நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இன்றைய பேசுபொருளை சமூக வலைதளங்களே தீர்மானிக்கின்றன. மேலும், நாம் எதைப் பேச வேண்டும் என்பதையும், எதைச் சிந்திக்க வேண்டும் என்பதையும் அவையே தீர்மானிக்கின்றன. ஒருவகையில் வசதியாக இருக்கும் இப்போக்கு, பெரும் சவாலாகவும் மாறியிருக்கிறது. இந்தத் தன்மை விமர்சனப்பூர்வமாக அணுகப்பட வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டு அரசியல், பண்பாட்டுத் தளத்தில் சமூக வலைதளங்கள் உருவாக்கிவரும் தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. குறிப்பாக, சமூகத்தின் மனப்போக்கையே தீர்மானிப்பவையாக இருக்கின்றன. எவ்வளவு நியாயமானவையாக இருப்பினும் சமூக வலைதளங்கள் விரும்பாத ஒன்றைப் பேச முடியாத நிலை வெகு வேகமாக உருவாகிவருகிறது. குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டு அரசியல் தளம், களத்தை விடவும் சமூக வலைதளங்களையே சார்ந்து இயங்குவதைப் பார்க்கிறோம். கருத்தியல் பிரச்சாரத்தை அவற்றினூடாகக் கட்டமைத்துவிட முடியும் என்று பெரும் கட்சிகளே நம்பக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. சமூக வலைதளங்களில் எண்ணிக்கை பலமே ஒரு கருத்தைச் சரியானவை அல்லது தவறானவை என்று தீர்மானிப்பதற்குரிய காரணியாக மாறியிருக்கிறது. ஒரு கருத்தைத் தொடர்ந்து பரப்புவது அல்லது சொல்வது மூலமாக அவற்றை நம்ப வைக்க முடியும் என்ற நிலையையும் அது உருவாக்கியிருக்கிறது.
இங்கே பல்வேறு அரசியல் சூழல்கள் இருக்கின்றன; அவை சார்ந்த முரண்பாடுகளும் நிலவுகின்றன. அவற்றை அந்தந்தத் தளத்தில் சார்ந்து புரிந்துகொள்வதிலும் விவாதிப்பதிலும் நமக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், இங்கு பல்வேறு வகையான பிழைகள் நிலவுகிற பட்சத்தில் அவற்றில் ஒரு தரப்பு பற்றி மட்டுமே தங்களுக்குக் கிடைக்கக்கூடிய லைக்ஸ், ஷேர்ஸ், மீம்ஸ் போன்ற எண்ணிக்கை பலம் மூலம் பரப்பிவருகின்றனர். குறிப்பாக, தலித் அரசியல் மற்றும் பண்பாட்டுத் தரப்பின் மீது இங்கு பரப்பப்பட்டு வரும் வெறுப்பைக் குறித்து நாம் ஆழமாக யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த வெறுப்பு வெகுமக்களைவிடவும் அரசியல் ரீதியாகத் தங்களை முற்போக்கானவர்களாகக் காட்டிக்கொள்பவர்களிடையேதான் அதிகமாகப் பரப்பப்படுகிறது என்பது வியப்பளிக்கத்தக்கதாக இருக்கிறது. இங்கு பிரச்சனை விமர்சிக்கப்படுவதால் அல்ல. மாறாக அந்த விமர்சனத்தில் நேர்மை இல்லை என்பதுதான்.
சமூக வலைதளங்களின் சுதந்திர வெளியால் பலரையும் போல தலித்துகளும் தங்களுடைய கருத்துகளை எழுதவும் பேசவும் முற்பட்டிருக்கிறார்கள். அவை விமர்சனப்பூர்வமாக அணுகப்பட வேண்டும் என்பது வேறு விசயம். ஆனால், சமூக வலைதளங்களில் தலித்துகளின் விமர்சனங்களை எதிர்கொள்ளக் கூடியவர்கள், வாதத்திற்கு வாதம் – தன்முனைப்பு – மோதல் – கணக்குத் தீர்த்தல் சார்ந்து மட்டுமே தங்களுடைய கருத்துகளைக் கட்டமைக்கிறார்கள். பிறகு அவர்களைப் பின்பற்றக்கூடிய அறிமுக நிலை அரசியல் அறிவு உள்ளவர்கள் அதையே நம்ப ஆரம்பித்துப் பேச ஆரம்பிக்கிறார்கள். பிறகு அது ஒரு கூட்டமாக மாறுகிறது. இறுதியில் தலித்துகளே இப்படித்தான் என்பதில் அது முடிகிறது. முற்றிலும் எதிர்மறைக் கருத்தாக இருந்தாலும் நிதானமாக உரையாடக் கூடியவர்கள் என்று பெயர் பெற்ற இயக்கத்தவர்களும் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதுதான் ஆச்சர்யம்.
தலித்துகள் தங்களுக்கென்று சுயேட்சையான அரசியல் அமைப்புகளையும் கருத்தியல்களையும் கொண்டிருந்தவர்கள். ஆனால், அவற்றை அவர்கள் எப்போதெல்லாம் நினைவுபடுத்தி இயக்கம் கட்டுகிறார்களோ அப்போதெல்லாம் வெவ்வேறு பெயர்களில் எதிர்ப்பைச் சந்திக்கிறார்கள். தலித்துகள் தங்களுக்கான அனுபவங்களால் பல்வேறு அமைப்புகளிலிருந்து வெளியேறி தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெளியேற்றத்தினால் பதற்றம் கொண்டிருந்த இயக்கத்தினரே இன்றைக்குச் சமூக வலைதளங்களில் அதிகபடியான தாக்குதல்களை ஏவிவருகின்றனர். சமூகத் தளத்தில் சாதிய புத்தி கொண்டவர்கள் தலித்துகள் மீது நேரடியான தாக்குதல்களை ஏவுகிறார்கள். அத்தாக்குதல்களைக் கண்டிக்கத் கூடியவர்களே சமூக வலைதளங்களில் கருத்தியல் விவாதங்களுக்காகப் பொதுபுத்திச் சார்ந்த சொல்லாடல்களை ஏவுகின்றனர்.
இன்றைய சமூக வலைதளங்களில் தலித்துகளின் ஏதேனும் ஒரு பிழையைக் காரணம் காட்டி அவர்களைப் பற்றிப் பொத்தாம்பொதுவான பிம்பத்தை உருவாக்கிவிடக் கூடியவர்களின் சமூகவலைதளப் பக்கங்களை நாம் தொடர்ந்து பார்த்தோமானால் தலித்துகளுடைய வேறெந்தப் பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் எழுதுவதோ விவாதிப்பதோ இல்லை என்பது தெரியும். தலித்துகளின் பிரச்சனையென்பது வெறும் அரசியல் சார்ந்ததோ, எப்போதோ ஒருமுறை தோன்றி முடியக் கூடியதோ இல்லை. அது அன்றாடச் சிவில் சமூகப் பிரச்சனையாக இருக்கிறது. இவைதான் இங்கு அதிகம் விவாதிக்கப்பட வேண்டும். அவற்றின் ஊடாகவே தலித்துகளின் அரசியல்ரீதியான நிலைப்பாடுகளும் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், இங்கு ஒன்று நடக்கிறது மற்றொன்று நடப்பதில்லை. இதனைத்தான் விமர்சனத்தின் நேர்மையின்மை என்கிறோம். ஒருவகையில் தலித்துகள் ‘நல்ல’ அரசியல் பக்கம் சேராமைக்கு இன்றைய அரசியல் சூழலும், இந்தச் சமூக அமைப்பும் கூடக் காரணம் என்பதை அவர்கள் ஒருபோதும் உணர்வதே இல்லை. இவ்வாறு தொடர்ந்து செய்வதில் ஒரு சூட்சுமமும் இருக்கிறது. அதாவது, தலித் தரப்பையே தொடர்ந்து குற்றம் கூறி வருவதன்மூலம் அவர்கள் மீதான சாதி இழிவுக்குத் தாங்களே காரணம் என்கிற பொறுப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முற்படுகிறார்கள். ஒருமாதம் என்கிற கணக்கில் தமிழகத்தில் நடத்த சாதிப் பாகுபாடுகளை மட்டும் இங்கு ஒரு மாதிரிக்காக எடுத்துக்கொள்ளலாம்.
‘இது நாடார் பள்ளி, நீ வேணும்னா சக்கிலியர் பள்ளிக்கூடம் போயி படி’ன்னு சொன்னதால் சீனு எனும் தலித் மாணவன் தற்கொலை செய்துகொண்டார்.,
அடுத்து, தேவர் சுவரொட்டியைக் கிழித்ததற்காகத் தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து கொலை செய்யப்பட்டார்,
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கிளாமங்கலம் தெற்கு என்ற கிராமத்தில் பல வருடங்களாகத் தீண்டாமைக் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது போன்ற புகார்கள் அண்மையில் எழுந்துள்ளன. வெளியே தெரியவந்திருக்கக் கூடிய வன்முறைகள் இவை. அல்லாமலும் பல்வேறு இடங்களிலும் பல வன்முறைகள் நடந்துகொண்டிருக்கின்றன. தலித்துகளின் பிழைகளைச் சுட்டிக்காட்டி விவாதம் நடந்ததில் ஒருபங்கு அளவிற்குக் கூட இவை எவையும் விவாதத்திற்கு உள்ளாக்கப்படவில்லை. தலித்துகளின் பாதிப்பைக் கண்டிப்பதில் இவர்களுக்கு ஏதும் பிரச்சனையும் இருப்பதில்லை. ஆனால், அவைகூட இங்கு நடப்பதில்லை. பாதிப்பையே சுட்டிக்காட்ட முடியாதவர்கள், அந்தப் பாதிப்பிற்கான அரசியல் – சமூகக் காரணிகள் குறித்து விரிவாக விவாதிப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது.
தலித்துகளின் அன்றாடப் பாதிப்புகள் மட்டுமல்லாது, அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகள், அவை நடைமுறைப்படுத்தப்படாமலிருப்பது போன்றவையும் பேசப்பட வேண்டும். மேலும், மாறிவந்திருக்கும் இன்றைய சமூகச் சூழலில் அவர்களுக்குப் புதிதாகவும் – கூடுதலாகவும் கிடைக்க வேண்டிய தேவைகள் குறித்தும் இங்கு பேசப்படுவதில்லை. எனவே தலித்துகளுக்கு அவர்கள் பற்றிப் பரப்பப்படும் பிம்பம் குறித்து விழிப்புணர்வு தேவை. கரணம் தப்பினால் ஆத்திரக்காரர்களாக ஆக்கிவிடக் கூடிய விவாதங்களில் இருந்து அவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். சமூக வலைதளத்தில் இயங்குகிற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதில் பங்குகொள்ள வேண்டும்.