நாடாளுமன்றத் தேர்தல் அண்மித்துவிட்டது. யார் வர வேண்டும் என்பதைவிட யார் வரக் கூடாது என்பதில் நமக்கொரு தெளிவு வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதால் நேரும் பாதிப்புகள் குறித்துப் பல்வேறு அரசியல் விமர்சகர்களும், களச் செயற்பாட்டாளர்களும், அறிஞர்களும் தொடர்ந்து பேசிவருகின்றனர். 2014இலிருந்து அவர்களின் ஆட்சி முறையை உற்று நோக்கினால், சில தெளிவுகள் பிறக்கக் கூடும். பண மதிப்பிழப்பு, நீட் தேர்வு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, கும்பல் கொலைகள், அதிகரித்துவரும் தனியார்மயம், வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை திருத்தச் சட்டம், இராமர் கோயில், விலையேற்றம், இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம், ஒரு நாடு – ஒரு தேர்தல் – ஒரு ரேஷன், பொதுத்துறை நிறுவனங்கள் முடக்கம், விவசாயிகள் போராட்டம், ஆதார் அட்டை மூலம் நம் தரவுகளை ஒற்றை மையத்தில் திரட்டியது, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைப் பொதுமக்கள் மீது திணிப்பது, சிறுபான்மை மக்களின் இருப்பைப் பதற்றத்திற்குள்ளாக்குவது என நீளும் பட்டியல் எளிய மக்களின் வாழ்வை நேரடியாகவும் மறைமுகமாகவும் கடுமையாகப் பாதிக்கக் கூடியது. அதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவிடாமல் மதம் என்ற கருவியை மட்டும் நம் கைகளில் தந்துவிட்டு, திரைமறைவில் நம் கடைசித் துளி உதிரத்தைக் கூட புசிப்பதற்கான திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். ஊடகங்கள், பிரபலங்கள், கல்வியாளர்கள், ‘அறிவுஜீவிகள்’, அரசு நிறுவனங்கள் – துறைகள் எனப் பல்முனை கவசங்கள் அவர்களுக்குண்டு. இப்படியொரு சிக்கல் இருக்கிறதென்று நாம் புரிந்துகொள்வதற்குள்ளாகவே அடுத்த சிக்கலைத் தந்து முன்னதை நம் நினைவிலிருந்து அகற்றிவிடுவார்கள். இத்தனையையும் மீறி நாம் நிலைகுலைவதற்கு இன்னமும் சில விஷயங்கள் இருக்கின்றன. பாஜகவின் 2014, 2019 தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் தொடர்ந்து இடம்பெற்றன: இராமர் கோயில் கட்டுவது, கங்கையைத் தூய்மைப்படுத்துவது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் இலக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவனும் தொடர்ந்து சொல்லிவருகிறார். பெரும்பான்மைவாதத்தை எதிர்ப்பதற்கும் நம் உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கும் நமக்கிருக்கும் ஒரே வாய்ப்பு பாபாசாகேப் தந்த அரசியலமைப்புச் சட்டம்தான். அதை நீர்த்துப்போகச் செய்வதன் மூலம் மதச்சார்பற்ற, ஜனநாயக போன்ற முன்னொட்டுகளை நீக்கிவிட்டு, இந்துமத – சர்வாதிகார நாடு என்று இந்தியாவை மாற்ற நினைக்கிறார்கள். இது மிகையான கூற்று அல்ல. பாஜகவின் செயற்பாடுகளைக் கவனித்தால் இதன் உண்மைத்தன்மை புரியும். மக்களவையில் விவாதிக்காமல், பெரும்பான்மையைப் பயன்படுத்தித் திட்டங்களை அறிவித்து அதை நள்ளிரவில் அமலாக்குதல், தேர்தல் வரும் சமயங்களில் அரசு நிறுவனங்கள் மூலம் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை நெருக்குடிக்குள்ளாக்குவது – கட்சிகளின் சின்னங்களை முடக்குவது, எதிர்க்கருத்தைப் பேசும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் மீது உடல் ரீதியான – உளவியல் ரீதியான வன்முறையை ஏவுவது, எந்தத் தயக்கமுன்றிப் பெரும்பான்மைவாதத்தை முன்வைத்துச் சிறுபான்மையினரை மிரட்டுவது, பொய்த் தகவல்களைக் கல்வி பாடத்திட்டத்தில் சேர்ப்பது என இவையெல்லாமே சர்வாதிகாரப் போக்குகள்தானே. எப்படிச் சாதி தன்னைக் காலத்திற்கேற்றவாறு தகவமைத்துக்கொள்கிறதோ, அதுபோலவே சர்வாதிகாரமும் பரிணாமம் அடைகிறது.
ஹிட்லர், முசோலினி காலத்திய சர்வாதிகாரம் இன்று இல்லை. முந்தைய தலைமுறை வரைக்கும் ‘கடினமாக உழைக்க வேண்டும்’ என்ற சொல்லாடலை அடிக்கடி கேட்டிருப்போம். இன்று இதன் தன்மை மாறியிருக்கிறது – ‘இஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்’. அதே முதலாளித்துவம்தான், அவர்கள் நம்மைச் சுரண்டும் முறை மட்டுமே மாறியிருக்கிறது. அந்தவகையில் பாஜகவின் சர்வாதிகாரமும் அதன் நேரடித் தன்மையில் நம்மை அணுகாது. வெவ்வேறு மாயச் சொற்கள் கொண்டு நம்மை மயக்கத்தில் வைத்திருக்கவே அவர்கள் எண்ணுவர். இதற்காக அவர்கள் கைக்கொள்ளும் முக்கிய ஆயுதமாகக் கல்வியே இருக்கப் போகிறது. பள்ளி மாணவர்களிடையே சாதிவெறி அதிகரித்துள்ளது, போதை பழக்கம் அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்து செயலாற்றூம் நாம், பள்ளிகளில் ‘சாகா’ பயிற்சி வகுப்புகள் அதிகரித்திருப்பதைக் கண்டுகொள்வதில்லை. இதுதான் அவர்களது வெற்றி. மத – சாதிய – பாலின பாகுபாடுகள் இயல்பாக்கம் செய்யப்படுகின்றன. இதன் உச்சமாகப் புதியக் கல்விக் கொள்கையின் தாக்கம் இருக்கும். குலக்கல்வி திட்டம் நோக்கிய பாதைதான் புதியக் கல்விக் கொள்கை. அவரவர் விருப்பப் பாடங்களைப் படிக்கலாம் என்ற திட்டம், இன்னார்தான் படிக்க வேண்டும் அன்னார் படிக்கக் கூடாது என்பதில் போய் முடியும். அது உயர்கல்வியில், வேலைவாய்ப்பில், அரசு அதிகாரத்தில், சமூகத்தில், இறப்பில், அடுத்த பிறப்பில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தும். ஏற்கெனவே ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. பொருளாதாரத்தில் நளிந்த உயர்த்தப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு திணிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் அவர்கள் வந்தால் இடஒதுக்கீடு என்றே சொல்லையே அகராதியிலிருந்து நீக்கிவிடுவார்கள்.
“சரி, இந்தக் குறைகளெல்லாம் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் இல்லையா, இவற்றில் பெரும்பாலானவை அவர்கள் தொடங்கிய – முன்மொழிந்த திட்டங்கள்தானே” என்று நீங்கள் கேட்கலாம். கொள்கை – செயற்பாடுகள் அளவிலாவது இவர்களிடம் நாம் கோரிக்கை வைக்கலாம், எதிர்ப்பைத் தெரிவிக்கலாம், போராட்டம் நடத்தலாம். அரசியலமைப்புச் சட்டம் நமக்குத் துணை நிற்கும். “வள்ளலார் சனாதனத் துறவி” என்று பேசும் பாஜகவிடம் என்ன கொள்கையை எதிர்பார்த்துப் பேசுவீர்கள். மனுவின் சட்டம் நம்மைக் கண்ணாலும் சீண்டாது. கடந்த இரண்டு தேர்தல்களில் தவறவிட்டதுபோல் இம்முறை தவறவிடக் கூடாது. தென் மாநிலங்களில் பெரிய பிரச்சினை இல்லை என்று நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை. இங்கே பலமாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள், குறிப்பாகத் தமிழ்நாட்டில். வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் அவர்கள் இரு தொகுதிகளில் வெற்றிபெற்றால் கூட ஆபத்துதான். இந்தத் தேர்தல் நேர்மையாக நடக்குமா என்பதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் நமக்கிருக்கும் வாய்ப்பைத் தொலைநோக்குப் பார்வையோடு பயன்படுத்திக்கொள்வதில் உறுதியாக இருப்போம்.
m
ஏப்ரல் என்றாலே தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டங்கள்தாம் நம் நினைவில் எழும். திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட நம் வரலாறை மீட்டு அதைப் பரவலாக்குவதும், சமகால துயரங்களுக்கான நீதியைப் பெறுவதும்தான் தலித் வரலாற்று மாதத்தின் நோக்கம். அடுத்த தலைமுறையினருக்கு நம் கடந்தகாலத்தைச் சொல்லிக்கொடுப்பது மிக முக்கியம். இங்கு எதுவும் எளிதாகக் கிடைத்திடவில்லை. ‘தலித்’ என்ற பெயருக்குக் கூட பெரும் போராட்டங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அதேவேளை, இளைஞர்களின் போராட்ட வழிமுறைகளையும் நாம் தெளிவாக்க வேண்டும். அரசியல் அதிகாரம், சமூக அதிகாரம் இரண்டுமே முக்கியம்தான். ரஷ்யாவில் பொதுவுடைமை ஆட்சி அமைந்தபோது லெனின் சொன்னதும், பத்து இலட்சம் மக்களுடன் பௌத்தம் ஏற்றபோது பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னதும் ஒரே விஷயம்தான், “இனிதான் நமக்கு அதிக வேலை இருக்கிறது.”
ஜெய் பீம்.