ஓர் எளிய தாய் தன் மகனின் விடுதலைக்காக
சர்வதேச அரசியல் போக்கையெல்லாம் கவனிக்கவேண்டியவளானாள்.
ஒரு நாள் அல்ல. அழுதாள் பல யுகங்கள் கடந்து.
உடல் தளர்ந்தாலும் மனம் சளைக்காது போராடிய தேவதையவள்
உலகமய நுகர்வுப் பசியில் எல்லோரும் நசியத் தொடங்கியிருந்தோம்
ஆண்டான் அடிமை உளவியலைச் சிதையாமல் காத்தது அதிகார குயுக்தி.
அவர்கள் அரசியல் லாபத்திற்காகப் பிரதமரைக் கொன்றார்கள்.
பிறகு அவர்தம் பீடத்தைப் புனிதப்படுத்த பலியாடுகளைத் தேடினார்கள்.
இறுதியில் எல்லாம் கைமீறிப் போனதென்றார்கள்.
தேர்தல் பாதையின் தன்னகங்காரம் அப்படி மீறச் செய்தது
ஆயுள் சிறையில் தன் வாலிபக் காலங்களைப் பலிகொடுத்தான் அன்புமகன்.
நீண்டநெடிய காத்திருப்புப் பரிசளித்தது எல்லைகடந்த அன்பின் பரிமாணங்களை
ஆதரவுக் குரலெழுப்பும் இளைஞர்களைத் தன் பிள்ளைகளாகப் பார்த்தாள்.
சகோதரனுக்கு உள்ளே சிறைவாழ்வு. தாய்க்கு வெளியே பெருஞ்சிறை.
அவளது கொல்லும் அழுகைக்கு இரங்காத இதயங்கள் எதனாலானவை.
*அற்புதம் அம்மாளுக்கும் சகோதரன் பேரறிவாளனுக்கும்