இனமும் மொழியும் கடந்து, பிரதேச எல்லைகளைத் தாண்டி, மரபார்ந்த பண்பாட்டு ஒழுகலாறுகளின் விலங்குப்பிடிக்குத் தப்பி, எந்தப் பூச்சுமற்றுத் தன் வாசகர்களைக் கவிதை தேடிக்கொள்வது எப்படியென்ற கேள்விக்குத் திட்டவட்டமான பதிலேதும் இல்லை. எப்படியோ அது நிகழ்ந்துவிடுகிறது. சங்கக் கவிஞனாகட்டும் ஆண்டாளாகட்டும் சில்வியாவாகட்டும் ரூமியாகட்டும் இது இப்படித்தான் நடக்கிறது. என்.சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்புவழித் தமிழுக்குப் புதிதாக ஒரு வளம் – ரூமி கவிதைகளின் வடிவில் – சேர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘தாகம் கொண்ட மீனொன்று’ என்ற மொழிபெயர்ப்புத் தொகுப்பைப் படிப்பவர்களுக்கு, இதில் சிறிதும் ஐயம் ஏற்படாது என்று உறுதியாகக் கூறலாம். பறவையில்லை. ஆனால், பறத்தல் இருக்கிறது எனக் கற்பிக்கிறது பௌத்தம். இது பின்வந்த ஜென் ஞானிகளிடமும் சூஃபிகளிடமும் தீவிரநிலையில் உணரப்பட்டிருக்கிறது. காதலர்கள் இல்லை. ஆனால், காதல் இருக்கிறது என்பதைத் தரிசனமாகக் கிரகித்துக்கொண்டவரென ரூமியைக் கருதலாம். உலகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரையில், உயர்தனி இருப்புள்ள எப்போதும் நித்தியமான வஸ்துவாகக் காதலைப் பல மேதைகள் முன்வைத்துள்ளனர். ஆனால், ஒருபோதும் மாற்றத்தையே சந்திக்காத ஒரு பேருண்மையாக, எதையுமே கற்பித்துக்கொள்ள முடியாது என்கிறது தத்துவம். எந்தத் தத்துவம் என்று கேட்டால், பிரபஞ்சப் பொருளுண்மை பற்றிய தத்துவமென்று தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும். இந்தத் தத்துவத்தை யாரும் கண்டுபிடிக்கவில்லை; இது அவ்வாறே இங்கிருக்கிறது.
மாற்றம் என்பதே மாறாத மெய்ம்மையாகச் சுழல்கிறது என்பதைக் காதலைக் கருப்பொருளாக வைத்துச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும். இத்துணிச்சலே ரூமியின் தனித்துவமாகக் கவிதைகளில் அர்த்தப்படுகிறது. தனிச்சொத்து, குடும்பம், அரசு, சட்டம், நீதிமன்றம், ராணுவம், கோயில், கடவுள் என ஏகப்பட்ட செயற்கைக் கட்டுமானங்களைக் கட்டியெழுப்பியிருக்கிறோம். இவை எல்லாவற்றையும் ஒரே நொடியில் அறுத்தெறிந்துவிட்டுப் பிரபஞ்சத் தனிமையில் சென்று சேர்ந்துகொள்ளும் ‘புறம் வழிநடத்தும் அகம்’ நம்மிடமுள்ளது. இது எவ்வாறு இவ்விதம் நிகழ்கிறது? மானுடவாழ்க்கை என்பது, காலத்துக்கும் சூழலுக்கும் மற்றும் நிகழ்வுகளுக்கும் விளைவுகளுக்கும் கட்டுப்பட்டதாகும். உணர்வுகளும் அறங்களும் இடையறாது ஒன்றன் மீது ஒன்றென விழுந்து மோதிக் கொண்டேயுள்ளன. கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் கட்டி இறுக்கப்பட்டுள்ள பிரமாண்டப் பெருவடிவங்களைக் கட்டுக் குலைக்கும் அடிமுடி புரட்டும் அதிர்வாகக் காதல் அல்லது அன்பு தோற்றங்காட்டுகிறது. இத்தோற்றத்தைக் குடைந்து துருவி மேன்மேலும் உட்சென்று கொண்டேயிருந்தால் இறுதியாக மிஞ்சுவது என்ன என்பதைத்தான் ரூமி கவிதைகளாக்க முனைகிறார்.
தத்துவமும் கவிதையும் ஒன்றையன்று தழுவிக்கூடி முயங்கியிருந்ததற்குத் தமிழ், வடமொழி, சீனம், ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன், பாரசீகம் எனப் புராதனமொழிகள் பலவற்றிலிருந்தும் தக்க உதாரணங்களைக் காட்டமுடியும். லாவோட்சு, அஸ்வகோஷ், பட்டினத்தார், தாயுமானவர், பாஷோ, கபீர், உமர்கய்யாம், கலீல் ஜிப்ரான் எனப் பல மேதைகள் கவிதையினூடாகத் தத்துவத்தையும் பேசியுள்ளனர்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then