ஒரு நிலையை அப்படியே ஏற்று அதில் நேரும் இன்னல்களைப் புலம்பல் தத்துவங்களாக வெளிப்படுத்தாமல் அந்த நிலையிலிருந்து ஒரு துளி நேர்மறைச் சிந்தனை மேலெழும்படி, அந்தச் சிந்தனை Motivational Speech வகையறாவை ஞாபகமூட்டாமல் படைப்பு மணத்தோடு உள்ளத்தை நீவிக்கொடுத்து ஊக்கமளிக்கும் எழுத்துகளையே தற்போதெல்லாம் வாசிக்கப் பிடிக்கிறது. வெறுமனே வலி, வேதனை, புலம்பல்கள் என விவரிக்கும் படைப்புகள் அலுப்பைத் தருகின்றன. அதேவேளை கொண்டாட்டங்களை வெளிப்படுத்தும் படைப்புகள் என்றாலும் அதில் பாசாங்கற்ற வாழ்வியல் செறிவாக இருக்கும்படி எதிர்பார்க்கிறேன். ஆக, வலியோ கொண்டாட்டமோ கலைப்படைப்புகள் என்னை உள்ளிழுத்துக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கையாளனாக மட்டுமே நிறுத்தி ரசிக்க வைக்கிறதென்றால் அம்மாதிரி படைப்புகள் பெயரளவில் மட்டுமே ஞாபகத்தில் இருக்கின்றன. அப்படைப்புகள் எனக்குத் தகவல்களை மட்டுமே கூறுகின்றன. அந்தத் தகவல்களை வைத்து நான் தேர்வெழுதப் போவதில்லை. அப்படி, கிட்டத்தட்ட 125 வருடங்களுக்கு முன்னால் அமெரிக்காவில் எழுதப்பட்ட ஜாக் லண்டனின் படைப்புகளை உணர்ச்சி பொங்க நண்பர்களிடம் பேசி உரையாடுகிறேன். அந்த அளவுக்கு அவருடைய படைப்புகள் என் மீது தாக்கத்தை உண்டு பண்ணிவிட்டன. குறிப்பாக, அவருடைய கதாபாத்திரங்களின் தன்னுணர்வு என்னை வியப்பிலாழ்த்துகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட கதாபாத்திர வார்ப்புகளாய் அல்லாமல் சாமான்ய மனித உளவியல்களையே அவர் எழுதியிருப்பதால் எளிதில் கதையோடு ஒன்றிவிட முடிகிறது. மனித உணர்வுகளுக்கு அவர் கொடுக்கும் மதிப்பும் அதை அவர் எழுதியிருக்கும் பாங்கும் சிலிர்ப்பானவை. வாசகனை மெல்ல மெல்ல கதையின் மையத்தோடு நெருக்கி ஒரு கட்டத்தில் வாசகனும் கதையில் நிகழ்பவனாய் ஆகிவிடும்படி வாசகனை ஆக்கிரமித்துக்கொள்ளும் ஆர்ப்பாட்டமோ அவசரமோ அற்ற செறிவான கதை சொல்லும் முறை ஜாக் லண்டனுடையது.
ஜாக் லண்டனின் படைப்புகளை முழுதாக நான் இன்னும் வாசித்துவிடவில்லை. ஆனால், வாசித்த வரையில் குறிப்பிடும்படியான வாசிப்பனுபவங்களைக் கொடுத்திருக்கிறார். இதுவரை ஆன்டன் செகாவ், ஜாக் லண்டன் ஆகிய இரு வெளிநாட்டு எழுத்தாளர்களை ஓரளவு வாசித்திருக்கிறேன். நான் வாசித்த சிறுகதைகளிலேயே மிகப்பிடித்த சிறுகதைகளாக செகாவின் ‘டார்லிங்’, ஜாக் லண்டனின் ‘சிறிதளவு இறைச்சி’ என்ற இரண்டு கதைகளையும் கூறுவேன். படைப்பு மனத்தின் சன்னத நிலைகளில்தான் இவ்விரண்டு கதைகளையும் வார்த்தெடுக்க முடியும் என்கிற அளவு நண்பர்களிடம் அதீதமாய்ச் சிலாகிப்பதுண்டு.
This content is locked. Only accessible for Registered Users.
If your aren't registered yet, then