிலை எளிய மக்கள் பெருமாள் கோயில் என்றழைப்பதை இன்றைக்கும் பார்க்கிறோம். சேரர்களைக் குறிக்கும் பொறையன் என்ற பெயரும் மலைநாட்டவன் என்பதைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். அனைத்தையும் சேர்த்துப் பார்க்கும்போது ஒரு விரிந்த அர்த்தம் உருவாவதை அறியலாம். சேரர் என்ற பெயரே தேரர் என்ற சொல்லிருந்துதான் உருவாகியிருக்க வேண்டும் என்று கருதுவோரும் உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அனுராதபுர ஆட்சியில் இருந்தான். பாலிநூல் அவனை எலார என்று சொன்னாலும் தமிழில் அன் விகுதி சேர்ந்து சேரெ(ன்) என்று கூறப்படுகிறது. பொதுவாக, மூவேந்தர்களோடு ஒப்பிடும்போது சேரர் குடியினர் மற்ற இரு மரபினரைவிடவும் வைதீகப் பண்பு குறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். அதேபோல சிரமண பண்பு மிகுந்தும் காணப்படுகின்றனர்.
இது பற்றிய இலக்கியக் குறிப்பொன்றும் இவ்விடத்தில் குறிக்கத்தக்கது. வஞ்சி சேரர்களின் நகரம். அதாவது, கோவலன் முன்னோர் பற்றிச் சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் குறிப்போடு மணிமேகலை தரும் குறிப்பொன்றையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. கோவலனுக்கு 9 தலைமுறைகளுக்கு முன்பிருந்த கோவலன் என்றே பெயர் கொண்டிருந்த முன்னோர்களில் ஒருவன் புகார் அழியுமென்ற தீர்க்கதரிசனத்தால் வஞ்சியில் புத்தருக்குக் கோயில் எழுப்பியிருந்தான். அவன் சேரமன்னனுக்கு நண்பன். அந்த புத்தர் கோயிலைத் தரிசிக்க வஞ்சி நகருக்கும் சென்றிருந்தான். இங்கு சிலப்பதிகார கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்பே பௌத்தம் இருந்தது என்று கூறப்படுவதன் மூலம் அதன் இருப்பு காலத்தால் பின்னோக்கிச் செல்கிறது. அதேபோல புகார் அழிந்த பின்னால் அறவண அடிகளும் மாதவியும் வஞ்சிக்குச் சென்றுவிட்டுதான்
காஞ்சிபுரம் திரும்புகின்றனர். இவையெல்லாம் சேர நாட்டிலிருந்த சிரமண செல்வாக்கைக் காட்டுகிறது. சேர நாட்டின் இத்தகைய தொடர்ச்சி காரணமாகவே இன்றைய கேரளாவின் காவுகளிலும் நம்பிக்கைகளிலும் பௌத்தம் நிலைக்கொண்டிருப்பதைக் கண்கூடாக அறிகிறோம்.
ஆதன் என்ற பெயர் புலவர்களையும் அறிஞர்களையும் குறிப்பிட வழங்கப்பட்டிருக்கிறது. தமிழின் அற நூல்களில் ஒன்றான திரிகடுகத்தின் ஆசிரியர் பெயர் நல்லாதனார் (நல் +ஆதன்). உடல் நோய் தீர்ப்பதையும், அறம் ஏற்பதையும் ஒன்றாக்கும் முக்கியமான நிலைப்பாட்டை வலியுறுத்தும் இது சிரமண மரபில் பிறந்த நூலாகும். அதேபோல சங்க மரபில் நட்பு என்னும் அறத்திற்காக வடக்கிருந்து உயிர் நீத்த பிசிராந்தையார் பெயரிலிருப்பதும் ஆதன்தான் (பிசிர் + ஆதன் + தந்தை + யார்). இதேபோல சங்கப் பாடல்களில் சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனை (வாழி + ஆதன்) பாடிய புலவரின் பெயர் குண்டுகட் பாலியாதனார் (பாலி +ஆதன்) என்பதாகும். பள்ளித் துஞ்சிய என்கிற குறிப்பிடல் சிரமண நோக்கில் ஆய்விற்குரியதாகும். சிரமண மரபைச் சேர்ந்த சிறப்பியம் எனும் வைசேடிகக் கோட்பாட்டை நிறுவியவர் பெயர் கணி ஆதன் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரமண மரபுகளைப் புரிந்துகொள்வதில் சில புரிதல்களை அடைய வேண்டியுள்ளது. இன்றைய மதம் என்பதன் வரையறையை மனதில் வைத்துக்கொண்டு கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை. சிலை, விதிமுறைகள், புனித நூல்கள் என்பதாக இல்லாமல் மக்கள் நம்பிக்கை, தொன்மங்கள் ஊடாக அவை நிலைபெற்றிருந்ததாகத் தெரிகிறது. தமிழ்ப் பகுதியில் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதலே சிரமண மரபு செல்வாக்குப் பெற்றிருந்தது. இன்றைய கீழடி போன்ற அகழ்வாய்வுகளைச் சமய சார்பற்ற காலத்தவை என்று சொல்லிக்கொண்டாலும் அங்கு கிடைத்திருக்கும் பெயர்களில் ஆதன், திஸ்ஸ, சாத்தன் போன்றவை நம்மை வேறுவிதமான யோசனைகளை நோக்கி நகர்த்துகின்றன. இந்தப் பெயர்களுக்குச் சிரமணத் தொடர்பு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தொடக்கக் கால மதம் பற்றிய புரிதல்களுக்கு வேறு சட்டங்களையே நாம் யோசிக்க வேண்டியுள்ளது.
நன்னனும் நந்தனும்
சேரர்களின் ஆதன் மரபுக்கும் நந்தனாருக்கும் நேரடித் தொடர்பு இல்லையென்றாலும் வேறுவழியிலான தொடர்பு இருக்கிறது. நன்னன் கதைக்கும் நந்தன் கதைக்கும் இடையேயான தொடர்பு ஏற்கெனவே சொல்லப்பட்டுள்ளது. நன்னன் மரபுக்கும் சேரர்களுக்கும் தொடர்புண்டு. சேரர் குலத்தில் உதியன் என்ற பெயரிலான குடும்ப வழியினர் உண்டு. உதியன் சேரலாதனை அறிவோம். நன்னன்கள் பலருண்டு. அந்த நன்னன்களில் நன்னன் உதியன் உண்டு. நன்னன்களில் ஒருவன் பறம்புமலை பாரத்தை ஊராகக் கொண்டவன். ஒருவன் மலைபடுகடாம் மலையைச் சேர்ந்தவன். இவ்வாறு நன்னனும் சேரர்களைப் போலவே மலைகளோடு தொடர்பு கொண்டவனாக இருக்கிறான். நன்னன் மரபுகளில் வேளிர் மரபு, ஆய் மரபு, வேளிர் அல்லாத மரபு என்பவை உண்டு. ஆய் மரபில் பிற்காலத்தில் கருநந்தனும், அவர் மகன் நந்தட்டனும் ஆண்டனர். இவர்கள் ஆண்ட பகுதி இன்றைய கேரளாவில் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவருடைய அடையாளமாக கேரளாவில் ஆதனூர் இருக்கிறது என்கின்றனர். நந்தட்டன் என்ற பாத்திரம் சிரமண காப்பியமான சீவக சிந்தாமணியில் சீவகனின் தம்பியாக இடம்பெறுகிறது. யசோதர காப்பியத்தில் அட்டப்பங்கன் என்ற பாத்திரம் இடம்பெறுகிறது. அங்கு அட்டன் என்று கூறுவது புத்தனை. நன்னன் கதை தமிழ்நாட்டின் சோழ மண்டல பகுதிக்குப் பரவியபோது ஆதன், ஆதனூர் போன்ற பெயர்களும் பரவியிருக்கலாம். கோவை ஆனைமலையில் பண்டை நாளில் நன்னன் ஆட்சி நடைபெற்றதாகவும் அப்பகுதி நன்னனூர் என்றழைக்கப்பட்டதாகவும் ர.பூங்குன்றன் குறிப்பிடுகிறார். ஆய், எயினன், அதிகன், பொறையன், நன்னன், உதியன் போன்ற குடிமரபுகள் தனித்தும் சேர மரபோடு இணைந்தும் அறியப்படுகின்றன. பிற்காலத்தில் புறசாதிகளாக ஆக்கப்பட்டவர்களுக்கும் இக்குடிகளின் மக்களாக இருந்தவர்களுக்கும் பல வகைகளில் ஒற்றுமை காணப்படுகிறது என்பது வலுவான கருதுகோள். அவ்வாறு பார்த்தால் தாழ்ந்த சாதியாகக் கூறப்படும் நந்தனார் பிறந்த ஊரை, ஆதன் பெயரில் அழைப்பதற்குக் காரணம் கிட்டுகிறது.
இவ்வாறு ஆதன் என்ற பெயர் தமிழ்ப் பகுதியில் பரவலாக வழங்கப்பட்டுள்ளது. அப்பெயர் இன்னும் ஆய்வை வேண்டி நிற்கிறது. எல்லா நிலையிலும் அச்சொல் ஒருவித தலைமையையே குறித்து நிற்கிறது. மாறாக, எந்த இடத்திலும் ‘கீழான’ நிலையைக் குறிக்கவில்லை. நந்தனார் பிறந்ததாகக் கருதப்படும் ஊர் இந்தப் பெயரில்தான் அழைக்கப்படுகிறது. மேலும், நந்தனார் புழங்கிய வட்டாரத்திலும் இந்தப் பெயர் ஊர்களைக் குறிப்பவையாக விரவிக் கிடக்கின்றன. நந்தனார் பிறந்த குலத்திலும் ஆதன் என்ற பெயர் ஊடாடிக் கிடக்கிறது. இவை நந்தன் கதை, நந்தனார் கதையாகத் தலைகீழாக்கம் செய்யப்படுவதற்கு முன்னால் இருந்த நிலையின் எச்சம் என்று நாம் கருதலாம். இந்த எச்சத்தின் வழியாகத் தலைகீழாக்கப்படுவதற்கு முன்னிருந்த உள்மெய் வரலாற்றை அறிய முடியும் என்பதே இந்த அத்தியாயத்தின் அறைகூவல்.
] stalinrajangam@gmail.com




