நண்டு சரணம் கச்சாமி
அக்காவின் பாலில்லா மார்பைச் சப்பி
வீறிடுகிறது ராத்திரி
கருக்கலில் கலயத்தை எடுத்துக்கொண்டு
வயலுக்கு ஓடுகிறாள் அம்மா
அப்பா கடைக்குக் கிளம்புகிறார்
பூண்டு மிளகு காயம் கண்டந்திப்பிலி சதகுப்பை சேர்ந்த நண்டுச்சாறு
நெற்பூ தின்று மஞ்சளடர்ந்து
நிணம் செழித்திருக்கும் நண்டுக்கூட்டை உறிஞ்சுகிறாள் அக்கா
மார்புகளின் ஐப்பசி மழையில்
நனைகின்றது குழவி
முலைப்பால் மூட்டைகள்
வயல் தலைமாட்டுக் கருவேல மரத்தில்
கட்டியிருக்கும் தொட்டில்
தொட்டிலில் அழும் பாற்குடல்
முலையூட்டக் கெஞ்சும் பால்காரி
‘செத்த நாழி செண்டு போவலாம் போயி பட்டத்தை மூட்டு’
முகம் திருப்பும் மணியக்காரன்
பால் கட்டிய மார்பைச் சோலி ஒதுக்கி
குழந்தைக்குத் தரும் நினைப்பில்
நிலத்துக்கு ஊட்டுகிறாள்
பால் கதிரைக் கக்கியிருக்கிறது நிலம்
உம்பளச்சேரி மாடுகள் திணற
வண்டி வண்டியாய் ஏற்றிப்போகிறார்கள்
பண்ணைக் கிட்டங்கிக்கு
சோலி: பெண்கள் அணியும் மேற்கச்சை