சமண பௌத்தத்தின் பெரும் எதிரி திருஞானசம்பந்தர்

பூவிழியன்

“தமிழ்நாட்டின்கண் புத்தம், சமணம் முதலிய புறச் சமயங்கள் தோன்றி சைவ சமய வளர்ச்சி வலிகுன்றிய ஞான்று, அப்புறச் சமயங்களை வேரறுக்கப் பண்டையருமறைக் கருத்துக்களோடு எழுந்தனவாய்..”

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த ‘தேவாரப் பதிகங்கள்’ என்னும் நூலின் பதிப்புரை,
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, 1927.

கி.பி 7ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பக்தி நெறி தமிழகத்தில் பேரெழுச்சியுடன் பரவியது. கோயில்கள் பெரும் எண்ணிக்கையில் தோன்றின. அந்தப் பக்தி இலக்கியக் காலம்தான் ‘சமண – பௌத்தத்தின் பேரழிவிற்கான கொடுங்காலம்’ என்று வரலாறு தெளிவுபடுத்துகிறது. இதற்கான ஆதாரங்கள் சைவ, வைணவ இலக்கியங்களில் நிறைந்து கிடைக்கின்றன. திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றுப் பயணத்தின் கருப்பொருள் சைவத்திற்கும் சமண – பௌத்தத்திற்கும் இடையேயான யுத்தக்களமாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் செழித்தோங்கி இருந்த சமண – பௌத்தத்தை அழித்து சைவத்தை வலிமைப்படுத்தும் நோக்கில் சமண – பௌத்தம் மீதான வெறுப்பை வன்மத்தோடு தேவாரத்தில் பாடியிருப்பதையும் சைவ சமயமே சிறந்ததென வெளிப்படையாகப் பதிவு செய்திருப்பதையும் அதன் பதிகங்களில் இருந்து உள்வாங்க முடியும்.

‘அப்பரது பிரச்சார வன்மையால் தொண்டை நாடு சைவ நாடாக மாறியது. திருஞானசம்பந்தரது தொண்டினால் பாண்டிய நாடு சிவமணம் கமழும் நாடாக மாறியது. ஆதலால், சமணமும் பௌத்தமும் வலி குன்றிவிட்டன. அதனால், அப்பர் சம்பந்தர்க்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கழித்து வந்த சுந்தரர்க்குப் புறச்சமய எதிர்ப்புத் தோன்றவில்லை’ என்கிறார் ‘சைவ சமய வரலாறு’ என்னும் நூலில் டாக்டர் இராசமாணிக்கனார்.

தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் சைவ சமயத்தவருக்குக் கூறும் அறிவுரைகள் இதை மேலும் வலிமைப்படுத்துகிறது. அதாவது, ‘சமண பௌத்த நூல்கள் பொய்ந்நூல்கள், அவற்றை நம்பாமல் சிவனை வழிபடுங்கள்; தீவினை அற்று நன்மை அடைவீர்கள். திருப்பதிகங்களைப் பாடி பயன் பெறுங்கள்’ என்பதே அந்த அறிவுரை. கீழ்க்கண்ட பாடல்களிலிருந்து இவற்றை மேலும் உறுதிப்படுத்திட முடியும்.

‘போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும்  பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்…’

(தேவாரம், முதல் திருமுறைப் பதிக எண்: 107, பாடல் 1161)

இப்பாடலில் திருஞானசம்பந்தர், “போதி மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக் காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி ஊழல்பவர்களே! இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானை வணங்கினால் நம் வினைகள் யாவும் அழியும்” என்று குறிப்பிடுகிறார். அடுத்து,

‘சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியி லுரையவை பொருள்கொளாதே…’

(தேவாரம், முதல் திருமுறைப் பதிக எண்: 110, பாடல் 1194)

இதில், “சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர் என்று அறிவுரை கூறுகிறார் திருஞானசம்பந்தர்.

‘வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார்
கற்றில ரறவுரை புறனுரைக்கப்..’

(தேவாரம், முதல் திருமுறைப் பதிக எண்: 109, பாடல் 1183.)

எனும் பாடலில் திருஞானசம்பந்தர், ‘ஆடையில்லாத இடையோடு திரிந்துழல்வோரும், விரித்த ஆடையைப் போர்வையாகப் போர்த்தியுள்ளவரும், மெய்ந்நூல்களைக் கல்லாதவரும் ஆகிய சமண பௌத்தர்கள் அறவுரை என்ற பெயரில் புறம்பான உரைகளைக் கூறக்கேட்டு அவற்றைப் பொருட்படுத்தாதவனாய்ப் பகைவராகிய ஆவுணர்களின் முப்புரங்களும் தீயில் வேகுமாறு அழித்தருளிய சிவபிரான் எழுந்தருளிய வளநகர் சிரபுரமாகும்’ என்கிறார்.

‘அன்றிய வமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய வறவுரை கூறாவண்ணம்..’

(தேவாரம், முதல் திருமுறைப் பதிக எண்: 113, பாடல் 1226.)

பாடலில் திருஞானசம்பந்தர், ‘கொள்கைகளால் மாறுபட்ட சமணர்களும் புத்தர்களும் அறம் குன்றிய உரைகளைக் கூறுபவர்கள் என்று அம்பலப்படுத்துகிறார்.’

‘சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர் பேய்த்தேர்ப்பின்..’

(தேவாரம், முதல் திருமுறைப் பதிக எண்: 118, பாடல் 1280)

பாடலில், ‘அறியாமை வயப்பட்ட சாத்திரங்களை ஓதும் புத்தர்களும், சமணராகிய இழிந்தோரும் குண்டர்களும் கூறும் மடமையை விரும்பியவராய் மயங்கியோர் சிலர், கானல் நீரை முகக்கக் குடத்தை எடுத்துச்செல்வார் போன்றவராவர்’ என்கிறார் திருஞானசம்பந்தர்.

தேவாரம் பாடிய மூவர்

திருஞானசம்பந்தர் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான்மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இதில் முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர் திருஞானசம்பந்தர். அடுத்த மூன்று திருமுறைகளைப் பாடியவர் அப்பரர் என்னும் திருநாவுக்கரசர். இவர்கள் இருவரும் சமகாலத்தவர்கள். அடுத்து, ஏழாம் திருமுறையைப் பாடியவர் சுந்தரர்.

“காலச்சுழற்சியில் தேவாரப் பாடல்கள் பல மறைந்து போயின. சோழ மாமன்னர் முதலாம் இராஜராஜன் (கி.பி.-10) இவற்றை மீட்டெடுக்க விரும்பினார். தேவாரம் எழுதிய ஓலைகள் சிதம்பரம் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மாமன்னர் பெருமுயற்சி செய்து அடைத்த கதவுகளைத் திறக்கச் செய்தார். மலைபோலக் குவிந்துகிடந்தன தேவார ஓலைகள். அவற்றில் கறையானால் அரிக்கப்பட்டுப்போன ஓலைகள் பல; ஒடிந்துபோன ஓலைகள் பல. இருந்தும் நம்பியாண்டார்நம்பி என்பவரைக் கொண்டு பல ஓலைகளை மீட்டெடுத்தார் மன்னர் முதலாம் இராஜராஜன். அப்படித் தேடிக் கண்டெடுத்த தேவாரப் பதிகங்கள் அனைத்தும் நம்பியாண்டார் நம்பிகளால் தொகுக்கப்பட்டன. அவற்றை ஏழு திருமுறைகளாக அவர் வகுத்தார்” என்று தேவாரக் குறிப்புகள் விவரிக்கிறது.

தமிழகத்தில் சிறப்புற்றிருந்த சமண – பௌத்த சமயங்கள்

“கி.பி மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடரான வைசாக முனிவரால் தமிழ்நாட்டிலே சமண சமயம் பரவச் செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டெழுத்துகள் சமணரால் எழுதப்பட்டவை என்றும், அவை மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமண சமயம் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும்” என்று அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைக் காலத்திலே சமண சமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைப்பெற்றிருந்தது. பரவியிருந்தது மட்டுமல்லாமல் செல்வாக்கு பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றித் தழைத்துத் தளிர்த்து இருந்ததைக் தேவாரம், நாலாயிரப் பிரபந்தம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலே ஆங்காங்கு காணப்படுகிற கல்வெட்டுச் சாசனங்களும், அறிந்தும் அறியாமலும் காணப்படுகிற சமணக்கோயில்களும், காடுமேடுகளில் ஆங்காங்கே காணப்படுகிற சமண சமயத் தீர்த்தங்காரர்களின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன.

சமண சமயம் தமிழ்நாட்டிலே செல்வாக்கடைந்தது செழித்து வளர்ந்ததற்குக் காரணம், பிறப்பினால் உயர்வு – தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக்காலத்தில் சமண சமயத்தில் இல்லை. எக்குலத்தவராயினும், தமது சமயக்கொள்கையைப் பின்பற்றுவராயின் அவரைச் சமணர் போற்றி வந்தனர். அவருடைய அருங்கலச் செப்பு என்னும் நூலிலே,

‘பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று’

என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆகவே, பண்டைக்காலத்திலே சாதி பேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதி பேதம் பாராட்டாத சமண சமயம் பரப்பியதில் வியப்பில்லை. மேலும், உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும் அன்னதானம், அபய தானம், ஔடத தானம், சாத்திர தானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசி நோயைப் போக்குவது தலைசிறந்த அறம் அன்றோ? ஆகவே, அன்னதானத்தை முதல் தானமாகச் செய்து வந்தனர்.

சமண சமயத்தைச் சேர்ந்த துறவிகள் சமண சமயம் பரவுவதற்காகப் பெரிதும் உழைத்து வந்தார்கள். தமிழ்நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் பிறப்பித்துப் போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலாகிய பயிர்த்தொழிலை, பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வுபடுத்தியது போலல்லாமல், சமண சமயம் பயிர்த் தொழிலை மிகச் சிறந்த தொழில் என்று போற்றியது.

பயிர்த்தொழில் செய்யும் வேளாளரும், வாணிபம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேற்கொண்டிருந்தனர். எந்நாட்டிலும் எக்காலத்திலும் பொருளாதாரத்துறையில் செழிப்புற்றுச் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருப்பவர் வாணிகரும், விவசாயிகளும் ஆவர். இவர்கள் சமண சமயத்தைச் சேர்ந்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச்சமயத்தைத் தழுவுவாராயினர். சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமண சமயத்தைச் சேர்ந்திருந்தனர்.

இவர்களால் சமண சமயத்துக்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த மதத்தின் செல்வாக்கைக் கண்டு, சமண சமயத்தவரல்லாத அரசரும்கூட, சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நிலபுலங்களையும் பொன்னையும் பொருளையும் ‘பள்ளிச் சந்தமாக’ கொடுத்து உதவினார்கள். இத்தகைய காரணங்களினாலே, சமண சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது. முற்காலத்தில், சமண சமயம் (பௌத்த சமயம்கூட) தமிழ்நாட்டிலே செழித்துப் பரவியிருந்ததையும் வைதீக மதம் முதலிய ஏனைய மதங்கள் அடங்கிக் கிடந்ததையும் பெரியபுராணம் முதலிய நூல்கள் நன்கு விளக்குகின்றன.

‘மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்ம் மிகுத்தே
ஆதிஅரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார் பால்
பூதிசா தனவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண்டு
ஏதமில்சீர்ச் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்’

என்று, திருஞானசம்பந்தரின் தந்தையார் சமண சமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததைக் கண்டு வருந்தியதாகப் பெரியபுராணம் கூறுகிறது. மேலும்,

‘அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட…’

ஞானசம்பந்தர் பிறந்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இன்னும்,

‘பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பணிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்
சூழிருட் குழுக்கள் போலத் தொடைமயிற் பீலி யோடு
மூழிநீர் கையிற் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப’

‘பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி
அறியும்அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ
நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழுங் காலை’

என்று பாண்டிய நாட்டிலும் சமணம் செழித்திருந்ததை அப்புராணம் கூறுகிறது. இச்செய்தியையே பிற்காலத்துத் திருவிளையாடற் புராணங்களும் கூறுகின்றன.

கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் கௌதம புத்தரால் வடஇந்தியாவில் தோன்றியது பௌத்த மதம். பௌத்த மதம் தமிழ்நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், பெரியபுராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக் கிடக்கின்றது.

பௌத்தம் தமிழ்நாட்டுக்கு வந்த காலத்தில் வேறு வடநாட்டு மதங்களும், இங்கு வந்து சேர்ந்தன. அவை ஆருகதம் எனப்படும் ஜைன மதமும், பிராமண மதம் எனப்படும் வைதீக மதமும், பூரணன் என்பவரை வழிபட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. இந்த மதங்கள் வடநாட்டில் தோன்றியவை. பௌத்த மதத்தை உண்டாக்கிய சாக்கிய புத்தரும், ஜைன மதத்தையுண்டாக்கிய வர்த்தமான மகாவீரரும், ஆசீவக மதத்தையுண்டாக்கிய கோசால மக்கலிபுத்திரரும் ஒரே காலத்தில் உயிர் வாழ்ந்திருந்தவராவர். இந்த மதங்கள் உண்டான காலத்திலே வைதீக மதமும் இருந்தது. இந்த நான்கு வடநாட்டு மதங்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ்நாட்டிற்கு வந்தன.

பௌத்தமதம் அசோக சக்கரவர்த்தி காலத்தில் தமிழ்நாட்டில் பரவச் செய்யப்பட்டது என்று அறிந்தோம். ஜைன மதம், அசோக சக்கரவர்த்தியின் பாட்டனான சந்திரகுப்த அரசன் காலத்தில் தென்னாடு வந்ததாகச் சான்றுகள் உள்ளன.

வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும், நால்வகைச் சாதிப் பாகுபாடு உடையதாய் பிராமணர் மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கை உடையதாக இருந்தபடியாலும், இவற்றிற்கு மேலாக, பிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தைப் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்தபடியாலும், இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. ஆகவே, கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு வந்த வைதீக பிராமண மதம் கி.பி. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டு வரையில் பொதுமக்களின் செல்வாக்குப் பெறாமல் ஒதுக்கப்பட்டே வந்தது.

கி.பி. ஆறாவது அல்லது ஏழாவது நூற்றாண்டுகளுக்குப் பின்னர், வைதீக மதம் தனது அடிப்படைக் கொள்கைகள் சிலவற்றில் மாறுதல் செய்துகொண்டு புத்துயிர் பெற்றது. அதாவது, யாகங்களில் உயிர்க்கொலை செய்வதை நிறுத்தியதோடு, கொற்றவை, முருகன், சிவன், திருமால் முதலான திராவிட (தமிழ்) தெய்வங்களைத் தன் மதக்கடவுளராக ஏற்றுக்கொண்டு புதிய உருவம் பெற்றுவிட்டது. இந்த மாறுதலுடன், ‘பக்தி’ இயக்கத்தை மேற்கொண்டபடியால், இந்த மதம் பொதுமக்கள் ஆதரவைப் பெறவும், பண்டைப் பகையுள்ள ஜைன பௌத்த மதங்களைக் கடுமையாகத் தாக்கித் தோற்பிக்கவும் முடிந்தது.

சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர், திருமங்கையாழ்வார் போன்ற சைவ வைணவத் தொண்டர்கள் தோன்றிப் புதிய இந்து மதத்தை நிலைநாட்டவும், ஜைன பௌத்த மதங்களை ஒழிக்கவும் தலைப்பட்டார்கள் என்கிறார் ‘தமிழக சமயங்கள் – பௌத்தம்’ என்னும் நூலில் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், இந்தப் புதிய வைதீக இந்து மதம் சமண பௌத்த மதங்களுடன் போர் தொடங்கி வெற்றி பெற்றது. இந்து மதத்தின் வெற்றிக்குக் காரணம் யாதெனின், அக்காலத்தில் இந்து மதம் பிரிவினையின்றி ஒரே மதமாக இருந்ததேயாம். திருமால், சிவன் என்னும் இருதேவர் அதில் இருந்தபோதிலும், வைணவ மதம் என்றும் சைவமதம் என்றும் பிற்காலத்துப் பிரிந்து நின்றதுபோல, அக்காலத்தில்  பிரிந்திருக்கவில்லை. புதிய வைதீக மதம் ஜைன பௌத்த மதங்களுடன் போராடிய காலத்தில், வைணவம் – சைவம் என்றும், வடகலை – தென்கலை என்றும், வீர சைவம் – சித்தாந்த சைவம் என்றும், ஸ்மார்த்த மதம் என்றும் பல பகுதிகளாகப் பிரிக்கப்படவில்லை. ஆகவே ஒற்றுமையுடன் போரிட்டபடியால், சமண பௌத்த மதங்களை அது வீழ்ச்சியடையச் செய்துவிட்டது;

தமிழ்நாட்டில் சமண மதம் என்றும் தலைதூக்க முடியாதபடியும் ஏற்கெனவே சமண மதத்தால் வலிமை குன்றியிருந்த பௌத்த மதம் அடியோடு ஒழியும்படியும் இதனால் நேர்ந்தது. சாத்தமங்கை முதலிய இடங்களில் சம்பந்தர் பௌத்தருடன் வாதப்போர் செய்து அவர்களைத் தோற்பித்துச் சைவராக்கிய வரலாறும், மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் பௌத்தருடன் வாதம் செய்து அவரை இலங்கைக்குத் துரத்திய வரலாறும், திருமங்கையாழ்வார் நாகப்பட்டினத்துப் பௌத்த ஆலயத்திலிருந்த பொன்னால் அமைந்த புத்தச் சிலையைக் கவர்ந்து சென்று அந்தப் பொன்னைக் கொண்டு திருவரங்கத்தில் திருப்பணி செய்த வரலாறும் பௌத்த மதத்தின் வீழ்ச்சியைக் காட்டுகின்றன.

சமண – பௌத்தர்களுடன் வாதம் செய்த திருஞானசம்பந்தர்

பாண்டியன் நெடுமாறன் சைவ சமயத்தவர். ஆனால், சமணர்களுடைய போதனையால் சமணராக மாறினார். இதனால், பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் வேதனைப்பட்டார். பாண்டிய நாட்டிற்கு வரும்படி ஞானசம்பந்தரை அழைத்தார். அழைப்பை ஏற்று சீர்காழியில் இருந்து மதுரை வந்த சம்பந்தர் மதுரை எல்லையில் ஒரு திருமடத்தில் தங்கினார். வெப்பு நோயால் துடித்துக் கொண்டிருந்தார் மன்னர். சமணர்களது மருந்து மாயமோ, மந்திர தந்திரமோ எதுவும் நோயைக் குணப்படுத்தவில்லை. பாண்டிமாதேவியும் மந்திரி குலச்சிறைநாயனாரும் சம்பந்தரை அணுகினர். மன்னரைக் காப்பாற்றும்படி அன்போடு கேட்டனர். திருநீற்றின் பெருமை சொல்லும் தேவாரம் பாடினார். அந்தப் பாடல்,

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே!..

(இரண்டாம் திருமுறை, 2178)

என்று பாடி வெப்புநோயைக் குணப்படுத்தினார் திருஞான சம்பந்தர். ஆனால், இந்த வெப்பு நோய் உண்டாவதற்குக் காரணம் சம்பந்தப்பெருமானுக்குச் சமணர்கள் செய்த அநுசிதமே!’ என்றார்கள். அச்சூழலில், திருஞான சம்பந்தர் திருநாமமே மந்திரம்போல் செவியில் பட அரசன் தெளிவு பெற்றான்’ என்கிறது திருஞான சம்பந்தர் வரலாறு. அதுமட்டுமல்லாமல் கனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தரிடம் சமணர்கள் தோற்றதால் பாண்டிய மன்னர் அமைச்சரைப் பார்த்து, ‘இந்தச் சமணர்கள் திருஞானசம்பந்தபெருமான் திறத்தில் குற்றப்பட்டார்கள். அவர்களை உரிய வகையில் தண்டித்து முறை செய்ய வேண்டும்’ என்றார். ‘தாம் தம் வாதத்தில் தோல்வியுற்றாலும்  மேற்கொண்ட உறுதியில் தோல்வியுறக்கூடாதென்று எண்ணிய சமணர்கள் தாம் சொன்னபடியே கழுவிலேறி உயிர் நீத்தார்கள்’ என்கிறது சம்பந்தரின் வரலாற்று நிகழ்வுகள்.

அதேபோன்று அடுத்த நிகழ்வு ஒன்று. “மதுரையில் இருந்து திரும்பி பல்வேறு தளங்களைத் தரிசித்த திருஞான சம்பந்தர் போதிமங்கை என்ற சிற்றூரை அணுகினார். அடியார்கள் புடை சூழ ‘பரசமய கோளரி வந்தான்’ என்று விருது காளம் ஊதச் சம்பந்தர் முத்துச்சிவிகையில் எழுந்தருளினார். அவ்வூரில் பௌத்தர்கள் பலர் இருந்தார்கள். அவர்களுக்குத் தலைவராக ‘புத்த நந்தி’ என்ற ஒருவர் இருந்தார். சிவசமயம் நிலைநிறுத்தும் சிங்க ஏறாக சம்பந்தர் எழுந்தருளுவதைக் கண்டு பொறாமையால் சீறினார் புத்தநந்தி. இதனையடுத்து, புத்தர்கள் தம் தலைவனாகிய சாரிபுத்தனோடு அங்கே வந்தார்கள். இருசாரருக்கும் வாதம் தொடங்கியது. புத்தர்களுடைய சமய உண்மைகளை அவர்கள்  கூற, அவற்றைத் தக்கபடி மறுத்து வாதிட்டார் சைவ பிள்ளையார் திருஞான சம்பந்தர். புத்தர்கள் தம் ஆற்றல் முழுவதையும் காட்டி வாதிட்டும் ஞானசம்பந்தர் முன் நிற்க இயலாமல் தோல்வியுற்றனர். அப்பால் அவர்கள் சைவ சமயத்தை மேற்கொண்டு சம்பந்தர் தாள்(பாதம்) பணிந்தார்கள்” என்று சமணர்கள் தோல்வியடைந்ததன் தொகுப்பாய் நிகழ்வுகளை அடுக்குகிறது திருஞான சம்பந்தர் வரலாறு.

அறியாமைவயப்பட்ட சாத்திரங்களை ஓதுபவர்கள் புத்தர்களும் சமணர்களும் என்றும் பரிசிக்கத்தக்க பேய்கள் போன்றவர்களாகிய அமணர்களும் புத்தர்களும் கூறும் உரைகள் உண்மையான நெறிகளை உணர்த்தாதவை (தேவாரப் பாடல் 1291) என்றும் துவர் ஏற்றிய விரிந்த ஆடைகளை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சொல்லை விரும்பாதீர் (தேவாரப் பாடல் 1313) என்றும்  புத்தர்களும் சமணர்களும் கூறுவன அறவுரைக்குப் புறம்பான உரைகளாகும் (தேவாரப் பாடல் 1357) என்றும் நற்குணங்கள் இல்லாத புத்தர்களும் பொய் தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக்கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்கள் (தேவாரப் பாடல் 1392) என்றும் இழி செயல்களில் ஈடுபடுவோராய் சிறிய ஆடையினராய் திரியும் சமணர்களும் சாக்கியர்களும் கூறும் நன்மை பயவாத சொற்களையும் வஞ்சனைப் பொருந்திய உரைகளையும் கேளாதீர் (தேவாரப் பாடல் 1403) என்றும் தேவாரம் நெடுகிலும் சமண பௌத்த சமயத்தின் சாதியப் பாகுபாடற்ற நிலைப்பாட்டை இழிவுபடுத்தியும் அதன் அறச்செயல்களைக் கொச்சைப்படுத்தியும் சைவத்தை மேன்மைப்படுத்தியும் பாடப்பட்டதாகவே திருஞானசம்பந்தரின் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

இப்படிச் சைவம் மேலெழுந்து வந்த நிலையில் சமணமும் பௌத்தமும் நாட்டில் செல்வாக்கை இழந்தன. சைவரைப் பின்பற்றியே வைணவ ஆழ்வார்களும் பக்திநெறியைப் பரப்பினர். பல்லவ வேந்தர்கள் சைவத்தையும் வைணவத்தையும் தம் இருகண்களாகக் கருதி வளர்த்துவந்தனர். பல்லவர் கால சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றிக் கொலை செய்தார்கள். பிற சமயத்தினரைக் கொடுமைப்படுத்தினர். இவையெல்லாம் சைவத்தின் வன்முறை வெறியாட்டங்களாகும்.

சைவம் சனாதனத்தின் வடிவமாகவும் சமண – பௌத்த சமயங்கள் சாதியப் பேதமற்ற சமத்துவத்தின் குரலாகவும் ஒலித்து வந்தது தேவாரப்பாடல்களில் தெளிவாகிறது. ஆகவே, சமத்துவத்தின் குரல்வளையை அறுப்பதற்காகவும் சனாதனத்தை நிலைநிறுத்துவதற்காகவும் சைவத்தைப் பேராயுதமாக தேவாரத்தின் வழியே திருஞான சம்பந்தர் கையிலெடுத்துப் போராடியுள்ளார். அதில் வெற்றி பெற்றதையும் சமண – பௌத்த சமயங்கள் வீழ்த்தப்பட்டதையும் இதில் வெளிப்படையாக உணரவும் உள்வாங்கவும் முடிகிறது. ஆகவே, சமண – பௌத்தத்தைத் தமிழ்நாட்டில் அழித்த பெரும் எதிரி திருஞான சம்பந்தர் என்பதை நிகழ்கால சமூகத்தின் மௌனத்தைக் கலைத்து வரலாற்றின் ஊடாகப் புரியவைப்பதே மீண்டும் பௌத்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கும் பௌத்தத்தைப் பேரெழுச்சியுடன் விதைப்பதற்குமான உத்தியாகும்.

பயன்பட்ட நூல்கள்:

  1. திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த ‘தேவாரப் பதிகங்கள்’, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு, திருநெல்வேலி, 1927.
  2. திருஞானசம்பந்தர் (நாயன்மார் கதை: இரண்டாம் பகுதி), அமுத நிலையம் பிரைவேட் லிட், சென்னை, 1962.
  3. டாக்டர் ப.அருணாசலம், பக்தி இலக்கியம், தமிழ்ப் புத்தகலாயம், சென்னை, 1973.
  4. திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரம் (முதலாந்திருமுறை), வெளியீடு: யாழ்ப்பாணம், நல்லைதிருஞானசம்பந்தர் ஆதீனம், 1987.
  5. பதிப்பாசிரியர் டாக்டர் இரா.வசந்தகுமார், திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் திருப்பதிகங்கள் (முதல் திருமுறை), பன்னிரு திருமுறை ஆய்வு மையம், கோவை, 2014.
  6. கார்த்திகேயன், பெரியபுராணம் (திருத்தொண்டர் புராணம்), கிரிடிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட், சென்னை, 2004
  7. மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1940.
  8. மயிலை சீனி.வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம், தமிழக சமயங்கள்: சமணம், தொகுப்பாசிரியர் பேரா.வீ.அரசு, இளங்கணி பதிப்பகம், சென்னை, 2014.
  9. டாக்டர் மா.இராசமாணிக்கனார், சைவ சமயம், செல்வி பதிப்பகம் காரைக்குடி, 1955.
  10. தொ.பரமசிவன், சமயங்களின் அரசியல் விகடன் பிரசுரம், சென்னை, 2012.

l poovizhian@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger