தமிழகத்தில் மாநகராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தலும் அதன் அதிகார எல்லைக்குட்பட்ட தனித்துவத்தோடு இருக்கும். இம்முறை மாநகராட்சித் தேர்தலின் பிரச்சாரப் பாணி கிட்டத்தட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு நிகராக இருந்தது. பெரிய கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளும் விதம், நடத்தை மீறல், சிறிய கட்சிகள் இப்பெரிய கட்சிகளை நம்பியிருக்க வேண்டிய சூழல் என்று தேர்தல் அரசியலுக்கென்றே அத்தியாவசியமான சீர்திருத்தங்களின் தேவை ஒருபுறமிருக்க, 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சியைப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசியல் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது. விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் என்கிற அளவில் சட்டத்தின் துணைக்கொண்டு பெண்களைப் பங்குகொள்ளச் செய்வது மாற்றத்தின் முதல் படி, அதை மறுப்பதற்கில்லை. அதே வேளையில் அந்தப் பிரதிநிதித்துவத்துக்கான அசலான அதிகாரம் பெண்களுக்குப் போய்ச் சேருமா என்பதையும் கேள்விக்குட்படுத்த வேண்டியிருக்கிறது.
தனித் தொகுதியில் வெற்றிபெறும் பெரும்பான்மை அட்டவணைச் சமூகப் பிரதிநிதிகள் தலித் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்காமல், சாதி இந்து பொதுச் சமூகத்தின் பிரதிநிதியாக மாறி விடுவதைப் போலவே பெண்கள் பிரதிநிதித்துவமும் உருமாறி விடக்கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கென்று வார்டுகள் ஒதுக்கப்பட்டதாலேயே அவர்கள் வலிந்து திணிக்கப்பட்டார்கள். களம் காணுவது பெண்களாக இருந்தாலும் ஆண் அதிகார மையம்தான் அங்கு நிலைத்திருந்தது. ஒவ்வொரு பகுதியின் முக்கியஸ்தர்களும் அரசியல்வாதிகளும் தங்களது பகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால் இணையரையோ மகளையோ தேர்தலில் ஈடுபட வைக்கும் சூழல் உருவானது. வேட்புமனு தாக்கல் தொடங்கி எல்லா பிரச்சார விளம்பரப் பதாகைகளிலும் பெண்ணின் பக்கத்தில் கட்டாயமாக ஒரு ஆண் சிரித்துக்கொண்டிருந்தது தமிழகம் முழுக்கக் காணக்கிடைத்தது. அசலான வேட்பாளரும் அதிகாரமும் நான்தான் என்று மக்களுக்கு உணர்த்துவதாக அவை இருந்தன. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் கொண்டாட்டங்களில் பெண்களின் கணவர்களே பிரதானமாக இருந்தனர். அவர்களே வெற்றியாளராகக் கருதப்பட்டார்கள், அவர்கள்தான் முடிவெடுக்கக் கூடிய அதிகார மையம் என்பதும் சமூகத்திற்குப் புதிய செய்தியல்ல.
சமூக உரிமைகள் சட்டத்தின் அடிப்படையாக வேண்டுமென்ற பாபா சாகேப் அம்பேத்கரின் வழியில் இன்று தலித்துகளுக்கும் பெண்களுக்கும் கணிசமான பிரதிநிதித்துவம் கிடைக்க நூறாண்டு காலத்திற்கும் மேலான போராட்டமும் பல தலைவர்களின் கூட்டு உழைப்பும் வழி செய்திருக்கின்றன. ஆனால், சாதி மற்றும் ஆண் மையச் சமூகத்தின் அதிகாரம் பிரதிநிதித்துவ அரசியலின் நோக்கத்தைச் சிதைத்து டோக்கினிச அரசியலாக மாற்றிவருகிறது. வெற்றிபெறுவது பெண்ணாகவே இருந்தாலும் அவர் தனித்துவமாய் இயங்க முடியாது என்பதை அறிந்தே இச்சமூகம் அதை இயல்பாகக் கடக்கப் பழக்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்தியலாளர்களும் இந்த நடைமுறையைச் சுட்டிக்காட்டியதாகத் தெரியவில்லை. நாம் மேலே குறிப்பிட்டதைப் போல பிரதிநிதித்துவ அரசியலுக்கான முதற்படி என்கிற அளவில் பெண்கள் அவையில் பங்குபெறுவதை முன்னேற்றமாகக் கருதலாம். ஆனால் அதை ஆட்டுவிக்கப்போவது ஆண் மைய அதிகாரம் என்பதைச் சுட்டிக்காட்டாமல் போனால் சட்டங்களைச் சமூக வழக்கம் தின்று செரிக்கும் கேடு இதிலும் நிகழும்.
மாநகராட்சி தேர்தலையொட்டிய இத்தலைப்பு சமகாலம் சம்பந்தப்பட்டது மட்டுமே, விரிவாக நாம் பேசப்பட வேண்டியது அரசியலில் பெண்களுக்குப் பொதுவாக இருக்கும் அதிகாரம் குறித்துதான். அதிகாரத்தின் படிநிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மட்டத்திலும் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். ஊராட்சி மன்றத் தேர்தல் தொடங்கி பெரிய கட்சிகளின் தலைமை வரை இது நிகழவே செய்கிறது. மூத்த அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்குக் கிடைக்கும் புகழும் வெளிச்சமும் பிரதிநிதித்துவமும் தனியே விவாதிக்கப்பட வேண்டியது. ஒரு ஒப்புமைக்காக எடுத்துக் கொண்டால் அதிலும் ஆண்களின் கையே ஓங்கி இருப்பதை நாடு முழுக்க இருக்கும் அரசியல் சூழலைக் கவனித்தால் விளங்கும். முகலாய மன்னர்களின் வரலாற்றில் ஆண் வாரிசில்லாத காரணங்களினால் போற்றப்படும் பெண் ஆளுமைகளைப் போல தவிர்க்கப்பட முடியாத சூழலில்தான் பெண்ணுக்கான கை ஓங்குகிறது. ஆண் வாரிசை மீறி பெண் வெளிப்படுவது சமகாலத்தில் இன்னும் சாத்தியமாகவில்லை.
இத்தகைய உரையாடல்கள் வெளிப்படைத்தன்மையோடு விவாதிக்கப்படுவதற்கான சூழல் இங்கில்லை என்பதே நிதர்சனம். கட்சி மற்றும் இயக்கங்களின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு இயங்குகிறவர்களாக பெண்கள் இருப்பதினால் இவற்றை உணர்ந்தாலும் பேசுபொருளாக்க அவர்களால் முடிவதில்லை. கோட்பாடு மற்றும் தத்துவ விசாரணை செய்யும் அரசியல் நீக்கமற்ற சுதந்திரச் சிந்தனையாளர்களும் இதைப் பேசுபொருளாக்குவதில்லை என்பதுதான் இதில் பெருந்துயரமானது. கோட்பாட்டு ரீதியாக வேறுபாடுகள் இருப்பினும் இணைந்து பயணிக்க வேண்டிய கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பானது. அதனூடாக சில தர்மத்தையும் அவர்கள் கடைபிடித்தாக வேண்டும், அதிலிருந்து வெளிப்படும் மௌனத்தை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. சுதந்திரச் சிந்தனையாளர்களும் இந்த அரசியல் கூட்டின் அங்கமாக மாறிப்போய் இருப்பதுதான் தமிழகத்தில் மாற்று உரையாடல்கள் மழுங்கிப்போய் இருப்பதற்கான காரணம்.
சமூகநீதி பயணத்தில் அதன் குறைபாடுகளை ஒவ்வொரு கட்டத்திலும் தீரமாக முன்வைப்பது முதற்படி. பின்பு அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம் இல்லாமலும் போகலாம். ஆனால் மேலெழுந்த கேள்விகள் சில அதிர்வுகளை உருவாக்கும். நமது விமர்சனங்கள் வாதத்திற்காக மறுக்கப்பட்டாலும் மறுப்பவர்களையே அதை மறைமுகமாகச் செயல்பட வைக்கும். இதைத்தான் ஆரோக்கியமான விமர்சனங்கள் செய்யும், இதன் மூலம் பயனடையப் போகிறவர்கள் இதை மறுத்தவர்களும் பேசத் தயங்கியவர்களுமே. சமூகநீதி உரையாடல்கள் இதைத்தான் சாத்தியப்படுத்தும். அவ்வகையில் பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவமும் அரசியல் அதிகாரமும் அவர்களை வந்து சேர்ந்தே தீரும் என்பதில் ஐயமில்லை, காலம் அவற்றைச் சாத்தியப்படுத்தும்.