மடியட்டும் மலக்குழி மரணங்கள்

வழக்கறிஞர் தே.அசோக் குமார்

லகின் மிகப்பெரிய ஜனநாய நாடான இந்தியா, வளர்ந்துவரும் நாடுகளில் முக்கியமான நாடாகும். உலக அளவில் அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவும் அளப்பரிய வளர்ச்சி கண்டுள்ளது. இணைய வளர்ச்சியில் 8 – ஐ தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, நிலா – சூரியனை ஆய்வு செய்ய செயற்கைக் கோள்களை அனுப்பிக்கொண்டிருக்கிறோம். அதேபோல், AI எனப்படும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மனித ஆற்றலுக்குச் சவால் விடுவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால், மனிதனின் மலத்தை மனிதன் அள்ளுவதும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் முற்றுப் பெறவில்லை என்பது பெருத்த அவமானம்.

இந்திய நாடு பல்வேறு மொழி, இனம், மதங்களை உள்ளடக்கியது. இந்நாட்டின் சிறப்பு, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதோடு இனம், சாதி, மொழி, மதம், பாலினம் ஆகியவற்றால் ஒருவரை வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்பதுமாகும்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மக்கள் மலக்குழி மரணங்களுக்கு ஆளாகிக்கொண்டே வருகிறார்கள்.

இங்கு குறிப்பிடத்தக்கச் செய்தி என்னவென்றால், கையால் மலம் அள்ளுதல் மற்றும் கழிவுநீர்த் தொட்டியில் இறங்கிச் சுத்தம் செய்தல் கடந்த 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட Prohibition of Manual  Scavenging Act, 2013இன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.

இச்சட்டத்தின்படி ஏற்பட்ட அமைப்புதான் “Safai Karamchari”. இது கையால் மலம் அள்ளுதல், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுதல் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஏற்படுத்தப்பட்டதாகும்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்ற வேண்டும் என்பது மிகப்பெரிய அவமானமும் தலைகுனிவுமாகும். தன்னுடைய கழிவுகளைப் பார்த்துத் தானே முகம் சுளிக்கும் நிலையில் அதனை மற்றொரு மனிதன் அகற்ற வேண்டும் என்பது எவ்வளவு பெரிய கயமைத்தனம்.

இது குறித்து அவ்வப்போது சில சமூக ஆர்வலர்களால் மட்டுமே பேசப்படுகிறதே தவிர, பொதுச் சமூகத்தில் போதுமான விவாதங்கள் எழவேயில்லை.

ஏனெனில், இத்தகைய இழிசெயலில் அதிகம் ஈடுபடுத்தப்படுவது 95% ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்த்த மக்களே. இதனால்தான் இது விவாதப் பொருளாக மாற்றப்படாமல், பொதுச் சமூகம் அமைதி காத்துவருகிறது. சுதந்திர இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது குற்றமாகக் கருதப்படாமல், வேலையாகவே கருதப்படுகிறது. ஆனால், அரசாங்கமும் அவ்வாறு பார்ப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

உதாரணமாக, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையில் பல வருடங்களாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் நீடித்துக்கொண்டிருக்கிறது.

பின்பு உச்ச நீதிமன்றம் பல நேர்வுகளில் மத்திய அரசைக் கண்டித்த பிறகு, 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்திற்குப் பிறகு கடந்த 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவதைத் தடை செய்து சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல் பல சீர்திருத்தங்களும், புனர்வாழ்வுக்கான சாராம்சங்களும் கொண்டுவரப்பட்டன.

இச்சட்டத்தின்படி மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளுவதையும், மலக்குழியில் இறங்கிச் சுத்தம் செய்வதையும் குற்றமாகக் கருதி அதில் ஈடுபடுத்தியவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

ஆனால், எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்ட இச்சட்டம், முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தொடர்ந்து நிகழும் மலக்குழி மரணங்களும், அதில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் யாரும் தண்டிக்கப்படாததும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இச்சட்டம் கொண்டுவந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களின் புனர் வாழ்விற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். அதன்படி 2013ஆம் வருடம் ரூ 6.35 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2014 – 2015, 2015 – 2016, 2016 – 2017 ஆகிய நிதியாண்டுகளில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அளித்த புள்ளிவிவரமாகும். 2016 – 17இல் ரூ. 5 கோடியும், 2021- 22இல் 39 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இந்தியா முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் தரத்தை மேம்படுத்த போதுமானதாக இல்லை.

இதேபோல் இந்தப் பிரச்சினைகளுக்காக 1994ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட‘Safai Karamchari’ அமைப்பு 31 மார்ச் 2025 வரை நீட்டிக்கப்பட்டது.

மேற்படி அமைப்பு, 2020 – 2021இல் 825 மனுக்களும், 2021 – 2022இல் 710 மனுக்களும் பெறப்பட்டு அனைத்தையும் முடித்துவைதுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கான தரவுகள் எதுவுமில்லை.

அதேபோல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவலில், மலக்குழியில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளர்களில் தமிழ்நாட்டில் 398 பேரும், அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 32,473 பேரும், இந்தியா முழுவதிலுமிருந்து மொத்தம் 58,098 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், மேற்படி அடையாளம் காணப்பட்ட நபர்களின் வாழ்வாதாரத்திற்கும் புனரமைப்பிற்காகவும் எடுக்கப்பட நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பதைத் தொடர்ந்து நடைபெறும் மலக்குழி மரணங்கள் நமக்குக் காட்டுகிறது.

அதேபோல் மத்திய அரசு அளித்த புள்ளிவிவரப்படி 2013 முதல் 2022 வரையில் 9 வருடங்களில் கழிவுநீர் வடிகால்கள் (Sewers), மலக்குழி (Septic Tank) ஆகியவற்றைச் சுத்தம் செய்தபோது தமிழ்நாட்டில் மட்டும் 97 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேற்படி புள்ளிவிவரம் மத்திய அரசால் 11.07.2022 அன்று கொடுக்கப்பட்டாலும், அதன் பின்பு வெளியான பல்வேறு பத்திரிகைச் செய்திகள் தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் தொடர்ந்து நடைபெறுவதை நமக்குப் புலப்படுத்துகிறது.

உதாரணமாக, ஆகஸ்ட் 2024இல் கோபிநாத் என்பவரும், 2023இல் சென்னையில் 2 பேர், 2023 மே மாதம் திருவள்ளூரில் 3 பேர், அதே மாதம் 2 பேர், 2023 ஏப்ரல் மாதம் மாமல்லபுரத்தில் 2 பேர், பிப்ரவரி 2023இல் செந்தில் குமார் என ஏராளமானோர் இறந்துள்ளனர். அவ்வாறு இறந்துபோன பலருக்கு உரிய இழப்பீடும் கொடுக்கப்படவில்லை. அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. அதேபோல் பல மரணங்கள் வெளி உலகத்திற்கு வராமலும் அரசியல் – பண பலத்தால் மூடி மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு கொடுத்த இந்தப் புள்ளிவிவரத்தை ஒப்பீடு செய்ய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தமிழ்நாடு அரசிடம் தகவல்கள் கேட்டபோது, இன்றுவரை எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கான காரணமும் புலப்படவில்லை.

1993ஆம் ஆண்டு Employment of Manual Scavenging’s and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993 சட்டத்தைத் தொடர்ந்து 2013இல் கொண்டு வரப்பட்டதுதான் Prohibition of Manual Scavenging Act, 2013 ஆகும்.

1993இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டி Safai Karamchari Andolan தொடர்ந்த வழக்கில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 1993 மற்றும் 2013இல் திருத்திய சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது. ஆனால், பல சிறப்புக் கூறுகளைக் கொண்ட 2013ஆம் ஆண்டு சட்டம் இன்றுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் டாக்டர் பல்ராம் சிங் என்பவர் கொடுத்த வழக்கில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது என்பது “மனிதத் தன்மையற்ற செயல்” என்று கூறி, அந்த வழக்கில் மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறையையும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்த்து பிப்ரவரி 2023இல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல் 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம், ஆரோக்கியம் இல்லாத கழிவறைகள் (Insanitary Latrines) இடிக்கப்பட வேண்டும் அல்லது தூய்மையான கழிவறைகளாக மாற்றப்பட வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

கடந்த 2025 ஜனவரி முதல் தேசிய  மனித உரிமைகள் ஆணையம், மலக்குழி மரணங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மேற்படி பல்ராம் சிங் வழக்கில், மாண்புமிகு உச்ச நீதிமன்றம், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் குறித்துப் பல்வேறு உத்தரவுகளை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது. அதன்படி மலக்குழி மரணங்களுக்கு 10 இலட்சம் நிர்வாரணத் தொகையை 30 லட்சமாக உயர்த்தியும், மேலும் பல வழிகாட்டு முறைகளையும் கூறியுள்ளது.

அதேபோல் 2013ஆம் ஆண்டு சட்டத்தின்படி மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை மேற்படி குழுக்களை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

மாற்று வழிகள்

வளர்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இயந்திர மாற்று வழி என்பது சாத்தியமில்லாதது இல்லை. அதற்கு மலக்குழியில் இறங்குபவர்களும் மனிதர்களே என்ற மனப்பான்மை வரவேண்டும். மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் நிலை மாறி, முற்றிலும் இயந்திரமாக்கப்பட வேண்டும். இத்தொழிலில் ஈடுபடும் மனிதர்களை அடையாளம் கண்டு மாற்று வேலை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குச் செலவழிக்க வேண்டும்.

மேற்படி பல்ராம் சிங் வழக்கு மீண்டும் ஜனவரி 2025இல் விசாரணைக்கு வந்தபோது ஆறு முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் ஆகியவற்றில் மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல மத்திய அரசு அளித்த RTI -பதிலில் 2013 முதல் 2022 வரை தமிழ்நாட்டில் மட்டும் 97 மரணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவிலேயே அதிகம். 74 மலக்குழி மரணங்களோடு உத்திர பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கடந்த மே மாதம் 2023 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மலக்குழி மரணங்களைத் தடுக்க உரிய உபகரணங்கள் பயன்படுத்தப்படும் என்றும், இதற்காக 100 கோடி ஒதுக்கப்படும் என்றும் கூறினார். ஆனால், அதன் பிறகும் மலக்குழி மரணங்கள் தொடர்கதையாகியுள்ளன.

அதேபோல் மலக்குழியில் விஷவாயு உள்ளதா என்பதைப் பரிசோதிக்க சிறிய நாடுகள் கூட கருவிகளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்தியாவில் இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு அவ்வாறான கருவி சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்டது. ஆனால், ஒரு செயற்திட்டத்தின் மூலம் அதை நடைமுறைப்படுத்த அரசு முன்வரவில்லை.

அதேபோல் பிப்ரவரி, 2023இல் மத்திய அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சிப் பகுதிகளில் கழிவுநீர் தொட்டிகள், சாக்கடை குழிகளில் அடைப்புகளை நீக்கும் பணிகள் இயந்திரமயமாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதேபோல் இதற்காக 100 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனாலும், கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் பல வழக்குகள் பதிவு செய்யப்படாமலேயே மூடி மறைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு மனிதர்களை ஒருமுறை ஈடுபடுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாகவும், இரண்டாவது முறை ஈடுபடுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டு தமிழக அரசின் சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், நமக்குத் தெரிந்தவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்பது மிக ஆச்சரியமானது மட்டுமல்ல அரசின் மெத்தனப் போக்கையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இத்தகைய போக்கு மனித குலத்திற்கே பேரவலமாகும். வளர்ந்துவரும் அறிவியல் தொழிற்நுட்பங்களைப் பயன்படுத்தி, முழு இயந்திரமயமாக்கப்பட்டு மலக்குழி மரணங்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் கூறியது போல “இது செல்வத்துக்கோ அல்லது அதிகாரத்துக்கோ அல்ல. இது சுதந்திரத்திற்கான போர், மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கான போர்.”

l d.ashokkumarr@gmail.com

Zeen is a next generation WordPress theme. It’s powerful, beautifully designed and comes with everything you need to engage your visitors and increase conversions.

Top 3 Stories

Telegram
WhatsApp
FbMessenger