நான் அதற்குத் தொன்மம்
எனப் பெயரிட்டேன்
என் தேவை என்னதெனத் தெரியாமல்
சிறு மூச்சின் அசைவை ஒத்து
அது என்னருகில் வந்தது
அந்நிய மனநிலையைத் தட்டித் தட்டி
துளித் துளி பாதம் வைத்து
நகர ஆரம்பித்தது
பின் செல்கிறேன்
நகர நகர
நிகழ்காட்சி சுழன்றது
நிச்சலனத்தில் துழாவி
கையால்
தொன்மத்தைத் தொட்டேன்
துள்ளியெழுந்து பேசத் தொடங்கியது
ஒரு தொடுதல் உனக்கும்
தேவையாகயிருக்கிறது
சதா முணுமுணுத்த
பேச்சரவத்தில்
பற்பல உருக்கள் விளையாடிக் களித்தன
பெரும் மிரட்டலான
அத்துளிகளைச் சேகரித்து
நிமிர்ந்து பார்த்தபோது
என் தொன்மம் காணவில்லை
தேடித் தேடி
ஓய்ந்துபோகிறேன்
பல உபரித் தொன்மங்கள்
தம்மை அடைகாத்து நின்றன
விழித்துப் பார்த்து விலகி
பற்றியிழுத்த
என் முதற்தொன்மம் தேடி
விண்ணப்பம் தர
தாளினைத் தேடியபோது
என் புடைத்த பச்சை நரம்புகளின் முறுக்கலில்
திமிராகத் தெரிந்தன
ஆயிரம் ஆயிரம்
தொன்மச் சொற்கள்.