முதல் முதலாகப் பருகத்
தரப்பட்ட முலையில்தான்
சதையின் வாசனை அறிமுகமானது
எல்லாவற்றிற்கும் முன்பாக
எல்லாவற்றையும் விட மூர்க்கமாக.
ஒரு மதிகெட்ட மத்தியானத்தில்
அவள் ரவிக்கையைப் போர்த்திக்கொண்டு
பாலாடையைக் கொடுத்தபோதுதான்
நிராகரிப்பும் ஏமாற்றமும் பரிச்சயமாகின.
இல்லாத பூச்சாண்டி பிடித்துப்போவான் என்றாள்
நான் முதல்முதலாகப் பயந்தேன்
இதுதான் கடைசிக் கவளமென்றாள்.
அன்று பொய்யும் நானும் சந்தித்தோம்
நான் தூங்கியதாய் நம்பிய ஓரிரவில்
அவள் கிசுகிசுத்த குரலில் முனகினாள்
கள்ளத்தனத்தைக் காதுகூடாகக் கேட்டேன்.
ஒருமுறை பிடிவாதம் பிடித்ததற்காய்
விறகைக்கொண்டு சூடு போட்டாள்
பின் அவளேதான் கண்ணீர் மல்க
மருந்து போட்டாள்.
நேசம் போன்று நோகடிக்கும் ஆயுதமில்லை
இந்த வரி அந்தத் தழும்பு பரிசளித்தது
நீதான் என் ஒரே உலகமென்றவளுக்கு
இன்னோர் உயிர் கிடைத்தபோது
அதையும் நேசித்தாள்.
ஒரே நேரத்தில் இருவர்மேல் காதல் வருமென
அவள் சொல்லிக்கொடுக்கவில்லை
ஆனாலும் கற்றுக்கொண்டேன்
இன்றேகூட உனக்கும் அவருக்கும்
சண்டை வந்தால் அவரோடுதான் போவேன்
உன்னைப் பிடிக்கும்
ஆனாலும் உனக்காக ஒருபோதும்
நான் என்னைப் பணையம் வைக்க மாட்டேனென
அடிக்கடி சொல்வாள்.
நான் சந்தித்த முதல் துரோகமும்
மிகப்பெரிய துரோகமும் அதுதான்
நேசத்தின் அதே நிலத்தில்
அவளது வேரின் அருகில்
அரளிச் செடியை அன்றுதான்
ரகசியமாய்ப் பதியம் போட்டேன்.
ஊருக்கே தலைவாரியபடி வம்புக்கதை பேசுபவள்
யாருமற்ற நேரத்தில் சீப்புக்குப் பேன் பார்த்தபடி
எதையோ புலம்பிக்கொண்டிருப்பாள்.
தனிமையின் உக்கிரத்தைத் தணிக்க
அவளருகில் பலமுறை தண்ணீர் வைத்ததுண்டு
மதுவை அருந்துவதற்குச்
சத்தியமாய் நான் காரணமல்ல.
பாவாடை நாடாவால் இறுக்கப்பட்ட
அரிசி மூட்டையின் வாய்ப்பகுதியெல்லாம்
அவளது அடிவயிற்றுச் சுருக்கங்கள்
அவிழ்க்கப்பட்ட அரிசி மூட்டையிலிருந்துஅனுதினமும் அவள்
என்னைத்தான் அளந்தாள்
என்னையேதான் சமைத்தாள்
சிறிது சிறிதாக என்னை உண்டு செரித்தாள்.
ஓர் இலையை லாவகமாய்த் தரை சேர்க்கும்
அந்திக்காற்று போல
எல்லாத் தன்மைகளுக்கும்
ஒரு புடவையின் நுனியில் விழும்
வழவழத்த முடிச்சு போல
எல்லாத் துயர்களுக்கும்
எல்லாவற்றிற்கும் அவள்தான் பழக்கினாள்.
என் தாயைப் போலப் பார்த்துக்கொள்
என்றபோது ஒருத்தி
நான் உன் தாய்போலல்ல
அந்தளவிற்கு நல்லவளும் அல்ல என்றாள்
ஓத்தா எனும் வார்த்தைக்குச்
சிரிக்கத் தொடங்கியது அப்படித்தான்.
என் அம்மாவின் பதின் பருவமே எனப் பிதற்றியபோது
முத்தத்திலிருந்து விலகிய ஒருத்தி
அதன்பிறகு
என் கண்களைச் சந்திக்கவில்லை
அம்மாவிற்கு மாதவிடாய்
ஏன் சீக்கிரமே நின்றுபோனதென
அறிந்தது அப்போதுதான்.
உன் அம்மாவை நான் பார்த்துக்கொள்வேன்
உன்னை எவ்வளவு பிடிக்குமோ
அதே அளவிற்கு உன் அம்மாவையும் பிடிக்கும் என்றவள்
நான் கொலை செய்யும் முன்னே
செத்துப்போனாள்
அம்மா இறந்துபோவதாக
அடிக்கடி கனவு வர ஆரம்பித்தது அப்போதிலிருந்துதான்.
அம்மா அழுகக்கூடாதென்றுதான்
எனக்கடுத்து உடைந்தழுகிய கருமுட்டையை
அரளிச் செடி அருகே புதைத்து வைத்தேன்
அதன் பூக்களின் வண்ணம்
முட்டையிலிருந்து வந்தது.
அவள் பைத்தியக்காரத்தனமாக
ஏதும் செய்யக்கூடாதென்று
பூச்சிக்கொல்லியைச்
செடியின் வேரில் ஊற்றி வைத்தேன்.
உணவைச் செரிக்கும் அமிலத்தின் நதியில்
அவளது வயிற்றுக்குள் மிதந்தபிறகுதான்
இங்கு வந்து சேர்ந்தேன்
அவள் என்னை அடிக்கடி அணைத்துக்கொண்டாள்
அடிக்கடி முத்தமிட்டாள்
அம்மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக
உண்டு செரித்தேன்
அவள் நடந்து நடந்து
தள்ளாடித் தள்ளாடி
தவழ்ந்து தவழ்ந்து
என் இரைப்பைக்குள் வந்து சேர்ந்தாள்.
இரைப்பை எனப் பெயரிடப்பட்ட
கல்லறைப் பலகைக்கு அருகில்
என் பெயருள்ள ஒரு கள்ளிச் செடியும்
ரத்தச் சிவப்பான பூக்களோடு
பெயரற்ற ஓர் அரளிச் செடியும் இருப்பது
யாருக்கும் தெரியாது
என் இரைப்பைக்கு
அம்மாவின் பெயர் வந்ததும்.