தலித் மக்களின் சமூக அரசியல் பண்பாட்டு வெளியின் ஆழமான புரிதலையும் விவாதத்தையும் முன்னெடுப்பதே நீலம் இதழின் அடிப்படை நோக்கம். தலித்துகள் பற்றி மட்டுமல்லாது எல்லாவற்றையும் பேசவும் விவாதிக்கவும் ஒரு தளம் வேண்டும். தலித்துகள் பற்றி மட்டுமே இவ்விதழ் பேசும் என்பதோ, அவர்கள் மட்டுமே பங்களிக்க வேண்டும் என்பதோ இதன் பொருளல்ல. மாறாக எந்த ஒன்றையும் தலித்திய நோக்கிலிருந்து புரிந்துகொள்ளும் பார்வைக் கோணம் ஒன்றைத் தனித்துவமாக உருவாக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.
கலை இலக்கியம் சார்ந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மட்டுமல்லாது ஓவியம், இசை, நிகழ்த்துக் கலைகள், வழக்காறுகள் பற்றியும் அவை சார்ந்தியங்கும் ஆளுமைகள் பற்றியும் கவனம் செலுத்த விரும்புகிறோம். இவை தொடர்பாக எழுதவும் விவாதிக்கவும் முற்படுகிற புதிய குரல்களுக்கான களத்தை நீலம் முன்னெடுக்கும். அதேவேளையில் பழகிவந்த இறுக்கமான வடிவங்களில் இருந்து விடுபட்டு புதிய வடிவங்களிலும் வெளிப்படும்.
அரசியல் உருவகமாக மட்டும் எஞ்சிவிட்ட அம்பேத்கர் எழுத்துகளைத் தமிழ்ச் சூழலில் விரிந்த தளத்தில் தத்துவமாகக் கவனப்படுத்த விரும்புகிறோம்.
வானத்தின் நிறம் நீலம். அது பேதம் பார்ப்பதில்லை. எல்லோரையும் உள்ளடக்கி விரிந்திருக்கிறது. அதன் கீழ் அனைவரும் சமம். நீண்டு சென்றால் நீலமும் கூட மறைந்து நிறங்களற்ற நீள்வெளி விரிகிறது. அது விடுதலை என்னும் பெருவெளி. அதை நீலத்தின் வழியே கண்டடைவோம்.