விடுகாதழகியனூர் என்னும் பழைமையான நகருக்கு வடக்கே விரிந்தோடும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில், கைவிடப்பட்ட ஓர் அரண்மனையைப் போலப் பாசியேறி பாழடைந்துக் கிடக்கிறது அந்த மண்டபம். பிரெஞ்சு பாணி அலங்கார வளைவினைக் கொண்ட நுழைவாயில் இடிந்து விழுந்ததில் வாயிற்கதவுகள் பெயர்ந்து வழியை அடைத்துக்கொண்டு விழுந்திருந்தன. வளாகத்தையே வனாந்திரமாய் மாற்றிவிடும் மூர்க்கத்தோடு திமிர்த்து வளர்ந்திருந்த காட்டுக்கொடிகளும் செடிகளும் மரங்களும் கடப்பாரை விட்டு நெம்புவதைப்போல தமது வேர்களை அடியில் செருகி மூன்றடுக்கு கட்டடத்தின் பெரும்பகுதியைப் பெயர்த்துத் தள்ளிவிட்டிருந்தன. எஞ்சிய பகுதியும்கூட எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுமளவுக்கு வெடிப்பும் விரிசலுமாகத்தான் இருந்தது. மண்டபத்தில் மண்டியிருந்த புதர்களிலிருந்தும் புற்றுகளிலிருந்தும் வெளியேறும் விஷப்பாம்புகள் மண்டபத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளின் நினைவுகளில் நெளிந்துகொண்டேயிருந்தன. அவை நெடுஞ்சாலை வரைக்கும்கூட நெளிந்துவந்து மண்டலமிட்டுப் படுத்திருப்பதும் விரையும் வாகனங்களின் கீழ் நசுங்கி நைந்துகிடப்பதும் அன்றாடக் காட்சியாகிவிட்டது. இதுவன்றி, சந்திரமுகி படத்தில் வருவதை விடவும் பெரிய பாம்பு மண்டபத்திற்குள் இருப்பதாகவும் கூட பேச்சுண்டு.
அந்தச் சுற்றுவட்டாரத்தில் வழக்கத்திற்கு மாறான சத்தம் எது வந்தாலும் அது மண்டபத்திற்குள்ளிருந்தே வருவதாக நம்பும் வழக்கம் விடுகாதழகியனூரில் பரவியிருந்தது. மனித நடமாட்டமற்ற அடர்ந்த பெருவனங்களில் இல்லாத வன்மிருகங்களெல்லாம்கூட இந்த மண்டபத்திற்குள் இருப்பதாக மக்கள் பேசிக்கொள்வதுண்டு. நரி ஊளையிட்டதாகவும் புலி உறுமியதாகவும் சிங்கம் கர்ஜித்ததாகவும் யானை பிளிறியதாகவும் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி அச்சத்தை இன்னும் அடர்த்தியாக்கினார்கள்.

This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then





