தைப்பூசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘Thaipoosam – On The Trails of Aandi’ ஆவணப்படத்தில், இளைஞர்கள் பழனி பாத யாத்திரையில் பங்கேற்பது குறித்து முருக பக்தர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “இளைஞர் ஆர்வம் வந்துஞ் முதற்கட்டமா இதுவொரு ஜாலி… நடக்க நடக்க என்ன ஆயிறும்ன்னா அது பக்திப் பெருக்கா ஆயிறும். அதாவது, ஒரு வேலை ஆரம்பிக்கும்போது என்ன ஆயிறும்ன்னு கேட்டீங்கன்னா… செரி ஜாலியா போயிட்டு வருவோம்ஞ் நாளாக நாளாக அது அப்படியே பக்திப் பெருக்கா ஆயிறும்.” இளைஞர்கள் தொடக்கத்தில் ‘சும்மா ஒரு ஜாலிக்காக’ பழனி பாத யாத்திரைக்கு வருவார்கள். போகப் போக அது பக்தியாக, நம்பிக்கையாக உருக்கொண்டுவிடும். அவருடைய இந்த அவதானிப்பு மிகத் துல்லியமானது. என்னுடைய தனிப்பட்ட அனுபவமும் இதுதான். ஆறாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அரையாண்டு விடுமுறையில் பாட்டியின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவ்வூரில் பாத யாத்திரை மேற்கொள்வோர் கோயிலில் ஒன்றாகக் கூடி அங்கிருந்து நடக்கத் தொடங்குவர். பாட்டியும் மாமாவும் போவது வழக்கம். அவர்களை வழியனுப்பச் சென்றபோது அங்கு நிலவிய ஆரவாரத்தில் நானும் போக வேண்டுமென அடம்பிடித்தேன். அந்த வருடத்திலிருந்து ஆறு வருடங்கள் தொடர்ந்து சென்றேன். முதலில் ஒரு சாகசம் போலவே அதை எண்ணியிருந்தேன். மூன்றாம் வருடத்திலிருந்து பத்து நாட்களுக்கு முன்பே மாலை போடத் தொடங்கினேன். பின்னாட்களில் பாத யாத்திரை ஜாலியானதாக மட்டுமல்லாமல் பக்தி, நம்பிக்கை என்கிற கூடுதலான அம்சங்களும் இணைந்துகொண்டன. அதேபோல, இறுதியாண்டு விடுமுறை நாட்களில் வீட்டின் வலப்புறத்தில் ஆறு செங்கற்களையும் ஒரு களிமண் ஓட்டையும் வைத்துச் சின்னக் கோயிலை விளையாட்டாக அமைத்து, கல்லைச் சாமியாகப் பாவித்து அதைச் சுத்தம் செய்வது, பூ வைப்பது எனக் கோயிலில் செய்பவற்றைப் பிரதியெடுத்து விளையாடியதுண்டு. விளையாட்டாகத் தொடங்கினாலும் போகப் போக அதில் தீவிரத்தன்மை உருக்கொண்டது. ஆக, அந்தப் பக்தர் கூறியது பாத யாத்திரைக்கு மட்டும் பொருந்தக்கூடியதல்ல; நம்பிக்கை (தீமீறீவீமீயீ) உருக்கொள்வதே அவ்வாறுதான். இதைக் கத்தோலிக்கச் சிந்தனையாளர் பிளைஸ் பாஸ்கல் நன்கு உணர்ந்திருந்தார். அவர் கடவுள் நம்பிக்கையில்லாதோருக்கு வழங்கிய புகழ்பெற்ற அறிவுரை: “மண்டியிடுங்கள்… கும்பிடுங்கள்… (கடவுளை) நம்பிக்கையுள்ளதுபோல இதைச் செய்யுங்கள். நம்பிக்கை அதுவாக வரும்.”1 பாஸ்கலைப் பொறுத்தவரை, இவ்வாறு நம்பிக்கையுள்ளவர்போல செய்வதினூடாகத்தான் நம்பிக்கை உருப்பெறுகிறது. சடங்குகள், வழிபாடுகள் முதலானவற்றை நம்பிக்கை வந்த பிறகுதான் செய்வதாகக் கருதுகிறோம். ஆனால், நம்பிக்கையுள்ளவர் போல வழிபடுந்தோறும்தான் அதைச் சுற்றி நம்பிக்கை திரள்கிறது. வழிபடுவதற்கு நம்பிக்கை முன் நிபந்தனையல்ல. நம்பிக்கை உருத்திரள்வதற்கு முன் நிபந்தனையாக அவ்வழிபாட்டை நம்பிக்கையுள்ளது போலச் செய்வது அவசியமாகிறது. நம்பிக்கையின் பல பண்புகளுள் ஒன்று என்கிற அளவில் இதைச் சொல்லவில்லை. மாறாக, நம்பிக்கை உருக்கொள்வதன் அடிப்படைப் பண்பே இதுதான்.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then