எச்சிக்கொள்ளி
வடக்கு மலையானுக்கு நாட்டு மாடு
வாழ்முனிக்குக் கெடா
வெராக்குடி வீரனுக்குக் கட்டக்கால்
எட்டு வருசத்தில் ஏறி யிறங்கிய
கோயில் குளங்கள் எத்தனை யெத்தனை
வைத்தியத்தில் இறைத்த காசில்
வரமென வந்துதித்த
பெண்பிள்ளை யொன்று போதாதா?
பேர் சொல்ல
முறம் பீயைத் தின்றுவிட்டு
அடுத்தவன் குசு நாற்றமடிக்கிறதென்று சொல்லும் ஊர்
எச்சிக்கொள்ளி யென்றானபின்
எழவுக்கு வந்தவளா தாலியறுப்பாள்
பொட்டப்புள்ள வைக்கும் நெருப்பில்
கட்டை வேகாமலா போகும்.
சம்புகி
கோர்த்துச் சூடிய அலரி
விரிந்து நீண்ட கருங் குந்தளம்
ஒப்பனையில்லா முகரை
கொழுந்து நீக்கிய துத்தியோடு
மோர் கலந்து ஆளோடியில்
நிற்கிறாய்
அடியேய்…
இளஞ் சாம்பவச்சி
நின் கொடும்புறம் தொட
உள்நுழை
பழஞ் சாம்பவன்
யான்
சபலமுற்றிருக்கிறேன்.
பெருஞ்சீர்
சோகையாலிழுத்துக் கட்டிய
கருப்பங் கழியோடும்
இஞ்சி மஞ்சள் கொத்தோடும்
பொங்க வருச வக்கெ
பொறந்தவன் வருவானென்று
ஏழாம் பிள்ளைக்குப்
பால் கொடுத்துத் தேற்றி
உறக்கத்திலாழ்த்தினாள்
சிறுவிடைக் கோழியிரண்டை
தோளில் தொங்கவிட்டு
வெள்ளாறு கடந்து வந்திருந்தார்
சொல்லாம கொள்ளாம
கோடித்துணி யெடுப்பவன்
வந்திருக்கிறான்
வானம் வெக்காளித்திருக்கவே
சோத்தை ஆக்கு
குழம்பை வையென
உத்திரத்துப் பல்லியொன்று
வெறுந் நாயே கதவத் தொற
நாதாங்கிய நல்லா போடென்கிறது.