முன்னறிவிப்பு
தன்னுடைய ‘ஆஃபர், ‘மணலூரின் கதை, ‘வீடும் கதவும், ‘நன்மாறன் கோட்டைக்கதை’என்ற நான்கு சிறுகதைகளையும் இணைத்துக் ‘கதையல்ல வாழ்க்கை’என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி நாடகமாக்கிக்கொண்டிருக்கிறார். வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள் என்ற தகவலை அனுப்பியிருந்தார் இமையம். அந்த நான்கு கதைகளையும் அச்சில் வந்த போதே வாசித்தவன். திரும்பவும் அந்த நான்கு கதைகளையும் எடுத்து வாசித்தேன்.
இந்நான்கு கதைகளும் ஒன்று, இன்னொன்றோடு இணையும் புள்ளிகள் எதுவுமில்லாத தனித்தனிக் கதைகள். இடப்பின்னணி, கால ஓர்மைக்குள் சந்தித்துக்கொள்ள வாய்ப்புகள் கொண்ட பாத்திரங்கள் என ஒவ்வொன்றுமே ஒட்டிக்கொள்ளாத கதைகள். இந்நான்கு கதைகளையும் எவ்வாறு இணைத்து ஒரே நாடகமாக ஆக்கியிருப்பார் என்ற ஆர்வம் உந்தித்தள்ள நாடகத்தைப் பார்த்துவிடுவது என்று தயாரானது மனது.
[2022, ஏப்ரல் 2 ஆம் தேதி, சென்னை, ஆழ்வார்பேட்டை மேடை அரங்கில் நடந்த நிகழ்வை நோக்கி நகர்த்தியது.]
கதைகளும் நாடகக்கூறுகளும்
‘ஆஃபர்’– வீடுதேடிச் சென்று விளம்பரம் செய்தலில் தொடங்கிப் போட்டிகள், இலவசங்கள், தள்ளுபடி, குலுக்கல் முறை எனச் சந்தையின் உத்திகளைப் பயன்படுத்திக் கல்வி வியாபாரமாக்கப் பட்டுள்ள நடப்பைப் பேசும் கதைக்கு இமையம் சூட்டிய தலைப்பு இது. கதையின் பாத்திரங்கள் மூன்று. இரண்டுபேரும் வேலைக்குப் போய்க் கை நிறையச் சம்பாதிப்பதாக நம்பும் நடுத்தர வர்க்க மனைவி – கணவன். இவர்களைச் சந்தித்து அவர்களது குழந்தையைத் தான் வேலை பார்க்கும் பள்ளியில் சேர்த்துவிட நினைக்கும் ஆசிரியை. இம்மூவருக்குமிடையில் நடக்கும் உரையாடல்களே கதை.
தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தந்துவிட வேண்டுமென நினைக்கும் நடுத்தர வர்க்கத்துப் பெற்றோரின் அறியாமையையும் அபத்தத்தையும் விவாதப்படுத்தும் கதை. குறிப்பாக ஆங்கில வழியில் கல்வியைத் தரும் – பாடம் நடத்தும் – சிபிஎஸ்சி பாடத் திட்டக் கல்விமீது நடுத்தரவர்க்கம் கொண்டிருக்கும் மோகத்தைப் பயன்படுத்திப் பல்தொழில் குழுமங்கள் நடத்தும் கல்வி மோசடியை அம்பலப்படுத்தும் உரையாடல்கள் நிரம்பிய கதையாக எழுதியிருப்பார் இமையம்.
இடமாற்றமில்லாமல் நடக்கும் ஒரு நிகழ்வு; வீட்டில் முன்னறை என்ற ஒரே இடப் பின்னணியில் மொத்த உரையாடல்களும் நடக்கும். ஓரங்க நாடகத்தில் உருவாகக் கூடிய முரண்பாடோ, எதிர்வினையோ இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். அதனால் ஒற்றைக்காட்சி நிகழ்வாக விரியும் கதை. பள்ளிக்கூடத்தின் விளம்பரங்கள், பெருமைகள், உத்திகள் பற்றிய ஆசிரியையின் முன்மொழிவுகள் மீது கணவனுக்குக் கொஞ்சம் ஐயங்கள் உண்டு. ஆனால் மனைவிக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. இதனால் ஆங்காங்கே உரையாடலில் அங்கதமும் பகடியும் கலந்த உணர்வு எழுந்து அடங்கும் வாய்ப்புகள் உண்டு. ‘கதையல்ல வாழ்க்கை’ எனப் பிரசன்னா ராமசாமி தொகுத்து நிகழ்வாக்கியபோது முதல் நிகழ்வின்போது பார்வையாளர்களிடமிருந்து மெல்லிய சிரிப்பொலிகளும் குலுங்கல்களும் எழுந்தடங்கின. தனியரு வாசிப்பில் மனதிற்குள் தோன்றி அடங்கும் புன்னகை, கூட்டத்தின் வெளிப்பாடாக மாறும்போது நகைச்சுவை உணர்வாகவும் சிரிப்பாகவும் மாறுவதே அரங்க நிகழ்வின் பலம். அதனை உருவாக்கிக் கொண்டது முதல் கதை நிகழ்வு.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then