அந்தி சாயும் பாத்திரத்தின் செந்நிழலில்
உறங்கிக்கொண்டிருக்கும் துளிகள்
உதிராமல் தொங்க இலைகளைப் போல
அசைந்து செல்லும் காற்றலைகளின்மீது
ஒரு கவிதையை எழுதி வைக்கிறேன்
தவிர்க்கவியலா உன் சன்னதத்தின்
காலத்தின் அய்யங்கள் பெருமழையாய்
வழிந்துகொண்டிருக்கின்றன.
◊
கடைசியின் அவலங்கள் எதுவும் நிகழாத
இந்தப் பிரிவின் தரையில்
எதுவுமே முளைப்பதில்லை
உனக்குத் தெரியாத இந்த இழையில்தான்
நான் தொடுத்து வைத்த மலர்கள் இருந்தன
உதிர்ந்தபிறகு தொலைந்து போன அந்த நூலிழைதான்
கயிறெனத் திரிந்து முடிந்த இந்தக் காலத்தின்
ஒருமுனையில்தான் என்னைக் கட்டிவைத்திருக்கிறேன்.
◊
இரவின் துணைமிகுந்த இந்தச் சலனத்தில்
நான் மட்டும் தனியாய்க் கிடக்கிறேன்
உதிர்ந்த நட்சத்திரம் என்னை நோக்கி
மேலும் ஓர் இருட்துளியை அனுப்புகிறது
இருளருந்திய போதையில்
நெளிகிறதென் உயிர்.
◊
இளகிய தளிர்கள் தொடங்கிய
செடி ஒன்று என்னருகில் இருக்கிறது
நிழல் காய்க்காத அதன் வேரருகில்
வந்தமர்கிறது மஞ்சள் குருவி
மெல்லிய காதல் காட்சி இது
தனிமையின் ஆயிரமாவது இலை
துளிர்க்கும் என் மரத்தின் வேரடியில்
நடக்காதது
உன் கால்தடங்களின் பிரதியிடுதல்.
◊
பூரணமற்ற கடந்த காலங்களில்
முள்ளன்று தைத்திருக்கிறது
நிகழ்காலச் சட்டையை அதில்தான்
மாட்டி வைத்திருக்கிறேன்.
◊
எல்லாவற்றையும் ஒற்றைச் சதுரத்தில்
கொண்டுவரும் பனோரமா காட்சி போல்
என்னுள் இருக்கும் உன்னைப் படம்பிடிக்க வேண்டும்.
வேறு என்ன செய்ய
கூரொளிச் சிந்தாத உன் விழி முன்னால்
மௌன வெயிலாய்ப் படர்கிறேன்.