27
2025ஆம் ஆண்டின் இறுதியில் பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சர்ச்சைக்குள்ளானது. பிரச்சினை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டபோது மேலும் சிக்கலாக மாறியது. மலை, வழிபாடு, தீபம் சார்ந்து பல்வேறு தரப்பு பார்வைகள் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டன. பெரும்பாலானோர் தத்தம் தரப்பையோ, பகுதி உண்மைகளையோதான் முழு உண்மை போல சொல்ல முற்பட்டுக்கொண்டிருந்தனர். இவற்றில் பலராலும் சொல்லப்படாத தரப்பு ஒன்றுண்டு என்றால், அது பரங்குன்றம் மலை சிரமண மரபோடு கொண்ட தொடர்பு பற்றியதுதான். மலையுச்சியில் தீபம் ஏற்றுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது கோயில் தரப்பு “சமண முனிவர்கள், இரவில் சேர்ந்து கலந்தாலோசிப்பதற்காகத் தூண் வைக்கப்பட்டு, வெளிச்சத்திற்காக அங்கு விளக்கேற்றியுள்ளனர். இது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தூண் அல்ல” என்ற வாதத்தை வெளிப்படுத்தியது. இந்தத் தகவல் முதலிருந்தே சொல்லப்படாமல் வழக்கின் ஒருகட்ட வாதத்தின்போதுதான் தவிர்க்க இயலாமல் சொல்லப்பட்டது. ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தைக் கணக்கில் கொண்டதாகவும் தெரியவில்லை. அதேவேளையில் இந்தக் கூற்றில் சில சிக்கல்களும் இருக்கின்றன. சமணர்கள் இரவில் மட்டும்தான் கலந்தாலோசித்தார்களா? அதற்காக இப்படியொரு தூண் மீதுதான் விளக்கு ஏற்றினார்களா? என்பது உறுதிபடத் தெரியவில்லை. இது சமண முனிவர்களின் இடம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு அங்கு நடந்திருக்கக்கூடியவை என்று யூகித்துக்கொண்ட தகவல்களே இவை. இதற்கு நேரடிச் சான்றுகள் இல்லை. இது தொல்லியல் துறையின் தொடர்பிலிருந்து பிறக்கும் கருத்தாகும். மலைகளில் பரவலாகக் காணக் கிடைக்கும் இத்தகைய குகைகள், படுக்கைகள் குறித்து தொல்லியல் துறை கூறும் மற்றொரு தகவலும் பிரசித்தமானது. அதாவது, அக்குகைகள் சமண முனிவர்கள் ஊர் மக்களுக்குக் கல்வி கற்பித்த பள்ளிகளாக இருந்தன என்றும் அங்கிருக்கும் படுக்கைகள் தூங்குவதற்காக வெட்டப்பட்டவை என்றும் கூறப்பட்டு இவை நிலைத்த உண்மை போலாகிவிட்டன.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then






