உதடுகளின் விரல்
முஹம்மத் அல் மாகூத்
பேசாமை … மருத்துவமனை
பேசாமை … மறுவாழ்வு
பேசாமை … மரணம்
பேசாமை … இரங்கல்
பேசாமை … நீதிமன்றம்
பேசாமை … வழக்கு
பேசாமை … வாதாடுதல்
பேசாமை … ரோந்து
பேசாமை … சோதனை
பேசாமை … ஆய்வு
பேசாமை … விசாரணை
பேசாமை … உணவு
பேசாமை … உறக்கம்
உஷ்…
அமைதி…
மரியாதை…
பேச்சுவார்த்தை, தீர்மானம்….
நான் உரக்கப் பேசுவது எப்போது?
நீரில் மூழ்கையில்
நெருப்பில் கருகுகையில்
சிறைக்கம்பிகளின் நிழலில்
மனநல காப்பகத்தில்.
முஹம்மத் அல் மாகூத் (1934 – 2006)
1934இல் சிரியாவிலுள்ள சலமிய்யா பகுதியில் பிறந்தவர். தேக்க நிலையில் இருந்த அரபுக் கவிதைக்கு உயிரோட்டம் அளித்தவர். மாற்றத்திற்கான ஒரு சூத்திரமாக கவிதையைக் கையாண்டவர். நவீன அரபு கவிதையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
அவரது கவிதைத் தொகுப்புகளில் முக்கியமானவை: ‘சந்திர வெளிச்சத்தில் சோகம்’ (1959), ‘மில்லியன் சுவர்களைக் கொண்ட ஓர் அறை’ (1960), ‘மகிழ்ச்சி என் தொழிலல்ல’ (1970), ‘பூக்களின் வாள்வீரன்’ (2001). இவர் 2006இல் டமாஸ்கஸில் இறந்தார்.
m
பெறுமானமற்ற பெண்ணின் மரணம்
நாசிக் அல்-மலாயிகா
அவள் மறைவிற்காகக்
கன்னங்கள் வெளிறவில்லை
உதடுகள் நடுங்கவில்லை
இறப்புச் செய்தி
மீண்டும் மீண்டும் அறிவிக்கப்பட்டது
வாசல்கள் காதுகொடுத்துக் கேட்கவில்லை
விரக்தியும் துக்கமும் சொட்டிக்கொண்டிருந்த
சாளரத் திரைச்சீலைகள்கூட
சவப்பெட்டியை எட்டிப்பார்க்கவில்லை
இறுதியில்
நினைவுகளால் அதிர்ந்துபோன
எலும்புக்கூட்டின் எச்சம் மட்டுமே
வீதியில் மிச்சமாயிருந்தது
சாலைகளில் தடுமாறிக்கிடந்த
இறப்புச் செய்தியின் எதிரொலி புகலிடமின்றிப்
பொந்துகளில் புகுந்து
மறதியில் அடைக்கலமானது
எவ்வித அதிர்வுமின்றி
இரவு தன்னைக்
காலைப்பொழுதிடம் ஒப்புக்கொடுத்தது
பால்காரியின் குரல்
நோன்பாளியின் அழைப்பு
எலும்பும் தோலுமான
கடும் பசிகொண்ட பூனையின் ‘மியாவ்’ சத்தம்
போராட்டக்காரர்களின் முழக்கம்
பாதசாரிகளின் சலசலப்பு
வியாபாரிகளின் சச்சரவு
தெருக்களில் கற்களை வீசும் சிறுவர்களின் ஆர்ப்பரிப்பு
கழிவுநீர் வடிகால்களின் சிணுங்கல்
ஆழ்ந்த மறதியில் துணையின்றிக்
கூரையின் வாசல்களை அசைக்கும்
காற்றின் கீச்சொலி
இவற்றுடன்
எப்போதும் போல்
அவதரித்தது வெளிச்சம்.
நாசிக் அல்-மலாயிகா (1923 – 2007)
கவிஞர், இலக்கிய விமர்சகர். நவீன அரபுக் கவிதையின் முன்னோடியாக அறியப்படும் இவர், 1923இல் பக்தாதில் பிறந்தார். அரபு வசனக்கவிதையை அறிமுகப்படுத்தியவர்களுள் நாசிக் அல்-மலாயிகா குறிப்பிடத்தக்கவர். பெண்ணியக் கவிதைப் பரப்பில் இவரது இடமும் பங்களிப்பும் முக்கியமானவை.
‘இரவின் காதலி’, ‘சாம்பல் துகள்கள்’, ‘சந்திர மரம்’, ‘வாழ்வின் விரக்தியும் மனிதனுக்கான பாடலும்’, ‘தொழுகையும் புரட்சியும்’, ‘நாசிக் அல்-மலாயிகா கவிதைகள்’ உள்ளிட்ட பல்வேறு கவிதைத் தொகுப்புகளையும் ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார். இவர் ஜூன் 20, 2007 அன்று கெய்ரோவில் மரணமடைந்தார்.